Monday, April 27, 2015

மே மாதம்... குஷியில் ஹவுஸ் ஓனர்கள்!

னைத்து மாநில மக்களின் அடைக்கலமாக சென்னை விளங்குகிறது. வேலை வாய்ப்புகளுக்காகவும், கல்விக்காகவும் சொந்த மாநிலங்களையும், ஊர்களையும் விட்டு வாழ்பவர்களின் எண்ணிக்கை சென்னையில் அதிகம். இதனால் சென்னைக்குப் பலமுகங்கள் இருக்கின்றன. சென்னையில் ஆண்டுதோறும் மக்கள் தொகை எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன.

கடந்த 2013ல் 47,54,499 பேரும், 2014ல் 47,92,949 பேரும், 2015ல் 48,28,853 பேரும் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு சதுர கிலோ மீட்டரில் 26,903 பேர் வசிக்கின்றனர். மக்கள் தொகை பெருக்கத்தால் சென்னையின் நகர வாழ்க்கை நரக வாழ்க்கையாகி மாறிக் கொண்டு இருக்கிறது.

நெரிசலில் சிக்கி தவிக்கும் சென்னையையொட்டி உள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களும் விரிவாக்கம் அடைந்து அசுர வளர்ச்சி அடைந்து வருகின்றன. விளைநிலங்கள் எல்லாம் வீடுகளாகி வருகின்றன. குறுகிய இடங்களில் வானுயர்ந்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளன. வேறுவழியில்லாததால் தேனீக்களைப் போல வாழ மக்களும் பழகி கொண்டனர். பல்வேறு காரணங்களுக்கான சென்னைக்கு இடம் பெயர்ந்தவர்களுக்கு எளிதில் வீடுகள் வாடகைக்கு கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் பத்துக்கு பத்து அறை கொண்ட இரண்டு அறைகள் கொண்ட வீடுகள் கூட ஆயிரக்கணக்கில் வாடகைக்கு விடப்படுகிறது.

சென்னையின் முக்கியப்பகுதிகளாக விளங்கும் மயிலாப்பூர், மந்தைவெளி, ஆழ்வார்பேட்டை, தேனாம்பேட்டை, அடையாறு, நுங்கம்பாக்கம், வேப்பேரி, புரசைவாக்கம், எழும்பூர், கிண்டி, ராயபேட்டை, கீழ்ப்பாக்கம், ஆலந்தூர், தாம்பரம், ஆவடி, அம்பத்தூர், அண்ணாநகர், சூளைமேடு, கோடம்பாக்கம், வடபழனி, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் வீட்டு வாடகையை கேட்டால் பலருக்கு தலைசுற்றுகிறது.

மேலும் வி.ஐ.பி. வசிக்கும் பகுதிகளான போயஸ்கார்டன், சாலிகிராம், கிழக்கு கடற்கரை சாலை குடியிருப்பு பகுதிகள், கோபாலபுரம், அடையாறு போர்ட்கிளப், ஆர்.ஏ.புரம் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள் வாடகைக்கு கிடைப்பதில்லை.

மயிலாப்பூர், ஆழ்வார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இரண்டு பெட் ரூம் கொண்ட வீடுகள் குறைந்தபட்சம் 15 ஆயிரத்திலிருந்து 25 ஆயிரம் ரூபாய் வரைக்கும் வாடகைக்கு விடப்படுகின்றன. சிங்கிள் பெட் ரூம் வீடுகள் குறைந்தபட்சம் 7 ஆயிரம் ரூபாயிலிருந்து 13 ஆயிரம் ரூபாய் வரைக்கும் வாடகைக்கு விடப்படுகிறது. வாடகை ரூபாய் இடத்துக்கு இடம், வீட்டின் உரிமையாளர் விருப்பத்துக்கு ஏற்ப வேறுபடுகின்றன. அதோடு வாடகை வீடுகளில் குடியிருப்பவர்களுக்கு என்று தனியாக எழுதப்படாத சட்டத்தையும் சில வீட்டின் உரிமையாளர்கள் ஏற்படுத்தியுள்ளனர்.

திருமணமாகதவர்களுக்கு வாடகைக்கு வீடுகளை கொடுக்க பலர் முன்வருவதில்லை. அப்படியே கொடுத்தாலும் மற்றவர்களை விட கூடுதலாக ஆயிரம் ரூபாயிலிருந்து 2 ஆயிரம் ரூபாய் வரை வாடகை உயர்த்தப்படுகிறது. இதை விட சில மேன்சன்களில் பகல் கொள்ளை நடக்கிறது. ஒரே அறையை இரண்டு, மூன்று அல்லது ஐந்து பேருக்கு கொடுத்து தலா மூவாயிரம் ரூபாய் வரை வசூலிக்கின்றனர். அந்த அறைகளுக்கு வாடகை அதிகம், வசதிகள் குறைவு. காலை நீட்டியும், புரண்டு கூட படுக்க முடியாது என்கிறார்கள் அதில் தங்கியிருந்தவர்கள்.

வாடகை வீட்டுக்கான அட்வான்ஸ் வாங்கும் போது முகம் மலரும் வீட்டின் உரிமையாளர்கள் அதன்பிறகு தங்களது சுய ரூபங்களை சிலர் வெளிகாட்ட தொடங்கி விடுகிறார்கள். வாடகைக்கு விடும் போதே இரவு 10 மணிக்கு மேல் வரக்கூடாது. உறவினர்கள் இரவில் தங்க கூடாது. அதிகம் சப்தம் போட்டு பேசக் கூடாது. குடித்து விட்டு சண்டை போடக்கூடாது, தினமும் 2 அல்லது மூன்று குடம் தான் நல்ல தண்ணீர் பிடிக்கணும், தண்ணீரை அதிகமாக செலவழிக்க கூடாது என்று கண்டிசன் போடுவதுண்டு.

இதைத்தவிர மின்கட்டணம் ஒரு யூனிட் 10 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை வசூலிக்கும் வீட்டின் உரிமையாளர்களும் இருக்கிறார்கள். இது தவிர குடிவந்து 5 அல்லது 6 மாதங்களே ஆனாலும், அதற்கு முன் வருட கணக்கில் சேர்ந்த செப்டிக் டேங் கழிவுகளை எடுக்க ஆகும் செலவுகளையும் ஆயிரம், இரண்டாயிரம் என நமது தலையிலேயே கட்டி விடுகிறார்கள். இது தவிர வீட்டை காலி செய்யும்போதும் வீட்டு அட்வான்ஸ் தொகையில் அதே காரணத்திற்காக பணத்தை பிடித்தம் செய்துகொண்டுதான்  மீதியை தருகிறார்கள்.
இப்படி வீட்டின் உரிமையாளர்கள் போடும் அத்தனை கண்டிசன்களுக்கும் கட்டுப்பட்டு குடியிருந்தாலும் ஒரு ஆண்டுக்கு மேல் ஒரு வீட்டில் குடியிருக்க முடியாது. ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி வீட்டை காலி செய்ய சொல்வது சில உரிமையாளர்களின் வாடிக்கை. இதுவும் வாடகை உயர்வுக்குத்தான். அதுவும் மே மாதங்களில்தான் வாடகையை உயர்த்துவது வீட்டு உரிமையாளர்கள் வாடிக்கையாக கொண்டுள்ளனர். காரணம், பெற்றோர்கள் பள்ளியை மாற்றுவது மற்றும் அரசு ஊழியர்கள் டிரான்ஸ்பர்கள் மே மாதங்களில் நடக்கிறது. இதனை பயன்படுத்திக் கொண்டு ஏற்கனவே இருப்பவர்களை ஏதாவது ஒரு காரணம் சொல்லி வீட்டு உரிமையாளர்கள் காலி செய்ய வைக்கின்றனர்.

வீட்டை காலி செய்தவுடன் அந்த வீடு, ஆயிரம் ரூபாயிலிருந்து 1500 ரூபாய் வரை கூடுதல் வாடகைக்கு விடப்படுகிறது. தேனாம்பேட்டை, டி.எம்.எஸ், கிண்டி, ஆலந்தூர், வடசென்னை உள்ளிட்ட சில பகுதிகளில் புரோக்கர்கள் இல்லாமல் வாடகைக்கு வீடுகள் கொடுக்கப்படுவதில்லை. புரோக்கர்களுக்கு ஒரு மாத வீட்டு வாடகையை கமிஷனாக கொடுக்க வேண்டும். இதுவும் வாடகை வீட்டுக்கு செல்பவர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்துகிறது.

குறைந்த சம்பளத்தை பெறும் அரசு ஊழியர்கள்,  இடைநிலை ஆசிரியர்கள், தனியார் நிறுவன ஊழியர்களின் நிலைமை அந்தோ பரிதாபமாக இருக்கிறது. வீட்டின் வாடகை ஒவ்வொரு ஆண்டும் ஜெட் வேகத்தில் உயர்த்தப்படுவதால் வீட்டின் தேவைகளுக்காக ஒருவரும் (கணவனும்), வாடகை கொடுப்பதற்காக இன்னொருவரும் (மனைவியும்) வேலைக்கு செல்ல வேண்டிய நிலை பல குடும்பங்களில் இருக்கின்றன. சொந்த ஊர்களுக்கு செல்லலாம் என்றால் அங்கு வேலைவாய்ப்பு என்பதே இல்லை. இதனால் வேறுவழியின்றி சென்னையில் பல நடுத்தர வர்க்கங்கள் கௌரவத்துக்காக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். போதிய வருவாய் இல்லாததால் கடன் சுமையிலும் பல குடும்பங்கள் சிக்கி தவிக்கின்றன.

வாடகை வீடுகளின் பிரச்னை இது என்றால் பெண்களுக்கான தனியார் விடுதிகளில் நிலைமை பரிதாபம். முன்பதிவு ரயில் பெட்டிகளில் இருப்பதை போல அடுக்கடுக்காக படுக்கைகள் (பெட்) ஒரே அறையில் ஏற்படுத்தப்பட்டு அதில் தங்க வேண்டியதுள்ளது. அவர்களுக்கு கொடுக்கும் உணவுகளை பசிக்காக சாப்பிட்டு வாழ்நாளை பலர் கடத்தி வருகின்றனர். தனியாக வீடு எடுத்து தங்கினால் பாதுகாப்பில்லை என்பதற்காகவே பல பெண்கள் இத்தகைய கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர்.

வாடகைத்தாரருக்காக குரல் கொடுத்து வரும் சமூக ஆர்வலரும், வழக்கறிஞருமான பிரம்மா கூறுகையில், "வீடுகளை வாடகைக்கு விடப்படும் போது 11 மாதங்கள் மட்டுமே அக்ரிமென்ட் போட முடியும். ஒப்பந்தத்தில் அடிப்படை உரிமைகள் மீறாமல் இருக்க வேண்டும். ஒரு தரப்புக்கு சாதகமாக இருக்க கூடாது. மூன்று மாத காலஅவகாசம் வீட்டின் உரிமையாளர், வாடகைதாரர் கொடுக்க வேண்டும். மின்வாரியம் நிர்ணயிக்கும் கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கக் கூடாது. இதை மீறும் வீட்டின் உரிமையாளரை நீதிமன்றத்தில் நிறுத்தி நீதி பெறலாம்" என்றார்.

-எஸ்.மகேஷ்

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...