M.G.R. வியக்க வைக்கும் நினைவாற்றல் கொண்டவர். அவரது நினைவாற்றலையும், செல்வாக்கையும், பிறர் நலனில் கொண்டிருந்த அக்கறையையும் பார்த்து வியந்தவர்களில், தற்போது உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நடிகரும் பத்திரிகையாளருமான ‘சோ’ ராமசாமியும் ஒருவர்.
எம்.ஜி.ஆரை கடுமையாக சோ எதிர்த்த காலங்களும் உண்டு. மிகத் தீவிரமாக ஆதரித்த சமயங்களும் உண்டு. 1980ம் ஆண்டு எம்.ஜி.ஆர். ஆட்சி கலைக்கப்பட்ட பின் நடந்த தேர்த லில், எம்.ஜி.ஆர். மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதில் சோ தீவிரமாக இருந்தார். இப்போதும் கூட ‘சோ ஒரு அதிமுக ஆதரவாளர்’ என்று சில விமர்சனங்கள் இருந்தாலும், அந்தந்த சூழ் நிலைக்கு ஏற்ப, தன் மனதுக்கு நியாயம் என்று பட்டதை பட்டவர்த்தனமாக சொல் பவர் அவர். மக்கள் நலனுக்காக இலவச திட்டங்களை எம்.ஜி.ஆர். கொண்டு வந்தபோது கிண்டல் செய்தா லும் சில ஆண்டுகளுக்கு முன், ‘‘நமது நாடு இருக்கும் சூழலில் இலவச திட்டங்கள் தேவை என்பதை உணர்கிறேன்’’ என்று சோ கூறினார்.
‘அடிமைப் பெண்’, ‘ஒளிவிளக்கு’, ‘என் அண்ணன்’ உட்பட எம்.ஜி.ஆருடன் பல படங்களில் சோ நடித்துள்ளார். நாடகம் நடத்துவதற்காக ஒருமுறை மும்பைக்கு சோ சென்றார். வழியில் ஒரு மூதாட்டி சோவைப் பார்த்து, ‘‘தம்பி, உன்னை எம்.ஜி.ஆர். படங்களில் பார்த் திருக்கிறேன். எம்.ஜி.ஆர். கிட்ட நான் விசாரிச்சேன் என்று சொல்லு’’ என்று கூறிச் சென்றுவிட்டார். அவர் தனது பெயர் என்ன? முகவரி என்ன? என்று எதை யும் சொல்லவில்லை. எம்.ஜி.ஆருக்கு இருந்த ஈர்ப்பு சக்தியைப் பார்த்து வியந்துபோனார் சோ.
எம்.ஜி.ஆரை வைத்து படம் எடுத்த சில தயாரிப்பாளர்கள் அவரது ‘கால்ஷீட்’ தாமதமாக கிடைக்கிறது என்றும் தொல்லைப்படுவதாகவும் சோவிடம் குறைபட்டுள்ளனர். ஆனால், ‘‘அப்படி என்னிடம் குறைபட்டவர்களே பின்னர் அடுத்த படத்தை எம்.ஜி.ஆரை வைத்தே தயாரித்தனர்’ என்று கூறும் சோ, அதற்கு சொல்லும் காரணம், ‘‘ எம்.ஜி.ஆரை வைத்து படம் எடுப்பது கஷ்டமானது. ஆனால், வேறு எந்த நடிகரையும் வைத்து படம் எடுப்பதை விட எம்.ஜி.ஆரை வைத்து படம் எடுப்பது லாபகரமானது.’’
‘விளம்பரத்துக்காகத்தான் எம்.ஜி.ஆர். பிறருக்கு உதவி செய்கிறார்’ என்ற விமர்சனங்களை சோ கடுமையாக மறுத்திருக்கிறார். ‘‘விளம்பர நோக்கம் இல்லாமல் எம்.ஜி.ஆர். பிறருக்கு உதவு வதை பார்த்திருக்கிறேன். திரைப்படத் துறையில் அவருக்கு எதிராக இயங்கிய வர்களுக்கு கூட அவர் உதவியிருக் கிறார்’’ என்று கூறும் சோ, ஒருமுறை கேட்ட கேள்வி பொருள் பொதிந்தது. சோவின் கேள்வி இது...‘‘அப்படியே விளம்பரத்துக்கு என்று வைத்துக் கொண்டாலும் எத்தனை பேருக்கு விளம்பரத்துக்காகவாவது பிறருக்கு உதவும் மனம் இருக்கிறது?’’
எம்.ஜி.ஆரின் கருணை உள்ளத்துக்கு உதாரணமாக சோ ஒரு சம்பவத்தை குறிப்பிடுவார். சட்டாம்பிள்ளை வெங்கட் ராமன் என்பவர் பழம்பெரும் நடிகர். பல படங்களில் நடித்துள்ளார். அவரது தாயார் மறைந்தபோது கையில் பணம் இல்லாத நிலையில், எம்.ஜி.ஆரின் வீட்டுக்குச் சென்றுள்ளார். அவரை அடை யாளம் கண்டு விசாரித்த எம்.ஜி.ஆரிடம் நிலைமையை கூறினார். வெளியே புறப் பட்டுக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர்., அந்த அவசரத்திலும் வீட்டில் உள்ளவர்களை அழைத்து, ‘‘வெங்கட்ராமனுக்கு ஒரு வேனையும் தேவைப்படும் பணத்தையும் கொடுத்திடுங்க’’ என்று சொல்லிவிட்டு புறப்பட்டார்.
பின்னர், சட்டாம்பிள்ளை வெங்கட் ராமன் சோவை சந்தித்தபோது, ‘‘வீட்டிலே உலையை வெச்சுட்டு இன்னிக்கு சோறு பொங்கும் என்ற நம்பிக்கையோட ஒருவரின் வீட்டுக்கு போகலாம் என்றால் அது எம்.ஜி.ஆரின் வீடுதான்’’ என்று கூறியிருக்கிறார்.
இந்த சம்பவத்தைக் குறிப்பிட்டு, ‘‘எத்தனை பேருக்கு இதுபோன்ற சான்றிதழ் கிடைக்கும்? எனக்குத் தெரிந்து பலருக்கு எம்.ஜி.ஆர். உதவி செய்திருக்கிறார். அதெல்லாம் வெளியே தெரிய வந்ததில்லை’’ என்று சோ மனம் திறந்து பாராட்டியுள்ளார்.
‘அடிமைப் பெண்’ படத்துக்காக ஜெய்ப்பூரில் சோ நடித்துக் கொண்டிருந்த போது, அவருக்கு கடுமையான வயிற்று வலி. தனது டாக்டரை விட்டு சோவுக்கு சிகிச்சை அளிக்கச் செய்து ‘‘உடல் நிலை சரியாகும் வரையில் நீங்கள் நடிக்க வேண்டாம்’’என்று எம்.ஜி.ஆர். பரிவுடன் கூறி அவரை கவனித்துக் கொண்டார்.
சோவின் நெருங்கிய நண்பர் நீலு. நாடகங்களிலும் பல படங்களிலும் நடித்துள்ளார். கொல்கத்தாவில் வேலை பார்த்து வந்த அவர், ஒருமுறை சென்னை வந்தபோது சோவை சந்தித் தார். ஒரு ஆண்டு கழித்து அன்றுதான் அவர் சென்னை வந்திருந்தார். நீலு சென்றபோது, எம்.ஜி.ஆருடன் சோ படப்பிடிப்பில் இருந்தார். எம்.ஜி.ஆரிடம் நீலுவை அறிமுகம் செய்த சோ, ‘‘இவர் என்னுடைய நண்பர்’’ என்று கூறினார்.
‘‘இவரை எனக்கு தெரியுமே. உங்க நாடகத்தில் பார்த்திருக்கறேன்’’ என்று எம்.ஜி.ஆர் கூறியதும் சோவுக்கும் நீலுவுக்கும் குழப்பம்.
இரண்டு நாட்கள் முன்புதான் எம்.ஜி.ஆர். தலைமையில் சோவின் நாடகம் நடந்தது. ‘அதில் எப்படி நீலுவை எம்.ஜி.ஆர். பார்த்திருக்க முடியும்? இன்றுதானே அவர் சென்னை வந்தார்’ என்பதுதான் அவர்கள் குழப்பத்துக்கு காரணம். தங்கள் குழப்பத்தை எம்.ஜி.ஆரிடமே சோ தெரிவித்தார்.
‘‘இரண்டு நாட்கள் முன்பு நடந்த நாடகத்தில் இவரைப் பார்த்தேன் என்று சொன்னேனா? போன வருஷம் நான் பார்த்த உங்கள் நாடகத்தில் வக்கீல் வேஷம் போட்டவர்தானே இவர்?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டதும் சோவும் நீலுவும் மயங்கி விழாத குறை. அவ்வளவு அபார மான நினைவாற்றல் எம்.ஜி.ஆருக்கு.
‘அடிமைப் பெண்’ படத்தில் ஒரு சுவை யான காட்சி. படத்தில் எம்.ஜி.ஆரின் பெயர் வேங்கையன். வில்லன் மனோ கரின் அரச பரிவாரங்களுடன் ஒருவராக வரும் சோவை எம்.ஜி.ஆரின் வீரர்கள் பிடித்துவைத்து அவரை துன்புறுத்த முயற்சிப்பார்கள். அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக சோ, ‘‘வேங்கையனிடம் சொல்லிவிடுவேன்’’ என்று மிரட்டுவார். உடனே, சோவை அவர்கள் விட்டுவிட்டு மன்னிப்பு கேட்பார்கள். அப்போது, சோ சொல்லும் வசனத்தை எம்.ஜி.ஆர். ரசிகர்கள் மறக்கவே மாட்டார்கள். சோ கூறுவார்...
‘‘தலைவன் பெயரை சொன்னவுடன் என்ன ஒரு பயம், பக்தி. தலைவன் என்றால் இவரல்லவோ தலைவன்’’
- தொடரும்...
எம்.ஜி.ஆர். இரட்டை வேடங்களில் நடித்த ‘ஊருக்கு உழைப்பவன்’ படம் 1976-ம் ஆண்டு நவம்பர் 12-ம் தேதி வெளியானது. கிளைமாக்ஸில் எம்.ஜி.ஆரும் மும்பையைச் சேர்ந்த பிரபல சண்டைக் கலைஞர் ஷெட்டியும் மோதும் காட்சி பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது. அந்த சமயத்தில் நாடெங்கும் நெருக்கடி நிலை அமலில் இருந்தது. அதனால், சண்டைக் காட்சிகளில் தணிக்கை கடுமையாக அமல்படுத்தப்பட்டது.
|
No comments:
Post a Comment