பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கல்லூரிக்குள் அடியெடுத்துவைக்கக் காத்திருக்கும் பல இளைஞர்களின் மனதில் ‘‘எப்போதும் கஷ்டப்பட்டுத்தான் படிக்க வேண்டுமா, நமது விருப்பத்திற்கேற்றதைப் படிக்க முடியாதா?’’ என்ற கேள்வி ஓடிக்கொண்டிருக்கும். மருத்துவம், பொறியியல், வணிகவியல், வழக்கமான அறிவியல் படிப்புகள் தவிர எத்தனையோ புதிய படிப்புகள் வந்திருப்பது நமக்கெல்லாம் தெரியும். இப்போது நாம் பேசவிருப்பது அவற்றைப் பற்றி அல்ல. நாம் இதுவரை கற்பனை செய்தேபார்க்காத வித்தியாசமான படிப்புகளும், அதற்கான சிறப்பான வேலை வாய்ப்புகளும் ஏராளமாக இன்று நம் முன் உள்ளன.
“இது வெறும் பொழுதுபோக்கு, வேலைக்கு ஆகாது” எனக் காலங்காலமாக சொல்லப்பட்ட பல துறைகளைப் பற்றி முறையாகக் கற்பிக்கப் பல கல்வி நிறுவனங்கள் முன்வந்திருக்கின்றன. கல்வித் திட்டம் என்று ஒன்று இருந்தால் அதற்கான வேலைவாய்ப்புகளும் நிச்சயமாக இருக்கும் அல்லவா? ஆக, இதுவரை எல்லாரும் சென்ற பாதையில்தான் நாமும் பயணிக்க வேண்டும் என்ற கட்டாயம் இனி இல்லை. நம் படைப்பாற்றல், தனித்திறன், விருப்பம், பொழுதுபோக்குக்கு ஏற்ற படிப்புகளும் வேலை வாய்ப்புகளும் நவீன உலகில் அணி வகுத்து நிற்கின்றன. கற்றல் என்பதற்கே புதிய விளக்கம் கொடுக்கும் அளவுக்கு நம்மை வியக்க வைக்கும் படிப்புகள் உள்ளன. அதில் சிலவற்றைப் பார்க்கலாம்!
நல்லா ஊர் சுத்தலாம், நல்லா சம்பாதிக்கலாம்
“எப்ப பார்த்தாலும் ஊர் சுத்திக்கிட்டே இருக்கியே…எப்படித்தான் உருப்படப் போறியோ?” எனப் பெற்றோரைக் கவலைப்படச் செய்யும் பயணங்களில் விருப்பமுள்ள பிள்ளையாக இருந்தால், நீங்கள் படிக்க வேண்டியது ‘மவுண்டனேரிங்’ (Mountaineering) கோர்ஸ். மலையேற்றம், பாறை ஏற்றம், நெடுந்தூரப் பயணங்கள் ஆகியவை இதில் பாடமாகவே கற்பிக்கப்படுகிறது. ஆசியாவிலேயே மலையேற்றப் படிப்புக்காகப் புகழ் பெற்ற கல்வி நிறுவனம் உத்தரகாண்ட் மாநிலத்தில் உத்தரகாசியில் உள்ள நேரு இன்ஸ்டிடியூட் ஆஃப் மவுண்டனேரிங் ஆகும். இது போல இன்னும் பல நிறுவனங்கள் இளைஞர்களிடமுள்ள ஊர் சுற்றும் திறனை மெருகேற்றி அவர்களை உலகம் சுற்றும் வாலிபராக மாற்றக் காத்திருக்கின்றன.
சைபர் படைத் தளபதி
இணையத்தைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டுக் கணினியில் புகுந்து விளையாடும் உங்களுக்கு வழக்கமான கணிப்பொறி படிப்புகள் அல்லாமல் சாகசம் செய்வதற்கு ஆசையா?
இன்று தொழில்நுட்ப உலகை மிரட்டும் ஒரு சொல் ‘ஹேக்கிங்’. நமது கணினிக்குள்ளும், இணையத்தளங்களுக்குள்ளும், அன்னியர்கள் டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் புகுந்து தகவல்களைப் பறித்து, பெரும் ராணுவங்களின், வல்லரசு நாடுகளின் இணையத்தளங்களையே ஸ்தம்பிக்கச் செய்வதுதான் ஹாக்கிங். இது தமிழில் ‘கொந்துதல்' என்றழைக்கப்படுகிறது. இந்த ஹாக்கிங்கை திறம்பட எதிர்கொள்ளக் கற்றுத்தருவதுதான் ‘எத்திக்கல் ஹேக்கிங்’(ethical hacking).
கொல்கத்தாவில் உள்ள இந்தியன் ஸ்கூல் ஆஃப் எத்திக்கல் ஹேக்கிங் நிறுவனமானது தகவல் தொழில்நுட்பம் தொடர்பான அத்தனை பாதுகாப்புச் சிக்கல்களையும் கையாள்வதன் உத்திகளைச் சொல்லித்தருகிறது. புனேவில் இருக்கும் அரிஸோனா இன்ஃபோடெக்கில் 15 நாட்கள் பயிற்சிப்படிப்பாகவும் இது கற்றுத் தரப்படுகிறது. இதைப் படிப்பவர்கள், சைபர் உலகப் பாதுகாப்பு படை தளபதிபோல வலம் வரலாம். உலகம் முழுவதும் ‘எத்திகல் ஹாக்கர்களுக்கு' வேலைவாய்ப்புகளும் மரியாதையும் உண்டு.
சாப்பாட்டு ராமனின் ராஜ்ஜியம்
குழம்பின் வாசத்தை நுகர்ந்தே உப்பு அதிகமா இல்லை குறைவா எனச் சொல்லும் அளவுக்கு நீங்கள் சாப்பாட்டுப் பிரியரா? கேட்டரிங், ஹோட்டல் மேனேஜ்மெண்ட் தவிரவும் வித்தியாசமான படிப்புகள் உங்கள் கைமணத்தை நிரூபிக்கக் காத்திருக்கின்றன.
உணவுப் பண்டங்களில் புதிய வாசனைகளை ஆராய்ந்து அறிமுகப்படுத்தும் ‘ஃபுட் ஃபிளேவரிஸ்ட்’(food flavourist) பட்டப்படிப்பை மும்பையில் உள்ள தி இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹாஸ்பிடாலிட்டி அண்ட் மேனேஜ்மெண்ட் அளிக்கிறது. இதில் ரசாயன மணங்கள், தாவர எண்ணை வகைகள், மூலிகைத் திரவியம் என வாசனைத் தொடர்பான அத்தனை அம்சங்களும் கற்றுத் தரப்படுகின்றது.
சாப்பாட்டு ராமன் என்று பெயர் பெற்றவராக இருந்தால், ‘ஃபுட் டெக்னாலஜி’ படிப்பை பஞ்சாப்பில் உள்ள லவ்லி ப்ரொபஷனல் பல்கலைக்கழகம், மைசூரில் இருக்கும் சென்ட்ரல் ஃபுட் டெக்னலாஜிக்கல் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட்டில் படிக்கலாம். இங்கு உணவை வேதியியல், இயற்பியல், நுண் உயிரியல் அடிப்படையில் தயாரித்து, பதப்படுத்தி, சேமித்து, விற்பனைப் பண்டமாக மாற்றுவதுவரை அனைத்துத் தொழில்நுட்பங்களும் சொல்லித்தரப்படுகின்றன. உணவுத் தொழில்நுட்பத்தில் (food technology) முதுகலை பட்டம் பெற்றால் உணவுப் பதப்படுத்தும் தொழிற்சாலைகளில், உணவு ஆய்வுக்கூடங்களில், உணவகங்களில், குளிர்பானத் தொழிற்சாலைகளில், உணவு தரநிர்ணயம் செய்யும் நிறுவனங்களில், நீர் சுத்திகரிப்புத் தொழிற்சாலைகளில் வேலை வாய்ப்புகள் உள்ளன.
மனம் எதை விரும்புகிறதோ அதையே நமது பணியாகவும் வருவாயாகவும் மாற்றலாம். அதற்குக் கொஞ்சம் தேடலும், படைப்பாற்றலும் தான் தேவை. நம்மைச் சுற்றி வித்தியாசமான படிப்புகளும் அதற்கேற்ற வேலை வாய்ப்புகளும் இருக்கவே செய்கின்றன. அவற்றைக் கண்டறிய நாமும் கொஞ்சம் சுற்றத் தயாராக இருக்க வேண்டும் அவ்வளவுதான். தொடர்ந்து தேடலாம்!
No comments:
Post a Comment