By ஆசிரியர்
DINAMANI
சுகாதார அமைச்சகத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழு மருத்துவப் படிப்பு, மருத்துவர்களின் செயல்பாடுகள் குறித்துக் கண்காணிக்கும் இந்திய மருத்துவக் கவுன்சிலை வன்மையாகக் கண்டித்திருக்கிறது. மருத்துவக் கல்வி முறை ஒட்டுமொத்தமாகத் தரம் தாழ்ந்து தகர்ந்திருப்பதற்கு இந்திய மருத்துவக் கவுன்சில்தான் முழுக் காரணம் என்று தனது 92-ஆவது அறிக்கையில் 31 பேர் கொண்ட நாடாளுமன்ற நிலைக்குழு குற்றம் சாட்டியிருக்கிறது.
காலமாற்றத்திற்கு ஒவ்வாத மருத்துவக் கவுன்சிலை வழிநடத்தும் 1956-ஆம் ஆண்டுச் சட்டத்தைத் தூக்கி எறிந்துவிட்டு, இன்றையச் சூழலுக்கு ஏற்ப புதிய சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்று பரிந்துரைத்திருக்கிறது நாடாளுமன்ற நிலைக்குழு. நீண்ட காலமாகவே விவரம் அறிந்தவர்களும், பாதிக்கப்பட்ட பொதுமக்களும் எழுப்பி வந்த கோரிக்கைகளை, இப்போது சுகாதாரம் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவும் வழிமொழிந்திருக்கிறது.
மருத்துவமும், மருத்துவக் கல்வியும் தொடர்பான பிரச்னைகளில் அரசு சுகாதாரத்திற்காக எத்தனை கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்கிறது என்பதல்ல முக்கியம். குறைவான எண்ணிக்கையில் மருத்துவர்களும், அவர்கள் எல்லா பகுதிகளிலும் பரவலாக இல்லாமல் ஒருசில இடங்களில் மட்டுமே அதிகமாகக் காணப்படுவதும், அவர்களது தரம் மெச்சும்படியாக இல்லாமல் இருப்பதும், எவ்வளவுதான் சுகாதாரத்திற்காக அரசு நிதி ஒதுக்கீடு செய்தாலும் அவையெல்லாம் விழலுக்கு இறைத்த நீராகப் போய்விடுவதும்தான் இப்போது நடக்கிறது.
நாடாளுமன்ற நிலைக்குழுவின் அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது. உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்திருக்கும் ஆயிரம் நோயாளிகளுக்கு ஒரு மருத்துவர் என்கிற குறைந்தபட்ச விகிதத்தை இந்தியாவில் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. அடுத்ததாக, மருத்துவக் கல்வியின் நிலைமை அதைவிட மோசம். இந்திய மக்கள்தொகையில் 31% மட்டுமே உள்ள ஆறு மாநிலங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் 58% இடங்களும், 46% மக்கள்தொகையை உள்ளடக்கிய எட்டு மாநிலங்களில் வெறும் 21% இடங்களும் இருப்பது, மருத்துவக் கல்வி சமச்சீராக வழங்கப்படவில்லை என்பதைத்தான் காட்டுகிறது.
மூன்றாவதாக, மருத்துவக் கல்வியின் தரம் நாளுக்கு நாள் குறைந்து வருவதாக நிலைக்குழு வெளிப்படையாகவே தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இப்போதைய மருத்துவக் கல்வி தரமான மருத்துவர்களை உருவாக்கவில்லை என்று நிலைமையை அப்பட்டமாக வெளிச்சம் போடுகிறது அந்த அறிக்கை.
கடைசியாக, நிலைக்குழு இன்னொரு உண்மையையும் எடுத்துரைக்கத் தயங்கவில்லை. நடைமுறைக்கு ஒவ்வாத விதிமுறைகளை வகுத்து, மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதில்தான் மருத்துவக் கவுன்சில் அக்கறை செலுத்துகிறதே தவிர, மருத்துவர்கள் தங்கள் தொழில் தர்மத்தைக் கடைபிடிக்கிறார்களா, மக்களுக்குத் தரமான சிகிச்சை, அடாவடிக் கட்டணம் இல்லாமல் வழங்கப்படுகிறதா என்பது குறித்து எல்லாம் கவனமே செலுத்துவதில்லை என்கிறது அந்த அறிக்கை.
மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்குவதில் மிகப்பெரிய முறைகேடு நடைபெறுகிறது என்பதை, "நடைமுறைக்கு ஒவ்வாத விதிமுறைகளை வகுத்து' என்று குறிப்பிடுவதன் மூலம் சொல்லாமல் சொல்லியிருக்கிறது அந்த அறிக்கை. மருத்துவக் கவுன்சில் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, மருத்துவக் கல்லூரி அனுமதி ஒரு பிரிவாகவும், மருத்துவர்கள் தொழில் தர்மத்தை மீறாமல் இருப்பதைக் கண்காணிப்பது இன்னொரு பிரிவாகவும் செயல்பட வேண்டும் என்பதுதான் நிலைக்குழுவின் கடைசிப் பரிந்துரை.
மருத்துவக் கல்லூரிகளின் தரம் இந்த அளவுக்குக் குறைந்ததற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பும் ஒரு காரணம். தனியார் மருத்துவக் கல்லூரியின் விவகாரங்களில் காவல் துறையோ, மத்தியப் புலனாய்வுத் துறையோ தலையிட முடியாது என்கிற அந்தத் தீர்ப்புக்குப் பிறகு, மருத்துவக் கல்லூரியின் தரத்தைக் கண்காணிக்கும் முழுப் பொறுப்பும் இந்திய மருத்துவக் கவுன்சிலுக்குத் தரப்பட்டுவிட்டது.
அதுமுதல் மருத்துவப் படிப்புக்கான இடங்கள் பொது ஏலத்தில் விடப்படாத குறை, அவ்வளவுதான். தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் நடத்தும் நுழைவுத் தேர்வுகள் வெறும் கண்துடைப்பு என்பதையும், நன்கொடையாகக் கோடிக்கணக்கில் பணம் பெறப்படுகிறது என்பதும் ஊரறிந்த உண்மை. உச்சநீதிமன்றம் 2013-இல் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., எம்.டி. படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்தது தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்குக் கொண்டாட்டமாகப் போனது. இப்போது அந்தத் தீர்ப்பு திருத்தப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் மொத்தம் 422 மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன. இவற்றில் 224 கல்லூரிகள் தனியாரால் நடத்தப்படுபவை. மொத்த எம்.பி.பி.எஸ். இடங்களில் 53% தனியார் மருத்துவக் கல்லூரிகள் வசம் உள்ளன. இவற்றில் பெரும்பாலான இடங்கள் விலை பேசி விற்கப்படுபவை என்பதுதான் நடப்பு நிலைமை. அரசு ஒதுக்கீட்டில் தரப்படும் இடங்களுக்கும், கல்விக் கட்டணம் இல்லாமல் இதர கட்டணங்களைத் தனியார் கல்லூரிகள் வசூலித்துவிடுகின்றன.
இது குறித்து கவலையே இல்லாமல் மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்குவதில் மட்டுமே குறியாக இருப்பதற்கு எதற்கு ஓர் இந்திய மருத்துவக் கவுன்சில் என்கிற கேள்வியை எழுப்பாமல் இருக்க முடியவில்லை. இந்தப் பிரச்னைக்கு நமக்குத் தெரிந்த ஒரே தீர்வு, மருத்துவப் படிப்பை அரசே ஏற்று நடத்துவதாகத்தான் இருக்கும். அதில் இந்த அளவுக்குத் தரம் குறையாது; முறைகேடுகள் இருக்காது.
நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரைப்படி மருத்துவக் கவுன்சில் சீரமைக்கப்பட்டு, மருத்துவப் படிப்பின் தரமும், அனைவருக்கும் நியாயமான கட்டணத்தில் மருத்துவமும் உறுதிப்படுத்தப்படுவது அவசியம்!
No comments:
Post a Comment