Monday, November 2, 2015

பெண் எனும் பகடைக்காய்: ஆதலினால் லெகிங்ஸ் அணிவீர் பா.ஜீவசுந்தரி

Return to frontpage

சமீபத்தில் ஒரு முதியோர் இல்லத்துக்கு விசிட் செய்தபோது, அங்கிருந்த வயதான பெண்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் அணிந்திருந்த உடை நைட்டிதான். இப்போது நைட்டி இல்லாத வீடுகளே கிடையாது இல்லையா! சின்னக் குழந்தைகளில் ஆரம்பித்து வயது முதிர்ந்தவர்கள்வரை அணிந்து கொள்ளும் ‘தேசிய உடை’ என்ற பெருமையை நைட்டிக்குக் கொடுத்துவிடலாம்.

பால் பாக்கெட்டோ, பச்சை மிளகாயோ ஏதோ ஒன்றை அவசரத் தேவைக்கு வாங்க சங்கோஜமில்லாமல் நைட்டி அணிந்தே கடைக்குப் போகும் பெண்கள் இன்று சர்வ சாதாரணம். சங்கோஜிகளாக இருக்கும் சிலர் ஒரு டவலை நைட்டியின் மீது குறுக்காக அணிந்துகொள்கிறார்கள். அதற்கு மேல் சங்கோஜம் கிடையாது.

இந்த நைட்டி உடை குறித்து அனைத்து வயதுப் பிரிவைச் சேர்ந்த பெண்களிடம் கருத்து கேட்டபோது அவர்கள் சொன்னது: “இரவில் மட்டுமல்ல, பகலிலும் வீட்டில் இருக்கும்போது நைட்டிதான் அணிகிறோம். உடலை இறுக்கிப் பிடிக்காமல் தளர்வாக இருக்கும் அந்த உடை எங்களுக்கு வசதியாக இருக்கிறது. வீட்டு வேலைகளைச் செய்வதற்கும் இடைஞ்சல் இல்லாமல் இருக்கிறது”.

இது அவர்களே, அவர்கள் அணிந்துகொள்ளும் உடை பற்றி, அனுபவபூர்வமாக வெளிப்படுத்திய பொதுக் கருத்து.

அடுத்து, லெகிங்ஸ் பற்றிய பேச்சு எழுந்தது. இது இளம் பெண்களை வெகுவாகக் கவர்ந்த உடை. இன்று இளம் பெண்கள் விரும்பி அணியும் உடை. புதிய விஷயங்களை சமூகத்துக்குக் கொண்டு வந்து சேர்ப்பது இளைய தலைமுறைதானே. இந்த நைட்டியையும் மூத்த தலைமுறை மற்றும் அன்றைய கலாச்சாரக் காவலர்களின் எதிர்ப்பையும் மீறி கொண்டுவந்து இன்று உலகமே அணியும் ஆடையாக மாற்றியவர்களும் அன்றைய இளம் தலைமுறையினர்தானே. இன்று லெகிங்ஸை நமக்கு அறிமுகப்படுத்தி யிருக்கிறார்கள். ஏனாம்? இதோ அவர்கள் சொல்கிறார்கள்:

“லெகிங்ஸ், நைட்டி மாதிரி தளர்வான உடை அல்ல. உடலை இறுக்கிப் பிடிக்கும் உடைதான். ஆனால், வசதியாக இருக்கிறது. பேருந்து, ரயில் பயணங்களின்போது ஓடிப்போய் வண்டியைப் பிடிப்பது எளிது. நிறைய கலர்களில் கிடைக்கிறது. எல்லா கலர்களிலும் வாங்கி வைத்துக்கொள்ளலாம். விலை மிகக் குறைவு. டாப்ஸ் மட்டும் தனியாக வாங்கினால் போதும். வித விதமான மேட்சிங்கில் அணியலாம். முக்கியமாக, மாதவிடாய்க் காலங்களில் மிக மிகப் பாதுகாப்பாக உணர வைக்கும்”

இப்போது பேன்ட் ஆண்களின் உடை மட்டுமல்ல; பெண்களும் பேன்ட், ஜீன்ஸ், முக்கால் பேன்ட், அரைக்கால் பேன்ட் எல்லாவற்றையும் விரும்பி அணிய ஆரம்பித்துவிட்டார்கள். முக்கால் பேன்ட் டீன் ஏஜ் பெண்களின் பெரு விருப்பம். காஷுவலாக வீட்டிலும் அவுட்டிங்கிலும் அணிந்துகொண்டு சுதந்திரமாகப் போய் வருகிறார்கள்.

புடவை- எவர்கிரீன் உடை. ஆயிரம் வசதிக் குறைவுகள் இருந்தாலும் அனைவரும் ஆராதிக்கும் உடை. நகரம், கிராமம், பட்டி தொட்டி, இளசு, கிழடு எந்த வேறுபாடும் பார்க்காமல் எல்லோரிடமும் போய் ஒட்டிக்கொள்ளும் பாரம்பரியம் மிக்கது. காட்டன், பட்டு எதுவானாலும் பரவாயில்லை. பெண்களைவிட, ஆண்களுக்கு மிகவும் பிடித்த, அவர்களை மிகவும் கவர்ந்த உடை என்பது மிகப் பெரிய ப்ளஸ் பாயின்ட்.

சரி, இப்போது விஷயத்துக்கு வருவோமா?

ஒரு கவிஞர், அதிலும் ‘ஆண் கவிஞர்’ நைட்டியைப் பற்றித் தன் கவிதை ஒன்றில் இப்படி வர்ணிக்கிறார்:

‘சிலிண்டருக்கு மாட்டிய உறை போன்றது’.

அது அவர் பார்வை. அதைப் பற்றி நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை. ஆனால், ‘இங்கு பெண்கள் எல்லோரும் சிலிண்டர்களா?’ என்பதை மட்டும் சிறு கேள்வியாகக் கேட்டு வைப்போம். அத்துடன் அழுத்தம் மிகுந்தால் சிலிண்டர் வெடித்துச் சிதறும் என்பதையும் ஒரு எச்சரிக்கையாகச் சொல்லி வைப்போம்.

மிகுந்த சர்ச்சையைக் கிளப்பிய உடை என்றால், அது இந்தப் பாழாய்ப் போன லெகிங்ஸ்தான். நான் சின்ன வயதில் பார்த்த ராஜா ராணி கதையுள்ள சினிமாக்களில் எல்லாம் எம்.ஜி.ஆர்., சிவாஜி, என்.டி.ஆர்., காந்தாராவ் போன்ற பெரிய பெரிய ஹீரோக்கள் எல்லாம் இறுக்கமான லெகிங்ஸ் அணிந்து, மேலே கவுன் போட்டுக்கொண்டு பாய்ந்து பாய்ந்து கத்திச்சண்டை போடுவார்கள். ராஜ, விஜயலலிதா, ஜெயலலிதா போன்ற ஹீரோயின்களும் ஸ்கின் கலரில் இதைப் போட்டுக்கொண்டு டான்ஸ் ஆடுவார்கள். அந்த உடை என்பது ஆண்-பெண் இரு பாலருக்கும் பொதுவான உடை என்று அப்போது நான் நினைத்துக்கொண்டிருந்தேன்.

அதன் பெயர் லெகிங்ஸ் என்பதெல்லாம் எனக்கு அப்போது தெரியாது. வளர்ந்து பெரிய பெண்ணானதும் நானும் இப்படி உடை உடுத்தி அழகு பார்ப்பேன் என்றெல்லாம் கனவு கண்டிருக்கிறேன். என்ன செய்வது? கெரகம், நம் ஆசையெல்லாம் நிறைவேறுமா? லெகிங்ஸ் சந்தைக்கு வர இவ்வளவு காலம் ஆகியிருக்கிறது. சின்ன வயது ஆசையை திருப்தியாக இப்போதுதான் நிறைவேற்றிக் கொண்டேன்.

ஆனால், பாருங்கள்... அநியாயத்துக்கு ஓரவஞ்சனையாகப் பெண்களுக்கு மட்டுமேயான உடையாக அதை இந்த நாகரிகக் கோமாளிகள் மாற்றிவிட்டார்கள். இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆண்களும் இதை அணிந்துகொள்ளச் சட்டம் இயற்ற வேண்டுமென்று மத்திய, மாநில அரசுகளுக்குக் கோரிக்கை வைக்கிறேன்.

பெண்கள் இந்த உடை தங்களுக்கு வசதியானது என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்ததைப் போல ஆண்களும் அணிந்து பார்த்தால்தான் அதன் அருமை அவர்களுக்குத் தெரியும் என்பதால் இதைப் பரிந்துரைக்கிறேன். அடுத்த வாரம் வரவிருக்கும் தீபாவளிக்கு லெகிங்ஸ் வாங்குவீர்; அணிந்து மகிழ்வீர். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம். இங்கு பாரதியையும் கொஞ்சம் துணைக்கு அழைக்கிறேன்.

ஆதலினால் லெகிங்ஸ் அணிவீர் ஆடவரே.

கொசுறு

‘பிரதி தின் டைம்’ என்ற அஸ்ஸாமிய செய்தி சானல், சில மாதங்களுக்கு முன், குரங்கு ஒன்று பேன்ட் அணிந்திருந்த படத்தைக் காண்பித்து, ‘இப்போதெல்லாம் குரங்குகள் பேன்ட் அணிகின்றன. குவாஹாட்டியில் உள்ள இளம் பெண்கள் ‘ஷார்ட்ஸ்’ அணிகிறார்கள் என்ற செய்தியை ஒளிபரப்பியது. இது குறித்து பாலின உரிமை ஆய்வாளர் மீனாட்சி பரூவா, ‘தனிமனித சுதந்திரம் பாதிக்கப்படுவதோடு, போலீஸைவிட மீடியாக்களுக்குப் பெண்கள் அதிகம் பயப்பட வேண்டியுள்ளது’ என கடும் கண்டனம் தெரிவித்தார். இதற்காக சானலின் செய்தி ஆசிரியரும் பின்னர் வருத்தம் தெரிவித்துக் கொண்டார்.

கட்டுரையாளர், எழுத்தாளர்.
தொடர்புக்கு: asixjeeko@gmail.com

சென்னை உயர் நீதிமன்ற இணையதளம் நவீன வடிவில் புதுப்பொலிவு பெறுகிறது: பார்வையற்றோரும் ஒலி வடிவில் தகவல்களை அறியலாம் ....... டி.செல்வகுமார்



சென்னை உயர் நீதிமன்ற இணைய தளம் பல்வேறு புதிய தகவல்களுடன் புதுப்பொலிவு பெறுகிறது. பார்வையற்றோரும் ஒலி வடிவில் தகவல்களை பெறும் வகையில் நவீன முறையில் வடிவமைக்கப்படுகிறது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்வதில் இருந்து தீர்ப்பு பெறும் வரை ஒவ்வொரு நடைமுறைக்கும் விதி முறைகள் உள்ளன. இதுகுறித்த அனைத்து தகவல்களையும் உள்ளடக்கிய இணையதளத்தை புதிதாக வடிவமைக்கும்படி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் உத்தரவிட்டார்.

அதன்படி, உயர் நீதிமன்ற இணையதளத்தை பல்வேறு அம்சங்களுடன் புத்தக வடிவில் மறுவடிவமைப்பு செய்ய 6 மாதங் களுக்கு முன்பு திட்டமிடப்பட்டது. இதையடுத்து தேசிய தகவல் மையத்திடம் விவாதிக்கப்பட்டது. அந்த மையம், இணைய தளத்தின் சில மாதிரிகளை அளித்தது. அவற்றை நீதிபதி ராம சுப்பிரமணியன் தலைமையிலான கம்ப்யூட்டர் குழு பார்வையிட்டது. இணையதளத்தின் மாதிரிகளில் இருந்து ஒன்றை கம்ப்யூட்டர் குழு தேர்வு செய்தது. அதற்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஒப்புதல் அளித்தார்.

இதைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்ற இணையதளத்தை புதுப்பிப்பதற்கான மென் பொருள் உள்ளிட்ட உபகரணங்கள் வாங்கு வதற்கு ஆரம்பகட்ட தொகையை தேசிய தகவல் மையத்துக்கு உயர் நீதிமன்றம் வழங்கியது. இதையடுத்து, உயர் நீதிமன்ற இணையதளம் புதிய தொழில்நுட்பத்தில் வடி வமைக்கப்படுகிறது. இதில், நீதித்துறை தொடர்பான அனைத்து தகவல்களையும் பொதுமக்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம். பார்வையற் றோரும் ஒலி வடிவில் தகவல் களை தெரிந்துகொள்ள முடியும்.

மக்களுக்கு பொதுவாக எழும் சந்தேகங்கள் (எப்.ஏ.க்யூ), வழக்கு தாக்கல் செய்யும்போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் உள் ளிட்ட அம்சங்கள் புதிதாக சேர்க் கப்படுகின்றன. இதன்மூலம், மனு தாக்கல் செய்யும் பிரிவில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் இளம் வழக்கறிஞர்களிடையே ஏற்படும் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

இதுகுறித்து உயர் நீதிமன்ற உயர் அதிகாரி ஒருவர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

சென்னை உயர் நீதிமன்ற இணையதளம் புதுப்பொலிவுடன் வடிவமைக்கப்படுகிறது. இதில், உயர் நீதிமன்ற வளாகத்தில் கம்பீரமாக காட்சியளிக்கும் பழமையான, பராம்பரியமிக்க கட்டிடங்கள் பிரமாண்டமாக இடம்பெறுகின்றன.

பொதுவான சந்தேகங்கள் (எப்.ஏ.க்யூ.) உள்ளிட்ட புதிய விஷயங்கள் இணையதளத்தில் சேர்க்கப்படுவதால், அதுதொடர் பான தகவல்கள் திரட்டப் படுகின்றன. ஊழியர்கள் பற் றாக்குறையால் இப்பணி தாமதமாகிறது. புதிய நீதிபதி களின் சொத்து விவரம், சட்டக் கமிஷனின் சுற்றறிக்கை, பொது மக்களுக்கு பயனுள்ள உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் உள் ளிட்டவற்றை தலைமை நீதிபதி ஒப்புதல் பெற்ற பிறகுதான் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய முடியும். இதுவும் தாமதத்துக்கு ஒரு காரணம். இன்னும் 3 மாதங்களில் சென்னை உயர் நீதிமன்றத்தின் இணையதளத்தை 100 சதவீத தகவல்களுடன் புதிய வடிவமைப்பில் பார்க்கலாம்.

இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

MBBS seats denied can’t be given: Supreme Court Manish Raj,TNN | Nov 2, 2015, 01.40 AM IST

CHENNAI: What happens to students if their admission is cancelled by a college even though they were not at fault? They can be awarded compensation, but not granted admission because of "lapse of time," said the Supreme Court, agreeing with an earlier verdict of the Madras high court. It also upheld the award of 3 lakh as compensation to two students, who, despite being in the merit list of a private medical college, were denied admission.

In March 2013, Nihaal Ahamed and Gayathri submitted applications for admission in MBBS course to Tamil Nadu Private Professional Colleges Association affiliated to Tamil Nadu Dr MGR Medical University. They preferred Velammal Medical College Hospital and Research Institute. After the results were announced on September 23, 2013, they went to the college the next day. As they were directed to come after three days, the students complained against the college to the admission monitoring committee which in turn asked the college to submit its reply.

The college then drafted letters dated September 24, 2013—which were posted only on September 29, 2013—asking the students to appear for counselling on September 26, 2013. After receiving the letters, the students immediately approached the college only to be refused admission on the ground that they failed to appear on the stipulated day. The students then moved the Madras high court (Madurai bench). A single judge order said though the students were not eligible for admission, the college had to pay them a compensation of 3 lakh each. After another round of litigation, a division bench set aside the court's earlier order to award compensation.

Ahamed and Gayathri then filed an appeal in the Supreme Court challenging the denial of admission. Counsel for the students said the college had "malafide intention" and resorted to sending "ante-dated letters" to "wriggle out of the complaint" filed by the students. Denying this, counsel for the college said the letters were sent only after orally instructing the students to appear on the stipulated date.

The bench, however, set aside the division bench's verdict rejecting payment of compensation and directed the college to pay the compensation within eight weeks.

Sunday, November 1, 2015

Published: October 31, 2015 07:45 IST Updated: October 31, 2015 07:47 IST கடத்தப்பட்ட மருத்துவ மாணவரை குழிதோண்டி புதைக்க முயற்சி? - ஆர்.எஸ்.மங்கலத்தில் நடந்த போலீஸ் விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்

Return to frontpage

சென்னை தாம்பரம் வெங்கடேசன் தெருவைச் சேர்ந்த டாக்டர் தம்பதி ரியாஸ், வஹிதாவின் மகன் அஜ்மல் அஸ்லாம்(20). இவர் சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 27-ம் தேதி கல்லூரிக்கு சென்ற அஜ்மல் மீண்டும் வீடு திரும்பவில்லை.

இந்நிலையில் அவர் கடத்தப் பட்டதாக 28-ம் தேதி காலை அவரது தாயாருக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் ரூ.50 லட்சம் தந்தால் உங்கள் மகனை விட்டு விடுகிறோம் என தெரிவித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த வஹிதா, குரோம்பேட்டை போலீஸில் புகார் செய்தார். போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் அஜ்மல் அஸ்லாம் அவரது தந்தைக்கு போன் செய்து, தான் கடத்தப்பட்டு ராமநாதபுரத்தில் இருப்பதாகவும், காரை அனுப்பி வைக்குமாறும் கூறியுள்ளார்.

அதையடுத்து அவரது பெற்றோர், போலீஸார் 2 கார்களில் ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் புறப்பட்டு வந்தனர். நேற்று காலை அஸ்லாம் தங்கியிருந்த வீட்டிலிருந்து அவரை சென்னைக்கு அழைத்துச் சென்றனர்.

விசாரணையில் வெளியான தகவல்கள்:

கடந்த 27-ம் தேதி அவரது நண்பர்கள் 4 பேர் (ஹாலிக், பாரூக், அசார், விக்னேஸ்வரன்) அழைத்துச் சென்று ஒரு அறையில் வைத்து குளிர்பானம் கொடுத்துள்ளனர். அதன்பிறகு அவருக்கு நினைவு இல்லை. பின்னர் ஹாலிக்கை தவிர மற்ற 3 நண்பர்கள் காரில் கடத்திச் சென்றுள்ளனர்.

ராமநாதபுரம் அருகே உள்ள ஒரு தோப்புக்குள் அழைத்துச் சென்று காருக்குள்ளேயே அடைத்து வைத்துள்ளனர். பணம் கேட்டு மிரட்டிய அவர்கள், அஸ்லாமை புதைக்க அதே தோப்பில் 6 அடி குழி தோண்டி யுள்ளனர். அஸ்லாமின் பெற்றோர் பணம் தரவில்லை என்றால் அவரை கொன்று புதைக்க அவர்கள் முடிவு செய்திருந்தனர்.

இந்நிலையில் கடத்தப்பட்ட செய்தி பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளில் வெளியானதால் அஸ்லாமை விடுவித்துள்ளனர்.

பின்னர் அவருடைய நண்பர் ஹாலிக் நேற்று முன்தினம் மதியம் காரில் அழைத்து சென்று, ரூ.500 கொடுத்து கிழக்கு கடற்கரை சாலையில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளார். அஸ்லாம் அங்கிருந்த ஒருவரின் செல்போன் மூலம் தனது தந்தைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அதன் பிறகு அஸ்லாம் தந்தையின் நண்பர் தகவலறிந்து அவரை மீட்டு அவரது வீட்டில் வைத்திருந்தார். அதன் பிறகு அவரது பெற்றோரும் போலீஸாரும் நேரில் வந்து அஸ்லாமை அழைத்துச் சென்றனர்.

இந்த கடத்தலில் ஹாலிக் மூளையாக செயல்பட்டுள்ளார். ஏற்கெனவே ஒருமுறை அஸ்லாம் ராமநாதபுரம் தோப்புக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது.

கடத்தலை தெளிவுபடுத்தாத போலீஸ்

அஸ்லாம் கடத்தப்பட்டாரா அல்லது அது வெறும் நாடகமா என புரியாத நிலையில், போலீஸாரும் தங்களது விசாரணை பற்றிய தகவல்களை வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. இதனால் அஸ்லாம் சென்னைக்கு அழைத்து வரப்பட்ட நிலையிலும் பத்திரிகையாளர்கள் உண்மையான தகவல்களை போலீஸிடம் இருந்து பெற முடியாமல் தவித்தனர். கடத்தல் சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்ட ஒரு மாணவர் தரப்பில் தரப்பட்ட அழுத்தம் காரணமாகவே போலீஸ் நடவடிக்கையில் தொய்வு இருந்ததாகவும், குழப்பம் நிலவியதாகவும் சொல்லப்படுகிறது.

‘வாட்ஸ் அப்’ நண்பர்கள் உதவியால் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது சவுதியில் இறந்த தொழிலாளி உடல்

Return to frontpage

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள துக்காச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கரன்(52). கடந்த 23 ஆண்டுகளாக சவுதி அரேபியாவில் உள்ள நஜாரம் மாகாணத்தில் முகமது அல் சுகூர் என்பவரின் பண்ணையில் தோட்டத் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், கடந்த ஜூன் 15-ம் தேதி மாரடைப்பால் பாஸ்கரன் இறந்து விட்டதாக தகவல் வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பாஸ்கரனின் மனைவி அமுதா(45), மகன் கார்த்திகேயன்(26), மகள் பூங்கோதை(24) உள்ளிட்டோர், அவரது முதலாளியை தொடர்புகொண்டு பேசியுள்ளனர்.

அப்போது, “பாஸ்கரனின் உடலை அனுப்புவதில் சட்டச் சிக்கல்கள் உள்ளன. அதனால், சவுதியிலேயே அடக்கம் செய்துவிடுகிறோம். அதற்குப் பதிலாக ரூ.7 லட்சம் பணம் தருகிறோம்” என்று அவர் தெரிவித்துள்ளார். அதற்கு ஒப்புக்கொள்ளாத பாஸ்கரன் குடும்பத்தினர், “பணம் தேவையில்லை, உடலை அனுப்பி வையுங்கள். நாங்கள் இறுதிச் சடங்கு செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.

எனினும் உடலை அனுப்பாததால், அவரது உடலை மீட்க குடும்பத்தினர் கடந்த 5 மாதங்களாக போராடி வந்தனர். இதுகுறித்து கடந்த மாதம் ‘தி இந்து’வில் செய்தி வெளியானது.

இதுகுறித்து தகவலறிந்த, தமிழ்நாடு சமூக சேவை சர்வதேச கழகப் பொதுச் செயலாளரான பட்டுக்கோட்டை ஏ.பிரபாகரன், சவுதியில் உள்ள நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ‘வாட்ஸ் அப் நண்பர்கள் குழு’ உறுப்பினர்கள் அப்துல் காதர், முருகன் ஆகியோர் மூலம் தீவிர முயற்சி எடுத்து, பாஸ்கரனின் உடல் சென்னை கொண்டுவரப்படும் என்று கடந்த வாரம் தெரிவித்தார்.

அதன்படி, பாஸ்கரனின் உடல் நேற்று முன்தினம் சென்னை விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு, பாஸ்கரனின் மகன் கார்த்திகேயன், பட்டுக்கோட்டை பிரபாகரன், அமைப்பின் சென்னை மாவட்ட நிர்வாகி கிஷோர் ஆகியோர் உடலைப் பெற்று, ரயில் மூலம் நேற்று கும்பகோணத்துக்குக் கொண்டு வந்தனர்.

பின்னர், சொந்த ஊரில் இறுதிச் சடங்கு செய்யப்பட்டு, பாஸ்கரனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு நவ.16 முதல் மத்திய படை பாதுகாப்பு: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு

Return to frontpage

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு நவம்பர் 16-ம் தேதி முதல் மத்திய தொழில் பாதுகாப்பு படை பாதுகாப்பு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கான தொகையை தமிழக அரசு ஒரு வாரத்தில் டெபாசிட் செய்யவும் உத்தரவிடப்பட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் முதல் அமர்வு நீதிமன்றத்துக்குள் அவரது எதிரில் அமர்ந்து சில வழக்கறிஞர்கள், சட்ட மாணவர்கள் கடந்த செப்டம்பர் 14-ம் தேதி போராட்டம் நடத்தினர். இதுதொடர்பாக தாமாக முன்வந்து உயர் நீதிமன்றம் வழக்கு பதிவு செய்தது. சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளை ஆகியவற்றின் பாதுகாப்பை மத்திய தொழில் பாதுகாப்பு படை (சிஐஎஸ்எப்) போன்ற சிறப்பு அமைப்பிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ‘‘உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளை ஆகியவை பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, மத்திய பாதுகாப்பு படை தேவையில்லை. தமிழக காவல் துறை பாதுகாப்பே போதும்’’ என்று தமிழக அரசு சார்பில் கூறப்பட்டது. ‘‘இதை மீறி மத்திய பாதுகாப்பு படையை அமர்த்தினால் பிரச்சினை ஏற்படக்கூடும்’’ என்று மத்திய அரசு தெரிவித்தது.

‘‘உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் போலீஸார் இடையே பரஸ்பரம் நம்பிக்கை இல்லாததால், சிறிது காலமாவது உயர் நீதிமன்ற பாதுகாப்பை நிபுணத்துவம் பெற்ற சுதந்திரமான அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும்’’ என்று தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான முதல் அமர்வு தெரிவித்தது.

இந்நிலையில், தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோரைக் கொண்ட முதல் அமர்வு முன்பு வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ராஜகோபாலன், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஏ.எல்.சோமையாஜி ஆஜராகினர். மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் ராஜேந்திர சதுர்வேதி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:

‘காவல், பொது அமைதி என்பது மாநில அரசு விவகாரம். மாநில அரசு கோரினால் மட்டுமே மத்திய படையை அனுப்ப வேண்டும். மத்திய படைகளை நியமித்தால் அனைவரது கைப்பைகள், சூட்கேஸ்கள் சோதிக்கப்படும். இதற்கு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். மத்திய படையினருக்கு உள்ளூர் மொழி தெரியாததால் பதற்றம் அதிகமாகி நிலைமை இன்னும் மோசமாகும். அவர்களுக்கும் மாநில போலீஸாருக்கும் அதிகார வரம்பு தொடர்பான பிரச்சினைகளும் எழும். 2009-ல் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவால், நுழைவுவாயில்களில் ஏற்கெனவே கூடுதல் போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர்’ என்று மத்திய அரசிடம் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

உயர் நீதிமன்றத்துக்கு சிஐஎஸ்எப் பாதுகாப்பு தேவைப்பட்டால், 650 காவலர்கள் தேவை. அவர்களுக்கு ஓராண்டுக்கு ரூ.32.73 கோடி செலவாகும். குறைந்தபட்சம் 6 மாதங்கள் என்றால் ரூ.16.60 கோடி தேவை. மத்திய படை பாதுகாப்பு தேவை என்றால், இத்தொகையை டெபாசிட் செய்யுமாறு தமிழக அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்த வேண்டும்.

இவ்வாறு மத்திய அரசின் மனுவில் கூறப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:

நீதிமன்ற பாதுகாப்பு விவகாரத்தை அரசியலாக்குவது வேதனை அளிக்கிறது. இது ஈகோ பிரச்சினை அல்ல. உயர் நீதிமன்றப் பாதுகாப்பு முக்கியம் என்ற அடிப்படையில் ஆராயவேண்டும். உச்ச நீதிமன்றம், டெல்லி உயர் நீதிமன்றத்துக்கு மத்திய படைதான் பாதுகாப்பு வழங்குகிறது. இது வழக்கமானதுதான்.

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் 2 வெடிகுண்டு புரளி சம்பவங்கள் நடந்தன. சில வழக்கறிஞர்கள் உயர் நீதிமன்ற அறைக்குள் நுழைந்து போராட்டம் நடத்தினர். நீதிமன்றத்துக்குள் பதாகைகளை எடுத்து வருபவர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை.

நீதிமன்ற வராண்டாவில் குழுவாக நின்று கோஷமிடுவது, நீதிமன்றத்துக்குள் நுழைந்து போராட்டம் நடத்துவது போன்றவை ஆரோக்கியமானது அல்ல. இவற்றை கருத்தில் கொண்டுதான் மத்திய பாதுகாப்பு படை தேவை என்கிறோம்.

எனவே, சிஐஎஸ்எப் படையை உயர் நீதிமன்ற பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவதற்கான தொகையை மத்திய அரசிடம் தமிழக அரசு இன்னும் 7 நாட்களுக்குள் டெபாசிட் செய்ய வேண்டும். அதன்பிறகு, உயர் நீதிமன்றத்தில் சிஐஎஸ்எப் படையினரை பணியில் ஈடுபடுத்த மத்திய அரசு ஒரு வாரத்துக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தீபாவளி விடுமுறைக்குப் பிறகு நவம்பர் 16-ம் தேதி உயர் நீதிமன்றம் திறக்கப்படும்போது இங்கு புதிய பாதுகாப்பு முறை அமல்படுத்தப்பட வேண்டும்.

இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை நவம்பர் 17-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

நீதிபதிகள் இவ்வாறு உத்தரவிட்டதும், இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சோமையாஜி தெரிவித்தார்.
Keywords: சென்னை உயர் நீதிமன்றம், நவ.16 முதல் மத்திய படை பாதுகாப்பு, உச்ச நீதிமன்றம், தமிழக அரசு மேல்முறையீடு

விகல்ப்: ரயிலில் வெயிட்டிங் லிஸ்ட் பயணிகளுக்கு புது திட்டம் .... பிடிஐ

Return to frontpage

ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து காத்திருப்பு பட்டியலில் இருக்கும் பயணிகளுக்காக, விகல்ப் என்ற புதிய திட்டத்தை ரயில்வே துறை ஞாயிற்றுக்கிழமை அறிமுகப்படுத்தவுள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம், முன்பதிவு செய்த ரயிலில் டிக்கெட் உறுதி ஆகவில்லை என்றால், அதே மார்க்கத்தில் ஓடும் அடுத்த ரயிலில் டிக்கெட் உறுதி செய்யப்படும்.

இந்த மாற்று ரயில் திட்டத்தை நவம்பர் 1-ஆம் தேதி முதல் டெல்லி - லக்னோ மற்றும் டெல்லி - ஜம்மு வழித்தட்டத்தில் ஓடும் ரயில்கள் முன்பதிவில் சோதனை செய்யவுள்ளனர்.

தற்போதைக்கு விகல்ப் திட்டத்தை, இணையம் மூலம் அடுத்த 6 மாதங்களுக்கான டிக்கெட்டை முன்பதிவு செய்தவர்களால் மட்டுமே பயன்படுத்த முடியும். மேலும் இது மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் இரண்டு ரயில்களுக்கும், இரண்டு வழித்தடங்களில் மட்டுமே செல்லுபடியாகும் என்று மூத்த ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இணையம் மூலம் டிக்கெட் பதிவு செய்யும்போது, விகல்ப் என்ற தேர்வையும் தேர்ந்தெடுக்கும் பட்சத்தில், அதே பாதையில் ஓடும் அடுத்த ரயிலில் உறுதிசெய்யப்பட்ட டிக்கெட் கிடைக்கும். இதன்மூலம் காத்திருப்புப் பட்டியலில் இருப்பவர்களுக்கு ஒரு வாய்ப்பும், பதிவு செய்யாமல் காலியாக இருக்கும் டிக்கெட்டுகளும் நிரப்பப்பட்டு இரண்டு விதங்களில் ரயில்வே துறையின் நோக்கம் நிறைவேறுகிறது.

விகல்ப் தேர்வை தேர்ந்தெடுத்தவர்களுக்கு, உறுதி செய்யப்பட்ட டிக்கெட் குறித்த எஸ்.எம்.எஸ் செய்தியும் வரும். மேலும் இதற்கு கூடுதல் கட்டணம் இல்லை. கட்டணங்களில் மாறுதல் இருந்தால் அதுவும் கணக்கில் எடுத்துக் கொள்ளப் பட மாட்டாது. மாற்று ரயிலில் டிக்கெட் உறுதி செய்யப்பட்ட பயணியின் பெயர், முதல் ரயிலின் காத்திருப்போர் பட்டியலில் இடம் பெறாது. மாற்று ரயிலில் பயணம் செய்பவர்கள் என்ற புதிய பட்டியல் தயார் செய்யப்படும்.

ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு எப்போதுமே அதிக மவுசு இருக்கும் நிலையில், குறிப்பாக பண்டிகை சமயங்களில் தேவை அதிகரித்து வருவதால் இந்த திட்டம் பயந்தரக்கூடும் என்ற் எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் சோதனையில் கிடைக்கும் வரவேற்பைப் பொருத்து மற்ற வழித்தடங்களுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளது.
Keywords: ரயில் டிக்கெட் முன்பதிவு, ஐஆர்சிடிசி, ரயில் டிக்கெட் பட்டியல், காத்திருப்போர் பட்டியல், ரயில்வே துறை திட்டம், விகல்ப், மாற்று ரயில் ஏற்பாடு

NEWS TODAY 22.04.2024