By ஜா. ஜாக்சன் சிங்
பிகாரில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தியிருப்பதன் மூலம் தனது தேர்தல் வாக்குறுதியை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது மட்டுமன்றி, மக்கள் நலனில் அக்கறைக் கொண்ட ஒரு முதல்வராகவும் நிதீஷுக்கு நற்பெயர் கிடைத்திருக்கிறது.
இதற்காக ஊடகங்களும், பிகார் மட்டுமன்றி பல்வேறு மாநில அரசியல் தலைவர்களும் நிதீஷ் குமாரைப் பாராட்டி வருகின்றனர். ஆனால், இனி நிதீஷ்குமார் சந்திக்கப் போகும் சவால்களை அவர்கள் நிச்சயம் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
இப்போது பூரண மதுவிலக்கு அமலில் இருக்கும் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களைப் போன்றதில்லை பிகார். மது விற்பனையால் பெறப்படும் வருவாயை பிரதானமாக நம்பியிருக்கும் கருவூலத்தைக் கொண்ட மாநிலங்களில் பிகாரும் ஒன்று.
பிகாரில் கடந்த 2015-16-ஆம் நிதியாண்டில் மட்டும் அரசு மதுபான விற்பனையால் அரசுக்கு கிடைத்திருக்கும் வருவாய் ரூ.4,501 கோடி. அதாவது அரசின் மொத்த வருவாயான ரூ.31 ஆயிரம் கோடியில் இது 15.95 சதவீதம்.
பிகார் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி - சீருடைத் திட்டம், முதியோருக்கான ஓய்வூதியத் திட்டம், விவசாயிகள் நல உதவித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நிதீஷ்குமார் நிறைவேற்றுவதற்கு இந்த மதுபான விற்பனை மூலம் கிடைக்கும் வருவாயே அடிப்படை.
இப்போது, இந்தத் திட்டங்களை "குடிமகன்'களின் உதவியின்றி நிறைவேற்ற வேண்டிய நிர்பந்தம் நிதீஷ்குமாருக்கு ஏற்பட்டுள்ளது. பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டிருப்பதால் இந்த நலத்திட்டங்களை நிறைவேற்ற அரசுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.5,071 கோடி கூடுதலாக செலவாகும்.
மற்ற மாநிலங்களைப் போன்ற இயற்கை வளங்களும், தொழில் நிறுவனங்களும் பிகாரில் கிடையாது. விவசாயமும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லை.
எனவேதான், தமிழகம் உள்ளிட்ட நாட்டின் பெரும்பகுதிகளில் சொற்ப ஊதியங்களுக்கு பிகார் இளைஞர்கள் பணிபுரிகின்றனர். அதனால், உள்ளூர் மக்களிடமிருந்து மாநில அரசு பெறும் வரி வருவாய் மிகச் சொற்பமே.
ஒருவேளை, அரசு நிதியுதவியோ அல்லது இலவசத் திட்டங்களோ எதிர்காலத்தில் நிறுத்தப்படுமானால் அதுவே அடுத்த தேர்தலில் நிதீஷ்குமாரின் வீழ்ச்சிக்கு பிரதான காரணமாகிவிடும். வறுமையின் பிடியிலும், ஜாதிய பின்னல்களிலும் கட்டுண்டுள்ள பிகார் மக்கள், மது ஒழிப்பு என்ற ஒற்றைக் காரணத்துக்காக நிதீஷுக்கு வாக்களிப்பார்கள் எனக் கூற முடியாது.
இரண்டாவது பெரிய சவால், பூரண மது விலக்கை முறையாக அமல்படுத்துவதில்தான் இருக்கிறது. ஏனெனில், மது விலக்கு அமலில் இல்லாத, சொல்லப்போனால் மது விற்பனை அமோகமாக நடைபெற்று வரும் உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் ஆகிய மாநில எல்லைகளையொட்டி பிகாரின் 22 மாவட்டங்கள் அமைந்துள்ளன.
அதேபோல், கள்ள நோட்டுகள், சட்டவிரோத ஆயுதங்களின் ஊடுருவல்களை அதிகம் காணும் நேபாள நாட்டின் எல்லையையொட்டியும் பிகாரின் சில மாவட்டங்கள் உள்ளன.
இந்த எல்லைகளிலிருந்து மதுபானங்களும், கள்ளச்சாராயமும் பிகாருக்குள் நுழைவதைத் தடுப்பதும் மிகக் கடினம். எல்லைகளில் காவல் இருக்கும் போலீஸாருக்கு கையூட்டு கொடுத்துவிட்டு மதுபானங்களைக் கொண்டு வருவது என்பது அவ்வளவு கடினமான செயலாக இருக்காது.
அண்மையில், நேபாள எல்லையிலிருந்து பிகாருக்கு 2 ஆயிரம் லிட்டர் மதுபானங்கள் கொண்டுவரப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கதையாகும் பட்சத்தில், நிர்வாகத் திறனற்ற அரசு என்ற கெட்டப் பெயரையும், மக்களின் அவநம்பிக்கையையும் நிதீஷ்குமார் ஒருசேர சம்பாதிக்க வேண்டி வரும். எனவே, இந்த விஷயத்திலும் அரசு அதிக கவனம் செலுத்தியாக வேண்டும்.
மூன்றாவது சவால், பிகாரில் பல ஆண்டுகளாக மதுவுக்கு அடிமையாகி இருப்பவர்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்தி கொடுப்பதில் உள்ளது. சமீபத்திய கணக்கெடுப்பின்படி, பிகாரில் 85 லட்சம் பேர் மது அருந்துகின்றனர். இவர்களில் குறிப்பிட்ட சதவீதத்தினர் மதுவுக்கு அடிமையானவர்கள்.
அப்படியிருக்க, இந்த பூரண மதுவிலக்கால் இத்தகையோரின் உடல்நிலையும், மனநிலையும் மிகவும் மோசமடைய வாய்ப்புள்ளது. எனவே, அவர்களை குணப்படுத்துவதிலும் அரசு தீவிர கவனம் செலுத்தியாக வேண்டும். இதுவும் நிதீஷ்குமாருக்குப் பெரிய சவால்தான்.
பிகாரில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படுவது இது முதல்முறை அல்ல. 1977-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் கற்பூரி தாக்குரால் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால், மேற்கூறிய பிரச்னைகளை சமாளிக்க முடியாமல் இரண்டே ஆண்டுகளில் பூரண மதுவிலக்கு திரும்பப் பெறப்பட்டுவிட்டது.
இப்போது அங்கு அமல்படுத்தப்பட்டிருக்கும் மதுவிலக்கு நீடிப்பது என்பது முழுக்க முழுக்க முதல்வர் நிதீஷ்குமாரின் நிர்வாகத் திறனில்தான் உள்ளது. எது எப்படியோ, மதுவிலக்கு என்ற வார்த்தையையே மறந்தும் உச்சரிக்காத நம் நாட்டு அரசியல்வாதிகள் மத்தியில் மக்கள் நலத்தை முக்கியமாகக் கருதிய நிதீஷ்குமார் துணிச்சல்காரர்தான்.
No comments:
Post a Comment