Thursday, April 14, 2016

அனுமதிக்கக் கூடாது!

அனுமதிக்கக் கூடாது!
By ஆசிரியர்

DINAMANI
மத்திய அரசின் சுகாதார அமைச்சகம் 344 கூட்டு மருந்து, மாத்திரைகளுக்கு விதித்த தடைக்கு, மருந்து உற்பத்தியாளர்கள் தில்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்து தடையுத்தரவு பெற்று வருகின்றனர்.கடந்த மார்ச் 10-ஆம் தேதி மத்திய அரசு 344 கூட்டு மருந்துகளுக்கு விதித்தத் தடையை எதிர்த்து மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள் தொடுத்த வழக்கில், தில்லி உயர்நீதிமன்றம் அரசின் ஆணைக்கு மார்ச் 14-ஆம் தேதி தடை விதித்தது. அதன்பிறகு, மார்ச் 28-ஆம் தேதிவரை விதிக்கப்பட்ட தடை ஏப்ரல் 4-ஆம் தேதிக்கும், பிறகு 6-ஆம் தேதிக்கும், இப்போது ஏப்ரல் 18-ஆம் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
 அமெரிக்கா உள்ளிட்ட மேலைநாடுகளில் இதுபோன்ற கூட்டு மருந்துகள் தடை செய்யப்பட்டவை. அங்கே தடை செய்யப்பட்ட மருந்துகளை, அதே பன்னாட்டு மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவில் தயாரித்து விற்பனை செய்கின்றன. "தேவைதான் இந்தத் தடை' என்கிற 19.03.2016 தலையங்கத்தில் நாம் குறிப்பிட்டிருந்ததுபோல, இந்தியாவில் தேவைப்படாத நோய்க்கும் சேர்த்து மருந்து தரப்படும் நிலை காணப்படுகிறது. நாம் நமது முந்தைய தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்ததுபோல, தடை செய்யப்பட்டிருக்கும் மருந்துத் தயாரிக்கும் நிறுவனங்களில் அதிகம் பாதிக்கப்படுபவை, பன்னாட்டு வணிகக் கூட்டாண்மை நிறுவனங்கள்தான்.
 மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களும், மருந்து மொத்த விற்பனையாளர்களும் அரசு ஆணையின் மீதான தடையைத் தொடர்ந்து நீட்டித்து வருவதற்குக் காரணம், அவர்கள் தயாரித்து வைத்திருக்கும், கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருக்கும் கூட்டு மருந்துகள் அனைத்தையும் விற்றுவிடுவதற்காகத்தான். இந்தத் திடீர் தடையின் மூலம் இந்திய மருந்து வர்த்தகத்திற்கு சுமார் ரூ.3,800 கோடி பாதிப்பு ஏற்படும் என்பது அவர்களே வெளியிட்டிருக்கும் அறிக்கை.
 மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களின் அடிப்படைக் கோரிக்கைகளை அரசுத் தரப்பு வழக்குரைஞரிடம் தெரிவிக்கும்படியும், அதனடிப்படையில் ஏப்ரல் 18-ஆம் தேதி விசாரணை நடத்தலாம் என்றும், ஏப்ரல் 6-ஆம் தேதி விசாரணையின்போது உயர்நீதிமன்றம் கூறியிருக்கிறது. வழக்குத் தொடுத்திருக்கும் அத்தனை பேருடைய பொதுவான கோரிக்கைகள் எவையெல்லாம் என்பதைப் பட்டியலிடும்படியும், மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களின் லாப-நஷ்டங்கள் இந்தப் பிரச்னையில் ஒரு காரணமாகாது என்றும் கூறியிருப்பது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று.
 தடை விதிக்கப்பட்ட 344 மருந்துகளும் எந்தவித அறிவுபூர்வமான அடிப்படை இல்லாத கூட்டு மருந்துகள் என்பதால் அவை பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய கேடு விளைவிக்கும் என்கிறது மத்திய சுகாதார ஒழுங்காற்று ஆணையம். மருந்து தயாரிப்பு நிறுவனங்களோ, தடை விதிக்கும்போது முறையான வழிமுறைகள் கடைபிடிக்கப்படவில்லை என்றும் தங்களது தரப்பு நியாயத்தை எடுத்துரைக்க வாய்ப்பளிக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டுகின்றன. இதுதான் இந்தப் பிரச்னையின் பின்னணி.
 சுகாதார அமைச்சக அதிகாரிகள் தெரிந்தோ தெரியாமலோ முறையான வழிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் இருந்திருக்கலாம். ஆனால், தடை செய்யப்பட்டுள்ள ஜலதோஷத்திற்கான மாத்திரைகள், இருமல் மருந்துகள் உள்ளிட்ட 1600 இலச்சினை மருந்துகளையும் தடை செய்யப்பட்டதன் காரணம் தவறு என்று எந்த மருந்துத் தயாரிப்பாளரும் தங்கள் நியாயத்தை முன்வைத்து விவாதிக்கத் தயாராக இல்லை.
 ஒழுங்காற்று ஆணையத்தின் தடைக்கு அடிப்படைக் காரணம், நிபுணர் குழு அறிக்கையின்படி மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் பல கூட்டு மருந்துகள் விதவிதமான வியாபாரப் பெயர்களில் மருந்துக் கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன என்பதுதான். குறிப்பிட்ட அளவுக் கலவை அல்லது "ஃபிக்சட் டோஸ் காம்பினேஷன்' என்பது, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மூலக்கூறு மருந்துகளை இணைத்து புதிய வியாபாரப் பெயருடன் தயாரிக்கப்படுபவை. உதாரணத்துக்கு, தேவையே இல்லாமல் கக்குவான் இருமல் உள்ள நோயாளிக்கு, நுரையீரலிலிருந்து சளியை அகற்றும் அல்லது ஒவ்வாமைக்கான மருந்தையும் சேர்த்து கூட்டு மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. இவையெல்லாம், உடல் நலத்துக்கு தீங்கு விளைவிப்பவை என்பதுதான் சுகாதார ஒழுங்காற்று ஆணையத்தின் குற்றச்சாட்டு.
 இதுபோன்ற கூட்டு மருந்துகளை மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் குறிப்பாக, பன்னாட்டு வணிகக் கூட்டாண்மை நிறுவனங்கள் ஆண்டு தோறும் இந்தியாவில் ரூ.3,800 கோடிக்கு விற்பனை செய்கின்றன. தேவையில்லாத இதுபோன்ற மருந்துகளை இத்தனை காலம் விற்பனை செய்ய முந்தைய அரசுகள் எப்படி அனுமதித்தன என்பது புரியவில்லை.
 அமெரிக்காவில் மருந்து ஒழுங்காற்று ஆணையம், உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறை போன்றவை உலகின் எந்த நாட்டு மருந்தானாலும் அந்த நாட்டுக்கே போய், தயாரிப்பு வசதிகள் உள்ளிட்ட அனைத்தையும் குறித்து தீர விசாரித்த பிறகுதான் அந்த மருந்துகளை அமெரிக்கச் சந்தையில் விற்பனை செய்ய அனுமதிக்கின்றன. பல இந்திய மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள் அமெரிக்காவால் தடை செய்யப்பட்டுள்ளன. ஆனால், நாம் அமெரிக்காவில் தடை செய்யப்பட்ட மருந்துகளை இந்தியாவில் தயாரித்து நம்மவர்களுக்கு விற்பதற்குக் கடையைத் திறந்து வைத்திருக்கிறோம்.
 சந்தைப் பொருளாதாரம் என்கிற பெயரில் இந்தியாவின் ஆரோக்கியத்தைச் சந்தைப்படுத்த அனுமதிக்கக் கூடாது. நியாயமான வழிகளில், தரமான மருந்துகளைத் தயாரித்து 127 கோடி மக்கள்தொகையுள்ள இந்தியாவில் வியாபாரம் செய்து சம்பாதித்துக் கொள்ளட்டும். ஆனால், நம்மை ஏமாற்றித் தரமில்லாத மருந்துகளை விற்று அவர்கள் லாபமடைவதை அனுமதிக்கக் கூடாது!

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024