நேபாளத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் இடிபாடுகளில் சிக்கி 1,500 பேர் பலியானார்கள்.
காட்மாண்டு
இமயமலை நாடு என்று அழைக்கப்படுகிற நேபாளத்துக்கு நேற்று ஒரு கருப்பு நாளாக அமைந்து விட்டது.
அழகான அந்த நாட்டை நில நடுக்கம் என்ற பெயரில் இயற்கை சீற்றம், சின்னாபின்னப்படுத்தியது.
ரிக்டர் அளவுகோலில் 7.9 புள்ளிகளாக பதிவான இந்த நில நடுக்கம், தலைநகர் காட்மாண்டுவில் இருந்து 80 கி.மீ. வடமேற்கில் அமைந்துள்ள லாம்ஜங்கில் மையம் கொண்டிருந்தது. அது, காலை 11.56 மணிக்கு (இந்திய நேரப்படி காலை 11.41 மணி) தாக்கியது. அதைத் தொடர்ந்து, அடுத்தடுத்து 10–க்கும் மேற்பட்ட முறை நில அதிர்வுகள் ஏற்பட்டன. அவை ரிக்டர் அளவுகோலில் 4.5 மற்றும் அதற்கு அதிகமான புள்ளிகளாக பதிவாகின.
இந்த நில நடுக்கம் தலைநகர் காட்மாண்டு தொடங்கி போக்ரா, லாம்ஜங், கீர்த்தி நகர் என அந்த நாடு முழுவதும் ருத்ர தாண்டவம் ஆடி விட்டது. கட்டிடங்கள் குலுங்கியபோது, ‘நில நடுக்கம்தான் ஏற்பட்டிருக்கிறது’ என்று மக்கள் உணர்ந்து, அவற்றில் இருந்து வெளியேறுவதற்கு முன் அது தன் கோர முகத்தை காட்டியது. எங்கு பார்த்தாலும் வீடுகளும், அலுவலகங்களும், வணிக நிறுவனங்களும், கோவில்களும் சீட்டு கட்டு போல சரிந்து விழுந்தன. அவற்றில் நூற்றுக்கணக்கானோர் சிக்கினர். நாடு முழுவதும் தகவல் தொடர்பு சாதனங்கள் செயல் இழந்தன. மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
பொதுமக்கள் வீடுகளை விட்டும், அலுவலகங்களை விட்டும், பிற கட்டிடங்களை விட்டும் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தனர். எங்கு பார்த்தாலும் பதற்றமும், பரிதவிப்பும், அழுகையும், மரண ஓலமும்தான் காணப்பட்டது.
மக்களுக்கு எச்சரிக்கை
நில நடுக்கம் ஏற்பட்டதும், மக்களுக்கு அந்த நாட்டு ரேடியோ எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை அவசர அவசரமாக வெளியிட்டது.
அதில் நில நடுக்கத்தை தொடர்ந்து, மேலும் அதிர்வுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் அனைவரும் வீடுகள் உள்ளிட்ட எல்லாவிதமான கட்டிடங்களில் இருந்தும் வெளியேறி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டது.
அடையாள சின்னம் தகர்ப்பு
நில நடுக்கத்தால் மக்கள் நெருக்கம் மிகுந்த காட்மாண்டு பள்ளத்தாக்கு பகுதி உருக்குலைந்து விட்டது. அங்கு பெரும்பாலான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. அங்கு மட்டுமே பல நூறு பேர் பலியானதாகவும், ஏராளமானோர் படுகாயம் அடைந்தததாகவும் முதல் கட்ட தகவல்கள் கூறின.
காட்மாண்டுவின் அடையாளச் சின்னமாக கம்பீரமாக வீற்றிருந்து, அந்த நகருக்கே அழகு சேர்த்த 183 ஆண்டு கால பழமையான ‘தாரஹரா கோபுரம்’ (‘பீம்சென் கோபுரம்’) நில நடுக்கத்தின் கோரப்பிடியில் சிக்கி, தரை மட்டமானது. அதன் இடிபாடுகளில் சிக்கி 400–க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். அவற்றில் இருந்து 180 உடல்கள் மீட்கப்பட்டு விட்டன. மீட்புப்பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.
இடிபாடுகளில் சிக்கி ஏராளமானோர் கை, கால்கள் என உறுப்புகள் சேதம் அடைந்த நிலையில், காட்மாண்டு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
காயம் அடைந்தவர்களுக்கு டாக்டர்கள், வீதிகளிலேயே திறந்தவெளி மருத்துவ முகாம்களை அமைத்து சிகிச்சை அளிக்கின்றனர்.
பனிப்பாறை சரிவுகள்
நில நடுக்கத்தை தொடர்ந்து எவரெஸ்ட் சிகரத்தில் பனிப்பாறை சரிவுகள் ஏற்பட்டதாக அந்தப் பகுதியில் அமைந்துள்ள மவுண்ட் புமோரி என்ற இடத்தில் இருந்து அலெக்ஸ் காவன் என்பவர் ‘டுவிட்டர்’ சமூக வலைத்தளத்தில் தகவல் வெளியிட்டார்.
நில நடுக்கம் ஏற்பட்ட நேரத்தில் பலரும் மலை ஏறிக்கொண்டிருந்ததாகவும் அவர் கூறி உள்ளார். அங்கு 10–க்கும் மேற்பட்டோர் பலியாகி விட்டதாக தெரிய வந்துள்ளது.
இந்திய தூதரகம் பாதிப்பு
காட்மாண்டுவில் உள்ள இந்திய தூதரகமும் நில நடுக்கத்தால் சேதம் அடைந்தது.
இதுதொடர்பாக அதன் செய்தித்தொடர்பாளர் அபய்குமார் கூறுகையில், ‘‘தூதரக கட்டிடத்தின் சுவர்கள் இடிந்து விழுந்தன. தூதரகத்தின் சார்பில் ஹெல்ப் லைன்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன’’ என்றார்.
நில நடுக்கத்தின் பிடியில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை அதிகாரபூர்வமாக தெரிய வரவில்லை. இருப்பினும் 920 பேர் பலியாகி விட்டதாகவும், 500–க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும், பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து வீதிகளுக்கு வந்து விட்டதாகவும் கடைசியாக கிடைத்த தகவல்கள் கூறுகின்றன. இந்த பலி எண்ணிக்கை மேலும் உயரும் என நேபாள அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.
நேபாளத்தில் இதற்கு முன்பாக 1934–ம் ஆண்டு, ஜனவரி மாதம் 15–ந் தேதி ஏற்பட்ட நில நடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 8 புள்ளிகளாக பதிவாகி இருந்ததும், 10 ஆயிரத்து 600 பேரை பலி கொண்டதும் நினைவுகூரத்தகுந்தது.
நேபாள நாட்டின் பிரதமர் சுஷில் கொய்ராலா, தாய்லாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். நில நடுக்கம் குறித்த தகவல் அறிந்ததும் அவர் தனது பயணத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு நாடு திரும்பினார்.
அவருடன் பிரதமர் நரேந்திர மோடி தொடர்பு கொண்டு பேசினார். அப்போது நில நடுக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்துக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் என உறுதி அளித்தார்.
நேற்றைய நேபாள நில நடுக்கத்தின் தாக்கம், இந்தியாவிலும் உணரப்பட்டது. பீகார் உள்ளிட்ட 10–க்கும் மேற்பட்ட வட மாநிலங்களில் நில நடுக்கம் உணரப்பட்டது. கட்டிடங்கள் குலுங்கின. இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் அகப்பட்டு, 36 பேர் உயிரிழந்தனர்.
நேபாளத்தில் ஏற்பட்ட நில நடுக்கம், இந்தியாவில் மட்டுமல்லாது பாகிஸ்தான், வங்காளதேசம், பூடான், சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment