Monday, April 25, 2016

தமிழகத்தின் 234 சட்டசபை தொகுதிகளிலும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான தேர்தல் பயிற்சி முகாம்


சென்னை,
தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளிலும், வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதற்கட்ட தேர்தல் பயிற்சி முகாம் நேற்று நடந்தது. இதில் 3¼ லட்சம் தேர்தல் அலுவலர்கள் பங்கேற்றனர்.

சட்டசபை தேர்தல்
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (மே மாதம்) 16–ந்தேதி நடைபெற உள்ளது. தேர்தலையொட்டி, மாநிலம் முழுவதும் 65 ஆயிரத்து 616 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.

தலைநகர் சென்னையில் 3 ஆயிரத்து 699 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. 7 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குப் பதிவு எந்திரங்களும், 4 ஆயிரத்து 850 கட்டுப்பாட்டு கருவிகளும் தயார்நிலையில் உள்ளன. மேலும், 6 ஆயிரம் வாக்குப்பதிவு எந்திரங்கள் கூடுதலாகவே பயன்படுத்தப்பட உள்ளன.

3,29,532 பேர் பங்கேற்பு

இந்தநிலையில் வாக்குச்சாவடியில் பணிபுரிய உள்ள அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி முகாம் 234 தொகுதிகளிலும் நேற்று நடந்தது. வாக்குச்சாவடியில் உள்ள பணிகள், மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை பயன்படுத்துவது எப்படி? உள்ளிட்ட எல்லாவிதமான பணிகளும் அந்தந்த தலைமை வாக்குச்சாவடி அலுவலர் மூலம் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

மேலும், பணிகளின் போது ஏற்படும் பிரச்சினைகள், வாக்குப்பதிவு எந்திர கோளாறு உள்ளிட்டவைகளின் போது, எப்படி நடந்து கொள்ள வேண்டும்? என்பது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. தேர்தல் பணிகள் குறித்த கையேடுகளும் வழங்கப்பட்டன. தமிழகம் முழுவதும் நடந்த இந்த முதற்கட்ட பயிற்சி முகாமில் 3 லட்சத்து 29 ஆயிரத்து 532 தேர்தல் அலுவலர்கள் கலந்து கொண்டு உள்ளனர்.

தேர்தல் அதிகாரி ஆய்வு
சென்னை வில்லிவாக்கம் தொகுதிக்குட்பட்ட ஐ.சி.எப். மேல்நிலைப்பள்ளியில் நடந்த தேர்தல் பயிற்சி முகாமை, மாவட்ட தேர்தல் அதிகாரியும், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனருமான டாக்டர் பி.சந்திரமோகன் நேற்று பார்வையிட்டார். அவருடன் கூடுதல் மாவட்ட தேர்தல் அதிகாரி ஆர்.கண்ணன் உள்ளிட்ட அதிகாரிகளும் பார்வையிட்டனர். பின்னர் தேர்தல் நடத்தும் அதிகாரி குமரவேல் பாண்டியன், உதவி ஆணையர் (தேர்தல்) பரந்தாமன், துணை அதிகாரி எஸ்.ஜெகன்நாதன் உள்ளிட்டோரிடம் பயிற்சி முகாம் தொடர்பாக ஆலோசனை வழங்கினார்.

பயிற்சி முகாமில் பங்கேற்ற வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு தேர்தல் பணிகள் குறித்து சந்திரமோகன் விளக்கி கூறினார். பின்னர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் குறித்தும், அதன் மூலம் மேற்கொள்ளும் பணிகள் குறித்தும் அவர் ஆலோசனை வழங்கினார். பயிற்சி முகாமில் அமைக்கப்பட்டிருந்த பதிவு கூடம், உதவி மையம், மருத்துவ உதவி மையம், உணவு வழங்கும் இடம் உள்ளிட்ட அனைத்து இடங்களையும் சந்திரமோகன் பார்வையிட்டார்.

உறுதிமொழி
இதன்பின்னர் டாக்டர் சந்திரமோகன் நிருபர்களிடம் கூறியதாவது:–

சென்னையில் உள்ள 16 சட்டசபை தொகுதிகளிலும் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. பயிற்சியின் போது இவர்களுக்கு நேர்மையாக பணிபுரிவோம் என்ற உறுதிமொழி எடுக்க அறிவுறுத்தப்படுகிறது. வாக்குச்சாவடி பணிகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. அடுத்தடுத்த பயிற்சி முகாம்களில் முழுமையாக பயிற்சி அளித்து முடிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அடுத்த கட்ட முகாம்கள்
மே 16–ந்தேதி அன்று வாக்குச்சாவடி அலுவலர்கள் பணியில் இருக்க வேண்டும் என்பதால், அவர்கள் தபால் ஓட்டு போட தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்திருக்கிறது. அதன்படி அவர்களுக்கு நேற்றைய பயிற்சி முகாமின்போது, ‘படிவம்–12’ வழங்கப்பட்டது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டதும், தபால் ஓட்டு அளிக்க ஏற்பாடு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான அடுத்த கட்ட தேர்தல் பயிற்சி முகாம் மே 7, 12 மற்றும் 15–ந் தேதிகளில் தமிழகம் முழுவதும் அந்தந்த சட்டசபை தொகுதிகளில் நடக்கிறது. 15–ந்தேதி மாலை பயிற்சி முடிந்ததுமே, தேர்தல் அலுவலர்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படுவார்கள். அவர்கள் இரவு முழுவதும் அங்கு தங்கி, மறுநாள் மே 16–ந்தேதி அதிகாலையே தேர்தலுக்கு தயாராகி விடுவார்கள்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024