Friday, April 22, 2016

ஆங்கிலம் அறிவோமே - 106: ஊறுகாய் நல்லா இருக்கா?

ஜி.எஸ்.எஸ்

the hindu tamil
“ஒரு மனிதர் அண்ணனாகவும், தம்பியாகவும் இருக்க முடியாதா என்ன? பரதன் ராமனுக்குத் தம்பி. என்றாலும் சத்ருக்னனுக்கு அண்ணன்தானே!’’.

எதற்காக இந்த விளக்கம் என்று குழம்ப வேண்டாம். வாசகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு உடனடியாகத் தோன்றிய counterதான் அது.

“ஒரே வார்த்தை adjective ஆகவும், adverb ஆகவும் இருக்க முடியுமா?!!!!’’. இதுதான் அந்தக் கேள்வி. ‘முடியாதே’ என்று அவர் கருதுவதைத்தான் அந்த ஆச்சரியக் குறிகள் உணர்த்துகின்றன. ஆனால் இதற்கான பதில் அவருக்கு வியப்பை வாரி வழங்கும்.

Fast என்ற வார்த்தையை எடுத்துக் கொள்வோம். Fast speech என்பதில் fast என்பது adjective ஆக (அதாவது speech என்ற noun-ஐ விவரிக்கும் வார்த்தையாக) பயன்படுத்தப்படுகிறது. ஆனால் Run fast எனும்போது fast என்ற வார்த்தை adverb ஆக (அதாவது run என்ற verb-ஐ விவரிக்கும் வார்த்தையாக) பயன்படுத்தப்படுகிறது.

Hard என்ற வார்த்தையும் இப்படித்தான். Hard work என்பதில் adjective ஆகவும், Think hard என்பதில் adverb ஆகவும் உள்ளது.

  

“கேம்ப்ரிட்ஜில் ஹார்வர்டு பல்கலைக்கழகம் இருக்கலாம். அதற்காக கேம்ப்ரிட்ஜில் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் இருக்காதா என்ன?’’

(அமெரிக்காவிலுள்ள கேம்ப்ரிட்ஜ் என்ற பகுதியில் ஹார்வர்டு பல்கலைக்கழகம் இருக்கிறது. இங்கிலாந்திலுள்ள கேம்ப்ரிட்ஜ் என்ற இடத்தில் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும்தானே?).

மேலே உள்ளபடி என்னைக் கேட்கத் தூண்டியது வேறொரு வாசகரின் கேள்வி. “ஊறுகாய் கெடாமலிருக்க conservatives சேர்க்கப்படுகிறது என்கிறார்களே! Conservatives என்றால் கருமித்தனமானவர்கள்தானே! பின் எப்படி?’’

இப்படி ஒரு கேள்வி எழுப்பப்பட்டதைத் தொடர்ந்துதான் எனக்கு பல்கலைக்கழக உவமானம் தோன்றியது.

கொஞ்சம் எச்சரிக்கையுடன் கூடிய என்கிற அர்த்தம் கொண்ட சொல் conservative. ஒரு பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு நடந்துவிட்டால் “பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்” என்று போகிற போக்கில் விறுவிறுப்புக்காகக் குறிப்பிட்டால் அது conservative estimate அல்ல. (அந்தப் பல்கலைக்கழகம் இருக்கும் நகரின் மக்கள் தொகையே அவ்வளவு இருக்காது!).

என்றாலும் நடைமுறையில் conservative என்பது ‘குறைவான’ என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது.

“கலவரத்தில் எட்டு பேர் செத்துட்டாங்களா?’’.

“நிச்சயம். சொல்லப்போனால் நான் சொன்னது conservative எண்ணிக்கை. அதிகமாகவே செத்திருப்பாங்க”.

Preservative என்ற அர்த்தத்திலும் conservative பயன்படுத்தப்படுகிறது (ஊறுகாய் பாட்டில்).

  

“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்பதுதான் சரி. ஆனால் “யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்று தவறாகக் கூறினாலும் அதிலும் ஓர் அர்த்தம் இருக்கிறதே!

வேறொரு வாசகர் எழுப்பிய கேள்வி தொடர்பாகத்தான் எனது மேற்படி வியாக்கியானம் என்பதை நீங்கள் இந்நேரம் யூகித்திருப்பீர்கள்.

“பல இளஞ்சிறார் பள்ளிகளுக்கான பெயர்ப் பலகைகளில் Kindergarten என்று தப்பாகக் குறிப்பிட்டிருக்கிறார்களே” என்று கேட்டிருக்கிறார் ஒரு வாசகர்.

ஒரு குறிப்பிட்ட வயதில் கட்டாயக் கல்வி தொடங்கும். அதற்கு முந்தைய காலகட்டத்தில் குழந்தைகளைச் சேர்க்கக்கூடிய playschool-களைத்தான் அப்படிக் குறிப்பிடுகிறார்கள். Kindergarten என்பது சரியான வார்த்தைதான். இந்த வார்த்தை ஜெர்மன் மொழியிலிருந்து வந்தது. அந்த மொழியில் kinder என்றால் குழந்தைகளுடைய என்று அர்த்தம். அப்படிப் பார்த்தால் Kindergarden என்ற வார்த்தையும் குழந்தைகளின் நந்தவனம் என்கிற அர்த்தத்தில் சுகமாகத்தான் இருக்கிறது.

  



Biography என்றால் வாழ்க்கை வரலாறு. Autobiography என்றால் சுயசரிதை. Hagiography என்றால் என்ன தெரியுமா?

முனிவர்கள், தீவிர பக்தர்கள், இறையருள் பெற்றவர்கள் போன்றோரின் வரலாற்றைக் கூறுவது hagiography. இதில் அவர்கள் நடத்திய அற்புதங்களும் விவரிக்கப்படும்.

  

Bridge on the river? Bridge over the river? எது சரி என்றார் ஒரு நண்பர்.

Bridge on the river Kwai என்ற ஒரு பிரபல படம் உண்டு. இரண்டாம் உலகப் போரை அடிப்படையாகக் கொண்ட கதை. Bridge over the river Kwai என்ற புதினம்தான் அந்தப் பெயரில் படமானது!

பெரும்பாலும் ‘on’ என்ற prepositionதான் இது போன்ற இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. Bridge across the river என்பதும் வழக்கில் இருக்கிறது.

இந்தப் பதிலை அளிக்கும்போதே வேறொரு கேள்வியைக் கேட்கத் தோன்றுகிறது.

Rebus என்றால் என்ன தெரியுமா? வார்த்தைகளைப் படங்கள் மூலமாகவோ, குறியீடுகள் மூலமாகவோ வித்தியாசமான விதத்தில் அளிப்பதைத்தான் rebus என்கிறார்கள். கீழே சில எடுத்துக்காட்டுகள்.

BRIDGE

RIVER

மேலே உள்ளபடி காணப்படுவதை Bridge on river என்று படிக்க வேண்டும். ஏனென்றால் நதி என்ற வார்த்தைக்கு மேலே பாலம் என்ற வார்த்தை இருக்கிறது. (துன்பம் என்ற வார்த்தையை அதிலுள்ள எழுத்துகளுக்கு நடுவே கொஞ்சம்கூட இடைவெளி கொடுக்காமல் நெருக்கமாக எழுதினால் அந்த rebus-ன் விடை “இடைவிடாத துன்பம்” என்பதாகும்.).

SAM HE HARI

மேலே உள்ள rebus-ஐ விடுவியுங்கள் பார்க்கலாம்.

இதன் விடை HE IS BETWEEN SAM AND HARI.

இந்த வகைப் (rebus) புதிர்கள் இரண்டைக் கொடுத்திருக்கிறேன். உங்கள் விடைகளை உடனே எழுதி மின்னஞ்சலில் அனுப்புங்கள். (மறக்காமல் நீங்கள் வசிக்கும் ஊரையும் குறிப்பிடுங்கள்).

(1) t = T

(2) NOONGOOD

சிப்ஸ்

# Film என்பதற்கும், movie என்பதற்கும் என்ன வித்தியாசம்?

பிரிட்டிஷ்காரர்களுக்கு film. அமெரிக்கர்களுக்கு movie.

# t20 என்பதில் ‘t’ என்பது எதைக் குறிக்கிறது?

Twenty twenty என்பதைத்தான் t20 என்கிறோம். ஒவ்வொரு அணிக்கும் 20 ஓவர்கள்.

# ஒரு விஷயம் குறித்துப் பேசும்போது Your guess is as good as mine என்று ஒருவர் கூறினால் அதற்கு என்ன பொருள்?

அந்த விஷயம் தொடர்பாக அவருக்கு எந்தத் தெளிவான அல்லது அதிகப்படியான கருத்தும் இல்லை என்பதைத்தான் உணர்த்துகிறார். ‘உங்களுக்குத் தெரிந்ததுதான் எனக்கும்’

தொடர்புக்கு: aruncharanya@gmail.com

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024