ஏப்ரல் 23: எஸ்.ஜானகி 78-வது பிறந்த தினம் - காற்றை கவுரவப்படுத்தும் குரல்!
ஜெ.செல்வராஜ்
சிறுவயது கமல் ஹாசன் தன் பிஞ்சு உதடுகளை அசைத்துத் திரையில் பாடும் `அம்மாவும் நீயே அப்பாவும் நீயே’என்னும் பாடலுக்கு எம்.எஸ். ராஜேஸ்வரியின் குரல் அவ்வளவு பொருத்தமாக இருக்கும். இந்த மழலைக் குரலைக் கேட்டாலே சந்தோஷம் பொங்கும். களத்தூர் கண்ணம்மாவுக்குப் பிறகு, `மௌன கீதங்கள்’படத்தில் ‘டாடி.. டாடி.. ஓ மை டாடி உன்னைக் கண்டாலே ஆனந்தமே...’ பாடலைக் கேட்கும்போதுதான் மீண்டும் அத்தகைய சந்தோஷம் பொங்கியது. காரணம், காற்றை கவுரவப்படுத்தும் அந்தக் குரல் எஸ்.ஜானகினுடையது!
குழந்தையின் குரலா, குமரியின் குரலா, காதலியின் ஏக்கமா, காதலனோடு கிறக்கமா, `பழைய நெனப்புடா பேராண்டி.. பழைய நெனப்புடா..’ எனப் பாடும் கிழவியின் விசனமா? இப்படி எந்த உணர்ச்சியையும் குரலில் வடிக்கும் திறனைப் பெற்றிருந்த எஸ். ஜானகியே, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனத் தென்னிந்திய இசையமைப்பாளர்களின் ஏகோபித்த முதல் தேர்வாக இருந்தார்.
பிரபலப்படுத்திய பாடல்
1957-லிருந்து தமிழ் மொழியில் பாடிவருகிறார். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி, சிங்களம், வங்காளம், சமஸ்கிருதம், ஒடியா, குஜராத்தி, ஆங்கிலம், கொங்கணி, துளு, சவுராஷ்டிரம், ஜெர்மன், படுகா, பஞ்சாபி ஆகிய 17 மொழிகளில் பாடியிருக்கிறார்.
1962-ல் எஸ்.எம்.சுப்பையா நாயுடுவின் இசையமைப்பில் வெளிவந்த ‘கொஞ்சும் சலங்கை ’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ சிங்கார வேலனே தேவா...’ என்ற பாடல் தமிழில் அவரது முதல் வெற்றிப் பாடலாக அமைந்தது. தொழில்நுட்பம் பெரிதும் வளராத அந்தக் காலத்தில் இந்தப் பாடல் இரண்டு இடங்களில் பதிவானது. தயாரிப்பாளர் ராமன் ஸ்டூடியோவில் (மும்பை) எஸ்.ஜானகி பாட, பாடலோடு இணையாக ஒலிக்கும் நாகஸ்வரத்தை, நாகசுர மேதை காருக்குறிச்சி அருணாசலம் சென்னை ஸ்டூடியோ ஒன்றில் வாசித்து 2 டிராக்கில் பதிவு செய்யப்பட்டு, அதன் பின் மிக்ஸிங் செய்யப்பட்ட பாடல் அது. இந்தப் பாடலுக்குப் பின்தான் எஸ்.ஜானகியின் புகழ் பரவியது.
எஸ். ஜானகியின் குரல் தனித்துவமானது. பின்னணிப் பாடகியான பிறகு இசைக்கான எந்தப் பயிற்சியையும் ஜானகி எடுத்துக்கொள்ளவில்லை. தனது உள்ளுணர்வாலும், தனிப்பட்ட முயற்சியினாலும் எந்த மொழிப் பாடலாக இருந்தாலும் அம்மொழிக்கே உரிய தன்மைகளுடன் அம்மொழியின் வட்டார வழக்கையும் சேர்த்தே தனது குரலில் வெளிப்படுத்தினார். இந்தத் திறமையினாலேயே ஒரே நேரத்தில் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய நான்கு மொழிகளிலும் ஒரே நேரத்தில் சிறந்த பாடகியாக இருந்ததோடு மட்டுமல்லாமல் காலத்தால் அழியாத பல வெற்றிப் பாடல்களையும் அம்மொழிகளில் கொடுத்தார். இப்போதும் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு இசை ரசிகர்கள் ஜானகியை எங்களுக்கானவர் என உரிமை கொண்டாடுகின்றனர்; யாரும் விட்டுக்கொடுக்கத் தயாராகவில்லை. இதைவிட ஒரு கலைஞருக்குப் பெரிய அங்கிகாரம் தேவையில்லை. தென்னிந்தியத் திரையிசைப் பாடகிகளில் எஸ்.ஜானகிக்கு முன்பும் பின்பும் இவரைப் போல் எவருமில்லை.
இளையராஜாவின் பெருந்துணை
இளையராஜாவின் மாறுபட்ட இசை முயற்சிகளுக்கு உற்ற துணைகளில் ஒன்றாக ஜானகியின் பாடும் திறமை முன் நின்றது. அந்தத் திறமையைக் கண்டடைந்து அதைச் சரியாகப் பயன்படுத்தியவரும் இளையராஜாதான். கிராமியப் பாடலாக இருந்தாலும், கர்னாடக சங்கீதத்தில் அமைந்த பாடலாக இருந்தாலும் ஜானகி எப்போதுமே இளையராஜா எதிர்பார்த்ததைவிட ஒரு மடங்கு அதிகமாகவே தனது குரலில் பங்களிப்புச் செய்தார். சிக்கலான மெட்டுகளையும் எளிதாகப் பாடினார். ஒரு பாடல், அத்திரைப்படத்தில் பாடப்படுகின்ற சூழலுக்கு ஏற்றவாறு, திரையில் யார் வாயசைத்து நடிக்கப்போகும் நட்சத்திரம் யார் போகிறார் என்பதைக் கருத்தில் கொண்டு அதற்கேற்றவாறு பொருத்தமான உணர்ச்சியை வெளிப்படுத்திப் பாடும் திறமையைப் பெற்ற பாடகியாக எஸ்.ஜானகி மிளிர்ந்தார்.
ஹம்மிங் பேர்ட்
பாடல்களில் இடம்பெறும் ஹம்மிங்கிலும் நிறைய ஜாலங்களை எஸ்.ஜானகி புரிந்திருக்கிறார். ல, லா வில் ஆரம்பிக்கும் ஹம்மிங் பாடல்களே நிறைய இருக்கின்றன. “லல்லா லல்லா லல்லா லல்லா ... சின்ன சின்ன வண்ணக்குயில்... (மெளனராகம்), “ லால லால ல ... ஆத்துமேட்டிலே ஒரு பாட்டு கேட்குது...( கிராமத்து அத்தியாயம்),” “லாலலல்லா லாலலல்லா ... எந்தப் பூவிலும் வாசம் உண்டு... (முரட்டுக்காளை) “ என்று சொல்லிக்கொண்டே போகலாம். எஸ்.ஜானகியால் பாடப்பட்ட எந்தவொரு ஹம்மிங்கும் அலாதியான குரலிலேயே ஒலிக்கும்.
எஸ்.ஜானகி பாடிய பல தனிப்பாடல்கள் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளன. இப்பாடல்கள் மகிழ்ச்சி, சோகம், ஏக்கம், பிரிவு, கொண்டாட்டம், ஆசை, தாய்மை எனப் பல விதமான உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தாலும் என்றென்றும் கேட்கக்கூடிய செவ்வியல் தன்மையைப் பெறுகின்றன.
“எனது ரசிகர்கள்தான் எனக்குப் பெரிய விருது” என்று ஜானகி சொன்னது போல ரசிகர்களின் மனங்களில் என்றைக்குமே அவருக்கு இடமிருக்கும். தென்னிந்திய மொழிகள் இருக்கும் வரை இவ்வுலகில் ஜானகியின் குரல் ஒலித்துக்கொண்டேதான் இருக்கும் .
- தொடர்புக்கு seltoday@gmail.com.
No comments:
Post a Comment