Sunday, November 1, 2015

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு நவ.16 முதல் மத்திய படை பாதுகாப்பு: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு

Return to frontpage

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு நவம்பர் 16-ம் தேதி முதல் மத்திய தொழில் பாதுகாப்பு படை பாதுகாப்பு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கான தொகையை தமிழக அரசு ஒரு வாரத்தில் டெபாசிட் செய்யவும் உத்தரவிடப்பட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் முதல் அமர்வு நீதிமன்றத்துக்குள் அவரது எதிரில் அமர்ந்து சில வழக்கறிஞர்கள், சட்ட மாணவர்கள் கடந்த செப்டம்பர் 14-ம் தேதி போராட்டம் நடத்தினர். இதுதொடர்பாக தாமாக முன்வந்து உயர் நீதிமன்றம் வழக்கு பதிவு செய்தது. சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளை ஆகியவற்றின் பாதுகாப்பை மத்திய தொழில் பாதுகாப்பு படை (சிஐஎஸ்எப்) போன்ற சிறப்பு அமைப்பிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ‘‘உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளை ஆகியவை பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, மத்திய பாதுகாப்பு படை தேவையில்லை. தமிழக காவல் துறை பாதுகாப்பே போதும்’’ என்று தமிழக அரசு சார்பில் கூறப்பட்டது. ‘‘இதை மீறி மத்திய பாதுகாப்பு படையை அமர்த்தினால் பிரச்சினை ஏற்படக்கூடும்’’ என்று மத்திய அரசு தெரிவித்தது.

‘‘உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் போலீஸார் இடையே பரஸ்பரம் நம்பிக்கை இல்லாததால், சிறிது காலமாவது உயர் நீதிமன்ற பாதுகாப்பை நிபுணத்துவம் பெற்ற சுதந்திரமான அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும்’’ என்று தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான முதல் அமர்வு தெரிவித்தது.

இந்நிலையில், தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோரைக் கொண்ட முதல் அமர்வு முன்பு வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ராஜகோபாலன், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஏ.எல்.சோமையாஜி ஆஜராகினர். மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் ராஜேந்திர சதுர்வேதி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:

‘காவல், பொது அமைதி என்பது மாநில அரசு விவகாரம். மாநில அரசு கோரினால் மட்டுமே மத்திய படையை அனுப்ப வேண்டும். மத்திய படைகளை நியமித்தால் அனைவரது கைப்பைகள், சூட்கேஸ்கள் சோதிக்கப்படும். இதற்கு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். மத்திய படையினருக்கு உள்ளூர் மொழி தெரியாததால் பதற்றம் அதிகமாகி நிலைமை இன்னும் மோசமாகும். அவர்களுக்கும் மாநில போலீஸாருக்கும் அதிகார வரம்பு தொடர்பான பிரச்சினைகளும் எழும். 2009-ல் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவால், நுழைவுவாயில்களில் ஏற்கெனவே கூடுதல் போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர்’ என்று மத்திய அரசிடம் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

உயர் நீதிமன்றத்துக்கு சிஐஎஸ்எப் பாதுகாப்பு தேவைப்பட்டால், 650 காவலர்கள் தேவை. அவர்களுக்கு ஓராண்டுக்கு ரூ.32.73 கோடி செலவாகும். குறைந்தபட்சம் 6 மாதங்கள் என்றால் ரூ.16.60 கோடி தேவை. மத்திய படை பாதுகாப்பு தேவை என்றால், இத்தொகையை டெபாசிட் செய்யுமாறு தமிழக அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்த வேண்டும்.

இவ்வாறு மத்திய அரசின் மனுவில் கூறப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:

நீதிமன்ற பாதுகாப்பு விவகாரத்தை அரசியலாக்குவது வேதனை அளிக்கிறது. இது ஈகோ பிரச்சினை அல்ல. உயர் நீதிமன்றப் பாதுகாப்பு முக்கியம் என்ற அடிப்படையில் ஆராயவேண்டும். உச்ச நீதிமன்றம், டெல்லி உயர் நீதிமன்றத்துக்கு மத்திய படைதான் பாதுகாப்பு வழங்குகிறது. இது வழக்கமானதுதான்.

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் 2 வெடிகுண்டு புரளி சம்பவங்கள் நடந்தன. சில வழக்கறிஞர்கள் உயர் நீதிமன்ற அறைக்குள் நுழைந்து போராட்டம் நடத்தினர். நீதிமன்றத்துக்குள் பதாகைகளை எடுத்து வருபவர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை.

நீதிமன்ற வராண்டாவில் குழுவாக நின்று கோஷமிடுவது, நீதிமன்றத்துக்குள் நுழைந்து போராட்டம் நடத்துவது போன்றவை ஆரோக்கியமானது அல்ல. இவற்றை கருத்தில் கொண்டுதான் மத்திய பாதுகாப்பு படை தேவை என்கிறோம்.

எனவே, சிஐஎஸ்எப் படையை உயர் நீதிமன்ற பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவதற்கான தொகையை மத்திய அரசிடம் தமிழக அரசு இன்னும் 7 நாட்களுக்குள் டெபாசிட் செய்ய வேண்டும். அதன்பிறகு, உயர் நீதிமன்றத்தில் சிஐஎஸ்எப் படையினரை பணியில் ஈடுபடுத்த மத்திய அரசு ஒரு வாரத்துக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தீபாவளி விடுமுறைக்குப் பிறகு நவம்பர் 16-ம் தேதி உயர் நீதிமன்றம் திறக்கப்படும்போது இங்கு புதிய பாதுகாப்பு முறை அமல்படுத்தப்பட வேண்டும்.

இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை நவம்பர் 17-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

நீதிபதிகள் இவ்வாறு உத்தரவிட்டதும், இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சோமையாஜி தெரிவித்தார்.
Keywords: சென்னை உயர் நீதிமன்றம், நவ.16 முதல் மத்திய படை பாதுகாப்பு, உச்ச நீதிமன்றம், தமிழக அரசு மேல்முறையீடு

No comments:

Post a Comment

NEET PG 2024 Exam Pattern REVISED, NMC Issues Official Notice; Here’s All You Need To Know

NEET PG 2024 Exam Pattern REVISED, NMC Issues Official Notice; Here’s All You Need To Know The NEET PG 2024 is scheduled to take place on Ju...