Monday, April 27, 2015

ஆள் விழுங்கிக் கிணறுகளா?

ஆழ்துளைக் கிணறுகளால் ஏற்படும் உயிரிழப்புச் சம்பவங்கள் அண்மைக் காலமாக தமிழகத்தில் அதிகரித்து வருகின்றன. நாளேடுகளைத் திறந்தால், ஆழ்துளைக் கிணறுகளில் நிகழும் உயிரிழப்புச் சம்பவங்கள் அடிக்கடி கண்ணில்படும் செய்தியாகி விட்டது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த தேவி என்ற சிறுமி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிரிழந்தார். வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழரசன் என்ற சிறுவன் கடந்த 13-ஆம் தேதி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிரிழந்தார். இவை சில உதாரணங்கள் மட்டுமே. இன்னும் எத்தனை எத்தனையோ உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன.

ஆழ்துளைக் கிணறுகளில் குழந்தைகள் விழுந்து உயிரிழக்கக் காரணம்தான் என்ன?

ஆரம்பக் காலங்களில் நகரம் முதல் கிராமம்வரை தண்ணீர்த் தேவைக்காக கிணறுகளை வெட்டினர். அந்தக் கிணறுகளைச் சுற்றிலும் கல் வைத்தும், கைப்பிடிச் சுவர் வைத்தும் கட்டினர்.

நாளடைவில் இதுவும் மாறிப்போனது. பெரிய கிணறு என்ற நிலை மாறி, "உறை கிணறு' என்று கூறும் அளவுக்கு சிறிய அளவிலான கிணறுகள் வெட்டப்பட்டன. இதற்கு விலைவாசி, கூலி உயர்வு மட்டும் காரணமல்ல. விலைவாசி உயர்ந்த அளவுக்கு விவசாய உற்பத்திப் பொருள்களுக்கான விலை கூடுதலாகக் கிடைக்காததும்தான்.

இந்த நிலையில்தான், தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக, ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும் முறை நடைமுறைக்கு வந்தது. இது ஒருவகையில் விவசாயிகளுக்கு மிகப் பெரிய வரப்பிரசாதமாக இருந்தது.

ஏனெனில், ஒரு கிணறு வெட்டுவதற்கு விவசாயிகள் பல லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்ய வேண்டிய நிலை இருந்தது. அதேசமயம், கிணறு தோண்ட ஆகும் செலவைவிட ஓர் ஆழ்துளைக் கிணறு அமைக்கும் செலவு குறைவு என்பதால், ஆழ்துளைக் கிணறுகளின் மீதான மோகம் விவசாயிகளிடையே நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியது.

முன்பெல்லாம், ஆழ்துளைக் கிணறுகள் நாலரை அங்குலம், ஆறரை அங்குலம் என்ற அளவிலேயே அமைக்கப்பட்டு வந்தன. இவற்றின் துவாரங்கள் அளவில் சிறியதாக இருந்ததால் குழந்தைகள் தவறி விழுவது போன்ற அபாயம் ஏற்படவில்லை.

ஆனால். தற்போது நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிட்டதால், எட்டரை அங்குலம், பத்தரை அங்குலம் என்ற அளவுகளில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதுதான் தற்போதைய அசம்பாவிதங்களுக்குக் காரணமாகும்.

சிறு குழந்தைகள் தவறி உள்ளே விழுந்துவிடும் அளவுக்கு இந்த ஆழ்துளைக் கிணறுகள் அளவில் பெரியதாக இருக்கின்றன. அவ்வாறு ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும்போது தண்ணீர் வந்துவிட்டால் பிரச்னை இல்லை. உடனடியாக அதில் மோட்டார், குழாய்கள் பொருத்தப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துவிடும்.

ஆனால், தண்ணீர் வராவிட்டால்தான் பிரச்னையே. பல ஆயிரக்கணக்கான ரூபாய் செலவழித்தும் தண்ணீர் வரவில்லையே என்ற விரக்தியில், அந்த ஆழ்துளைக் கிணற்றை அப்படியே விவசாயிகள் கைவிட்டு விடுகின்றனர்.

விளைவு? எதேச்சையாக அந்தப் பக்கம் விளையாடுவதற்காகச் செல்லும் குழந்தைகள் தவறி அந்த ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்து உயிரிழக்கும் அபாயம் நிகழ்ந்து விடுகிறது. இதுதான் தற்போதைய பிரச்னைக்கு வித்திட்டுவிட்டது. சிறுமி தேவி, சிறுவன் தமிழரசன் ஆகியோரின் உயிரிழப்புகளும் இப்படி நிகழ்ந்ததுதான்.

எனவேதான், இதுதொடர்பாக சென்னை ஐ.சி.எஃப். பகுதியைச் சேர்ந்த வழக்குரைஞர் ஜி.சிவகாமி உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கைத் தாக்கல் செய்தார். அதில், கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள் ஆகியவற்றை முறைப்படுத்த வேண்டும் என்று கூறினார்.

இதற்கு, தமிழக அரசு அளித்துள்ள பதிலில், தமிழ்நாடு ஊராட்சி சட்டம் 1994, சென்னை பெருநகர் பகுதி நிலத்தடி நீர் (வரன்முறை) திருத்தச் சட்டம் 2014 ஆகியவற்றில் கடுமையான விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளது. எனவே, இந்த வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது நீதி

மன்றம்.

அதாவது, ஆழ்துளைக் கிணறுகள் முறைப்படுத்துதல் சட்டம் என்ற ஒரு புதிய சட்டத்தை தமிழக அரசு 2014-இல் கொண்டு வந்துள்ளது. அந்தச் சட்டத்தின் சில சாராம்சங்கள் இதோ:

ஆழ்துளைக் கிணறு, குழாய்க் கிணறு அமைக்கப்படும் நிலம், திறந்தவெளிக் கிணறுகள் உள்ள இடம் ஆகியவற்றைச் சுற்றி பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும். பழுதுபார்க்கும் சமயங்களில் கிணறுகளை மூடி வைக்க வேண்டும். திறந்தவெளிக் கிணற்றின் கைப்பிடிச் சுவருக்கு மேல் இரும்பு அல்லது உறுதியான ஸ்டீல் தகட்டினால் ஆன மூடி அமைக்க வேண்டும்.

பணிகள் முடிந்தவுடன் ஏற்படும் பள்ளங்களை மேல்மட்டம் வரை கற்கள், மணல், சரளை, சகதி, மண் ஆகியவற்றைக் கொண்டு நிரப்பி சமன் செய்ய வேண்டும்.

இவ்வாறாக நீள்கிறது அந்த புதிய நடைமுறைகள்.

இந்தச் சட்டமும், வழிகாட்டுதல்களும் நடைமுறைக்கு வந்தால் உயிரிழப்புகள் தவிர்க்கப்படும் என்பது உண்மைதான். ஆனால், இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்ததா? தற்போது கிணறுகளை புனரமைப்பவர்களும், ஆழ்துளைக் கிணறுகள் அமைப்பவர்களும் இந்த நடைமுறையைப் பின்பற்றுகிறார்களா என்றால்... பெரும்பாலும் இல்லை என்றே சொல்லிவிடலாம்.

எந்த ஒரு சட்டத்தையும் இயற்றுவது பெரிய விஷயமல்ல, அதை நடைமுறைக்குக் கொண்டு வருவதில்தான் அந்தச் சட்டத்தின் வெற்றியும், தோல்வியும் இருக்கிறது. சட்டமும், தண்டனையும் கடுமையாக்கப்பட்டால்தான் தவறுகள் குறையும் என்பார்கள்.

அதுபோல, ஆழ்துளைக் கிணறுகள் முறைப்படுத்துதல் சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்தால்தான் உயிரிழப்புகளைத் தடுக்க முடியும்.

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...