Thursday, April 14, 2016

அலட்சியத்தால் விளைந்த அசம்பாவிதம்!

அலட்சியத்தால் விளைந்த அசம்பாவிதம்!

THE HINDU
பாதுகாப்பு விஷயத்தில் அசட்டையாக இருப்பதிலும், அசம்பாவிதங்கள் நடந்தால் அதற்குப் பொறுப்பேற்க மறுப்பதிலும் புகழ்பெற்று விளங்குபவர்கள் இந்தியர்கள். அப்படிப்பட்டவர்களையே உலுக்கி எடுத்துவிட்டது கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள புட்டிங்கல் தேவி கோயிலில் ஞாயிற்றுக் கிழமை அதிகாலை நடந்த வெடிவிபத்து. வாண வேடிக்கை நிகழ்ச்சியின்போது, வானை நோக்கிச் செல்ல வேண்டிய வெடி ஒன்று தரையிலேயே வெடித்துச் சிதறியிருக்கிறது. அதன் தீப்பொறிகள், வெடிபொருட்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் விழுந்ததால் அங்கிருந்த வெடிபொருட்கள் வெடித்துச் சிதறின. இந்தக் கொடூர விபத்தில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். 300-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருக்கிறார்கள்.

அலட்சியமும், அடுத்தவர்களின் பாதுகாப்பைப் பற்றிய அக்கறையின்மையும்தான் இந்த விபத்துக்கு முக்கியக் காரணங்களாக இருந்திருக்கின்றன. வாண வேடிக்கை நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் அனுமதி மறுத்திருந்தும், அதை மீறி வாண வேடிக்கை நடத்திய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் செயல் பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. மாவட்ட நிர்வாகமே அனுமதி மறுத்திருந்த நிலையில், அந்த நிகழ்ச்சி நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பில் இருந்த காவல் துறை என்ன செய்துகொண்டிருந்தது என்பது இன்னொரு முக்கியமான கேள்வி. இரவு 10 மணிக்கு மேல் வெடி வெடிக்கக் கூடாது என்று விதிமுறை இருந்தும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அதிகாலை 3.30 மணி வரை வாண வேடிக்கை நடத்திக்கொண்டிருந்திருக்கிறார்கள்.

கேரளாவில் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில், இந்தச் சம்பவத்தை வைத்து ஆதாயம் தேட அரசியல் கட்சிகள் முயலக் கூடாது. இந்தச் சம்பவம் தொடர்பாக, புட்டிங்கல் கோயில் நிர்வாகத்தினர், வாண வேடிக்கை நிகழ்ச்சியை நடத்த ஒப்பந்தம் செய்யப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. இந்தச் சம்பவம் தொடர்பான நீதி விசாரணைக்கும் கேரள அரசு உத்தரவிட்டிருக்கிறது.

இதுபோன்ற நிகழ்ச்சிகளின்போது ஏற்படும் விபத்துகள் தொடர்பாக ஆராய, கேரள மாநிலத்தின் வருவாய்த் துறையும், பேரிடர் மேலாண்மைத் துறையும் இணைந்து ஒரு ஆய்வு நிறுவனத்தை நடத்திவருகின்றன. இதன் மூலம், விழா ஏற்பாட்டாளர்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகளையும் உருவாக்கியிருக்கிறது கேரள அரசு. ஆனால், இந்த விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுவதில்லை என்பதுதான் சோகம்.

விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை, தொலைதூரப் பகுதிகளில் நடக்கும் நிகழ்ச்சிகளிலும் பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதிசெய்வது போன்ற விஷயங்களில் ஒருபோதும் சமரசம் கூடாது. கொல்லத்தில் நடந்த வெடிவிபத்தைத் தொடர்ந்து, மத்திய அரசு எடுத்திருக்கும் உடனடி நிவாரண நடவடிக்கைகள், சம்பவ இடத்துக்கு உடனடியாகப் பாதுகாப்புப் படைகள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் விரைந்தது போன்றவை இதுபோன்ற அசம்பாவிதங்களின்போது மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட முடியும் என்ற நம்பிக்கையை விதைத்திருக்கின்றன.

கேரளாவில் திருச்சூர் பூரம் உட்பட 50-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் நடைபெறவிருக்கும் நிலையில், இதுபோன்ற அசம்பாவிதங்கள் மீண்டும் நிகழாதவண்ணம் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு அம்மாநில அரசுக்கு இருக்கிறது. அண்டை மாநிலத்தில் நடந்திருக்கும் இந்த விபத்து, நமக்கும் ஒரு பாடம் என்பதில் சந்தேகமில்லை. அந்த வகையில், அரசியல் நிகழ்ச்சிகள், மத வழிபாட்டு நிகழ்ச்சிகளின்போது பாதுகாப்பு விஷயங்களில் உரிய நடவடிக்கைகளை முன்கூட்டியே எடுக்க வேண்டிய பொறுப்பு எல்லா அரசுக்கும் இருக்கிறது. ஏனெனில், மனித உயிர்கள் விலைமதிக்க முடியாதவை!

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024