Monday, October 26, 2015

பழக பழகத்தான் பிடிக்கும்............தினகரன்



நன்றி குங்குமம் டாக்டர்

சுகர் ஸ்மார்ட் தாஸ்

வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும் லிஃப்ட் வேலை செய்யவில்லை. நாம்தான் படி ஏறி செல்ல வேண்டும்... ஒவ்வொரு படியாக!- ஜோ ஜிரார்ட் (அமெரிக்க விற்பனையாளர் / கின்னஸ் சாதனையாளர்)

வயிற்றுப் பகுதியில் அதிக எடையை ஆசையோடு வைத்திருக்கும் ஆப்பிள் வடிவ நபர்களும், இடுப்பில் அதிக சுற்றளவை இழுத்துப் பிடித்து வைத்திருக்கும் பேரிக்காய் வடிவ நபர்களும் கவனத்தில் கொள்ள வேண்டியது இதுதான்... எடையோடு வடிவமும் சேர்ந்து வினையாற்றும் என்பதால், சராசரி வடிவத்துக்கு மாற வேண்டியது முழுமுதல் கட்டாயம்.சரி... டயட்டில் இருப்பதாக உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்கிறீர்கள்.

அப்போது உங்கள் எண்ணங்களும் சிந்தனைகளும் எப்படி மாறுகின்றன?

ஒருவித கையறு நிலையை உணர்கிறீர்களோ? எல்லோரும் பிரமாதமான உணவு வகைகளை இஷ்டம் போல வெட்டும்போது, நாம் மட்டும் ஏன் இப்படி பட்டினியும் பத்தியமுமாகக் கிடக்கிறோம் எனத் தோன்றுகிறதோ? இந்த தாழ்வு மனப்பான்மையே அதிகமாக சாப்பிட வைத்து விடும்... நல்ல நிலைக்கு மாறுவதற்கு எதிரான முடிவை எடுக்கச் செய்து விடும்... ஜாக்கிரதை! இப்படிச் சொல்லிப் பார்க்கலாமே... ‘நான் ஹெல்த்தியான லைஃப்ஸ்டைலுக்குள் நுழைகிறேன். விரைவிலேயே பொருத்தமான உடல் நலத்துடன், ஸ்லிம் ஆக, ஆற்றல் மிக்கவராக ஆகப் போகிறேன்!’

எந்த ஒரு எடை குறைப்புத் திட்டத்துக்கும் பின்னடைவாக இருப்பது ஊக்கக் குறைவுதான். நம் முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும் என நாமே நம்பத் தொடங்கும் போதுதான், அந்தச் செயலில் இயல்பூக்கம் உருவாகும்.

அப்படியானால் நம் மனத்திண்மையை எப்படி மேம்படுத்துவது?

எது முக்கியம் என முடிவெடுங்கள் தோற்றம், உடல் நலம், குடும்பம், சமூகத்தில் நன்மதிப்பு... இவையெல்லாம் முக்கியமா என நம்மை நாமே கேட்டுக் கொள்வோம். வாழ்க்கையில் நமக்கு என்னவெல்லாம் வேண்டும் என முடிவெடுத்தாலே, அதை அடைவது எளிதாகி விடும். ஒரு பழத்துண்டுக்கும் ஒரு சாக்லெட்டுக்கும் இடையேயான ஒரு சாய்ஸ் உங்கள் கையில் உள்ளது. சில நொடி சபலங்களைத் தாண்டி, புத்திசாலித்தனமாக முடிவெடுக்க நம்மால் நிச்சயம் முடியும்!

ஹெல்த்தியாக சிந்தித்தால் ஹெல்த்தியாக மாறலாம்

நம்மை ஆற்றல்மிக்க ஆரோக்கிய மனிதராக நினைக்கத் தொடங்குவது அவசியம். அதுவே அந்தப் பாதையில் நாம் தொடர்ந்து பயணிப்பதற்கு வழிகாட்டும். நாம் நம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்போது ஜீரா வழியும் ஜிலேபியால் நம்மை வென்று விட
முடியாது. அந்த வெற்றியை ஆப்பிளுக்கு வேண்டுமானால் வழங்கலாம்!

சுறுசுறுப்பாக நடை போடுவோம்

முகத்தில் புன்னகையோடு நிமிர்ந்த நெஞ்சோடு, எப்போதும் தன்னம்பிக்கை கொண்டு, தினசரி நடவடிக்கைகளை மேற்கொள்வோமே. இது பழகப் பழக இனிதாகும். ஆம்... ஹெல்த்தியான வாழ்க்கை முறையும் பழகப் பழகத்தான் பிடிக்கும்!

எதிர் சிந்தனையை எகிறச் செய்வோம் அவ்வப்போது எதிர் எண்ணங்கள், தன்னம்பிக்கையைக் குறைக்கும் சிந்தனைகள் தோன்றக்கூடும். மண்டைக்குள் ‘எப்படி இருந்தே நீ... இப்போ இப்படியெல்லாம் கஷ்டப்படணுமா?’என்றெல்லாம் குரல்கள் இழுக்கும். ‘வா வா வா’ என வம்புக்கு இழுத்து, கடத்திப் போய் கிட்னி திருடும் வடிவேலு பட காமெடி போன்றதுதான் அது. அதற்கெல்லாம் செவி சாயக்க வேண்டியதே இல்லை.

உதாரணமாக... நாம் சாப்பிட வேண்டிய அளவு முடிந்த பிறகும், அதன் சுவை ‘இன்னும் கொஞ்சம் சாப்பிடேன்’ என ஆசை காட்டும். அந்த ஆசைக்கு மயங்கினால், நம்மை நாமே தண்டிப்பதாகத்தானே அர்த்தம். ஆகவே, ‘நோ தேங்க்ஸ்’ சொல்லி, அவ்விடம் விட்டு அகன்று விட வேண்டும் அக்கணமே. இதுபோன்ற எதிர் எண்ணங்களும் சுய பச்சாதாபங்களும் நம்மை பின்னடைவுக்குள் தள்ளிவிடும் என்பதை மறக்க வேண்டாம். எதிர் எண்ணங்களுக்கு எதிரான எண்ணங்களை அதற்குப் பதிலாகக் கூறி, அதை ஓட ஓட விரட்டுவோம். நல்ல சாய்ஸ் நம் சாய்ஸ் என்கிற நிலையில் நெகட்டிவ் எண்ணங்களுக்கு என்ன வேலை இருக்கிறது. அவை தொலையட்டும்!

மற்றவர்களையும் வண்டியில் ஏற்றுவோம் தனக்கு நீரிழிவு இருக்கிறது என்கிற விஷயத்தைக்கூட ரகசியமாக வைத்திருக்கிற நபர்கள் நம்மிடையே இருக்கிறார்கள். இது ஒரு மோசமான நிலை. இந்த விஷயத்தை வெளியில் சொல்லாத போது, ஆரோக்கியமற்ற உணவுகளை விரும்பியோ, விரும்பாமலோ அதிக அளவில் சாப்பிடும் நிலை ஏற்படும். ‘சுகர் இல்லாத காபி’ என்று கேட்டு வாங்கக்கூட கூச்சப்படுகிறவர்களை நாம் பார்க்கிறோம். ஹோட்டலில் தவறுதலாக சுகர் சேர்க்கப்பட்ட காபி அளிக்கப்பட்டாலும் கூட, அதை மாற்றித்தரும் படி கேட்காமல், அப்படியே பருகுபவர்கள் பலர் உண்டு.

அதற்கு அவர்கள் கூறும் காரணம்... ‘பரவாயில்லை’. நம் உடல் நம் உணவு நம் உரிமை. இதில் ‘பரவாயில்லை’ என்ற விட்டுக் கொடுத்தலுக்கு அவசியமே இல்லை. ஆதலால், உணவு விஷயத்தில் எந்த இடத்திலும் தயக்கமே வேண்டாம். ‘இதுதான் வேண்டும்... இப்படித்தான் வேண்டும்’ என உறுதியாகக் கேட்டு வாங்கியே சாப்பிடலாம். அதில் எந்தத் தவறும் இல்லை. வீட்டிலும் அப்படித்தான். நாமே உணவு மற்றும் உடற்பயிற்சி விஷயங்களில் அக்கறை காட்டாத போது, வீட்டில் உள்ளவர்களும் காலப்போக்கில் கண்டுகொள்ள மாட்டார்கள்.

இதன் முக்கியத்துவமும் புரியாமல் போகும். அதன் பிறகுநாம் தனிமைப்படுத்தப்படுவோம். நீரிழிவு கட்டுப்பாடு கையை விட்டுப் போய் விடும். நாம் தினசரி வாழ்வில் எடுக்கிற சிறுசிறு முடிவுகள் கூட, நம் வாழ்க்கையை ஆரோக்கியமாக மாற்றி அமைக்கிற பணியைச் செய்யும். இதில் நம் குடும்பத்தினரையும் நண்பர்களையும் இயல்பாக ஈடுபடுத்தும் போது, நம் பணி எளிதாகி விடும். அதோடு, அறிந்தோ அறியாமலோ அவர்களும் ஆரோக்கிய கப்பலில் ஏறி நம்மோடு பயணிப்பார்கள். நம்முடைய திட்டத்தில் பலவித சமூக, கலாசார காரணிகள் தடங்கல் விளைவிக்கக் கூடும். இருப்பினும், நம் உறுதியும் குடும்பத்தினரின் ஆதரவும் இருக்கும் போது, இந்தப் பயணம் நிச்சயம் இனிமையாகவே அமையும்!

ஸ்வீட் டேட்டா

உலக நீரிழிவாளர்களில் 46.3 சதவிகிதத்தினருக்கு, தங்களுக்கு நீரிழிவு இருப்பதே தெரியாது!

(கட்டுப்படுவோம்...கட்டுப்படுத்துவோம்!)

பிச்சை தராவிடினும் நன்றே..தினகரன்


உத்தரப் பிரதேச மாநில ரயில் நிலையம் ஒன்றில், ரூ.100 பிச்சை தராததால், ஆத்திரம் அடைந்த பிச்சைக்காரன், சம்பந்தப்பட்டவரை இழுத்துக் கொண்டு ரயில் முன் பாய்ந்து இருவரது உயிரையும் அநியாயமாக பறிபோகச் செய்துள்ளான். பிச்சைக்காரர்கள் இப்போதெல்லாம், ஏதோ கொடுத்து வைத்ததுபோன்று ரூ.10 கொடு, ரூ.20 கொடு என்று உரிமையோடு கேட்கிறார்கள். சாலையோர கடைகளில் சாப்பிட்டுக் கொண்டிருந்தால், சாப்பாடு வாங்கிக் கொடுக்கும்படி பலர் முன்னிலையில் வம்பு செய்கின்றனர். பிச்சைக்காரர்கள் சமூகத்துக்கு பாதிப்பு இல்லாமல் கோயில் குளங்களில் இருந்த காலம் மாறி இப்போது, அதையே ெதாழிலாக செய்யும் வாலிபர்களும் பெருகிவிட்டனர். எந்த வேலையும் இல்லாமல் குவியும் வருமானத்துக்காக அழுக்கு சட்டையுடன் பிச்சை எடுக்க கிளம்பி விடுகின்றனர். பிச்சைக் கொடுக்காதவர்கள் அல்லது, ஒரு ரூபாய், 2 ரூபாய் பிச்சை தருபவர்களை, ஜென்மத்துக்கு வெட்கி தலைகுனியும்படி பலர் முன்னிலையில் திட்ட ஆரம்பித்துவிடுகின்றனர்.

பிச்சை என்பதில் இருந்துதான் லஞ்சமே ஆரம்பம் ஆகின்றது என்பதை பலர் புரிந்து கொள்வதில்லை. பிச்சைக்காரர்களை பிடித்து, மறுவாழ்வு மையங்களில் அடைக்க வேண்டும் என்று பல முறை நீதிமன்றங்கள் உத்தரவிடுகின்றன. ஆனால், இன்னமும் கூட, ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், மக்கள் கூடும் இடங்களில் பிச்சைக்காரர்களை சர்வசாதாரணமாக காண முடிகிறது. இதுபோன்ற பிச்சைக்காரர்களில் சிலர், மனநிலை பாதிக்கப்பட்டவர்களாகவும் உள்ளனர். சாதாரணமானவர்களை காட்டிலும் இதுபோன்றவர்களால் எப்போதுமே அருகில் இருப்பவர்களுக்கு ஆபத்து அதிகம். உத்தரப் பிரதேசத்தில் அதுதான் நடந்துள்ளது.

சம்பவம் நடந்த பின்னர் மனநிலை பாதிக்கப்பட்டவர், அவர் என்ன செய்வார் என்ற ரீதியில் போலீசார் பேச ஆரம்பித்து விடுகின்றனர். ஆனால், இறந்த நபரின் குடும்பம் நடுத்தெருவில் நிற்பதை இவர்கள் அறிவார்களா? ஒவ்வொரு வாரமும் பிச்சைக்காரர்களை பிடித்து மறுவாழ்வு இல்லங்களில் அடைக்க வேண்டும். இதுபோன்றவர்களை தொடர்ந்து பிடித்து வந்தால் மட்டுமே பயம் ஏற்படும். 6 மாதத்துக்கு ஒரு முறை நான்கைந்து பேரை பிடித்து கொண்டு செல்வதால் மட்டும் எந்த பயனும் ஏற்படாது. அதேபோல் இன்று முதல் பிச்சை தருவதில்லை என்று மக்களும் உறுதி ஏற்க வேண்டியது அவசியம்.

அல்லல் படும் ஆதார்..தினகரன்


ஆதார் எண் - அமெரிக்காவில் எப்படி சமூக பாதுகாப்பு எண் முக்கியத்துவம் பெறுகிறதோ அந்த அளவுக்கு, இந்தியர்களுக்கு மிக முக்கியமானது என்றால் நிச்சயம் ஒப்புக்கொள்ள வேண்டும்; காரணம், எல்லா உரிமையும் உள்ள இந்தியர் என்று நாம் சொல்லிக்ெகாள்ள வேண்டுமானால், அதற்கான ஒரே அதிகாரப்பூர்வ அடையாளமாக அது வருங்காலத்தில் இருக்கும் என்று நம்பப்பட்டது. பாஸ்போர்ட் எப்படியோ அப்படி மிகுந்த பாதுகாப்பு அம்சங்களுடன் நடைமுறைப்படுத்த வேண்டிய ஆதார் அட்டை வழங்குவதில் தான் எவ்வளவு குழப்பங்கள்; குளறுபடிகள்; திருப்பங்கள். ஏன் இப்படி...? உச்ச நீதிமன்றம் தலையிட்டு, அதற்கு மத்திய அரசும் பணிந்து பயந்து நடுங்கி, தெளிவான விஷயங்களை சமர்ப்பித்து தன் தரப்பை வலுவாக எடுத்து காட்ட முடியாமல் தவிக்கிறதே...?

சுப்ரீம் கோர்ட்டும், இப்படி ஒரு தெளிவில்லாத, தனி மனிதனின் அடிப்படை உரிமை, சுதந்திரத்தை பறிக்கும் வகையிலான ஆதாரை எப்படி கட்டாயமாக்க முடியும் என்று திரும்ப திரும்ப அடித்து கேட்கிறதே? ஆதார் திட்டத்துக்காக நாடு முழுவதும் கணக்கெடுத்து பிரமாண்ட முறையில் நடைமுறை ஏற்பாடுகளை செய்ய சாப்ட்வேர் நிறுவன தலைவர் நந்தன் நிலகேனியை அமர்த்தி முந்தைய மன்மோகன் அரசு அதிரடி நடவடிக்கை எடுத்தது. ஆனால், மக்களவை தேர்தலுடன் நிலகேனி மூட்டை கட்டி விட்டு, காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து போட்டியிட்டு தோற்றார். அத்தோடு ஆதாரும், யாரும் உரிய நடவடிக்கை எடுக்காமல் அம்போ நிலைக்கு தள்ளப்பட்டது.

மோடி வந்ததும், ஆதார் வேண்டுமா, வேண்டாமா என்று ஒரு பட்டிமன்றமே நடந்து, கடைசியில் வேண்டா வெறுப்பாக அதை தொடர அனுமதித்தது அரசு. ஆதார் மூலம் தான் காஸ் மானியம், நலத்திட்ட உதவிகளை மோடி அரசு செய்தாலும், அதை முழுமையாக பயன்படுத்த முடியாமல் தவிக்கிறது.
மன்மோகன் அரசு செய்ததை தவிர, ஆதார் விஷயத்தில் எந்த மாற்றத்தையும் மோடி அரசு செய்யவே இல்லை. அதில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் இவ்வளவு சர்ச்சைக்குரியதாக இருக்கும் என்று அறிந்தும் அரசு பெரிதாக எந்த மாற்றத்தையும் செய்யவில்லை என்பது தான் வருத்தமான விஷயம்.
ஆதார் திட்டம் ஆரம்பித்ததில் இருந்தே குழப்பம் தான்; நாடு முழுக்க, ஏன் தமிழ்நாட்டை எடுத்து கொண்டாலே, ஆதார் அட்டை பதிவுக்கு எந்த அளவுக்கு போலீஸ் தடியடி, குளறுபடிகள் நடந்தன என்பது தெரிந்ததுதான்.

பதிவு செய்வதில் ஆரம்பித்து, அட்டை தருவது வரைக்கும் பல கட்டங்களில் திடமான, வலுவான நடைமுறை பின்பற்றப்படவே இல்லை. இனியாவது மோடி அரசு விழித்தால் ஆதாருக்கு வழி பிறக்கும். இப்போது உச்ச நீதிமன்றம் சொல்லியிருக்கிற குறைகளை சரிவர ஆராய்ந்து, பரிசீலித்து பாதுகாப்பு அம்சங்களை கடுமையாக்க வேண்டும். ஆதாரை வைத்து தனி மனிதர்களுக்கு பிரச்னை வந்தால் அதை தீர்க்கவும், ஆதாரை தவறாக பயன்படுத்தினால் அதற்கு கடும் தண்டனை வழங்கவும் தேவையான திருத்தங்களை கொண்டு வந்து முழுமையாக பயன்படுத்தும் வகையில் செய்ய வேண்டும். அப்போது தான் ஆதார் அட்டைக்கும் ஒரு தேசிய அங்கீகாரம் கிடைக்கும். அதை இனியாவது செய்யுமா மத்திய அரசு?

ஆம்னி பேருந்துகளில் செல்ல அடையாள அட்டை கட்டாயம்.......dinamani


By எம்.மார்க்நெல்சன், சென்னை,

First Published : 26 October 2015 04:07 AM IST




ஆம்னி பேருந்துகளில் அடையாள அட்டையுடன்தான் இனி பயணிக்க முடியும். மேலும், இவற்றில் பல்வேறு பாதுகாப்பு நடைமுறைகளும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
ஆம்னி பேருந்துகளில் அண்மைக்காலமாக பயணிகளின் உடைமைகள் திருடப்படுகின்றன; பேருந்துகளும் விபத்துக்குள்ளாகி வருகின்றன. இதனால், இவற்றில் பயணிப்போர் அச்சத்துடனே பயணிக்க வேண்டிய நிலை இருந்து வந்தது.
இந்த நிலையில், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன்படி, அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் சார்பில் தமிழகத்தில் 1,200 பேருந்துகள், தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் சார்பில் 800 பேருந்துகள் என மொத்தம் 2 ஆயிரம் பேருந்துகள் பாதுகாப்பு நடைமுறைகள் அமலுக்கு வருகிறது.
இதுகுறித்து அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பாண்டியன், பொதுச் செயலர் இளங்கோவன், செயலர் அன்பழகன் ஆகியோர் கூறியதாவது:
அடையாள அட்டை இருந்தால்தான், ஆம்னி பேருந்துகளில் இனி பயணிக்க முடியும்.
ரயில்களில் உள்ளதுபோல் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையை பயணிகள் கட்டாயம் காண்பிக்க வேண்டிய வகையில் புதிய நடைமுறையை ஆம்னி பேருந்து நிறுவனங்கள் கொண்டுவந்துள்ளன.
தவிர்க்க முடியாத ஒரு சில சூழலில், அடையாள அட்டை இல்லாமல் வரும் பயணியிடம் செல்லிடப்பேசி எண், முகவரி உள்ளிட்ட விவரங்கள் பெறப்பட்டு பின்னரே பேருந்தில் பயணிக்க அனுமதிக்கப்படுவர் என்றனர்.
நவீன தீயணைப்பான்கள்
ஆம்னி பேருந்துகளில், தீ விபத்து ஏற்பட்டால், அதை உடனடியாகக் கட்டுப்படுத்தும் வகையில் நவீன ரக தீயணைப்பான்கள் இடம்பெறும். பாட்டில் வடிவில் இவற்றை திறக்கவோ அல்லது அழுத்தவோ வேண்டியதில்லை. தீப் பிடித்த பகுதியை நோக்கி, தூக்கி எரிந்தால் போதும். தீ கட்டுக்குள் வந்துவிடும். இதைப் பயன்படுத்துவது தொடர்பான செய்முறை பயிற்சி ஆம்னி பேருந்துகளின் ஊழியர்களுக்கும் அண்மையில் வழங்கப்பட்டது. ரூ.2,300 மதிப்பிலான இதில், 3 தீயணைப்பான்கள் பேருந்துக்குள்ளும், 2 ஓட்டுநரிடமும் இருக்கும்.
கண்காணிப்பு கேமரா

பயணிகளின் உடைமைகள் திருடு போவதைத் தடுக்கும் வகையில், கண்காணிப்புக் கேமராக்கள் 10 சதவீத பேருந்துகளில் பொருத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள பேருந்துகளிலும் விரைவில் பொருத்தப்பட்டு விடும்.

கடந்த ஆண்டு கட்டணமே!

பயணிகளிடம் ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை.

கடந்த ஆண்டு தீபாவளியின்போது, வசூலிக்கப்பட்ட பேருந்து கட்டணத்தையே, இந்த ஆண்டும் வசூலிக்க உள்ளோம் என்று ஆம்னி உரிமையாளர்கள் கூறினர்.


துபை விமான நேரத்தில் மாற்றம் இன்று முதல் அமலுக்கு வருகிறது..dinamani


By dn, திருச்சி,

First Published : 25 October 2015 08:49 AM IST


திருச்சி - துபை இடையே இயக்கப்பட்டு வரும் ஏர்-இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நேரத்தில் தாற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இரவு நேரத்தில் இயங்கப்பட்ட விமானம் பகல் நேரத்தில் இயக்கப்படவுள்ளது.

துபையிலிருந்து தினசரி நள்ளிரவு 12.05 மணிக்கு திருச்சி வந்து பயணிகளை இறக்கி ஏற்றிக்கொண்டு மீண்டும் 12.55 மணிக்கு துபை செல்லும். இந்த விமானம் குளிர்கால அட்டவணை மாறுதல் தொடர்பாக பகல் நேர விமானமாக மாற்றப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் இந்த விமானம் இனி பகல் 12.45-க்கு திருச்சி வந்து அதன் பின்னர் 1.30-க்கு மீண்டும் துபை புறப்பட்டுச்செல்லும்.

இந்த நடைமுறை இன்று தொடங்கி டிசம்பர் 6-ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும். அதன் பின் மீண்டும் மாற்றம் செய்யப்படும் என ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கட்டண சேவையை இந்த வாரம் முதல் துவங்குறது யூடியூப்..dinamani

By dn

First Published : 25 October 2015 02:36 PM IST


பத்தாண்டு காலம் இலவச சேவையை வழங்கிவந்த யூடியூப் இணையதளம், அதன் முதலாவது கட்டண சேவையை இந்த வாரம் துவங்கியிருக்கின்றது.

சந்தாதாரர்கள் இதன் மூலம், விளம்பரங்கள் இல்லாத, பிரத்தியேக காணொளி நிகழ்ச்சிகளை பார்க்க முடியும். யூடியூப் ரெட் என்ற இந்த சேவையில், மாதம் 9.99 டாலர் பணம் (ரூ. 650) செலுத்தினால், செல்பேசி, கணினி, என எல்லா தளங்களிலும் விளம்பரமின்றி வீடியோக்களை காணலாம். அக்டோபர் 28 முதல் அறிமுகமாகும் இந்த சேவை, முதலில் அமெரிக்காவில் மட்டும் தொடங்கப்படுகிறது. இணையம் மூலமான ஒளிபரப்புச் சந்தையில் வலுத்துவரும் போட்டிச் சூழலை, யூடியூப் எப்படி எதிர்கொள்ளப் போகின்றது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

விமானத்தில் குழந்தை பெற்ற தைவான் பெண்ணுக்கு அபராதம்

dinamani

By DN, தைபே

First Published : 25 October 2015 04:05 PM IST


அமெரிக்க விமானத்தில் குழந்தை பெற்ற தைவான் பெண்ணுக்கு அந்நாட்டு அரசு அபராதம் விதித்துள்ளது.

கடந்த 8 ஆம் தேதி சீனவைச் சேர்ந்த விமானம் ஒன்று தைவான் நாட்டின் தலைநகர் தைபேவிலிருந்து அலாஸ்கா வழியாக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகருக்கு இயக்கப்பட்டது.

அந்த விமானத்தில் தைவான் நாட்டைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணிப் பெண் ஒருவர் பயணித்தார். விமானத்தில் பயணம் செய்தபோது, திடீரென்று அந்த பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டு அலாஸ்கா நகரின் மீது பறந்தபோது, அந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. அதன்பின்பு அந்த விமானம் மீண்டும் தைபேவுக்கு திருப்பி விடப்பட்டது.

இதுகுறித்து விமானத்துறை அதிகாரிகள் அந்த பெண்ணின் உறவினர்களிடம் விசாரணை நடத்தியபோது, பிறக்கும் குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமை கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் குழந்தை பிறக்கும் தருவாயில் இருந்தபோதும் அதை மறைத்து விமானத்தில் அந்த பெண் பயணம் செய்துள்ளதாக தெரிவித்தனர்.

இதையடுத்து அமெரிக்கா சென்ற விமானத்தை மீண்டும் தைபே நகருக்கு திருப்ப காரணமாக இருந்த பெண்ணிடம் இழப்பீடு கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று விமானத்தின் செய்தித் தொடர்பாளர் வீனி லீ கூறினார்.

NEWS TODAY 2.5.2024