எம்ஜிஆர் 100 | 48 - அரசியல்வாதிகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர்!
தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்
M.G.R. திரைப்படத் துறையில் இருந்தபோதும் சரி, ஆட்சியில் இருந்தபோதும் சரி, தனக்கு உள்ள செல்வாக்கை தனது குடும்பத்தார் தவறாகப் பயன்படுத்த அனுமதித்தது இல்லை. அரசு நிர்வாகத்தில் அவர்களது குறுக்கீட்டை விரும்பியதும் இல்லை. தனது உதவியாளர்கள் தவறு செய்தபோதும் அதற்கு பரிகாரம் கண்டிருக்கிறார்.
எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது ஒரு நாள் கோட்டைக்கு புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தார். முதல்வரை சந்தித்து குறைகளை தெரிவிக்கவும் மனு கொடுக்கவும் அவரது ராமாவரம் தோட்ட வீட்டில் எப்போ தும் கூட்டம் இருக்கும். காரில் எம்.ஜி.ஆர். ஏறும் சமயத்தில், கூட்டத்தில் இருந்து ஒருவர் திடீரென ஓடிவந்து அவரது காலில் விழுந்தார். பதற்றமடைந்த உதவியாளர்கள் அந்த நபரை தூக்கிப் பிடித்தனர். அவரை விட்டுவிடும்படி கூறிய எம்.ஜி.ஆர். அந்த நபரைப் பார்த்து, ‘‘என்ன விஷயம்?’’ என்றார்.
‘‘நான் ஈரோட்டைச் சேர்ந்தவன். உங்களைப் பார்த்து என் குறையை சொல்ல வந்தேன்’’ என்றார் அந்த நபர். ‘‘என்ன குறை?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டார்.
அங்கே நின்றுகொண்டிருந்த எம்.ஜி.ஆரின் உதவியாளர்களில் ஒருவரை சுட்டிக்காட்டி, ‘‘இந்த ஆளு என்னை 45 ஆயிரம் ரூபாய் ஏமாத்தி விட்டாருங்க’’ என்று அந்த நபர் விசும்பலுடன் சொன்னார்.
எம்.ஜி.ஆர். சற்று நம்ப முடியாமல் கேட்டார்… ‘‘யாரு?’’
‘‘இதோ இங்கே நிக் கிறாரே, இவர்தாங்க’’ என்று மீண்டும் அந்த உதவியாளரை காண் பித்து சொன்னார் வந்த வர். தொடர்ந்து, ‘‘இன் ஜினீயரிங் காலேஜ்லே சீட் வாங்கித் தரேன்னு சொல்லிட்டு 45 ஆயிரம் ரூபாயை வாங்கிட்டு ஏமாத் திட்டாருங்க’’ என்றார்.
கோபத்தில் ரத்த நிற மாக மாறிய முகத்துடன் உதவியாளரை எம்.ஜி.ஆர். பார்த்தார். கருப்புக் கண்ணாடியையும் மீறி அவரது கண்கள் தகிப்பது தெரிந்தது. உண்மையை மறுக்க முடியாததோடு, எம்.ஜி.ஆரின் கோபமும் சேர, உதவியாளர் சப்தநாடியும் ஒடுங்கி சிலை போல நின்றார்.
புகார் சொன்னவரை பார்த்து எம்.ஜி.ஆர்., ‘‘சொன்ன மாதிரி சீட் கிடைச்சிருந்தால் என்கிட்ட வருவீங்களா? இல்லை, பணம் கொடுக்கும் போது என்னைக் கேட்டுவிட்டு கொடுத்தீங் களா?’’ என்று கோபம் அடங்காமல் கேட்டார். பதிலளிக்க முடியாமல் வந்த வர் மவுனமானார். ‘‘உங்க அட்ரஸை கொடுத்துவிட்டு போங்க’’ என்று அவரை அனுப்பிவைத்தார். பொது மக்கள் எல்லாரும் சென்றபிறகு அந்த உதவியாளரை எம்.ஜி.ஆர். அழைத்து ஓங்கி கன்னத்தில் அறைந்துவிட்டார். ‘‘ஏன் இப்படி செஞ்சே? உன்னாலே எனக்கில்லே கெட்ட பேரு. நீ பண்ணின காரியத்தாலே என்னை இல்லே வந்து கேட்கிறான்’’ என்று சத்தம்போட்டு அவரை வேலையை விட்டு அனுப்பிவிட்டார்.
அப்போது, சட்டப்பேரவை நடந்து கொண் டிருந்த சமயம். எதிர்க்கட்சித் தலைவர் கருணா நிதி. அவருக்கு இந்த விஷயம் எப்படியோ தெரிந்துவிட்டது. மறுநாளே இந்தப் பிரச் சினையை சட்டப்பேரவையில் எழுப்பினார். ‘‘முதல்வரின் உதவியாளர் ஒருவர், இன்ஜினீ யரிங் கல்லூரியில் சீட் வாங்கித் தருவதாக ஒருவரிடமிருந்து 45 ஆயிரம் ரூபாய் மோசடி செய்தாராமே?’’ என்று கேட்டார்.
முதல்வர் எம்.ஜி.ஆர். எழுந்தார். எதிர்க் கட்சித் தலைவர் கருணாநிதியைப் பார்த்து, ‘‘நீங்கள் கூறுவது உண்மைதான். சம்பந்தப் பட்ட உதவியாளரை நேற்றே பதவியில் இருந்து நீக்கிவிட்டேன். பணத்தை இழந்தவருக்கு பணத்தை திருப்பிக் கொடுக்கவும் ஏற்பாடு செய்தாகிவிட்டது.’’ என்று கூறினார்.
தனது வீட்டில் நடந்த விஷயம் வெளியில் தெரிந்து விட்டதே என்று எம்.ஜி.ஆர். நினைக்கவில்லை. குற்றச்சாட்டை மறுக் கவோ, சப்பைக்கட்டு கட்டவோ இல்லை. நடந்த விஷயத்தையும் அதற்கு பரிகாரம் காணப்பட்டதையும் தெளிவாக சொல்லி விட்டார்.
தமிழ்த் திரையுலகில் எம்.ஜி.ஆர். ஏகபோக சக்கரவர்த்தியாக இருந்த நிலையில், தனது அண்ணன் சக்ரபாணி நடிகராக இருந்தபோதும், தான் நடிக்கும் படங்களில் சக்ரபாணிக்கும் வாய்ப்பு தர வேண்டும் என்று எந்த தயாரிப்பாளரையும் அவர் வற்புறுத்தியதில்லை. தயாரிப்பாளர்கள் தாங்களாக விரும்பினால் எம்.ஜி.ஆரின் அண்ணனாகவோ, தந்தையாகவோ நடிக்க சக்ரபாணியை ஒப்பந்தம் செய்வார்களே தவிர, எம்.ஜி.ஆர். கட்டாயப்படுத்தியதில்லை.
சக்ரபாணியின் மகன் எம்.ஜி.சி.சுகுமார் சில படங்களில் நடித்தார். அவரையும் கூட, தனது செல்வாக்கை பயன்படுத்தி திரையுலகில் முன்னேற்ற வேண்டும் என்று எம்.ஜி.ஆர். நினைத்ததில்லை.
உடல்நலக் குறைவால் அமெரிக்காவில் எம்.ஜி.ஆர். சிகிச்சை பெற்றுத் திரும்பிய பின், அவரது குடும்பத்தினர் சிலர் அரசு நிர்வாகத்தில் தலையிடுவதாக புகார் எழுந்தது. இது எம்.ஜி.ஆரின் கவனத்துக்குச் சென்றது. உடனே, ‘அரசு நிர்வாகத்தில் சம்பந்தம் இல்லாத யாருடைய தலையீட்டையும் குறுக்கீட்டையும் நான் எப்போதும் விரும்புவதில்லை. எனது மனைவியாகவே இருந்தாலும் அல்லது எனது உறவினர் என்று சொல்லிக் கொள்பவராக இருந்தாலும் அவர்களுக்கும் இது பொருந் தும். அமைச்சர்கள், அதிகாரிகள் என் அபிப்ரா யத்தை அறிந்து நடக்க வேண்டும்’ என்று 13-6-86 தேதியிட்டு முக்கிய அறிவிப்பை முதல்வர் எம்.ஜி.ஆர். வெளியிட்டார்.
அந்த அறிவிப்பு நாளிதழ்களில் வெளிவந் தது. தன் குடும்பத்தார் அரசு நிர்வாகத்தை பயன் படுத்தி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய் வதை எம்.ஜி.ஆர். ஒருபோதும் அனுமதித்த தில்லை. பொறுப்பில் இருப்பவர்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பதில் இப்போதைய அரசியல்வாதிகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர் எம்.ஜி.ஆர்.!
‘சுவாச் பாரத்’ என்ற பெயரில் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை மத்திய அரசு 2014-ல் அறி வித்தது. பிரதமர் மோடி, டெல்லியில் தெருவை சுத்தம் செய்தார். இதை ‘நேற்று இன்று நாளை’ திரைப்படத்திலேயே எம்.ஜி.ஆர். கூறியிருப்பார். சேரிப் பகுதியில் வசிக்கும் எம்.ஜி.ஆர்., சுகாதாரத்தையும் தூய்மையை யும் வலியுறுத்தி அந்தப் பகுதியில் தெருவை கூட்டி சுத்தம் செய்வார். அப்போது, ‘நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று…’ பாடல் இடம் பெறும். அந்தப் பாடலில் வரும் அர்த்தம் நிறைந்த வரிகள் இவை…
‘தெருத் தெருவாய் கூட்டுவது பொதுநலத் தொண்டு
ஊரார் தெரிந்து கொள்ள படம் பிடித்தால் சுயநலம் உண்டு
மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார்
தம் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார்...’
- தொடரும்...
படங்கள் உதவி: ஞானம், செல்வகுமார்
எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது, நெசவாளர், தீப்பெட்டி தொழிலாளர், பனை ஏறும் தொழிலாளர்களுக்கு விபத்து நிவாரணத் திட் டத்தை அமல்படுத்தினார். மீனவர்களுக்கும் நெசவாளர் களுக்கும் சிறப்பு வீட்டு வசதி திட்டம் கொண்டு வந்தார்.
No comments:
Post a Comment