சென்னை தாம்பரம் வெங்கடேசன் தெருவைச் சேர்ந்த டாக்டர் தம்பதி ரியாஸ், வஹிதாவின் மகன் அஜ்மல் அஸ்லாம்(20). இவர் சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 27-ம் தேதி கல்லூரிக்கு சென்ற அஜ்மல் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில் அவர் கடத்தப் பட்டதாக 28-ம் தேதி காலை அவரது தாயாருக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் ரூ.50 லட்சம் தந்தால் உங்கள் மகனை விட்டு விடுகிறோம் என தெரிவித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த வஹிதா, குரோம்பேட்டை போலீஸில் புகார் செய்தார். போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் அஜ்மல் அஸ்லாம் அவரது தந்தைக்கு போன் செய்து, தான் கடத்தப்பட்டு ராமநாதபுரத்தில் இருப்பதாகவும், காரை அனுப்பி வைக்குமாறும் கூறியுள்ளார்.
அதையடுத்து அவரது பெற்றோர், போலீஸார் 2 கார்களில் ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் புறப்பட்டு வந்தனர். நேற்று காலை அஸ்லாம் தங்கியிருந்த வீட்டிலிருந்து அவரை சென்னைக்கு அழைத்துச் சென்றனர்.
விசாரணையில் வெளியான தகவல்கள்:
கடந்த 27-ம் தேதி அவரது நண்பர்கள் 4 பேர் (ஹாலிக், பாரூக், அசார், விக்னேஸ்வரன்) அழைத்துச் சென்று ஒரு அறையில் வைத்து குளிர்பானம் கொடுத்துள்ளனர். அதன்பிறகு அவருக்கு நினைவு இல்லை. பின்னர் ஹாலிக்கை தவிர மற்ற 3 நண்பர்கள் காரில் கடத்திச் சென்றுள்ளனர்.
ராமநாதபுரம் அருகே உள்ள ஒரு தோப்புக்குள் அழைத்துச் சென்று காருக்குள்ளேயே அடைத்து வைத்துள்ளனர். பணம் கேட்டு மிரட்டிய அவர்கள், அஸ்லாமை புதைக்க அதே தோப்பில் 6 அடி குழி தோண்டி யுள்ளனர். அஸ்லாமின் பெற்றோர் பணம் தரவில்லை என்றால் அவரை கொன்று புதைக்க அவர்கள் முடிவு செய்திருந்தனர்.
இந்நிலையில் கடத்தப்பட்ட செய்தி பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளில் வெளியானதால் அஸ்லாமை விடுவித்துள்ளனர்.
பின்னர் அவருடைய நண்பர் ஹாலிக் நேற்று முன்தினம் மதியம் காரில் அழைத்து சென்று, ரூ.500 கொடுத்து கிழக்கு கடற்கரை சாலையில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளார். அஸ்லாம் அங்கிருந்த ஒருவரின் செல்போன் மூலம் தனது தந்தைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அதன் பிறகு அஸ்லாம் தந்தையின் நண்பர் தகவலறிந்து அவரை மீட்டு அவரது வீட்டில் வைத்திருந்தார். அதன் பிறகு அவரது பெற்றோரும் போலீஸாரும் நேரில் வந்து அஸ்லாமை அழைத்துச் சென்றனர்.
இந்த கடத்தலில் ஹாலிக் மூளையாக செயல்பட்டுள்ளார். ஏற்கெனவே ஒருமுறை அஸ்லாம் ராமநாதபுரம் தோப்புக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது.
கடத்தலை தெளிவுபடுத்தாத போலீஸ்
அஸ்லாம் கடத்தப்பட்டாரா அல்லது அது வெறும் நாடகமா என புரியாத நிலையில், போலீஸாரும் தங்களது விசாரணை பற்றிய தகவல்களை வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. இதனால் அஸ்லாம் சென்னைக்கு அழைத்து வரப்பட்ட நிலையிலும் பத்திரிகையாளர்கள் உண்மையான தகவல்களை போலீஸிடம் இருந்து பெற முடியாமல் தவித்தனர். கடத்தல் சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்ட ஒரு மாணவர் தரப்பில் தரப்பட்ட அழுத்தம் காரணமாகவே போலீஸ் நடவடிக்கையில் தொய்வு இருந்ததாகவும், குழப்பம் நிலவியதாகவும் சொல்லப்படுகிறது.
No comments:
Post a Comment