Sunday, April 17, 2016

எம்ஜிஆர் 100 | 45 - எம்.ஜி.ஆரின் இசை ஞானம்

M.G.R. அபாரமான இசை ஞானம் உள்ளவர். இசையமைப்பாளர்களுக்கே சொல்லித் தரும் அளவுக்கு இசையில் புலமை உண்டு. மெல்லிசை மட்டுமின்றி கர்னாடக இசையிலும் அவருக்கு சிறந்த ஞானம் உண்டு.
‘நவரத்தினம்’ படத்தில் கர்னாடக இசையின் பெருமையை உணர்த்தும் வகையில் ஒரு பாடல் உண்டு. மேற்கத்திய, இந்துஸ்தானி, கர்னாடக இசை எல்லாம் கலந்து அந்தப் பாடல் இருக்கும். எம்.ஜி.ஆருக்காக பாலமுரளி கிருஷ்ணா பாடியிருப்பார். படத்தின் இசையமைப்பாளர் பிரபல வயலின் இசைக் கலைஞர் மறைந்த குன்னக்குடி வைத்தியநாதன். கர்னாடக இசையின் சிறப்பை விளக்கும் அந்தப் பாடல் படத்தில் இடம்பெற வேண்டும் என்று ஆசைப்பட்டதே எம்.ஜி.ஆர்தான்!
பெங்களூரில் படப்பிடிப்பு நடந்தபோது குன்னக்குடி வைத்தியநாதனிடம், ‘‘மற்ற சங்கீதங்களுக்கு எல்லாம் அடிப்படையே நமது பாரம்பரியமான கர்னாடக இசைதான் என்பதை விளக்கும் வகையில் பாடல் அமைய வேண்டும்” என்று எம்.ஜி.ஆர். கூறியிருக்கிறார். ‘‘புகழ் பெற்ற ஆங்கில இசைப் பாடலுக்குத் தகுந்த அல்லது அதோடு ஒத்திருக்கும் வகையில் ஒரு கீர்த்தனையை ஒப்பிட்டு காட்டினால் கர்னாடக சங்கீதத்தின் மதிப்பு புரியும்’’ என்றும் சொல்லியிருக்கிறார்.
‘ஒருதாய் மக்கள்’ படத்தில் எம்.ஜி.ஆர்.
இவை கூட பெரிதல்ல, ஒரு ஆலோசனைதான். அடுத்து எம்.ஜி.ஆர். கூறியவை குன்னக்குடியை வியப்பின் உச்சிக்கே கொண்டு சென்றது. ‘மை ஃபேர் லேடி’, ‘சவுண்ட் ஆஃப் மியூசிக்’ ஆகிய ஆங்கிலப் படங்களில் இருந்து புகழ் பெற்ற பாடகர்கள் பாடிய பாடல்களைக் கூறி, அவற்றோடு ஒத்துப்போகும் தெலுங்கு கீர்த்தனைகளையும் எம்.ஜி.ஆரே சொல்லியிருக்கிறார். அவரது இசையறிவைப் பார்த்து பிரமித்துப் போய்விட்டார் குன்னக்குடி வைத்திய நாதன். எம்.ஜி.ஆர். கூறிய பாடல்களும் கீர்த்தனைகளுமே படத்தில் இடம் பெற்றன. மேலும், ‘ ‘ படத்தில் அந்தக் காட்சியில் மிகவும் இயல்பாக தேர்ந்த கலைஞ ரைப் போல எம்.ஜி.ஆர். வீணை வாசித்தார்” என்று குன்னக்குடி அளித்த பேட்டியில் பாராட்டினார்.
வீணை என்றில்லை, எம்.ஜி.ஆருக்கு இருந்த இசையறிவு காரணமாக ‘பணம் படைத்தவன்’ படத்தில் அகார்டியன், ‘கண்ணன் என் காதலன்’ படத்தில் பியானோ, ‘ஒருதாய் மக்கள்’ படத்தில் கிடார் என்று பல படங்களில் பல வாத்தியங்களை எம்.ஜி.ஆர். மிகவும் நுட்பமாக கையாண்டிருப்பார். ‘எங்கள் தங்கம்’ படத்தில் பாகவதரைப் போல வேடமிட்டு கதாகாலட்சேபமே செய்வார். பாடுவது போல நடிப்பதைவிட பாடகரின் பேச்சுக்கு வாயசைத்து நடிப்பது மிகவும் கடினம். இப்போது போல தொழில்நுட்பம் முன்னேறாத அந்தக் காலத்தில் கதாகாலட்சேப காட்சியில், டி.எம்.சவுந்தரராஜனின் பேச்சுக்கு எம்.ஜி.ஆரின் வாயசைப்பு இம்மியும் பிசகாது.
கர்னாடக இசை மீது கொண்டிருந்த ஈடுபாடு காரணமாக இசைக் கலைஞர்களை எம்.ஜி.ஆர். மிகவும் மதிப்பார். அவர்களுக்கு உரிய மரியாதை அளித்து கவுரவிப்பார். கர்னாடக இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பாட்டு எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடிக்கும். முதல்வராக இருந்த போது ஒருமுறை எம்.எஸ். கச்சேரியை முழுவதும் இருந்து ரசித்து கேட்டார். பல கலைஞர்களின் கச்சேரிகளை எம்.ஜி.ஆர். இதுபோல கேட்டிருக்கிறார்.
‘மன்னாதி மன்னன்’ படத்தில் இடம்பெற்ற ‘ஆடாத மனமும் உண்டோ?...’ பாடல் தேவகானமாய் ஒலிக் கும். கர்னாடக இசைப் பாடகி சுதா ரகுநாதனின் குருவும் நடிகை ஸ்ரீவித்யாவின் தாயாருமான மறைந்த இசை மேதை எம்.எல்.வசந்தகுமாரியும், டி.எம்.சவுந்தரராஜனும் பாடிய ‘லதாங்கி’ ராகத்தில் அமைந்த அற்புதமான பாடல். ஒரு இடத்தில் தனக்கு முன்னே அரைவட்டமாக சுற்றி வைக்கப்பட்டிருக்கும் ‘தபேலா தரங்’கை சுருதிக்கு ஏற்ப எம்.ஜி.ஆர். வாசித்து, கடைசியில் வலது கையை மடக்கி இடது தோள் உயரத்துக்கு சிரித்தபடியே ஸ்டைலாக உயர்த்துவது கண்கொள்ளாக் காட்சி.
வயலின் இசைக் கலைஞர் லால்குடி ஜெயராமனுக்கு முதல்வர் எம்.ஜி.ஆர். விருது வழங்குகிறார்.
நாட்டியப் பேரொளி பத்மினியின் ஆடலுக்கு ஏற்ப, சிறிய வடிவில் இருக்கும் ஜால்ராவை (இதை ‘தாளம்’ என்று கூறுவார்கள்) எம்.ஜி.ஆர். பட்டும் படாமலும் தேவை யான ஒலி அளவுக்கேற்ப தேய்த்து வாசிக்கும் அழகே அழகு. இன் னொரு இடத்தில் ‘தபேலா தரங்’கை வாசித்துவிட்டு ஷாட்டை கட் செய்யா மல், ‘வாடாத மலர் போலும் விழிப் பார்வையில்…’ என்ற வரிகளை மிகச் சரியாக ‘டைமிங்’ தவறாமல் ஆரம்பித்து எம்.ஜி.ஆர். வாயசைப்பார்.
‘இதழ் கொஞ்சும் கனிய முதை மிஞ்சும் குரலில் குயில் அஞ்சும் உனைக் காணவே…’’ என்ற வரி களில் கடைசி எழுத்தான ‘வே’யின் நீட்சியாக வரும் ஏ..ஏ.. என்பதில் டி.எம்.எஸ். குரல் மேல் ஸ்தாயியிலும் கீழ் ஸ்தாயியிலும் ஒலிக்கும்போது அதற்கேற்றபடி, முகத்தை உயர்த்தியும் தாழ்த்தியும் பாடுவது போல எம்.ஜி.ஆர். நடிப்பது அற்புதம்! இந்தப் பாடலை இப்போது பார்த்தாலும் ஒரு விஷயத்தை கவனிக்கலாம். ‘லாங் ஷாட்’டில் காட்டும்போது எம்.ஜி.ஆரின் பாதம் தரையில் தாளமிடும். என்ன ஒரு ஈடுபாடு இருந்தால் இப்படி செய்திருப்பார் என்று நினைக்கும்போது பிரமிக்காமல் இருக்கவே முடியாது.
பாடலில்தான் இப்படி அருமையாக நடித்திருக்கிறார் என்றால், பாடல் காட்சி முடிந்த பின்னும் தனக்கே உரிய நுணுக்கமான நடிப்பை எம்.ஜி.ஆர். வெளிப்படுத்தியிருப்பார். நாமே கூட, காலையில் ஒரு பாடலைக் கேட்டு அது மனதில் பதிந்துவிட்டால் அன்று முழுவதும் அதையே முணுமுணுத்துக் கொண்டிருப்போம். இதை ஆங்கிலத்தில் ‘earworm’ என்று சொல்வார்கள். பாடல் காட்சி முடிந்த பின் அடுத்து வரும் காட்சியில் நடந்து வரும்போது, ‘ஆடாத மனமும் உண்டோ?...’ என்று சன்னமான குரலில் எம்.ஜி.ஆர். பாடிக்கொண்டே வருவார். பாடல் எப்படி தன்னை ஈர்த்துள்ளது என்பதை இதன் மூலம் காட்டியிருப்பார். படத்தில் மட்டுமல்ல; இசை ஞானத்திலும் மன்னாதி மன்னன் எம்.ஜி.ஆர்.!
இந்தப் பாடலில் எம்.ஜி.ஆருக்கென்றே கவிஞர் மருதகாசியால் வார்த்தெடுக்கப்பட்ட வைர வரிகள் இவை:
‘நாடெங்கும் கொண்டாடும் புகழ் பாதையில்
வீர நடை போடும் திருமேனி தரும் போதையில்…’
‘ஈடேதும் இல்லாத கலைச் சேவையில்
தனி இடம் கொண்ட உமைக் கண்டும் இப்பூமியில்
ஆடாத மனமும் உண்டோ?...’
எம்.எஸ்.சுப்பு லட்சுமி கதாநாயகியாக நடித்த படம் ‘மீரா’. இந்தப் படத் தில் எம்.ஜி.ஆர். சிறிய வேடத்தில் நடித்துள்ளார். பாலமுரளி கிருஷ்ணா, மகாராஜபுரம் சந்தானம், மதுரை சோமு போன்ற கலைஞர்களின் கச்சேரிகளை ரசித்துக் கேட்பதில் எம்.ஜி.ஆருக்கு மிகுந்த விருப்பம்.

No comments:

Post a Comment

NEET PG 2024 Exam Pattern REVISED, NMC Issues Official Notice; Here’s All You Need To Know

NEET PG 2024 Exam Pattern REVISED, NMC Issues Official Notice; Here’s All You Need To Know The NEET PG 2024 is scheduled to take place on Ju...