எம்ஜிஆர் 100 | 49 - ஓடற பாம்பை மிதிக்கிற வயசு!
தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்
M.G.R. படங்களை ரசிகர்கள் அவருக்காக மட்டுமே பார்க்கக் கூடியவர்கள். என்றாலும், அவரது ரசிகர்களிடமும் சரி; பொதுமக்களிடமும் சரி. எம்.ஜி.ஆருக்கேற்ற பொருத்தமான ஜோடியாக கருதப்பட்டவர்களில் நடிகை சரோஜா தேவிக்கு தனி இடம் உண்டு.
‘கன்னடத்துப் பைங்கிளி’ என்று புகழப்பட்ட சரோஜா தேவி, சில கன்னடப் படங்களில் நடித்திருந்தா லும் தமிழிலும் நடிக்க ஆசைப்பட்டார். ‘நாடோடி மன்னன்’ படத்தை எம்.ஜி.ஆர். தயாரித்துக் கொண்டிருந்போது, கருத்து வேறுபாடு காரணமாக கதாநாயகியாக நடித்த பானுமதி பாதியில் விலகிக் கொண்டார். ஏற்கெனவே இதுபற்றி குறிப் பிட்டுள்ளோம். பின்னர், கதை மாற்றப் பட்டு சரோஜா தேவி நாயகியானார்.
‘நாடோடி மன்னன்’ படத்தை தானே தயாரித்து, இயக்கி, இரட்டை வேடங் களில் நடித்ததோடு, படத்தில் இன்னொரு புதுமையையும் எம்.ஜி.ஆர். செய்தார். இடைவேளைக்குப் பின், கதைப்படி சரோஜா தேவி இருக்கும் தீவில் நடப்ப தாக காட்டப்படும் காட்சிகளில் இருந்து படம் வண்ணத்தில் இருக்கும். பகுதி கலரில் தயாரிக்கப்பட்ட படம் என்ற சிறப் பும் ‘நாடோடி மன்னன்’ படத்துக்கு உண்டு. எம்.ஜி.ஆருடன் நடிக்க ‘திருடாதே’ படத்துக்காகத்தான் முதலில் சரோஜா தேவி ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால், ‘நாடோடி மன்னன்’ படம்தான் முன்னதாக வெளியானது.
‘திருடாதே’ படத்தில் நடித்துக் கொண் டிருந்த சமயத்தில் சீர்காழியில் நாடகத் தில் நடித்தபோது எம்.ஜி.ஆருக்கு கால் முறிவு ஏற்பட்டது. ‘திருடாதே’ படத்தை முதலில் பழம்பெரும் காங்கிரஸ்காரர் சின்ன அண்ணாமலை தயாரித்தார். தன் னால் யாருக்கும் பாதிப்பு ஏற்படக் கூடாது என்ற எம்.ஜி.ஆரின் நல்லெண்ணத்துக்கு இங்கே ஒரு உதாரணம்.
கால் முறிவு காரணமாக எம்.ஜி.ஆர். சிகிச்சை பெற்று வந்த சமயம். சின்ன அண்ணாமலையை அழைத்தார். ‘‘எனக்கு எப்போது கால் குணமாகி மீண்டும் நடிக்க வருவேன் என்று தெரி யாது. அதுவரை காத்திருந்தால் படத்துக் காக நீங்கள் வாங்கியிருக்கும் கடனுக்கு வட்டியும் ஏறிவிடும். எனவே, படத்தை ஏ.எல். சீனிவாசனுக்கு விற்றுவிடுங்கள். உங்களுக்கு லாபமாக நல்ல தொகை யைத் தரச் சொல்கிறேன்’’ என்று எம்.ஜி.ஆர். கூறினார்.
கவியரசு கண்ணதாசனின் சகோ தரர் ஏ.எல்.சீனிவாசன். பல வெற்றிப் படங்களைத் தயாரித்தவர். எம்.ஜி.ஆர். கூறியபடி ஏ.எல்.சீனிவாசனிடம் ‘திருடாதே’ படத்தை நல்ல விலைக்கு சின்ன அண்ணாமலை விற்றுவிட்டார். ஏ.எல்.எஸ். பேனரில் படம் வெளி யாகி வெற்றி பெற்றது. சின்ன அண்ணா மலையும் கடன் சுமையில் சிக்காமல் தப்பினார். இப்படி எல்லா விஷயங் களிலும் மற்றவர்கள் நலனை முன்னிறுத் தியே எம்.ஜி.ஆர். சிந்திப்பார்.
‘திருடாதே’ படத்தில் நடிக்கும்போது எம்.ஜி.ஆரின் மனிதாபிமானத்தை நேரடி யாகத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு சரோஜா தேவிக்கு கிடைத்தது. படப் பிடிப்பில் நடித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராமல் கண்ணாடித் துண்டுகள் சரோஜா தேவியின் பாதத்தை குத்திக் கிழித்துவிட்டன. வலி தாங்காமல் சரோஜா தேவி துடித்தார்.
அவரது பாதத்தில் குத்தியிருந்த கண்ணாடித் துண்டுகளை அகற்றி தன் கைக்குட்டையை தண்ணீரில் நனைத்து கட்டுப்போட்டு முதல் உதவி செய்தார் எம்.ஜி.ஆர்.! அப்போது முதலே எம்.ஜி.ஆர். மீது சரோஜா தேவிக்கு மதிப்பு, மரியாதை மட்டுமல்ல; பக்தியே உண்டு. எப்போது பேட்டியளித்தாலும், நிகழ்ச்சிகளில் பேசினாலும் எம்.ஜி.ஆரைப் பற்றி குறிப்பிடும்போது தனது கொஞ்சு தமிழில் ‘‘என் த(தெ)ய்வம்’’ என்று கூறுவார்.
கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் எம்.ஜி.ஆர். வசித்த ராமாவரம் தோட் டத்திலும் வெள்ள நீர் புகுந்தது. அவர் பயன்படுத்திய சில பொருட்கள் அடித்துச் செல்லப்பட்டன. அது குறித்து வேதனைப்பட்டு பேட்டியளித்த சரோஜா தேவி, ‘‘எம்.ஜி.ஆர். ரசிகர்கள் ஆளுக்கு ஒரு ரூபாய் போட்டு அவர் வாழ்ந்த வீட்டை பாதுகாக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார். பின்னர், முதல்வர் ஜெயலலிதா உத்தரவுப்படி எம்.ஜி.ஆர். வீடு இப்போது புதுப்பிக்கப் பட்டுள்ளது.
முன்பெல்லாம் ‘கெமிஸ்ட்ரி’ என்றால் அறிவியல் பாடத்தின் ஒருபகுதியான வேதியியல் என்றுதான் தெரியும். இப்போது, ‘கெமிஸ்ட்ரி’ என்பதற்கு புதிய அர்த்தங்கள் சொல்லப்படுகின்றன. அதன்படி பார்த்தால், படங்களில் எம்.ஜி.ஆருக்கும் சரோஜா தேவிக்கும் ‘கெமிஸ்ட்ரி’ அற்புதமாக பொருந்தியிருக் கும். ‘படகோட்டி’ படத்தில் ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்ட, ‘தொட்டால் பூ மலரும்...’ பாடல் அதற்கு ஒரு உதாரணம்.
ஏவி.எம். நிறுவனம் தயாரித்த முதல் வண்ணப்படமான ‘அன்பே வா’ படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடி சரோஜா தேவி. சிம்லாவில் படப்பிடிப்பு. அப்போது நடந்த பயங்கர சம்ப வத்தை சரோஜா தேவியே பின்னர் கூறியிருந்தார்.
சிம்லாவில் புல்வெளியில் ஒரு காட்சி யில் நடிப்பதற்காக எம்.ஜி.ஆரும் சரோஜா தேவியும் தயாராகிக் கொண்டி ருந்தனர். எம்.ஜி.ஆர். திடீரென வேகமாக வந்து சரோஜா தேவியை பலமாகத் தள்ளிவிட்டார். சரோஜா தேவி 4 அடி தள்ளிப் போய் விழுந்தார். படப்பிடிப்புக் குழுவினர் திகைத்துப் போய்விட்டனர். ‘என்ன ஆச்சு எம்.ஜி.ஆருக்கு? இப்படி ஒரு காட்சி கிடையாதே?’ என்றெல்லாம் திகிலுடன் சிந்தித்துக் கொண்டிருக்கும்போதே, அவர் களுக்கு அதற்கான விடை கிடைத்து விட்டது.
இமாச்சலப் பிரதேசத்தில் காணப் படும் அரியவகை இரண்டு தலை நாகம் சரோஜா தேவிக்கு அருகில் சீறியபடி படமெடுத்து நிற்பதை எம்.ஜி.ஆர். பார்த்திருக்கிறார். ‘பாம்பு… பாம்பு…' என்று கத்தி, பதற்றத்தை ஏற்படுத்தி நிலைமையை விபரீதமாக்காமல் வழக் கம்போல, தனக்கே உரிய சமயோசிதத் தோடு சரோஜா தேவியை தள்ளி விட்டிருக்கிறார்.
அதோடு, ‘ஷூ' அணிந்த தனது கால்களால் நாகப் பாம்பை எம்.ஜி.ஆர். மிதித்தே கொன்று விட்டார். அதைப் பார்த்தபோதுதான் சுற்றி நின்றவர்களுக்கு விஷயம் புரிந்தது. தன் உயிரைக் காப்பாற்றியதற்காக எம்.ஜி.ஆருக்கு நன்றி சொன்ன சரோஜா தேவி, ‘‘பதற்றமான சூழ்நிலையில் என்னை தள்ளிவிட வேண்டும் என்று எப்படி உங்களுக்கு உடனே தோன் றியது?’’ என்று கேட்டதற்கு, எம்.ஜி.ஆர். அளித்த பதில்…
‘‘இக்கட்டான நேரத்தில் புத்தியை பயன்படுத்துவதில்தான் நம்ம வெற்றியே இருக்கு.’’
எம்.ஜி.ஆருக்கு எப்பவுமே ஓடற பாம்பை மிதிக்கிற வயசு!
- தொடரும்...
No comments:
Post a Comment