Sunday, April 24, 2016

தேர்தல் பாதை: இது திருடர் பாதை அல்ல! ...ந.வினோத் குமார்


உலகப் புத்தக நாள்: ஏப்ரல் 23

குழந்தைக்கு வாயில்

சொட்டு மருந்து!

வாக்காளருக்குக் கையில்

சொட்டு மருந்து!

இரண்டுமே போலியோ?

என்ற ஒரு புதுக்கவிதை உண்டு. இந்தியா போன்ற ஒரு ஜனநாயகத்தின் அச்சாணி தேர்தல்தான். அதை வைத்துக்கொண்டு வாரிச் சுருட்டுபவரும் உண்டு. அதில் போட்டியிட்டு வாழ்க்கையைத் தொலைத்தவர்களும் உண்டு. வெற்றிபெற்று பலரை வாழ வைத்தவர்களும் உண்டு.

இந்தத் தேர்தல் ஜனநாயகத்தால்தான் இந்தியர்களின் சராசரி வாழ்நாள் 31.4 ஆண்டுகள் என்பதிலிருந்து 67 ஆண்டுகளாக உயர்ந்தது. மக்களின் கல்வி அறிவு 16 சதவீதத்திலிருந்து 75 சதவீதமாக உயர்ந்தது. சுமார் 94 சதவீதப் பெண் குழந்தைகள் பள்ளிக் கல்வியையாவது பெற முடிந்தது.

அப்படிப்பட்ட தேர்தல் இதோ அடுத்த மாதம் 16-ம் தேதி நமக்கு வருகிறது. ஜனநாயகத் திருவிழா என்று கொண்டாடப்படுகிற இந்தத் தேர்தலுக்கு இந்தியாவில் வளமான வரலாறு உண்டு. பண்டைய இந்தியா முதல் தற்போதைய ஃபேஸ்புக் கால இந்தியா வரை, தேர்தலின் தோற்றம், வளர்ச்சி, தேர்தல் ஆணையம் உருவான விதம், அது சந்தித்த சவால்கள், செய்த சாதனைகள், எதிர்பார்க்கும் மாற்றங்கள் உள்ளிட்டவற்றைப் பற்றிப் பேசுகிறது ‘அன் அன்டாக்குமென்டெட் வொண்டர்: தி மேக்கிங் ஆஃப் தி கிரேட் இந்தியன் எலக்ஷன்' எனும் புத்தகம்.

முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷிதான் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர். கடந்த 2014-ம் ஆண்டு ரூபா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

தேர்தல் ஆணையராகவும், தலைமைத் தேர்தல் ஆணையராகவும் 2006-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டுவரை இவர் பணியாற்றிய காலம் மிகவும் குறிப்பிடத்தகுந்த ஒன்று. அரசியல் கட்சிகள் வாக்குக்குப் பணம் கொடுக்கும் நடவடிக்கைகளுக்குக் கடிவாளம் போட்டது, கட்சிகளின் தேர்தல் செலவுகளைக் கண்காணிக்கத் தனிப்பிரிவு அமைத்தது, இதர நாடுகளுக்கு தேர்தல் குறித்த பயிற்சிகளை அளிக்க ‘ஜனநாயகம் மற்றும் தேர்தல் மேலாண்மைக்கான இந்திய சர்வதேசப் பயிற்சி நிலையம்' ஏற்படுத்தியது, ‘தேசிய வாக்காளர் தினம்' கடைப்பிடிக்கப்படும் வழக்கத்தை அறிமுகப்படுத்தியது என இவரின் சாதனைகள் பல. தன்னுடைய கறாரான நடவடிக்கைகளுக்காக அரசியல் கட்சிகள் மற்றும் ஊடகங்கள் ஆகியோரிடம் எதிர்ப்புகளைச் சம்பாதித்தவர்.

அப்படிப்பட்ட ஒருவர் இந்தியத் தேர்தல் வரலாறு குறித்து எழுதும்போது அது மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்ததாகிறது.

ஐரோப்பா, தெற்கு மற்றும் மத்திய அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களின் மொத்த மக்கள் தொகையைவிட இந்தியாவில் தேர்தலின்போது வாக்களிக்கும் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்கிறார்.

கெளடில்யரின் ‘அர்த்தசாஸ்திர'த்திலும், உத்திரமேரூர் கல்வெட்டுகளிலும் ‘குடவோலை' உள்ளிட்ட தேர்தல் முறைகள் பற்றிக் குறிப்புகள் உள்ளதைச் சுட்டிக்காட்டும் அவர், இந்தியா சுதந்திரம் அடைந்த அடுத்த சில ஆண்டுகளிலேயே பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டிருப்பதைக் கவனப்படுத்துகிறார்.

கல்வி அறிவில் முதன்மையாக இருக்கும் கேரளத்தில்கூட‌ 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் உள்ள‌ 140 தொகுதிகளில், 127 தொகுதிகளில் ஆண்களைவிடப் பெண்களின் வாக்குப்பதிவு அதிகமாக இருந்தது. எனினும், அங்கு 7 பெண்கள் மட்டுமே சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கின்றனர், என்று அவர் சொல்லும் செய்தியின் மூலம், அரசியலில் இன்னும் பெண்களின் பங்களிப்பு பெருமளவில் இல்லாததை அடிக்கோடிட்டுக் காட்டுகிறார்.

1951-52-ம் ஆண்டுகளில்தான் இந்தியாவில் முதல் பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. அன்று தொடங்கி இதுவரை 15 பொதுத்தேர்தல்கள், எண்ணற்ற சட்டமன்றத் தேர்தல்கள், இடைத் தேர்தல்கள் என அனைத்துத் தேர்தல்களிலும் கடைக்கோடியில் இருக்கும் வாக்குரிமை பெற்ற எந்த ஒரு மனிதரையும் உள்ளடக்கவே தேர்தல் ஆணையம் முயன்று வருகிறது. உதாரணமாக, கேரளத்தில் சரங்காட்டு தாசன் என்ற ஒருவருக்காக மட்டுமே 2004-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தனியாக ஒரு வாக்குச் சாவடி அமைத்து, மூன்று தேர்தல் அலுவலர்கள், இரண்டு போலீஸார் மற்றும் ஒரு ஓட்டுநர் என 6 பேர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

ஆனால் இவ்வளவு நடவடிக்கைகள் மேற்கொண்டும் இன்றுவரை நூறு சதவீத வாக்குப்பதிவு என்பது கனவாகவே இருந்து வருகிறது.

‘ஒரு ஓட்டுதானேப்பா. அதுக்காக இவ்வளவு கஷ்டமா?' என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. ஆனால், அந்த ஒரு ஓட்டு எப்படியெல்லாம் மாற்றங்களை நிகழ்த்துகிறது என்பதை கடந்த கால தேர்தல்களிலிருந்து எடுத்துக்காட்டுகிறார் ஆசிரியர்.

1998-ம் ஆண்டு வாஜ்பாய் தலைமையில் பாரதிய ஜனதா கட்சி மத்தியில் ஆட்சி அமைத்தது. பதவியில் அமர்ந்து 13 மாதங்களுக்குப் பிறகு பா.ஜ.க. கூட்டணியில் இருந்த அ.தி.மு.க., தன்னுடைய ஆதரவைத் திரும்பப் பெற்றுக்கொண்டது. இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டியிருந்தது. 1999-ம் ஆண்டு ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற்ற அந்த வாக்கெடுப்பில் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வாஜ்பாய் அரசு கவிழ்ந்தது. எதிர்க்கட்சியாலும் மாற்று அரசு அமைக்க முடியவில்லை. எனவே, அடுத்த சில மாதங்களில் மீண்டும் மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. ஒரு ஓட்டு மதிப்பு இப்போது புரிந்திருக்குமே?

1989-ம் ஆண்டுக்கு முன்பு வரை ‘அரசியல் கட்சிகள்' என்கிற பதமே எந்த ஒரு சட்டத்திலும் பயன்படுத்தப்படவில்லை. எல்லாம் இயக்கம், அமைப்பு என்பதாகத்தான் இருந்தது என்று குறிப்பிடுகிறார் ஆசிரியர். அப்படிப்பட்ட அரசியல் கட்சிகள், தேர்தல் ஆணையத்துக்கு ஏற்படுத்தும் நெருக்கடிகள், விகிதாச்சார அடிப்படையிலான தேர்தல் முறை, தேர்தலில் வெற்றி பெற்ற ஒருவரைப் பதவியிலிருந்து நீக்கும் உரிமை, ‘நோட்டா'வின் தேவை, ‘நோட்டா'வைத் தேர்வு செய்யும் வாக்காளரின் ரகசியத்தன்மையைக் காப்பதன் முக்கியத்துவம், ‘பெய்ட் நியூஸ்' மூலம் சீரழியும் அரசியல் மற்றும் ஊடகக் கலாசாரம் என தேர்தல் தொடர்பான அனைத்துப் பக்கங்களையும் ஆழமாக விவாதிக்கிறார் ஆசிரியர்.

இந்தப் புத்தகத்தைப் படித்து முடிக்கும்போது, தேர்தல் பாதை திருடர் பாதை அல்ல என்பது உங்களுக்குப் புரிய வரும்.

இந்தியாவில் ஒருவர் 18 வயது அடைந்துவிட்டவர் என்பதற்கான முதல் அத்தாட்சியே வாக்குரிமை பெறுவதுதான். ஆனால் இன்று அது ‘ஓட்டுப் போடுறதுன்னா என்னா? அது ஒண்ணுமில்லப்பா... ‘லைக்' பண்றது' என்கிற அளவில் சுருங்கிவிட்டது மிகவும் வேதனை தரக்கூடிய விஷயம்தான்.

‘ஒரு நாடு ஜனநாயக முறைக்குத் தகுதியில்லாமல் இருக்கலாம். ஆனால் ஜனநாயக முறை மூலம் தன்னைத் தகுதிப்படுத்திக் கொள்ளலாம்' என்கிறார் நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்திய சென். அவ்வாறு ஒரு நாடு தன்னைத் தகுதிப்படுத்திக் கொள்வதற்கான முதல் படிதான் தேர்தல்!

அந்தத் தேர்தலில் உங்கள் வாக்கைச் செலுத்தத் தயாரா நீங்கள்? உங்களின் ஒரு ஓட்டு, நூறு சதவீத வாக்குப்பதிவுக்கு உதவட்டுமே!

தேர்தல் வரலாறு: சில தகவல்கள்...

l சுதந்திரம் அடைந்து மூன்றே ஆண்டுகளில் அதாவது, 1950-ம் ஆண்டே பெண்களுக்கு வாக்குரிமையைத் தந்துவிட்டது இந்தியா. ஆனால் அமெரிக்கா தன் நாட்டுப் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க 144 ஆண்டுகள் (1920) எடுத்துக்கொண்டது. சுவிட்சர்லாந்தோ 1971-ம் ஆண்டில்தான்!

l ஆங்கிலேயர் ஆட்சி செய்தபோது பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்படவில்லை. 1919-ம் ஆண்டு சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. அப்போது பெண்களுக்கு வாக்குரிமை அளித்த முதல் மாகாணம் நமது சென்னை மாகாணம்!

l முதல் தேர்தல் 1951-ம் ஆண்டு அக்டோபர் 25-ம் தேதி இமாசலப் பிரதேசத்தில் தொடங்கி 1952-ம் ஆண்டு பிப்ரவரி 21-ம் தேதி உத்தரப் பிரதேசத்தில் முடிந்தது. சுமார் 68 நாட்களுக்கு இந்தத் தேர்தல் நடைபெற்றது.

l அரசியல் கட்சி சின்னங்கள் வரைய தேர்தல் ஆணையத்தால் கடைசி பணியாளராக நியமிக்கப்பட்டவர் எம்.எஸ்.சேத்தி. அவர் வரைந்த நூற்றுக்கணக்கான சின்னங்கள்தான் இன்று 'ஃப்ரீ சிம்பல்' பட்டியலில் வைக்கப்பட்டுள்ளன. கட்சிகளுக்கு இந்தப் பட்டியலில் இருந்துதான் சின்னங்கள் ஒதுக்கப்படுகின்றன.

l தேர்தல் தொடர்பான புகார்களைத் தெரிவிக்க 1950 எனும் 24 மணி நேரமும் செயல்படும் டோல் ஃப்ரீ எண்ணை தேர்தல் ஆணையம் வைத்துள்ளது. சரி. அது ஏன் 1950? அந்த ஆண்டில்தான் தேர்தல் ஆணையம் உருவாக்கப்பட்டது.

l வாக்குச்சாவடியில் குடியரசுத் தலைவர் மற்றும் மகாத்மா காந்தி ஆகியோரின் படங்கள் தவிர வேறு யாருடைய படங்களும் இருக்கக் கூடாது என்பது விதி.

l ஒளிப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலைப் பயன்படுத்திய முதல் மாநிலம் கேரளம்.

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...