சோம.வீரப்பன்
என் உறவினரின் திருமண ஏற்பாடுகளுக்காக குடும்பத்துடன் காரைக்குடி சென்று இருந்தோம். நல்ல செட்டிநாட்டுச் சாப்பாட்டுக்கு ஆசைப்பட்டு, பலரும் சிபாரிசு செய்த கருப்பாயி அக்காவை சமையலுக்கு அமர்த்தியிருந்தார்கள். அவர்களது கருணைக் கிழங்கு கெட்டிக்குழம்பு, வாழைத்தண்டு கூட்டு , வெள்ளைப் பணியாரம்,ரெங்கோன் புட்டு எல்லாம் மிகப்பிரசித்தம். ஆனால் கல்யாண வேலைக்கு உதவிக்கு வந்த அவர்களது உறவினர் ஆச்சி ஒருவரும் அருமையாக சமைக்கக் கூடியவர் என்பதால் சமையல் மேற்பார்வை அவரிடம் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் ஆச்சியோ இன்னது சமைக்க வேண்டும் என்று சொல்வதுடன் நிற்காமல், கருப்பாயி அக்காள் பின்னாடியே நின்று கொண்டு இப்படி நறுக்கனும் அப்படித் தாளிக்கனும் என்றெல்லாம் நச்சரித்ததால் என்ன நடந்தது என்பது நான் சொல்லாமலேயே உங்களுக்குத் தெரியும்!
விளம்பர உலகின் தந்தையான டேவிட் ஒகில்வியும் கூட 'உங்களைவிடக் கெட்டிக்காரர்களை வேலைக்கு எடுங்கள்; பின்னர் அவர்களை வேலை செய்ய விட்டுவிடுங்கள் ' என்று சொல்லி இருக்கிறாரே!
எனது மற்றொரு நண்பர் மிகவும் அலசிப் பார்த்து, திறமையும் 20 ஆண்டுகள் விபத்தேயின்றி கார் ஓட்டிய அனுபவமும் கொண்ட ஓட்டுநர் ஒருவரை பணியமர்த்தினார்.ஆனால் நம் நண்பர் காரில் பயணிக்கும் பொழுது, பின் சீட்டில் அமர்ந்து கொள்வார். `மெதுவாய் ஓட்டு,இது அபாயகரமான வளைவு முந்தாதே, சைக்கிள்காரன் எதிரில் வருகிறான்' என்று விடாமல் ஏதாவது சொல்லிக்கொண்டே வருவார். பாவம் அந்த ஓட்டுநர்.ஒரு நாள் நண்பர் செய்த ஆர்ப்பாட்டத்தில் குழம்பி,பதறி வண்டியைப் பள்ளத்தில் இறக்கி விட்டார்!
வண்டி வேகமாய்ச் செல்லும் சமயம் மனிதன் சாலையைப் பார்ப்பாரா, வாகனங்களைக் கவனிப்பாரா அல்லது முதலாளி சொல்வதைக் கேட்பாரா?
அமெரிக்க ராணுவ தளபதி ஜார்ஜ் பாட்டன் கூறியது சிந்திக்கத்தக்கது.
' பணியாளர்கள் என்ன செய்ய வேண்டுமென்பதைச் சொல்லுங்கள்; எப்படிச் செய்ய வேண்டுமென்பதை அல்ல.அவர்களின் வெற்றிகள் உங்களை வியப்பிலாழ்த்தும்!'
அலுவலகங்களில் பார்த்திருப்பீர்கள்.சில மேலதிகாரிகள் ஒருவரிடம் பொறுப்பைக் கொடுத்த பின்னரும் அவரை வேலை செய்யவிடாமல் சும்மா நைநை என்று ஏதாவது யோசனைகள், விமர்சனங்கள், சொல்லிக்கொண்டே இருப்பார்கள். வேறு சில மகானுபாவன்களோ தினமும் மாலையில் என்னிடம் வந்து என்னென்ன செய்தாய் என்பதைச் சொல்லிவிடு' என்பார்கள். ஐயா, ஒருவரிடம் ஒரு வேலையைக் கொடுத்தால் முதலில் அவரை அந்த வேலையைச் செய்யவிட வேண்டுமில்லையா? பாதி வேலை நடந்துகொண்டிருக்கும் பொழுதே தலையிட்டால் எப்படி? இதற்குக் காரணம் அவரது திறமையிலோ நாணயத்திலோ சந்தேகம் வருவது தானே? நம்பிக் கொடுத்தபின் நம்பிக்கை இழக்கலாமா? இதனால் வேலை செய்பவருக்கு மனத்தாங்கல். வேலையைக் கொடுத்தவருக்கும் நிம்மதியில்லை. வேலையும் ஒழுங்காய் முடியாது.
கொடுத்த பணி சரியாய் நடந்ததா என ஆய்வு செய்ய (monitoring) வேண்டியது அவசியமே.ஆனால் எப்பொழுது? வேலைக்கு இடைஞ்சலாகவா?
ஒருவரை ஆராயாமல் பணியமர்த்துவதும், தேர்ந்தெடுத்து பணியமர்த்தியவர் மேல் சந்தேகம் கொள்வதும் தீராத தொல்லையைத் தரும் என்கிறார் வள்ளுவர்.
தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும் (குறள் 510)
சோம.வீரப்பன் somaiah.veerappan@gmail.com
No comments:
Post a Comment