Thursday, April 28, 2016

சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு உத்தரவாதம்:

சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு உத்தரவாதம்: மருத்துவ படிப்புகளுக்கு இந்த ஆண்டே பொது நுழைவுத்தேர்வு கால அட்டவணையை இன்று தாக்கல் செய்ய கோர்ட்டு உத்தரவு

புதுடெல்லி, 
நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான பொது நுழைவுத்தேர்வை இந்த ஆண்டே நடத்துவதற்கு மத்திய அரசும், மருத்துவ கல்வி கவுன்சிலும் சம்மதம் தெரிவித்துள்ளன. தேர்வுக்கான கால அட்டவணையை இன்று தாக்கல் செய்யுமாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.
மனு விவரம்
நாடு முழுவதும் 2016–17–ம் கல்வி ஆண்டு மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வுகளை உடனடியாக நடத்த உத்தரவிட வேண்டும் என்று சங்கல்ப் சாரிட்டபிள் டிரஸ்ட் என்னும் தன்னார்வ தொண்டு நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:–
2016–17 கல்வி ஆண்டில் மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வுகளை நடத்த முடியாத வகையில் மருத்துவ கவுன்சில் உள்ளிட்ட நிறுவனங்கள் வேண்டுமென்றே தங்கள் முடிவை தாமதப்படுத்த முயற்சிக்கின்றன. கடந்த 11–ந் தேதி அன்று சுப்ரீம் கோர்ட்டில் அரசியல் சாசன அமர்வு, இதுதொடர்பான மறுஆய்வு மனுக்கள் மீதான தீர்ப்பில் இந்த தேர்வுகளை நடத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.
இந்த ஆண்டிலேயே மருத்துவ படிப்புக்கான பொது நுழைவுத்தேர்வை நடத்துவதற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதேபோல சி.பி.எஸ்.இ. நிறுவனம் வரும் மே 1–ந் தேதி நடத்தும் 15 சதவீத இடங்களுக்கான நுழைவுத்தேர்வை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு இந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
சம்மதம்
இந்நிலையில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் அனில் ஆர்.தவே, சிவ கீர்த்திசிங், ஏ.கே.கோயல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு சங்கல்ப் சாரிட்டபிள் டிரஸ்ட் நிறுவனம் தரப்பில் வக்கீல் அமித் குமார் ஆஜராகி இந்த மனுவை விரைந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டு இந்த ஆண்டே மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வை நடத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று முறையீடு செய்தார்.
அப்போது, மத்திய அரசு, இந்திய மருத்துவ கவுன்சில், சி.பி.எஸ்.இ. ஆகியவற்றின் சார்பில் ஆஜரான வக்கீல்கள் மூவரும், மருத்துவ படிப்புகளுக்கான பொது நுழைவுத்தேர்வை இந்த ஆண்டே நடத்துவதற்கு விரும்புவதாகவும், தயாராக இருப்பதாகவும் உறுதி அளித்தனர்.
சி.பி.எஸ்.இ. சார்பில் ஆஜரான வக்கீல் மட்டும், சி.பி.எஸ்.இ.யுடன் தான் ஆலோசனை நடத்தி, தேவையான உத்தரவுகளை பெற வேண்டி இருப்பதாக தெரிவித்தார்.
இந்த ஆண்டே நடத்த வேண்டும்
அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை இன்று (வியாழக்கிழமை) ஒத்தி வைத்தனர். இந்த ஆண்டே பொது நுழைவுத்தேர்வை நடத்துவதற்கான கால அட்டவணையை இன்று பகல் 12 மணிக்கு கோர்ட்டில் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர்.
மேலும் சி.பி.எஸ்.இ. நிறுவனத்தில் உடனடியாக முடிவெடுக்கும் பொறுப்பில் உள்ள அதிகாரி ஒருவரும் விசாரணையின்போது கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தனர்.
இதன்மூலம், இந்த ஆண்டே பொது நுழைவுத்தேர்வு நடத்துவதற்கான முட்டுக்கட்டைகள் அனைத்தும் நீங்கி விட்டதாக மனுதாரரின் வக்கீல் அமித் குமார் தெரிவித்தார்.

Wednesday, April 27, 2016

எம்ஜிஆர் 100 | 52 - புரட்சித் தலைவர் வாழ்க!

திருமண விழா ஒன்றில் தனது காலில் விழ முயற்சிக்கும் மணமகனை எம்.ஜி.ஆர். தடுத்து ஆசி கூறுகிறார். அருகே படத் தயாரிப்பாளரும் இயக்குநருமான பி.ஆர். பந்துலு.

தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்

M.G.R. தனது ரசிகர்கள், தொண்டர்களின் சந்தோஷத்துக்காக தன்னை வருத்திக் கொள்ளவும், சிரமம் எடுத்து பயணம் மேற்கொள்ளவும் தயங்காதவர். நடிகர் ரசிகர் என்ற தொடர்பையும் தாண்டி தனது ரசிகர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தவர்.

புதுச்சேரியில் மீனவர் குப்பத்தைச் சேர்ந்த இளைஞர் கோவிந்தசாமி. எம்.ஜி.ஆரின் ரசிகர் என்பதைவிட வெறியர். தனது திருமணத்தை எம்.ஜி.ஆர். நடத்தி வைக்க வேண்டும் என்று கோவிந்தசாமிக்கு ஆசை. இது சம்பந்தமாக கோவிந்தசாமி எம்.ஜி.ஆருக்கு சிலமுறை கடிதம் எழுதினார். எம்.ஜி.ஆரின் உதவியாளர் களே கடிதத்தைப் பார்த்துவிட்டு, ‘புதுச் சேரியில் மீனவர் குப்பத்தில் இருக்கும் யாரோ ஒருவரின் திருமணத்தை நடத்தி வைக்க எம்.ஜி.ஆரால் போகமுடியுமா? ’ என்று நினைத்தார்களோ என்னவோ? கடிதம் எம்.ஜி.ஆரின் பார்வைக்கே போகவில்லை.

ஒருநாள் கோவிந்தசாமியின் பெற் றோரும் உறவினர்களும் எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டத்துக்கு வந்துவிட்ட னர். தன்னை பார்க்க காத்திருந்தவர்களை ஒவ்வொருவராக சந்தித்த எம்.ஜி.ஆரிடம் விஷயத்தைக் கூறினர். ‘‘நாங்க எழுதின கடிதத்துக்கு உங்களிடம் இருந்து பதில் இல்லாததால் கோவிந்தசாமி பித்துப் பிடிச்சவன் போல இருக்கிறான். கடலில் மீன் பிடிக்கவும் சரியாக போவதில்லை. நீங்கதான் கோவிந்தசாமியின் திரு மணத்தை நடத்திவெச்சு அவனைக் காப் பாத்தணும்’’ என்று உருக்கமாக கோரினர்.

இது எம்.ஜி.ஆரை வெகுவாக பாதித்து விட்டது. ‘‘விரைவிலேயே புதுச்சேரிக்கு சுற்றுப் பயணம் வர இருக்கிறேன். நீங்கள் அப்போது அங்கு வந்து என்னை சந் தியுங்கள். உங்கள் மகன் திருமணத்தை நடத்தி வைக்கிறேன்’’ என்று அவர்களை எம்.ஜி.ஆர். சமாதானப்படுத்தினார். அந்த மீனவர்கள் நம்பிக்கையுடன் சென்றனர்.

சில நாட்கள் கழித்து புதுச்சேரிக்கு எம்.ஜி.ஆர். சுற்றுப் பயணம் சென்றார். அவர் தங்கியிருந்த இடத்துக்கு மீனவர் குப்பத்தைச் சேர்ந்தவர்கள் வந்தனர். விஷயம் எம்.ஜி.ஆருக்குத் தெரிவிக்கப் பட்டது. ‘‘திருமணத்தை நடத்தி வைத்து விட்டு கூட்டத்துக்கு போகலாம். மணமக் களையும் உறவினர்களையும் கூப்பிடுங் கள்’’ என்று எம்.ஜி.ஆர். கூறினார். மண மக்களை அழைத்துவர எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் சென்றபோதுதான் அவர்களுக்கு விஷயமே தெரிந்தது.

கோவிந்தசாமியின் உறவினர்கள் தயங்கியபடியே, ‘‘மன்னிக்கணும். எங்க குப்பத்துக்கு எம்.ஜி.ஆர். நேரில் வந்து தாலி எடுத்துக் கொடுத்தால்தான் திருமணம் பண்ணிக்கு வேன் என்று கோவிந்த சாமி பிடிவாதம் பிடிக்கிறான்’’ என்று மென்று முழுங்கி தெரிவித்தனர். உதவியாளர் களுக்கு கோபம் வந்துவிட்டது. ‘‘அது எப்படி முடியும்? கடற்கரையோரம் உள்ள குப்பத்துக்கு மணலிலே வரணும். அங்கேயெல்லாம் வண்டி வராது’’ என்று சத்தமாக தெரிவித்தனர். பதிலுக்கு, ‘‘பாதையிலே மணலில் நாங்க செடி, தழைகளை போடுறோம். அதுமேல, வண்டி ஓட்டிக்கிட்டு வந்துடுங்க’’ என்று மீனவர்கள் கெஞ்சினர்.

வெளியே நடந்து கொண்டிருந்த கசமுசா, எம்.ஜி.ஆரின் காதுகளில் விழுந் தது. உதவியாளர்களை அழைத்து விவரம் கேட்டார். அவர்கள் சொன்னதும் சில விநாடிகள் யோசித்துவிட்டு, ‘‘சரி, போகலாம்’’ என்றார். உதவியாளர்கள் பதறிப்போய், ‘‘நாங்கள் விசாரிச்சோம். கடற்கரை மணலில் வண்டி நின்று விட்டால் நடந்துதான் போகணும். அவங்க குப்பம் இரண்டு கிலோ மீட்டருக்கு மேலே தூரமாக உள்ளது. நீங்கள் போக வேண்டாம்’’ என்றனர்.

எம்.ஜி.ஆர். கோபத்துடன், ‘‘என்ன பேசறீங்க? என்னோட ரசிகன். அவனுக்கு நான் எந்த உதவியும் செய்யலே. அவனை நான் பார்த்தது கூட இல்லே. ஆனாலும் என் மேலே வெறித்தனமான அன்போட இருக்கான். நான் வந்து நடத்தினால்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு பித்துப் பிடிச்சா மாதிரி இருக்கான். நான் போய்த் தான் ஆகணும். வண்டி நின்னுபோனா நடந்து போறேன். போய் ஏற்பாடு பண் ணுங்கய்யா’’ என்றார். அடுத்த விநாடி, மீனவர் குப்பத்துக்கு எம்.ஜி.ஆர். செல் வதற்கான ஏற்பாடுகள் தொடங்கின.

மணலிலும் பாதுகாப்பாக செல்லும் வகையில் ஃபோர் வீல் டிரைவ் எனப் படும் நான்கு சக்கரங்களும் ஒன்றாக இயங்கும் ஜீப்பில் எம்.ஜி.ஆர். சென்றார். கடலை ஒட்டிய மணல் பகுதியில் வழிநெடுக மீனவர்கள் திரண்டு நின்று எம்.ஜி.ஆர். தங்கள் குப்பத்துக்கு வரு வதை பிரமிப்பு நீங்காமல் பார்த்தபடியே அவரை வாழ்த்தி கோஷமிட்டனர்.

பாதி வழியில், உதவியாளர்கள் பயந்த படியே திடீரென மணலில் ஜீப் சிக்கிக் கொண்டது. டிரைவர் எவ்வளவோ முயன் றும் நின்ற இடத்திலேயே சக்கரங்கள் சுற்றிச்சுற்றி மணலை தோண்டியதே தவிர, நகரவில்லை. எம்.ஜி.ஆர். ஜீப்பை விட்டு இறங்கிவிட்டார்.

பாதையில் நின்றிருந்த மீனவர்கள் உதவிக்கு ஓடிவந்தனர். பலர் ஒன்று சேர்ந்து ஜீப்பை ‘அலாக்’காக தூக்கி வேறு இடத்தில் வைத்தனர். மீனவ மக்களின் ஆரவாரத்துக்கிடையே, எம்.ஜி.ஆர். தலைக்கு மேல் கைகளை உயரே தூக்கி வணங்கியபடி மீண்டும் பயணத்தைத் தொடங்கினார்.

கோவிந்தசாமியின் மீனவ குப்பத்தை ஜீப் அடைந்தபோது பெரிய கூட்டம் ஓடிவந்து வரவேற்றது. அதில் முதலில் ஓடிவந்தவர் இளைஞர் கோவிந்தசாமி. ‘எம்.ஜி.ஆர். வரும்வரை தாடியை எடுக்க மாட்டேன்’ என்ற சபதம் காரணமாக நீண்டு வளர்ந்திருந்த அடர்த்தியான தாடியுடன் கண்களில் நீர்வழிய, ‘‘எனக்காக நேரில் வந்த தெய்வமே’’ என்று கதறியபடி எம்.ஜி.ஆரின் காலில் விழுந்தார் கோவிந்தசாமி. அவரை வாரி அணைத்துக் கொண்டார் எம்.ஜி.ஆர்.!

பக்கத்திலேயே மேடான இடத்தில் சிறிய பந்தல் போடப்பட்டிருந்தது. பதினைந்து நிமிடத்தில் மணமக்கள் தயாராகி வந்தனர். எம்.ஜி.ஆர். தாலி எடுத் துக் கொடுக்க, மணமகள் கழுத்தில் கட்டினார் கோவிந்தசாமி. ‘‘இனிமே ஒழுங்கா குடும் பத்தையும் தொழிலையும் கவனி’’ என்று கோவிந்தசாமியிடம் கூறிய எம்.ஜி.ஆர்., மணமக்களிடம் தனித்தனியே கனமான கவர்களை பரிசளித்தார்.

மீனவர்கள் கொடுத்த கோலி சோடாவை மரியாதைக்காக சிறிது குடித்துவிட்டு ஜீப்பில் ஏறி நாலாபுறமும் திரும்பி கையசைத்தபடி எம்.ஜி.ஆர். விடைபெற்றபோது, கடல் அலைகளின் பேரிரைச்சலையும் அடக்கிவிட்டு, விண்ணை முட்ட எழுந்தது கோஷம்...

‘‘புரட்சித் தலைவர் வாழ்க!’’

Tuesday, April 26, 2016

குறள் இனிது: பேசவும் தெரிஞ்சுக்கணும்!

THE HINDU TAMIL

சோம.வீரப்பன்
என் பால்ய சிநேகிதர் ஒருவர். வாய்ச்சொல்லில் வீரர். திருநெல்வேலியிலிருக்கும் அவரை அங்கு சென்ற பொழுது பார்க்கச் சென்றேன். பெரும் ஆர்ப்பாட்டத்துடன் வரவேற்றார். மனைவியிடம் ‘இவரை என்ன நினைத்தாய்.பார்க்கத்தான் எளிமை.உண்மையில் பெரிய இடம். நம்ம வீட்டில் எல்லாம் தங்க மாட்டார்' என்று சொல்லிவிட்டு,என்னிடம் திருவையாறு அசோகா அல்வா கொண்டு வரவில்லையா? பரவாயில்லை; அரை கிலோ கொரியரில் அனுப்பி விடுப்பா' என்றார். நானும் அவர் விருப்பத்தைத் ஊருக்கு வந்ததும் நிறைவேற்றினேன்.
இவர் தான் கெட்டிக்காரரா, நம்ம வீட்டிற்கு வரட்டும் பார்த்துக்கலாம் என்று காத்திருந்தேன். இரண்டே மாதத்தில் அந்த வாய்ப்புக் கிட்டியதும் ‘இருட்டுக் கடை அல்வா கொண்டு வந்திருப்பாயே' எனக்கேட்டேன். நான் கொரியர் கோரிக்கையை வைக்கும் முன்பே அவர் முந்திக்கொண்டு ‘இது ஒரு பெரிய விஷயமா, இப்பத்தான் அது உங்க ஊர் சூப்பர் மார்க்கெட்டிலேயே பாக்கெட்டில் கிடைக்கிறதே' என்று முடித்து விட்டார். அலுவலகங்களில் பார்த்து இருப்பீர்கள். தலைமை அலுவலகத்திலிருந்து மேலதிகாரிகள் வந்தால் பணியாளர்களின் கூட்டம் நடக்கும். அதில் உழைத்து வேலை செய்தவர் பேசத் தயங்கும் பொழுது, வாயாடியாய் இருக்கும் மற்றொருவர் உள்ளே புகுந்து நல்ல பெயரைத் தட்டிச் சென்று விடுவார், அப்படிச் சிலர்; இப்படியும் பலர்!
அண்ணே, சொல்வன்மை என்பது வீட்டில், அலுவலகத்தில்,ஏன் எங்கும் யாரையும் வசீகரிக்கிறது; பயனளிக்கிறது. கண்டேன் சீதையை என்றும், வந்தான் ராமன் என்றும் கூறி நல்லுயிர்களைக் காத்தான் சொல்லின் செல்வன் அனுமன்! எடுத்தது கண்டனர், இற்றது கேட்டனர் எனச் சொல்லோவியம் தீட்டினார் கம்பர். நாற்குணமும் நாற்படை, ஐம்புலனும் நல்லமைச்சு என்று உவமை சொன்னார் புகழேந்தி! கனியிருப்பக் காய் கவர்ந்தற்று, பிறன் மனை நோக்காத பேராண்மை என்றெல்லாம் சொல்லிப் புரிய வைத்தார் தனக்குவமை இல்லாத நம் ஐயன் வள்ளுவர்!
இலக்கியத்தை விடுங்கள். திரைப்படங்களில் சில வசனங்கள் சாகாவரம் பெற்றவை. ‘நான்ஒரு தரம் சொன்னால், நூறு தரம் சொன்ன மாதிரி' என்றாலோ, ‘பேரைக் கேட்டால் சும்மா அதிருதில்ல' என்றாலோ கதாபாத்திரத்தின் தன்மை சட்டெனப் புரிகிறதல்லவா?
விளம்பரங்களின் வெற்றிக்கு அவற்றில் இடம்பெறும் வார்த்தைகளும் தான் காரணம். ஓஎல்எக்ஸின் 'விற்றுவிடு', மாகியின் அம்மா பசிக்குது' போல!
சமீபத்தில் தீபா கராம்கர் எனும் வீராங்கணை ஒலிம்பிக் போட்டிக்குத் தேர்வானதைப் பாராட்டிப் பேசிய திரு மோடி அவர்கள், போகிற போக்கைப் பார்த்தால் இனி ஆண்களுக்குத் தான் இட ஒதுக்கீடு வேண்டும்' என்று வேடிக்கையாய்க் குறிப்பிட்டிருப்பதை ரசித்திருப்பீர்கள்.
சொல்வதை மனதில் பதியும்படி, தைக்கும்படி சொல்வது ஓர் கலை! யாருக்குமே நாவன்மை ஒரு தனிப்பலம்!
நண்பர்களே,பேசத் தெரிந்தவன் எங்கும் பிழைச்சுக்குவான்; வாயிருந்தால் வங்காளம் போகலாம்!
சொல்வன்மை எனும் திறம் சான்றோர்களால் போற்றப்படும்;அது தனிச்சிறப்புடையது என்கிறது குறள்.
நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்
யாநலத்து உள்ளதூஉம் அன்று (குறள் 641)
சோம.வீரப்பன் somaiah.veerappan@gmail.com

எம்ஜிஆர் 100 | 51 - எம்.ஜி.ஆரின் வாரிசுகள்!


‘கன்னித்தாய்’ படத்தில் எம்.ஜி.ஆர்., பேபி ஷகிலா.

M.G.R. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோருக்கிடையே முக்கியமான ஓர் ஒற்றுமை உண்டு. இவர்கள் மூவருக்குமே நேரடி வாரிசுகள் இல்லை. எம்.ஜி.ஆர். தனது படங்களில் பாடி நடித்த கருத்துக்கள் எல்லாம் பிறகு அவர் வாழ்வில் அப்படியே நடந்துள்ளன. திரையில் அவர் பாடி நடக்காமல் போன பாடல், ‘பணம் படைத்தவன்’ படத்தில் இடம்பெற்ற, ‘எனக்கொரு மகன் பிறப்பான்… அவன் என்னைப் போலவே இருப்பான்…’

சத்யா ஸ்டுடியோவில் ‘மாட்டுக்கார வேலன்’ படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. ஒருநாள் எம்.ஜி.ஆருடன் இயக்குநர் ப.நீலகண் டன், ஜெயந்தி பிலிம்ஸ் அதிபரும் படத்தின் தயாரிப்பாளருமான கனகசபை ஆகியோர் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, எம்.ஜி.ஆரிடம் ப.நீலகண் டன், ‘‘உங்களுக்கு குழந்தை இருந்திருந் தால் ரொம்ப நல்லா இருந்திருக்கும். நாங்கள் எல்லாம் பார்த்து சந்தோஷப் பட்டிருப்போம். கடவுள் எங்களுக்கு அப்படிக் கொஞ்சி மகிழும் வாய்ப்பைக் கொடுக்கவில்லை’’ என்றார்.

அதற்கு எம்.ஜி.ஆர்., ‘‘என் இரண்டா வது மனைவி சதானந்தவதிக்கு இரண்டு முறை கரு உண்டாகி ‘அபார்ஷன்’ ஆகி விட்டது. அதுகூட எனக்கு பெரிய வருத்தம் இல்லே. நான் கஷ்டப்படற காலத்திலே எங்க அம்மா இருந்தாங்க. இப்போ நான் வசதியா இருக்கும்போது எங்க அம்மா என் கூட இல்லே. கஷ்டத்தை அனுபவிச்சவங்க கொஞ்சம் சுகத்தை அனு பவிக்கவில்லேயே என்பது தான் என் வருத்தம்’’ என்று சொன்னார். கூட இருந்தவர் களின் இதயம் கனத்தது.

ரவீந்தர் என்பவர் எம்.ஜி.ஆருக்கு நெருக்கமான வட்டத்தில் இருந்தவர். இஸ் லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த இவரின் இயற்பெயர் காஜா முகைதீன். சொந்த ஊர் நாகூர். எம்.ஜி.ஆர். வைத்த பெயர் ரவீந்தர். எம்.ஜி.ஆர். நாடகமன்றத்தின் ‘இடிந்த கோயில்’ நாடகத்துக்கு (இந்த நாடகம்தான் பின்னர் ‘இன்பக் கனவு’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது) வசனம் எழுதியவர். ‘நாடோடி மன்னன்’ படத்திலும் கவியரசு கண்ணதாசனுடன் சேர்ந்து வசனம் எழுதியுள்ளார். ‘நாடோடி மன்னன்’ படத்தின் வெற்றி பற்றி குறிப் பிடும்போது ரவீந்தரின் திறமையை எம்.ஜி.ஆர். பாராட்டியுள்ளார். எம்.ஜி.ஆரின் பல படங்களுக்கும் வசனம் எழுதியுள்ளார். ‘எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் ரவீந்தர்’ என்று அறியப்பட்டவர்.

ரவீந்தருக்கு 1958-ம் ஆண்டு திருமண ஏற்பாடுகள் நடந்தன. அதுபற்றி எம்.ஜி.ஆரிடமும் அவரது அண்ணன் சக்ரபாணியிடமும் ரவீந்தர் தெரிவித்தார். ‘‘திருமண தேதியை பெரியவர்கள் நிச் சயித்துவிட்டார்கள்’’ என்று ரவீந்தர் கூறி யதும், ‘‘ரொம்ப சந்தோஷம். எவ்வளவு பணம் வேண்டும்?’’ என்று சக்ரபாணி கேட் டார். ‘‘வெறும் பதினாறு ரூபாய் மட்டும் கொடுங்கள்’’ என்றார் ரவீந்தர். எம்.ஜி.ஆருக்கும் சக்ரபாணிக்கும் சற்று குழப்பம்.

பின்னர், கலகலவென சிரித்த சக்ர பாணி, ‘‘என்னய்யா 16 ரூபாய்க்கு கல்யாணம். ஒரு பிளேட் பிரியாணிக்குக்கூட ஆகாதே?’’ என்றார். அதற்கு ரவீந்தர், ‘‘எங்கள் வழக்கப்படி தாலி ஒரு கிராம் எடை யில் இருக்கும். இப்போது அதன் விலை பதினாறு ரூபாய். அதற்கு மட்டும் நீங்கள் பணம் கொடுத்தால் போதும். மத்த படி உங்க தயவுல என்கிட்ட இருக்கிற பணமே போதும்’’ என்றார்.

எம்.ஜி.ஆரும் சக்ரபாணியும் உள்ளே சென்றனர். சக்ரபாணி மட் டுமே வெளியே வந்து, ரவீந்தர் கேட்ட படி, பதினாறு ரூபாயை அவரிடம் கொடுத்தார். எம்.ஜி.ஆர். வர வில்லை. சிறிது நேரம் ரவீந்தர் அங் கேயே காத்திருந்தார். எம்.ஜி.ஆர். தனது கையால் அந்தப் பணத்தைக் கொடுக்கவில்லையே என்று ரவீந் தருக்கு குறை.

சற்று நேரம் கழித்து வெளியே வந்த எம்.ஜி.ஆர்., ரவீந்தரைப் பார்த்து, ‘‘என்ன ரவீந்தர்? இன்னும் பணம் வேணுமா? உமக்காக பத் தாயிரம் ரூபாய் எடுத்து வெச்சிருக்கேன். தர்றேன்’’ என்றார். 1958-ல் பவுன் விலை ஏறத்தாழ நூறு ரூபாய் விற்ற நிலையில், பத்தாயிரம் ரூபாய்க்கு கிட்டத்தட்ட நூறு பவுன் வாங்கலாம். இன்றைய பவுன் விலையோடு ஒப்பிடும்போது அன்றைய பத்தாயிரம் ரூபாய், இப்போது இருபது லட்ச ரூபாய்க்கு சமம்.

ரவீந்தர் உடனே, ‘‘அதுக்கில்லே அண்ணே, பதினாறு ரூபாயை உங்க கையாலேயே என்கிட்ட கொடுப்பீங் கன்னு நினைச்சேன்’’ என்று தன் ஆதங் கத்தை வெளிப்படுத்தினார். எம்.ஜி.ஆர். லேசாக புன்னகைத்து, ‘‘என்னய்யா புரி யாத ஆளா இருக்கே. கல்யாணத்துக்கு தாலி வாங்க பணம் கேட்கிறே. எங்க அண்ணன் புள்ளை குட்டிக்காரர். எனக்கு அந்த பாக்கியம் இல்லே. அதனால்தான் அவர் கையாலேயே உன்கிட்ட கொடுக்கச் சொன்னேன்’’ என்றார்.

எம்.ஜி.ஆரின் இந்த எதிர்பாராத பதிலையும் அவரது நல்லெண்ணத்தை யும் அறிந்து ரவீந்தர் அழுதேவிட்டோர். எம்.ஜி.ஆரும் கண்கலங்கி ரவீந்தரை அணைத்தபடி, ‘‘நல்லா இரும்’’ என்று வாழ்த்தினார். பின்னர், ரவீந்தர் ஆறு குழந்தைகளுக்குத் தந்தையானார்.

எம்.ஜி.ஆருக்கு எப்போதுமே ஒரு குணம் உண்டு. தன்னோடு தொடர்புடைய எல்லோருக்கும் எதையாவது கொடுக்க வேண்டும், அவர்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்ற எண்ணமும் வள்ளல் தன்மையும் அவருக்கு உண்டு. உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான தனது ரசிகர்களை ஒவ்வொருவராக எம்.ஜி.ஆர். சந்தித்து, தனித்தனியே அவர்களுக்கு ஏதாவது கொடுப்பது நடக்காத காரியம்.

எம்.ஜி.ஆருக்கு குழந்தைகள் இருந் திருந்தால் இரண்டு மூன்றோ அல்லது நான்கைந்து பேரோ இருந்திருக்கலாம். அவர்கள்தான் எம்.ஜி.ஆரின் வாரிசுகள் என்று அழைக்கப்பட்டிருப்பார்கள். ஆனால் இப்போதோ, ‘எம்.ஜி.ஆரின் வாரிசுகள்’ என்ற பெருமையையும் தனது கோடிக்கணக்கான ரசிகர்களுக்கே வழங்கிவிட்டார் அந்த வள்ளல்.

- தொடரும்...

Monday, April 25, 2016

ஏப்ரல் 23: எஸ்.ஜானகி 78-வது பிறந்த தினம் - காற்றை கவுரவப்படுத்தும் குரல்!


சிறுவயது கமல் ஹாசன் தன் பிஞ்சு உதடுகளை அசைத்துத் திரையில் பாடும் `அம்மாவும் நீயே அப்பாவும் நீயே’என்னும் பாடலுக்கு எம்.எஸ். ராஜேஸ்வரியின் குரல் அவ்வளவு பொருத்தமாக இருக்கும். இந்த மழலைக் குரலைக் கேட்டாலே சந்தோஷம் பொங்கும். களத்தூர் கண்ணம்மாவுக்குப் பிறகு, `மௌன கீதங்கள்’படத்தில் ‘டாடி.. டாடி.. ஓ மை டாடி உன்னைக் கண்டாலே ஆனந்தமே...’ பாடலைக் கேட்கும்போதுதான் மீண்டும் அத்தகைய சந்தோஷம் பொங்கியது. காரணம், காற்றை கவுரவப்படுத்தும் அந்தக் குரல் எஸ்.ஜானகினுடையது!

குழந்தையின் குரலா, குமரியின் குரலா, காதலியின் ஏக்கமா, காதலனோடு கிறக்கமா, `பழைய நெனப்புடா பேராண்டி.. பழைய நெனப்புடா..’ எனப் பாடும் கிழவியின் விசனமா? இப்படி எந்த உணர்ச்சியையும் குரலில் வடிக்கும் திறனைப் பெற்றிருந்த எஸ். ஜானகியே, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனத் தென்னிந்திய இசையமைப்பாளர்களின் ஏகோபித்த முதல் தேர்வாக இருந்தார்.

பிரபலப்படுத்திய பாடல்

1957-லிருந்து தமிழ் மொழியில் பாடிவருகிறார். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி, சிங்களம், வங்காளம், சமஸ்கிருதம், ஒடியா, குஜராத்தி, ஆங்கிலம், கொங்கணி, துளு, சவுராஷ்டிரம், ஜெர்மன், படுகா, பஞ்சாபி ஆகிய 17 மொழிகளில் பாடியிருக்கிறார்.

1962-ல் எஸ்.எம்.சுப்பையா நாயுடுவின் இசையமைப்பில் வெளிவந்த ‘கொஞ்சும் சலங்கை ’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ சிங்கார வேலனே தேவா...’ என்ற பாடல் தமிழில் அவரது முதல் வெற்றிப் பாடலாக அமைந்தது. தொழில்நுட்பம் பெரிதும் வளராத அந்தக் காலத்தில் இந்தப் பாடல் இரண்டு இடங்களில் பதிவானது. தயாரிப்பாளர் ராமன் ஸ்டூடியோவில் (மும்பை) எஸ்.ஜானகி பாட, பாடலோடு இணையாக ஒலிக்கும் நாகஸ்வரத்தை, நாகசுர மேதை காருக்குறிச்சி அருணாசலம் சென்னை ஸ்டூடியோ ஒன்றில் வாசித்து 2 டிராக்கில் பதிவு செய்யப்பட்டு, அதன் பின் மிக்ஸிங் செய்யப்பட்ட பாடல் அது. இந்தப் பாடலுக்குப் பின்தான் எஸ்.ஜானகியின் புகழ் பரவியது.

எஸ். ஜானகியின் குரல் தனித்துவமானது. பின்னணிப் பாடகியான பிறகு இசைக்கான எந்தப் பயிற்சியையும் ஜானகி எடுத்துக்கொள்ளவில்லை. தனது உள்ளுணர்வாலும், தனிப்பட்ட முயற்சியினாலும் எந்த மொழிப் பாடலாக இருந்தாலும் அம்மொழிக்கே உரிய தன்மைகளுடன் அம்மொழியின் வட்டார வழக்கையும் சேர்த்தே தனது குரலில் வெளிப்படுத்தினார். இந்தத் திறமையினாலேயே ஒரே நேரத்தில் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய நான்கு மொழிகளிலும் ஒரே நேரத்தில் சிறந்த பாடகியாக இருந்ததோடு மட்டுமல்லாமல் காலத்தால் அழியாத பல வெற்றிப் பாடல்களையும் அம்மொழிகளில் கொடுத்தார். இப்போதும் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு இசை ரசிகர்கள் ஜானகியை எங்களுக்கானவர் என உரிமை கொண்டாடுகின்றனர்; யாரும் விட்டுக்கொடுக்கத் தயாராகவில்லை. இதைவிட ஒரு கலைஞருக்குப் பெரிய அங்கிகாரம் தேவையில்லை. தென்னிந்தியத் திரையிசைப் பாடகிகளில் எஸ்.ஜானகிக்கு முன்பும் பின்பும் இவரைப் போல் எவருமில்லை.

இளையராஜாவின் பெருந்துணை

இளையராஜாவின் மாறுபட்ட இசை முயற்சிகளுக்கு உற்ற துணைகளில் ஒன்றாக ஜானகியின் பாடும் திறமை முன் நின்றது. அந்தத் திறமையைக் கண்டடைந்து அதைச் சரியாகப் பயன்படுத்தியவரும் இளையராஜாதான். கிராமியப் பாடலாக இருந்தாலும், கர்னாடக சங்கீதத்தில் அமைந்த பாடலாக இருந்தாலும் ஜானகி எப்போதுமே இளையராஜா எதிர்பார்த்ததைவிட ஒரு மடங்கு அதிகமாகவே தனது குரலில் பங்களிப்புச் செய்தார். சிக்கலான மெட்டுகளையும் எளிதாகப் பாடினார். ஒரு பாடல், அத்திரைப்படத்தில் பாடப்படுகின்ற சூழலுக்கு ஏற்றவாறு, திரையில் யார் வாயசைத்து நடிக்கப்போகும் நட்சத்திரம் யார் போகிறார் என்பதைக் கருத்தில் கொண்டு அதற்கேற்றவாறு பொருத்தமான உணர்ச்சியை வெளிப்படுத்திப் பாடும் திறமையைப் பெற்ற பாடகியாக எஸ்.ஜானகி மிளிர்ந்தார்.

ஹம்மிங் பேர்ட்

பாடல்களில் இடம்பெறும் ஹம்மிங்கிலும் நிறைய ஜாலங்களை எஸ்.ஜானகி புரிந்திருக்கிறார். ல, லா வில் ஆரம்பிக்கும் ஹம்மிங் பாடல்களே நிறைய இருக்கின்றன. “லல்லா லல்லா லல்லா லல்லா ... சின்ன சின்ன வண்ணக்குயில்... (மெளனராகம்), “ லால லால ல ... ஆத்துமேட்டிலே ஒரு பாட்டு கேட்குது...( கிராமத்து அத்தியாயம்),” “லாலலல்லா லாலலல்லா ... எந்தப் பூவிலும் வாசம் உண்டு... (முரட்டுக்காளை) “ என்று சொல்லிக்கொண்டே போகலாம். எஸ்.ஜானகியால் பாடப்பட்ட எந்தவொரு ஹம்மிங்கும் அலாதியான குரலிலேயே ஒலிக்கும்.

எஸ்.ஜானகி பாடிய பல தனிப்பாடல்கள் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளன. இப்பாடல்கள் மகிழ்ச்சி, சோகம், ஏக்கம், பிரிவு, கொண்டாட்டம், ஆசை, தாய்மை எனப் பல விதமான உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தாலும் என்றென்றும் கேட்கக்கூடிய செவ்வியல் தன்மையைப் பெறுகின்றன.

“எனது ரசிகர்கள்தான் எனக்குப் பெரிய விருது” என்று ஜானகி சொன்னது போல ரசிகர்களின் மனங்களில் என்றைக்குமே அவருக்கு இடமிருக்கும். தென்னிந்திய மொழிகள் இருக்கும் வரை இவ்வுலகில் ஜானகியின் குரல் ஒலித்துக்கொண்டேதான் இருக்கும் .

- தொடர்புக்கு seltoday@gmail.com.

பாஸ்போர்ட் முடக்கம்: இங்கிலாந்திலேயே விஜய் மல்லையா தங்கி இருக்க முடியுமா? புதிய தகவல்


புதுடெல்லி,

வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு பணத்தை திருப்பிச் செலுத்தாத தொழில் அதிபர் விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட்டை மத்திய அரசு முடக்கி உள்ளது. இங்கிலாந்தில் உள்ள அவரை அமலாக்கத்துறையின் விசாரணைக்காக இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது.

இந்த நிலையில், பாஸ்போர்ட்டை முடக்கிய நிலையிலும் விஜய்மல்லையாவால் தொடர்ந்து இங்கிலாந்தில் தங்கி இருக்க முடியும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து, டெல்லி வட்டாரங்கள் கூறுகையில், ‘‘தான் தொடர்ந்து இங்கிலாந்திலேயே தங்கியிருக்கும் வகையிலான அனுமதியை விஜய் மல்லையாவால் கோர முடியும். இதேபோல் அங்கிருந்தவாறே தனது பாஸ்போர்ட் முடக்கத்தை எதிர்த்து இந்திய கோர்ட்டுகளில் அவரால் வழக்கு தொடரவும் இயலும்’’ என்று தெரிவித்தன.

மே 5ம் தேதி பிளஸ் 2 ரிசல்ட்?


DINAMALAR

பிளஸ் 2 தேர்வு முடிவுகளை, மே, 5ம் தேதிக்குள் வெளியிட அரசு தேர்வுத் துறை திட்டமிட்டு உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, இரு தினங்களில் வெளியாகும் என தெரிகிறது.
பிளஸ் 2 பொதுத் தேர்வு, மார்ச், 4ல் துவங்கி, ஏப்., 1ல் முடிந்தது. விடைத்தாள் திருத்தும் பணி, ஏப்., 23ல் முடிந்தது. மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம், பிளஸ் 2 மதிப்பெண்கள் தொகுக்கப்பட்டு, சென்னையிலுள்ள அரசு தேர்வுத்துறை அலுவலகத்துக்கு அனுப்பும் பணி நடந்து வருகிறது. இன்னும், இரு தினங்களில் மதிப்பெண் தொகுப்பு பணி முடிந்து, மாவட்ட வாரியாக முதலிடம்; மாநில வாரியான, 'ரேங்க்' எடுத்த மாணவ, மாணவியரின் பட்டியல் தயாரிக்கப்படும். 'சென்டம்' எடுத்த மாணவர்களின் எண்ணிக்கையும் கணக்கிடப்படும். இந்த பணிகள், ஏப்., 29ம் தேதிக்குள் முடிந்து விட்டால், மே, 2ம் தேதியே தேர்வு முடிவு வெளியிடப்படும். இதில் தாமதமானால், மே, 5ல் தேர்வு முடிவுகள் வெளியாகும் என, அரசு தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

- நமது நிருபர் -

NEET PG 2024 Exam Pattern REVISED, NMC Issues Official Notice; Here’s All You Need To Know

NEET PG 2024 Exam Pattern REVISED, NMC Issues Official Notice; Here’s All You Need To Know The NEET PG 2024 is scheduled to take place on Ju...