Monday, April 27, 2015

நடுங்க வைக்கும் நடுக்கம்!

Dinamani

நேபாளம் சுமார் 80 ஆண்டுகளுக்குப் பிறகு நேர்கொண்டிருக்கும் மிகப்பெரும் நிலநடுக்கத்தால் 2,350-க்கும் மேற்பட்டோர் பலியாகிருப்பதும், 6,000-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்திருப்பதும், லட்சக்கணக்கான குடும்பங்கள் வாழிடம் இல்லாது வீதிக்கு வந்திருப்பதும் உலக மக்கள் அனைவருக்கும் சொல்லொணாத் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேபாளத்தில் மட்டுமன்றி, வட இந்தியாவில் பிகார், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், சிக்கிம் ஆகிய மாநிலங்களிலும் நிலநடுக்கத்தின் தாக்கம் காரணமாக வீடுகள் இடிந்து விழுந்ததில் 55-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் இமயமலையையும் விட்டுவைக்கவில்லை. அதிர்வின் காரணமாக பனிச்சரிவு ஏற்பட்டு எவரெஸ்ட் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த வீரர்களின் முகாம்களை மூழ்கடித்ததில், 22 பேர் இறந்துள்ளனர். காணாமல் போனவர்களைத் தேடும் பணி நடந்து வருகிறது.

கோடை காலம் என்பதால், காத்மாண்டு மற்றும் நேபாளத்தின் சுற்றுலாத் தலங்களுக்கு உலகம் முழுவதிலிருந்தும் பயணிகள் வந்துள்ள நேரத்தில் தாக்கி இருக்கிறது இந்தப் பேரிடர். வேதனையில் துடிக்கும் தமது மக்களைக் காப்பாற்றும் கடமையுடன், தங்கள் மண்ணுக்கு வந்த விருந்தினர் நலம் காக்கும் பொறுப்புச் சுமை நேபாளத்துக்கு கூடுதலாகி இருக்கிறது.

காத்மாண்டுவின் அழகை 60 மீட்டர் உயரத்திலிருந்து கண்டு களிக்கும் வகையில் 1832-இல் கட்டப்பட்ட தரஹரா கோபுரம் நிலநடுக்கத்தால் இடிந்து நொறுங்கியதில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் 180 பேர் இறந்துள்ளனர். 1934-ஆம் ஆண்டிலும் இந்தக் கோபுரம் நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்தது. மீண்டும் கட்டப்பட்ட இந்தக் கோபுரம் தற்போது மறுபடியும் தரைமட்டமாகியுள்ளது. இடுபாடுகளில் சிக்கி இறந்த வெளிநாட்டுப் பயணிகளை அடையாளம் காண்பதும், உடல்களை அவர்தம் நாட்டுக்கு அனுப்புவதும், உயிர் பிழைத்தோரைப் பாதுகாப்பாக அனுப்பி வைப்பதும் மிகச் சிறிய நேபாள அரசு எதிர்கொள்ளும் பெரும் பொறுப்பு.

உலக நாடுகள் அனைத்தும் உதவிக் கரம் நீட்டியுள்ளன.

இந்தியா தனது விமானப் படை வீரர்களை அனுப்பி மீட்புப் பணியை முடுக்கிவிட்டிருக்கிறது. இந்தியாவிலிருந்து உணவுப் பொருள், குடிநீர், மருந்துகள், மருத்துவர்கள் என எல்லா உதவிகளும் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா முதல்கட்டமாக 10 லட்சம் டாலர் நிவாரண நிதி அளித்துள்ளது. நார்வே 39 லட்சம் டாலர் நிதியுதவி அளித்துள்ளது. ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு வகையான உதவியைக் கொண்டு வந்து களத்தில் இறக்கிக்கொண்டே இருக்கின்றன. மீட்புப் பணிக்கு வருவோரையும் அச்சுறுத்தும் வகையில், மறுநாளே மற்றொரு நிலஅதிர்வு - 6.7 ரிக்டர் அளவுக்கு நேபாளத்தை உலுக்கியது.

நேபாளம் தனது முந்தைய எழில்முகத்தைப் பெற இரண்டொரு ஆண்டுகள் ஆகும். சுற்றுலாப் பயணிகளின் வருகையால் மட்டுமே நேபாளத்தின் கணிசமான பொருளாதாரம் உள்ள சூழலில் இவர்களுக்குத் தாற்காலிக மாற்றுத் தொழில், நிதியுதவி, புதிய குடியிருப்புகள் போன்றன அவசியம். வெறுமனே நிதியுதவியோடு நில்லாமல், இத்தகைய தொடர் வாழ்வாதார மீட்புப் பணிகளிலும் உலக நாடுகள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். இதற்கான பொருளாதார நிபுணர்களின் ஆலோசனைகள் நேபாளத்துக்கு மிகமிக இன்றியமையாதவை. சகோதர இந்தியா அந்தப் பொறுப்பை ஏற்கும் என்பதும் திண்ணம். ஏற்றும் வருகின்றது.

இந்திய அரசு மட்டுமன்றி, இந்தியாவில் உள்ள நிறுவனங்களும் தன்னார்வ அமைப்புகளும் சேர்ந்து ஆற்ற வேண்டிய பணிகள் ஏராளம். குறிப்பாக, மருத்துவச் சுற்றுலா மூலம் பயன் அடையும் மருத்துவப் பெருநிறுவனங்கள் தாமாகவே நேபாளம் சென்று, சிகிச்சை அளிக்கவும், முகாம் அமைக்கவும், கூடுதல் அறுவைச் சிகிச்சை தேவைப்படுவோரை இந்தியாவுக்கு அழைத்துவந்து இலவசமாக சேவை அளிக்கவும் முன்வர வேண்டும்.

நேபாளத்தில் இந்தப் பேரிடர் நிகழ்ந்த அதே காலகட்டத்தில், சிலி நாட்டில் கடந்த 50 ஆண்டுகளாக உறக்கநிலையில் இருந்த கல்புகோ எரிமலை தனது நெருப்பையும் சாம்பலையும் தூற்றியது. 20 கி.மீ. சுற்றளவில் வசித்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர். வான்வெளி முழுதும் சாம்பல் பரவியதால் ஐரோப்பாவுக்கான விமான சேவை ரத்து செய்யும் அளவுக்கு நிலைமை இருந்தது. பூமித் தாயின் வயிற்றில் ஏற்படும் மாறுதல்களின் ஏதுநிகழ்வா? இதைக் கொண்டு பிற இடங்களில் நிலநடுக்கத்தைக் கணிக்க முடியுமா? ஆராய்ச்சி தேவை.

இதே நேரத்தில் ஆஸ்திரேலியாவில் சிட்னி பகுதியில் மிகப் பெரிய அளவில் பனிக்கட்டி மழை பொழிந்து வீடுகள், வாகனங்கள், கிடங்குகளைச் சேதப்படுத்தியுள்ளது.

மண்ணுக்கு அடியிலிருந்து பெட்ரோலிய பொருள்களையும், நிலக்கரியையும், பல கனிமப் பொருள்களையும் எடுப்பதுடன், எல்லாவற்றுக்கும் மேலாக ஆழ்துளைக் கிணறுகளைத் தோண்டி நிலத்தடி நீரையும் எந்தவிதக் கட்டுப்பாடும், வரைமுறையும், எச்சரிக்கை உணர்வும் இல்லாமல் உறிஞ்சி பூமித் தாயின் அடிவயிற்றை சுருக்கச் செய்வதால், அதன் விளைவுகளை பூமியின் மேற்புறத்தில் சந்திக்கிறோம். காடுகள் அழித்து, கானுயிர் அழித்து, வானக் குடையில் ஓட்டை போட்டு, வெப்பம் கூடி அவதிப்படுகிறோம்.

இயற்கையை, இந்த பூமியை மனிதன் மதிக்காதபோது, அவையும் மனித உயிருக்கு மதிப்பு தரப் போவதில்லை. ஊழிக்கூத்து நிகழ்த்தவே செய்யும் என்பதை எப்போதுதான் உலகம் உணரப்போகிறதோ தெரியவில்லை. உலகம் அழிவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்பது மட்டும் திண்ணம்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024