தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள துக்காச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கரன்(52). கடந்த 23 ஆண்டுகளாக சவுதி அரேபியாவில் உள்ள நஜாரம் மாகாணத்தில் முகமது அல் சுகூர் என்பவரின் பண்ணையில் தோட்டத் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், கடந்த ஜூன் 15-ம் தேதி மாரடைப்பால் பாஸ்கரன் இறந்து விட்டதாக தகவல் வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பாஸ்கரனின் மனைவி அமுதா(45), மகன் கார்த்திகேயன்(26), மகள் பூங்கோதை(24) உள்ளிட்டோர், அவரது முதலாளியை தொடர்புகொண்டு பேசியுள்ளனர்.
அப்போது, “பாஸ்கரனின் உடலை அனுப்புவதில் சட்டச் சிக்கல்கள் உள்ளன. அதனால், சவுதியிலேயே அடக்கம் செய்துவிடுகிறோம். அதற்குப் பதிலாக ரூ.7 லட்சம் பணம் தருகிறோம்” என்று அவர் தெரிவித்துள்ளார். அதற்கு ஒப்புக்கொள்ளாத பாஸ்கரன் குடும்பத்தினர், “பணம் தேவையில்லை, உடலை அனுப்பி வையுங்கள். நாங்கள் இறுதிச் சடங்கு செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.
எனினும் உடலை அனுப்பாததால், அவரது உடலை மீட்க குடும்பத்தினர் கடந்த 5 மாதங்களாக போராடி வந்தனர். இதுகுறித்து கடந்த மாதம் ‘தி இந்து’வில் செய்தி வெளியானது.
இதுகுறித்து தகவலறிந்த, தமிழ்நாடு சமூக சேவை சர்வதேச கழகப் பொதுச் செயலாளரான பட்டுக்கோட்டை ஏ.பிரபாகரன், சவுதியில் உள்ள நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ‘வாட்ஸ் அப் நண்பர்கள் குழு’ உறுப்பினர்கள் அப்துல் காதர், முருகன் ஆகியோர் மூலம் தீவிர முயற்சி எடுத்து, பாஸ்கரனின் உடல் சென்னை கொண்டுவரப்படும் என்று கடந்த வாரம் தெரிவித்தார்.
அதன்படி, பாஸ்கரனின் உடல் நேற்று முன்தினம் சென்னை விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு, பாஸ்கரனின் மகன் கார்த்திகேயன், பட்டுக்கோட்டை பிரபாகரன், அமைப்பின் சென்னை மாவட்ட நிர்வாகி கிஷோர் ஆகியோர் உடலைப் பெற்று, ரயில் மூலம் நேற்று கும்பகோணத்துக்குக் கொண்டு வந்தனர்.
பின்னர், சொந்த ஊரில் இறுதிச் சடங்கு செய்யப்பட்டு, பாஸ்கரனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
No comments:
Post a Comment