Saturday, April 23, 2016

சமூக மாற்றத்திற்கான திறவுகோல்...DINAMANI

சமூக மாற்றத்திற்கான திறவுகோல்...DINAMANI

By விமலா அண்ணாதுரை

நீங்கள் யாரையாவது கடந்த ஆண்டு எத்தனை படம் பார்த்தீர்கள் என்று கேட்டால், அதற்கு பெரும்பான்மையானோர் பல எண்களைக் கூறுவார்கள். ஆனால், நீங்கள் கடந்த ஆண்டு எத்தனை புத்தகம் வாசித்தீர்கள் என்று கேட்டால் பலரிடம் பூஜியம் கூட பதிலாக வரும். நம்மிடையே வாசிக்கும் பழக்கம் குறைந்துக் கொண்டே வருகிறது.
எங்கே தங்க விரும்புகிறீர்கள் என்று லண்டன் தோழர்கள் கேட்டபோது எந்த விடுதி நூலகத்திற்கு அருகில் உள்ளது எனக் கேட்டாராம் அம்பேத்கர். விமானத்தில் போகாமல் பம்பாய்க்குக் காரில் மூன்று நாள் பயணம் செய்து மெனக் கெட்டது ஏன் என்று வினவியபோது பத்துப் புத்தகங்கள் படிக்க வேண்டி இருந்தது எனப் பதிலளித்தாராம் அறிஞர் அண்ணா.
இன்றைய நவீன அறிவியல் யுகத்தில், வலைத்தளமும், தொலைபேசி, கைபேசிகளும், மின்னஞ்சலும், முக்கியமாக தொலைக்காட்சியும், மக்களின் புத்தகம் படிக்கும் பழக்கத்தைக் களைந்துவிட்டன; புதைகுழிக்குள் தள்ளிக்கொண்டிருக்கின்றன எனலாம். ஆனால், புத்தகம்தான் நிரந்தரமாய் நிலைத்து நின்று சுவையும், இன்பமும், ரசனையும தரவல்லது. புத்தகம் படிக்காமல் ஒருவர் அறிவாளி ஆகிவிட முடியாது. மனிதனின் கண்டுபிடிப்புகளில் மிகச் சிறந்தது புத்தகமே என 20-ஆம் நூற்றாண்டின் சிறந்த விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறியுள்ளார்.
நான்கு மாதக் குழந்தையைக் கையில் வைத்துக்கொண்டு நாம் தொலைக்காட்சி முன் அமர்ந்தால் அந்த சிசு கண்ணிமைக்காமல் தொலைக்காட்சித் திரையைப் பார்க்க ஆரம்பிக்கின்றது. குழந்தையின் வாசிப்புத்திறன் குறைவதற்கு அடிக்கல் நாட்டு விழா இங்கேதான் ஆரம்பம்.
வாசிப்புத் திறன் இருக்கும் குழந்தைகள் பேச்சில் தெளிவும்,ஞாபக சக்தியும்,கருத்தாழமும்,சொல்வதைக் கற்பூரமாக பற்றிக்கொள்ளும் திறமையும், பொதுஅறிவும் நிரம்ப பெற்றவர்களாக அமைகின்றனர் என்பது ஆய்வாளர்களின் கூற்று.
வாசிப்புத்திறன் இல்லாத மாணவன் பள்ளியில் மட்டுமன்றி, சமூகத்திலும் சிறப்பு நிலை அடைவதென்பது மிகவும் கஷ்டமே.
யுனெஸ்கோ (UNESCO) என்ற உலக கல்வி நிறுவன அமைப்பு, மக்களிடையே புத்தகங்கள் படிக்கும் வழக்கத்தை ஊக்குவிக்கவும், அதற்காக அதிகப் புத்தகங்களை வெளியிடவும் முடிவு செய்தது. அதன் அடிப்படையில் 1995 முதல் ஏப்ரல் 23, உலக புத்தக தினம் என்று அறிவித்துள்ளது.
அது முதல் ஏப்ரல் 23 அன்று உலக புத்தக தினமாக உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. முதலில் புத்தக தினம் தொடங்கப்பட்டபோது, லண்டனில் பள்ளிக் குழந்தைகள் அனைவருக்கு ஒரு பவுண்ட் மதிப்புள்ள அடையாள வில்லை தந்தனர். அதனைக் கொண்டு அவர்கள் எங்கு வேண்டுமானாலும் குழந்தை புத்தகங்கள் வாங்கலாம்.
நாமும் கூட அதைப் போல குறைந்த விலையில் குழந்தைகளுக்காக புத்தகம் அச்சிட்டு,குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். உலகம் முழுவதும் படிக்கத் தெரிந்த மனிதர்கள் அனைவரும் இந்நாளில் புத்தகத்தையும், அவற்றை உருவாக்கியவர்களையும் மிகுந்த மரியாதை செய்கின்றனர்.
உலகில் பல இலக்கியவாதிகள் இந்த தினத்தில் பிறந்தும் மறைந்தும் இருக்கின்றனர். முக்கியமாக, உலகின் தலைசிறந்த சோக காவியமான லியர் அரசன், காதல் காவியம் ரோமியோ ஜுலியட், ஜுலியஸ் சீசர், ஒத்தெல்லோ, மாக்பெத் போன்றவைகளையும், மச் அடோ அபவுட் நத்திங் (Much Ado About Nothing) என்ற நகைச்சுவை நாடகத்தையும் எழுதியவர் தலைசிறந்த இலக்கியவாதியான வில்லியம் ஷேக்ஸ்பியர். இவர் பிறந்தது மட்டுமல்ல உலகைவிட்டு மறைந்ததும் ஏப்ரல் 23-இல் தான்.
காஞ்சி பல்கலைக்கழகம், நாலந்தா பல்கலைக்கழக நூலகங்களில் லட்சக்கணக்கான புத்தகங்கள் இருந்துள்ளன. அன்னிய நாட்டில் இருந்து வந்த மதவெறியர்கள் அந்த நூலகத்தைக் கொளுத்தியபோது தொடர்ந்து ஆறு மாதங்கள் எரிந்து கொண்டே இருந்தனவாம். அதில் பல்லாயிரம் ஆண்டுகளாக நமது முன்னோர்கள் நமக்குத் தந்த அனுபவ அறிவு அனைத்தும் அழிந்து போயின.
தமிழ்நாட்டு நூலக வரலாற்றில் பிதாமகன் இராமாமிர்தம் ரங்கநாதன். இவர்தான் சென்னை மாநிலத்தின் நூலகத் தந்தை என்று அழைக்கப்பட்டு, மரியாதை செய்யப்படுபவர். 1928 ஜனவரியில் சென்னை நூலக சங்கம் ரங்கநாதனால் உருவாக்கப்பட்டது.
1931-இல், அக்டோபர் 21-ஆம் நாள் புதன்கிழமை மாலை 5 மணிக்கு மன்னார்குடிக்கு அருகிலுள்ள மேலவாசலில், நடமாடும் நூலக வண்டிப் பயணம் தொடங்கப்பட்டது. அங்கு 72 கிராமங்களில், 275 பயணங்கள் இந்த வண்டி மூலம் நடத்தப்பட்டன. இதில் 3,782 புத்தகங்கள், 20,000 தடவைகளுக்கு மேல், மக்களுக்குக் கொடுத்து, திரும்பப் பெறப்பட்டன. ஆனால் இன்று அரசுப் பள்ளிகளில் கூட நூலகம் இல்லாத நிலைமை..
1990}களில் இந்தியா முழுவதும் அறிவொளி இயக்கம் என்ற மாபெரும் கல்வி இயக்கம் வந்தது. அதன் தொடர்பாக, கிராமத்து மக்களைப் படிக்க வைக்க, அறிவொளித் தொண்டர்கள் மாட்டு வண்டிகளிலும், சைக்கிளிலும் ஊர், ஊராக புத்தகம் எடுத்துச் சென்று விற்பனை செய்தனர். ஊர்க் கூட்டம் போட்டு புத்தகம் வாசிக்க கற்றுக் கொடுத்தனர்.
இப்போதும்கூட, அறிவியல் இயக்க உறுப்பினர்கள் உலகப் புத்தக வாரத்தின்போது, ஊர் ஊராகச் சைக்கிளில், தெருமுனைகளில் புத்தகம் எடுத்துச் சென்று புத்தக விற்பனை செய்கின்றனர். வாசிப்பின் நேசிப்பை உணர, ஊர்களில் வாசிப்பு முகாம்கள் ஏற்பாடு செய்து, புத்தக வாசிப்பும் செய்கின்றனர்


நூல் வாசிப்பு என்பது சிந்தனையைத் தூண்டும் யோகா போன்றது; ஒரு தியான நிலையைப் போன்றது; ஒரு உளவியல் தெரபியைப் போன்றது. வரலாறு படைக்க விரும்புவோர் முதலில் வரலாற்றை முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு தினமும் புத்தக வாசிப்புப் பழக்கமே முதல் தகுதி என்று ஐரோப்பாவை தனது போர் வியூகத்தினால் ஆண்ட மாவீரன் நெப்போலியன் சொல்லியிருக்கிறார்.
இவருக்கு 1,000 ஆண்டுகளுக்கு முன்பே நமது தமிழ் மன்னர் தஞ்சையை ஆண்ட இராஜராஜசோழன் இதே கருத்தைச் சொல்லியிருக்கிறார். இவர் தம் இளம் வயதில் சுமாராக ஆயிரம் ஓலைச்சுவடிகளை வாசித்தவர். அதில் ஒன்றுதான் நாம் விரும்பும் சித்தரை நேரில் சந்திக்கும் ஓலைச்சுவடி. இதில் சொல்லப்பட்டிருக்கும் வழிமுறையைப் பின்பற்றி ஏழே நாள்களில் தாம் விரும்பும் சித்தரைத் தரிசித்திருக்கிறார்.
மேலும் மாதம் ஒருமுறை அவரைச் சந்தித்து தமது ஆத்ம பலத்தை அதிகரித்திருக்கிறார். அதனால்தான் உலகின் பெரும்பகுதியை அவரால் ஆட்சி செய்ய முடிந்தது. ஓதுவது ஒழியேல், நூல் பல கல் என்ற ஒளவையின் ஆத்திசூடி தொடர்களும் பலவகை நூல்களைக் கற்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது.
இதே கருத்தை, கண்டது கற்கப் பண்டிதன் ஆவான் என்னும் பழமொழியும் உணர்த்துகிறது. அறிஞர் அண்ணா படிக்கத் தொடங்கிய ஒரு நூலைப் படித்து முடிக்க வேண்டும் என்பதற்காக அறுவை சிகிச்சையை ஒரு நாள் தள்ளி வைத்தார்கள். கன்னிமாரா நூலகத்தில் எந்த நூல் எங்கு உள்ளது என்பது நூலகரைக் காட்டிலும் அண்ணாவிற்கு நன்கு தெரியும்.


இன்று சந்திராயன் சந்திரனில் தேசியக் கொடியை நான்காவது நாடாக நட்டு இருக்கின்றது என்றால் அதற்குக் காரணம் அறிவியல் நூல் அறிவு. மாவீரன் பகத்சிங் தூக்குமேடைக்குச் செல்லும் வரை நூல்கள் படித்துக் கொண்டிருந்தார். அக்பருக்கு எழுதப் படிக்கத் தெரியாது. ஆனாலும் நூல்களைப் படிக்கச் சொல்லி, கேட்டு அறிந்து மிகப் பெரிய அறிஞராக உருவானார். நெப்போலியன் சிறையில் இருக்கும் போது நூல்களைத்தான் படித்தார். ஜவாஹர்லால் நேருவிற்கு நூல்கள் படிக்கும் பழக்கம் நிறைய இருந்தது. காந்தியடிகளுக்கு வாசிக்கும் பழக்கம் அதிகம் உண்டு. அதனால்தான் திருக்குறளின் காரணமாக தமிழையும் நேசித்தார். சத்திய சோதனை நூல் வடிக்கக் காரணமாக இருந்தது நூல் அறிவு.
தனிமையையும், கவலையையும் விரட்டுவது நூல்கள். வாசிப்பின் வாசங்களை குழந்தைகளுக்குத் திறந்து கொடுக்கத் தெரிந்த பெற்றோரே வரம் பெற்றோர். ஒரு நூலகத்தின் கதவு திறக்கப்படும்போது ஒரு சிறைச் சாலையின் கதவு மூடப்படுகிறது.
மூளையை உரசிப் பார்க்கும் புத்தகங்களை வாங்குங்கள். குழந்தைகள், நண்பர்கள், நெருங்கியவர்கள் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் இன்று புத்தகங்களைப் பரிசளியுங்கள். உலகப் புத்தக தினத்தன்று குழந்தைகளையும், பெரியவர்களையும் ஒன்றாகக் கூடி புத்தகம் படிக்க ஏற்பாடு செய்வோம்.
புத்தகம்தான் சமூக மாற்றத்திற்கான திறவுகோல்...



ஏப்ரல் 23 - உலக புத்தக தினம்.

கட்டுரையாளர்:
முனைவர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024