By உதயை மு. வீரையன்
First Published : 11 February 2016 01:23 AM IST
ஓர் அரசாங்கத்தின் நோக்கமே தங்கள் குடிமக்களின் நலன்களைப் பாதுகாப்பதாகும். மக்கள் நல அரசாக இருப்பதுதான் மக்களாட்சிக்கு மரியாதை செய்வதாகும். மக்களுக்கான சுகாதாரத்தையும், கல்வியையும் ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும். நமது அரசியல் சட்டம் கூறுவதும் அதுதான்.
14 வயதுக்குள்பட்ட அனைவருக்கும் இலவச, கட்டாயக் கல்வி அளிக்கப்பட வேண்டும். நாடு விடுதலைப் பெற்று இத்தனை ஆண்டுகள் ஆன பிறகும் எல்லா உறுதி மொழிகளும் எழுத்திலேயே இருக்கின்றன.
எங்கும் கல்வி பற்றியே பேச்சு, இப்போது கல்விக் கூடங்களைப் பற்றியும் பேச்சாகிவிட்டது. கல்வியே வணிகமயமாகி விட்டதால் அதன் புனிதமெல்லாம் போன இடம் தெரியவில்லை. அங்கிங்கெனாதபடி எங்கும் ஊடுருவியுள்ள ஊழல், அரசின் முன்னேற்றப் பணிகளையெல்லாம் முடக்கிப் போட்டுவிட்டது.
இந்திய நாட்டின் மக்கள் தொகையில் இளைஞர்கள் சரிபாதியாக இருப்பது நமக்கெல்லாம் பெருமைதான். ஆனால், இந்த இளைஞர்கள் நாட்டு நலனுக்குப் பயன்படுத்தப்படுகிறார்களா என்றால், இல்லையென்பதை வெட்கத்தோடும் வேதனையோடும் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்.
ஆரம்பக் கல்வியில் இடைநிற்றல் அதிகமாகிக்கொண்டிருக்கிறது. உயர்கல்வி இளைஞர்களுக்கு எட்டாக்கனியாகிவிட்டது. படித்த மாணவர்களின் கல்விக்கும் ஆற்றலுக்கும் ஏற்ற வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டிருக்கிறதா? வேலை தேடி வெளிநாட்டுக்குச் செல்லும் நிலைமை தடுக்கப்பட்டிருக்கிறதா? இல்லையே!
அமைதியாகச் செயல்பட வேண்டிய கல்விக் கூடங்கள் போராட்டக் களங்களாக மாறிக்கொண்டிருக்கின்றன. நாடு முழுவதும் படிக்கும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிகழ்வுகள் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோகித் வேமுலா தற்கொலையால் நாடெங்கும் போராட்டங்கள் வெடித்துள்ளன. தமிழ்நாடும் இதற்கு விதிவிலக்கல்ல.
கல்விக்கு எல்லையே இல்லை என்று கூறுவார்கள். கல்வி வணிகத்துக்கும் எல்லையில்லாமல் போய்விட்டது. அதனைக் கட்டுப்படுத்த முடியாமல் அரசும் திணறுகிறது. பெற்றோரும் பிள்ளைகளும் அலறுகிறார்கள். இந்த அலறல் யார் காதிலும் விழுந்ததாகத் தெரியவில்லையே!
விழுப்புரம் மாவட்டத்தில் எஸ்.வி.எஸ். யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வந்தது. இந்தக் கல்லூரியில் பயின்று வந்த 3 மாணவிகள் அங்குள்ள கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டனர்.
தமிழ்நாடு முழுவதும் இந்தத் தற்கொலை நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கல்லூரி நிர்வாகி உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுபற்றி அக்கல்லூரி மாணவ-மாணவிகளும் அவர்களின் பெற்றோர்களும் மாணவர் இயக்கங்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் தமிழக அரசு இறந்த மாணவிகளின் குடும்பங்களுக்குத் தலா ஒரு லட்சம் ரூபாய் முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து வழங்க ஆணையிட்டுள்ளது. அத்துடன் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது.
எஸ்.வி.எஸ். யோகா கல்வி மற்றும் சமுதாய சேவை அறக்கட்டளை யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் என்ற பெயரில் கல்லூரி தொடங்கவும் ஆண்டுதோறும் 50 மாணவர்களைச் சேர்க்கவும் 2008 ஏப்ரல் 3 அன்று அப்போதைய அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகம் 2009 மே 26 அன்று இக்கல்லூரிக்கு 2008-2009 ஆண்டுக்கான தாற்காலிக அனுமதி வழங்கியுள்ளது. இதனைத்தொடர்ந்து 2009 - 2010 ஆண்டு முதல் தொடர் தாற்காலிக அனுமதி 2014-2015 ஆண்டுவரை வழங்கி வந்துள்ளது.
இதே அறக்கட்டளைக்கு 50 மாணவர்களுடன் ஒரு ஹோமியோ பட்டப்படிப்பு கல்லூரி தொடங்குவதற்கும் முதற்கட்டமாக 2011-ஆம் ஆண்டு அப்போதைய அரசால் தடையில்லாச் சான்று வழங்கப்பட்டது. ஆனால், இந்தக் கல்லூரியின் விண்ணப்பத்தை மத்திய அரசு நிராகரித்தது.
என்றாலும், அந்த அறக்கட்டளை உயர்நீதிமன்றம் சென்று தொடர்ந்த வழக்குகளால் 2015-ஆம் ஆண்டு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
உயர்நீதிமன்ற ஆணைகளின்படி 2014-15 மற்றும் 2015-16 ஆண்டுகளுக்கு மாணவர்கள் சேர்க்கைக்கு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகம் அனுமதி வழங்கியுள்ளது.
ஆனால், இந்திய மருத்துவக் கழகம் இந்தக் கல்லூரிக்கு எந்த அங்கீகாரமும் வழங்கவில்லை என்று மருத்துவக் கழகத் தலைவர் டாக்டர் வனிதா முரளிகுமார் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்திய மருத்துவக் கழகம் இந்தியாவில் சித்தா, ஆயுர்வேதா, யுனானி மருத்துவப் படிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கி வருகிறது. இந்திய மருத்துவக் கழக அங்கீகாரம் பெற்று 350 ஆயுர்வேதக் கல்லூரிகளும், 10 சித்தா கல்லூரிகளும், 43 யுனானி கல்லூரிகளும் இயங்கி வருகின்றன.
தமிழகத்தில் அரசு சித்த மருத்துவக் கல்லூரிகள் உள்பட 9 கல்லூரிகள் இயங்கி வருகின்றன. மாணவிகள் இறந்த சம்பவத்தில் இந்திய மருத்துவக் கழகம் அந்தக் கல்லூரிக்கு அங்கீகாரம் அளித்ததாகத் தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகவும், யோகா இயற்கை மருத்துவக் கல்லூரிகளுக்கு மருத்துவக் கழகம் அங்கீகாரம் அளிப்பதில்லை என்றும் அதன் தலைவர் விளக்கம் அளித்துள்ளார்.
யோகா மற்றும் இயற்கை மருத்துவத்திற்காக கவுன்சில் இதுவரை தொடங்கப்படவில்லை என்றும், இதற்காக டாஸ்போஸ் என்ற அமைப்பை ஏற்படுத்தி டாக்டர் எச்.ஆர். நாகேந்திரா தலைமையில் குழு அமைத்து ஆய்வு செய்து அறிக்கை அளித்துள்ளதாகவும் தெரிகிறது.
இந்தியாவில் 18 யோகா இயற்கை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இதில் 2 ஆயிரம் பேர் யோகா இயற்கை மருத்துவர்களாக இருக்கின்றனர். இதனை ஒழுங்குபடுத்த யோகா மருத்துவக் கல்லூரிகளுக்குத் தனியாக கவுன்சில் அமைப்பது அல்லது மத்திய வாரியம் உருவாக்குவது எனக் கடந்த ஆண்டு செப்டம்பரில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் இதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட வாய்ப்புள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியை அடுத்த பங்காரம் கிராமத்தில்தான் இந்தக் கல்லூரி செயல்பட்டு வந்துள்ளது. இந்த மருத்துவக் கல்லூரிக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகள் இல்லை என்பது இப்போதுதான் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. இதனை உறுதி செய்யாமல் அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.
மருத்துவக் கல்லூரியில் சேர பல லட்சங்கள் செலுத்தி, பல கனவுகளோடு போன மாணவ - மாணவிகள் கொத்தடிமைகள் போல நடத்தப்பட்டுள்ளனர். படிப்பதைத் தவிர மற்ற அனைத்து வேலைகளும் செய்ததாக அவர்கள் கண்ணீரோடு கூறியுள்ளனர். எந்த அடிப்படை வசதியும் இல்லை என்பதை இதன்மூலம் அறியலாம்.
பலமுறை போராடியும், தோல்வியினால் விரக்தியடைந்து போனார்கள்.
ஒரு முறை மாணவர்கள் நஞ்சினைக் குடித்தும், மருத்துவமனையில் சேர்த்துக் காப்பாற்றப்பட்டிருக்கின்றனர். அப்போதும்கூட மாவட்ட நிர்வாகம் மருத்துவக் கல்லூரிக்குச் சாதகமாக நடந்து கொண்டதே தவிர, மாணவ - மாணவியர் பிரச்னைக்குத் தீர்வு காண முயலவில்லை என்பதே உச்சக்கட்ட கொடுமையாகும்.
இந்த மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த 3 மாணவிகள் கல்லூரி அருகில் உள்ள விவசாயக் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டனர் என்று கூறப்பட்டது. ஆனால், மாணவிகள் 3 பேரும் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும், அவர்களைக் கொலை செய்து கிணற்றில் வீசி விட்டதாகவும் அவர்களின் பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர்.
இத்தனைக்கும் பிறகு ஓர் ஆறுதலான செய்தி: அங்கு பயின்று வரும் மாணவர்களின் நலன் கருதியும், அவர்களின் கல்வி எவ்விதத்திலும் பாதிக்கக் கூடாது என்ற நோக்கிலும் அவர்களை அரசுக் கல்லூரிக்கு மாற்றம் செய்திட தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
8 ஆண்டுகளாகப் போராடிக் கொண்டிருக்கும் இந்த மருத்துவ மாணவர்களுக்கு இப்போதுதான் வழி பிறந்திருக்கிறது. மூன்று மாணவிகளின் மரணத்துக்குப் பிறகுதான் ஒரு முடிவு கிடைக்கும் என்றால் இந்த நாட்டை யார் காப்பாற்றுவது?
லட்சம் லட்சமாகப் பணத்தைக் கொட்டிக் கொடுத்துவிட்டு பாடம் கற்றுக் கொண்டவர்கள் மாணவர்கள் அல்ல, அவர்களைப் பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்கிய பெற்றோர்கள். இது தேவைதானா? பணத்தைச் சேர்ப்பதற்கு எத்தனையோ வழிகள் இருக்கும்போது கல்வியைத்தானா தேர்வு செய்ய வேண்டும்?
இழந்த பணத்தை எடுத்துக் கொண்டு விடலாம், இழந்த உயிர்களை மீட்டுத்தர முடியுமா?
கல்விச் சாலை ஒன்று திறப்பவன் சிறைச்சாலை ஒன்றை மூடுகிறான் என்றார் அறிஞர் விக்டர் ஹியூகோ. இங்கே கல்விச்சாலைகளே சிறைச்சாலைகளாக இருக்கின்றன. கல்விக் கூடங்கள் கலைக்கூடங்களாக இருக்க வேண்டும், கொலைக் கூடங்களாக மாறக் கூடாது.
படித்த மாணவர்களின் கல்விக்கும் ஆற்றலுக்கும் ஏற்ற வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டிருக்கிறதா? வேலை தேடி வெளிநாட்டுக்குச் செல்லும் நிலைமை தடுக்கப்பட்டிருக்கிறதா? இல்லையே! அமைதியாக செயல்பட வேண்டிய கல்விக் கூடங்கள் போராட்டக் களங்களாக மாறிக்கொண்டிருக்கின்றன.
No comments:
Post a Comment