Wednesday, April 29, 2015

ரூ.20க்கு தேள்கடி மருந்து...!

காலம் மாறிப்போச்சு, வாண்டுகளுக்கு கூட வாட்ஸ் அப் கணக்கு இருக்கு. ஓட்டு ஐடி இருக்கோ இல்லையோ, பேஸ்புக் ஐடி இல்லைன்னா வேஸ்ட்டுன்னு பள்ளிக்கூட பிள்ளைகள் கமெண்ட் அடிப்பது நம்காதுகளில் அதிகம் விழுந்திருக்கும்.

என்னதான் காலம் மாறினாலும், நம்ம ஊர் நாட்டுவைத்தியத்துக்கு முன்னாடி சும்மாதான்.

''வாங்க சார்... வாங்க... இப்போ மிஸ் பண்ணிட்டீங்கன்ன... பிறகு கஷ்டப்படுவிங்க'' என்றவாறு திருச்சி, சமயபுரம் பேருந்து நிலையத்தில் ஒருவர் உயிருள்ள தேள், நண்டுவாக்காளின்னு விஷ ஜந்துக்களோடு உட்கார்ந்திருக்க, ஆச்சரியமாய் மக்கள்கூட்டம் மணிக்கணக்காய் பார்த்து நின்றார்கள்.
''நம்பிக்கையிருந்தால் இந்த நாட்டு மருந்தை வாங்குங்க சார், உங்களுக்கு சந்தேகம் இருக்குன்னா வாங்க, வந்து டெஸ்ட் பண்ணி பார்த்துக்கோங்க. உங்க கண் முன்னாடியே உயிருள்ள தேள், நண்டுவாக்காளி, கருந்தேள் எல்லாம் இருக்கு. கையை நீட்டுங்க, தேளை கடிக்க வைப்போம், இந்த தைலத்தை ஒரு சொட்டுவிட்டு தேள் கடிச்ச இடத்தில் விட்டால், அடுத்த நிமிடமே பட்டென வலி பறந்து போகும்.

'உயிருள்ள தேளா கொஞ்சம் காட்டுங்க' என்றால் டப்பாக்குள் இருந்த தேளை சர்வசாதாரணமாக தூக்கி காட்டுகிறார் சம்சுதீன். ''20 ரூபாய் கொடுத்து இந்த மருந்தை வாங்குறதுக்கு எவ்வளவு கேள்வி கேட்குறீங்க. ஒரு நாளாவது மருத்துவமனையில் ஏன் சார் இவ்வளவு பணம் கேட்குறீங்கனு கேட்டிருப்பீங்களா…?
இங்க பாருங்க. நான் பொய் சொல்லல. நாளைந்து மாசத்துக்கு முன்னாடி ஈரோட்டுல பத்து வயசு பள்ளிக்கூட மாணவி தேள் கடித்து பலின்னு நியூஸ் பேப்பர்ல வந்திருக்கு. அடுத்து, தஞ்சாவூர்ல 5 வயசு ஆண் குழந்தை ஸுவ்ல தேள் இருப்பதை கவனிக்காமல் அதை போட்டபோது கடிச்சி, இறந்துடிச்சின்னு போட்டிருக்கு. இப்படி பல பேர் கொடிய தேள், நண்டுவாக்காளி போன்றவை கடிச்சி இறந்திருக்காங்க.

நண்டுவாக்காளி கடித்தால் ரெண்டு நிமிசத்துல மாரடைப்பு வந்துடும். இப்படி உயிரைபறிக்கும் விஷயத்துக்கு நாம் முன்னெச்சரிக்கையாக இருக்கோமான்னா இல்லை. அதுக்காகத்தான் இந்த மருந்து'' என வெறும் இருபது ரூபாய்தான் என பார்வையாளர்களிடம் விளக்கிக்கொண்டிருந்த சம்சுதீன் மீது தேள்கள் சர்வசாதாரணமாக விளையாடிக்கொண்டிருக்க அவரிடம் பேசினோம்.
''எனக்கு சொந்த ஊர் முசிறிதான். தாத்தா காலத்தில் இருந்து தேள்கடிக்கும், உடம்பு வலிக்கும் மருத்து தயாரித்து விற்கிறோம். ஆறாவதுக்கு மேல படிப்பு ஏறல, பிறகு அப்பாக்கூட இருந்து இந்த வைத்தியத்தை கற்றுக்கொண்டேன். இப்போ எனக்கு வயசு 57, 40 வருடமாக இந்த தொழிலை செய்துக்கிட்டு வர்றேன். இந்த மருந்தை எடுத்துக்கிட்டு தமிழ்நாடு முழுக்க சுத்தியிருக்கேன். நாளு மொழி பேசுவேன். வர்றவங்க நம்ம கிட்ட சந்தேகத்தோட மருந்து வாங்கக்கூடாது. மருந்தை வாங்கிட்டு அது சரியில்லைன்னா நம்மை திட்டக்கூடாது. இதுதான் முக்கியம்.
20 ரூபாய்க்கு நான் இரண்டு விதமான மருந்து வைச்சிருக்கிறேன். ஒன்று தலைவலி, இருமல், ஜலதோசம், பல் வலி உள்ளிட்ட நோய்களை சட்டென விரட்டும் நிவாரணி. தும்பை இலை, துளசி, கருந்துளசி, மலையெறுக்குன்னு 15க்கும் மேற்பட்ட மூலிகைகளை ஒன்னா போட்டு காய்ச்சி இந்த மருந்தை தயாரிக்கிறோம். ஒரு சொட்டு மருந்தை கர்சிப் விட்டு மூக்குல வைத்தால் சும்மா ஜிவ்னு ஏறும். அடுத்த சில நொடிகளில் எல்லாம் பறந்துபோகும்.

அதேபோல் தேள், நண்டுவக்காளி உள்ளிட்ட விஷக்கடிக்கு கொடுக்கிற மருந்து. இது பதரசத்தை தண்ணியாக்கி, கூட நீர்ப்பச்சிலை போன்ற கொல்லி மலையில் கிடக்கும் பச்சிலைகளை கொண்டு தயாரிக்கப்பட்ட மருந்து. இதை தேள் கடித்த இடத்தில் ஒரு சொட்டு விட்டு தடவிவிட்டால் போதும். சட்டென வலி பறந்துபோகும். இதுமட்டுமல்லாமல், தோள் நோய்களுக்கும், விபத்தில் புண் ஏற்பட்டால் அதை குணப்படுத்துவதற்கும் இந்த மருந்தை பயன்படுத்தலாம்.
சின்ன வயசுல எங்கப்பா எனக்கு வைத்தியம் கற்றுகொடுக்கும்போது, 'பணம் காசு முக்கியமில்லை. தேள் கடிச்சி துடிக்கிற ஒருத்தன், நீ கொடுக்கிற மருந்தை போட்டபிறகு வலி நின்றபிறகு உன்னை மனசார வாழ்த்துவான் இல்லை. அதுதான் உன்னை நூறு வருஷம் வாழ வைக்கும்'னு சொன்னார். அதை பல நேரம் உணர்ந்திருக்கேன். அந்த சந்தோசத்திலதான் வாழுறேன்'' என்கிறார் சம்சுதீன்.

சி. ஆனந்தகுமார்,

படங்கள்: தே.தீட்ஷீத்

No comments:

Post a Comment

IIM-I partners with 2 foreign varsities for dual degree

IIM-I partners with 2 foreign varsities for dual degree  TIMES NEWS NETWORK 19.09.2024  Indore : Indian Institute of Management, Indore, (II...