தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்
M.G.R. போலவே அவரது ரசிகர்களும் கூர்மையானவர்கள் என்பதற்கு ஒரு உதாரணம். நேற்றைய தொடரில் மதுரையில் எம்.ஜி.ஆர். படங்களின் சாதனைகளை பெட்டிச் செய்தியாக வெளியிட்டிருந்தோம். அதில் ‘மதுரை வீரன்’, ‘எங்க வீட்டுப் பிள்ளை’, ‘அடிமைப்பெண்’, ‘மாட்டுக்கார வேலன்’, ‘உலகம் சுற்றும் வாலிபன்’, ‘உரிமைக்குரல்’ ஆகிய 6 வெள்ளிவிழாப் படங்களில் ஒன்றான ‘எங்க வீட்டுப் பிள்ளை’ விடுபட்டுவிட்டது என்றும் ‘இதயக்கனி’ படம் 20 வாரங்களுக்கு மேல் ஓடியதாகவும் ஏராளமான ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். மதுரையில் 20 வாரங்கள் ஓடிய படங்களை பட்டியலிட்டால் அதில் சதவீத அடிப்படையில் எம்.ஜி.ஆர். படங்களே அதிகம் என்றும் கூறியுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் நன்றி.
இதுபோன்ற கூர்மையான ரசிகர் களுள் ‘கவர்ச்சி வில்லன்’ என்று புகழப்பட்ட நடிகர் கே.கண்ண னும் ஒருவர். பின்னாளில் எம்.ஜி.ஆர். காலத்தில் அவரது ரசிகர் மன்றத்தின் பொருளாளராகவும் பணியாற்றியவர். சொந்த ஊரான சிவகங்கையில் ராம் தியேட்டரில் எம்.ஜி.ஆர். படங்கள் எல்லாவற்றையும் கண்ணன் விடாமல் பார்த்து விடுவார். அவரது நடிப்பையும் வசனங்களையும் கூர்ந்து கவனித்து, மாலை வேளைகளில் நண் பர்களிடம் எம்.ஜி.ஆரைப் போலவே நடித்து அவர்களை மகிழ வைப்பார்.
பின்னர், சினிமா ஆசையால் சென்னைக்கு வந்த கண்ணன் பல படங்களில் சிறிய வேடங்களில் நடித்து வந்தபோது, ‘மதுரை வீரன்’ படத்தில் எம்.ஜி.ஆருடன் நடிக்கும் அதிர்ஷ்ட வாய்ப்பு கிடைத்தது. முதல் நாளே எம்.ஜி.ஆருடன் வசனம் பேசி நடிக்கும் காட்சி. கதைப்படி வீரனின் நண்பர்களில் ஒருவராக கண்ணன் நடித்திருப்பார். வீரனின் நண்பர்களை தளபதியாக வரும் நடிகர் பாலையா கொடுமைப்படுத்துவார். அங்கு வரும் எம்.ஜி.ஆர். தனது நண்பர்களை காப்பாற்றுவார். ‘‘அது சென்டிமென்டாக அமைந்து நிஜவாழ்க் கையிலும் அப்படியே எம்.ஜி.ஆர். எங்களை எல்லாம் காப்பாற்றினார்’’ என்று பின்னர், கண்ணன் நெகிழ்ந்து போய் கூறியிருக்கிறார்.
‘மதுரை வீரன்’ படம் தொடங்கி எம்.ஜி.ஆரின் கடைசி படமான ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ வரை அவருடன் பல படங்களில் கண் ணன் நடித்திருக்கிறார். ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ படத்தின் பல காட்சிகள் ஜெய்ப்பூரில் படமாக் கப்பட்டன. 26 நாட்கள் அங்கு படப்பிடிப்பு நடந்தது.
எம்.ஜி.ஆரும் மற்றவர்களும் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டனவே தவிர, கண்ணனுக்கு வேலை இல்லை. மாலையில் படப்பிடிப்பு முடிந்து கண்ணனை சந்திக்கும் எம்.ஜி.ஆர். அவரிடம் ‘‘என்ன கண்ணன்? நன்றாக சாப்பிட்டாயா? தூங்கினாயா?’’ என்று விசாரிப்பார். கண்ணன் வெட்கப்பட்டு சிரித்துக் கொண்டு போய்விடுவார்.
படப்பிடிப்பின் கடைசி நாளில் பிற்பகல் இரண்டு மணிக்கு எம்.ஜி.ஆர். திடீரென ஏழு பக்க வசனங்களை கொண்டுவந்து அதன் ஒரு பகுதியை கண்ணனிடம் கொடுத்தார். மற்றொரு பகுதியை நடிகை லதாவிடம் கொடுத்தார். ‘‘இருவரும் வசனங்களை பாடம் செய்து விட்டு நான்கு மணிக்கு தயாராக இருங்கள். படப்பிடிப்பு இருக்கிறது’’ என்றார்.
படம் சரித்திரக் கதை என்பதால் நீண்ட வசனங்கள். இன்னும் இரண்டு மணி நேரத்தில் பாடம் செய்து தயாராக வேண்டுமே என்று கண்ணனுக்கு குழப்பம். அதை எம்.ஜி.ஆர். புரிந்து கொண்டார். ‘‘இன்றுடன் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு நாளை சென்னை புறப்படு கிறோம். நாடகத்தில் பல பக்க வசனங்களை மனப்பாடம் செய்த உனக்கு இது பெரிய காரியமா? ஐந்து மணிக்கு மேல் சூரிய வெளிச்சம் சரியாக இருக்காது. சீக்கிரம் தயாராகு’’ என்று சொல்லிவிட்டு படப்பிடிப்புக்கான ஏற்பாடுகளை கவனிக்க போய்விட்டார்.
எம்.ஜி.ஆர். சொன்னபடி கண்ணன் வசனங்களை பாடம் செய்து நான்கு மணிக்குத் தயாராக இருந்தார். கதைப்படி ஒரு நாட்டின் மன்னராக இருக்கும் கண்ணன், போருக்கு புறப்படுவார். அவரை லதா தடுத்து நிறுத்த முயற்சிப்பார். அப்போது இருவருக்கும் இடையே நடக்கும் உணர்ச்சிகரமான வாதங்கள்தான் அன்று எடுக்கப்பட இருந்த காட்சி.
இந்தக் காட்சியை எடுக்க எப்படியும் ஒரு நாளாவது ஆகும். படம் பார்ப்பவர்களுக்கு விறுவிறுப்பை ஏற்படுத்தும் வகையில் வெவ்வேறு கோணங்களில் படமாக்க வேண்டும். நான்கு மணிக்கு படப்பிடிப்பை ஆரம்பித்து ஐந்து மணிக்குள் எப்படி எம்.ஜி.ஆர். படமாக்கப் போகிறார் என்று கண்ணனுக்கு ஆர்வம்.
கண்ணனை விட சுறுசுறுப்பாக காட்சியை படமாக்குவதற்காக எம்.ஜி.ஆரும் தயாராக வந்தார். வசனங்களை கண்ணனும் லதாவும் பாடம் செய்து கொண்டிருந்த நேரத்துக் குள், காட்சியை விரைவாக படமாக்க எம்.ஜி.ஆர். செய்திருந்த ஏற்பாடுகளை பார்த்து பிரமித்துப் போய்விட்டார் கண்ணன்.
படத்தில் இடம்பெறும் பிரம் மாண்டமான போர்க் காட்சிகளை பட மாக்குவதற்காக ஒன்பது கேமராக்கள் கொண்டு வரப்பட்டிருந்தன. கண்ண னும் லதாவும் பேசும் வசனக் காட்சியை ஒரே ஷாட்டில் படமாக்க எம்.ஜி.ஆர். முடிவு செய்து அதற்காக, ஒன்பது கேமராக்களையும் ஒன்றின் பார்வை ஒன்றின் மீது விழாத வகையில் திறமையாக கோணங்களை அமைத் திருந்தார். 4.15 மணிக்கு எம்.ஜி.ஆர். ‘ஸ்டார்ட்’ சொல்ல, 4.30 மணிக்கு காட்சி ஓ.கே. ஆகிவிட்டது. கண்ணனும் லதாவும் ஒரே ‘டேக்’கில் நடித்த காட்சி இது.
ஒரு நாள் முழுக்க படப்பிடிப்பு நடத்தி எடுக்க வேண்டிய காட்சியை பதினைந்து நிமிடத்தில் எம்.ஜி.ஆர். எடுத்து முடித்து விட்டார். அந்தக் காட்சியை ஒரே நேரத்தில் படமாக்கியது கூட பெரிதல்ல; அதை மிகச் சரியாக ஒன்பது ‘ஷாட்’களாக பிரித்து எடிட் செய்தார். இப்போதுகூட படத்தில் அந்தக் காட்சி பல கோணங்களில் பல முறை எடுக்கப்பட்ட காட்சி போலத் தெரியும்.
எம்.ஜி.ஆர். நடிகர் மட்டுமல்ல; திரைப்படத்துறையில் எல்லாம் அறிந்த சகலகலாவல்லவர்.
தயாரிப்பாளரும் இயக்குநருமான பி.ஆர். பந்துலுவுக்கு உதவுவதற்காக அவரது ‘ஆயிரத் தில் ஒருவன்’ படத்தில் எம்.ஜி.ஆர். நடித்தார். ‘‘தொலைபேசியில்தான் எம்.ஜி.ஆரிடம் கேட்டேன். உடனே நடிக்க ஒப்புக் கொண்டு ‘கால்ஷீட்’ கொடுத்தார்’’ என்று பின்னர், 5-2-1971 தேதியிட்ட ‘சித்ராலயா’ இதழில் பந்துலு நன்றியுடன் கூறியிருந்தார். ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ படத்தை முதலில் பந்துலுதான் இயக்குவதாக இருந்தது. இடையே அவர் இறந்து விட்டதால் எம்.ஜி.ஆரே படத்தின் இயக்குநராக பணியாற்றினார்.
- தொடரும்...
No comments:
Post a Comment