Thursday, April 14, 2016

பட்டுக்கோட்டை எனும் பாட்டுக்கோட்டை !

பட்டுக்கோட்டை எனும் பாட்டுக்கோட்டை !
VIKATAN

வறுமை நிலைக்கு பயந்துவிடாதே
திறமை இருக்கு மறந்துவிடாதே!' -

திருடாதே என்ற படத்தில் இடம்பெற்ற 'திருடாதே... பாப்பா திருடாதே 'என்ற பாடலில் இடம்பெறும் இந்த பாடலை கேட்கும் யாருக்கும் மனதில் ஒரு ஆழமான தன்னம்பிக்கை உயர்ந்து நிற்கும். இப்படி காலத்தால் அழிக்கமுடியாத பாடல்களை எழுதிய பொதுவுடைமைக் கவி பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பிறந்தநாள் இன்று.

குட்டி ஆடு தப்பிவந்தா குள்ளநரிக்கு சொந்தம்

தட்டுக்கெட்ட மனிதருக்கு கண்டதெல்லாம் சொந்தம் என்ற தீர்க்க தரிசன வரிகளுக்கு சொந்தக்காரர் அவர்.

மகாகவி பாரதியாருக்குப் பிறகு,  சமூக அக்கறை மிகுந்த தனது பாடல்களால் மக்களின் மனதில் வெள்ளமெனப் பாய்ந்தவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள செங்கப்படுத்தான்காடு என்னும் கிராமத்தில் எளிய விவசாய குடும்பத்தில் பிறந்தவர். தனது வறுமையின் பொருட்டு விவசாயம், வியாபாரம், நாடக நடிப்பு, டிரைவிங், உப்பளத்தொழில் என எண்ணற்ற தொழில்களையும் வேலைகளையும் செய்தவர். பாவேந்தர் பாரதிதாசனிடம் தமிழ் கற்றவர். அவரது குயில் இதழில் உதவி ஆசிரியராகவும் பணியாற்றினார்.

வறுமை மிகுந்த சூழலில்,  பெரும் முயற்சிக்குப் பிறகு தனது 25வது வயதில் 'படித்த பெண்' என்ற திரைப்படத்திற்காக முதல் பாடலை எழுதினார். அடுத்தடுத்த வருடங்களில் தனது அபாரமான கவிதை ஆற்றலால் திரையிசைப்பாடல் உலகில் அழுத்தமாக காலூன்றினார். அவரது கவிதைக்கொடி,  புகழ்காற்றில் படபடத்தது.

பொதுவுடமைக் கருத்தியலை தீவிரமாக நம்பியவர். மூடநம்பிக்கைகளுக்கு எதிரான அரசியல் விழிப்புணர்வு கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்ல திரையிசையைப் பயன்படுத்தினார். இளைஞர்களுக்கு மட்டுமின்றி,  சிறுவர்களுக்கும் தனது கருத்துக்கள் சென்றடைய வேண்டும் என்று விரும்பியவர். சினிமாவின் கதை சிச்சுவேஷன்களைப் பயன்படுத்தி, சிறுவர்களுக்காக பல பாடல்களை எழுதினார். அவற்றில் ・சின்னப்பயலே... சின்னப்பயலே சேதி கேளடா・ திருடாதே பாப்பா... திருடாதே・ தூங்காதே தம்பி... தூங்காதே・போன்ற பாடல்கள் மிகப் பிரபலமானவை.

தத்துவம், அரசியல், காதல், நகைச்சுவை, சோகம் என பல உணர்வுத்தளங்களில் பாடல்கள் எழுதியுள்ளார். 187 பாடல்களை மட்டுமே எழுதியிருந்த சூழலில்,  தனது 29 வயதிலேயே காற்றில் கலந்தார். பட்டுக்கோட்டையைப் பொறுத்தவரை பாடல்களின் எண்ணிக்கை ஒரு பொருட்டே அல்ல. அவரது வரிகள் ஒவ்வொன்றும் காலத்தில் எதிர் நீச்சல் போடுபவை. மனிதன் பூமியில் வாழ்கின்ற காலம் வரைக்கும் நிலைத்து நிற்பவை. எல்லா காலங்களுக்கும் பொருந்திப் போகிறவை.        

உதாரணமாக சமீபத்தில், வங்கிகளுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு விஜய்மல்லையா உல்லாசப் பயணத்திலிருப்பதையும், டிராக்டருக்கு தவணை கட்டவில்லையென ஒரு விவசாயி போலீசால் தாக்கப்பட்டதையும் ஒப்பிட்டு பார்ப்போம். கீழே பட்டுக்கோட்டையின் வரிகள்:

பட்டப்பகல் திருடர்களை பட்டாடைகள் மறைக்குது - ஒரு
பஞ்சையத்தான் எல்லாம் சேர்ந்து திருடனென்றே ஒதைக்குது!  
(பொறக்கும்போது பொறந்த குணம் போக போக மாறுது...)
எத்தனை ஆண்டுகள் கழித்தும் அவரது பாடல்,  இன்றைய சமூகத்தை தோலுரிப்பதாக உள்ளது...இதுதான் பட்டுக்கோட்டையார். அதுவும் இந்த தேர்தல் நேரத்தில் நாம் அனைவரும் கேட்க வேண்டிய மற்றொரு பாடல்:

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா- இது
கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா- தம்பி
தெரிந்து நடந்துகொள்ளடா- இதயம்
திருந்த மருந்து சொல்லடா!- இப்படி பாடல்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

சைனஸ் தொல்லைக்காக ஆபரேஷன் செய்தபோது, டாக்டர்கள் தவறான இடத்தில் ஆபரேஷன் செய்துவிட, அதன் பக்கவிளைவாக முகம் வீங்கி சிகிச்சை பலனின்றி,  தமது 29 வயதில் 08.10.1959 ல் பட்டுக்கோட்டையார் இயற்கை எய்தினார்.

ஒரு முறை ஜனசக்தி பத்திரிக்கை ஆசிரியர், கவிஞர். பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்திடம், "பெரிய கவிஞர்களான கம்பன், இளங்கோ, பாரதி போன்றவர்களே பெயரை சிறிதாக வைத்துக்கொண்டிருக்கிறார்கள். நீங்கள் ஏன் இவ்வளவு பெரிய பெயரை வைத்துக்கொண்டிருக்கிறீர்கள்?" என்று கேட்டாராம். அதற்கு பட்டுக்கோட்டை, " அவர்கள் பெரிய கவிஞர்கள். நான் சின்னக் கவிஞன் பெயராவது பெரிதாக இருக்கட்டுமே...?!" என்றாராம்.

தன்னடக்கமாக அவர் அப்படிச் சொல்லியிருந்தாலும்,  மானுட சமூகத்தின் மீது அவர் கொண்ட நேசத்தாலும் அக்கறையாலும், மாபெரும் கவிஞராகவே மக்களின் இதயத்தில் என்றென்றும் நிறைந்திருப்பார்.

பட்டுக்கோட்டையின் பாடல்களை நாட்டுடமையாக்கி,  அரசு தனக்கு பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறது. இவரையும் இவரது பாடல்களையும் நாம், நம் குழந்தைகளுக்கும் இந்த தலைமுறை இளைஞர்களுக்கும் அறிமுகப்படுத்துவதின் வாயிலாக பெருமை தேடிக்கொள்வோம். அவரது பாடல்களை கேட்பதின் வாயிலாகவும் நினைவுக்கூறுவதின் வாயிலாகவும் இன்றைய நாளை நீங்கள் மகத்துவமானதாக மாற்றலாம்.

- மாயன்

No comments:

Post a Comment

NEET PG 2024 Exam Pattern REVISED, NMC Issues Official Notice; Here’s All You Need To Know

NEET PG 2024 Exam Pattern REVISED, NMC Issues Official Notice; Here’s All You Need To Know The NEET PG 2024 is scheduled to take place on Ju...