Tuesday, April 26, 2016

குறள் இனிது: பேசவும் தெரிஞ்சுக்கணும்!

THE HINDU TAMIL

சோம.வீரப்பன்
என் பால்ய சிநேகிதர் ஒருவர். வாய்ச்சொல்லில் வீரர். திருநெல்வேலியிலிருக்கும் அவரை அங்கு சென்ற பொழுது பார்க்கச் சென்றேன். பெரும் ஆர்ப்பாட்டத்துடன் வரவேற்றார். மனைவியிடம் ‘இவரை என்ன நினைத்தாய்.பார்க்கத்தான் எளிமை.உண்மையில் பெரிய இடம். நம்ம வீட்டில் எல்லாம் தங்க மாட்டார்' என்று சொல்லிவிட்டு,என்னிடம் திருவையாறு அசோகா அல்வா கொண்டு வரவில்லையா? பரவாயில்லை; அரை கிலோ கொரியரில் அனுப்பி விடுப்பா' என்றார். நானும் அவர் விருப்பத்தைத் ஊருக்கு வந்ததும் நிறைவேற்றினேன்.
இவர் தான் கெட்டிக்காரரா, நம்ம வீட்டிற்கு வரட்டும் பார்த்துக்கலாம் என்று காத்திருந்தேன். இரண்டே மாதத்தில் அந்த வாய்ப்புக் கிட்டியதும் ‘இருட்டுக் கடை அல்வா கொண்டு வந்திருப்பாயே' எனக்கேட்டேன். நான் கொரியர் கோரிக்கையை வைக்கும் முன்பே அவர் முந்திக்கொண்டு ‘இது ஒரு பெரிய விஷயமா, இப்பத்தான் அது உங்க ஊர் சூப்பர் மார்க்கெட்டிலேயே பாக்கெட்டில் கிடைக்கிறதே' என்று முடித்து விட்டார். அலுவலகங்களில் பார்த்து இருப்பீர்கள். தலைமை அலுவலகத்திலிருந்து மேலதிகாரிகள் வந்தால் பணியாளர்களின் கூட்டம் நடக்கும். அதில் உழைத்து வேலை செய்தவர் பேசத் தயங்கும் பொழுது, வாயாடியாய் இருக்கும் மற்றொருவர் உள்ளே புகுந்து நல்ல பெயரைத் தட்டிச் சென்று விடுவார், அப்படிச் சிலர்; இப்படியும் பலர்!
அண்ணே, சொல்வன்மை என்பது வீட்டில், அலுவலகத்தில்,ஏன் எங்கும் யாரையும் வசீகரிக்கிறது; பயனளிக்கிறது. கண்டேன் சீதையை என்றும், வந்தான் ராமன் என்றும் கூறி நல்லுயிர்களைக் காத்தான் சொல்லின் செல்வன் அனுமன்! எடுத்தது கண்டனர், இற்றது கேட்டனர் எனச் சொல்லோவியம் தீட்டினார் கம்பர். நாற்குணமும் நாற்படை, ஐம்புலனும் நல்லமைச்சு என்று உவமை சொன்னார் புகழேந்தி! கனியிருப்பக் காய் கவர்ந்தற்று, பிறன் மனை நோக்காத பேராண்மை என்றெல்லாம் சொல்லிப் புரிய வைத்தார் தனக்குவமை இல்லாத நம் ஐயன் வள்ளுவர்!
இலக்கியத்தை விடுங்கள். திரைப்படங்களில் சில வசனங்கள் சாகாவரம் பெற்றவை. ‘நான்ஒரு தரம் சொன்னால், நூறு தரம் சொன்ன மாதிரி' என்றாலோ, ‘பேரைக் கேட்டால் சும்மா அதிருதில்ல' என்றாலோ கதாபாத்திரத்தின் தன்மை சட்டெனப் புரிகிறதல்லவா?
விளம்பரங்களின் வெற்றிக்கு அவற்றில் இடம்பெறும் வார்த்தைகளும் தான் காரணம். ஓஎல்எக்ஸின் 'விற்றுவிடு', மாகியின் அம்மா பசிக்குது' போல!
சமீபத்தில் தீபா கராம்கர் எனும் வீராங்கணை ஒலிம்பிக் போட்டிக்குத் தேர்வானதைப் பாராட்டிப் பேசிய திரு மோடி அவர்கள், போகிற போக்கைப் பார்த்தால் இனி ஆண்களுக்குத் தான் இட ஒதுக்கீடு வேண்டும்' என்று வேடிக்கையாய்க் குறிப்பிட்டிருப்பதை ரசித்திருப்பீர்கள்.
சொல்வதை மனதில் பதியும்படி, தைக்கும்படி சொல்வது ஓர் கலை! யாருக்குமே நாவன்மை ஒரு தனிப்பலம்!
நண்பர்களே,பேசத் தெரிந்தவன் எங்கும் பிழைச்சுக்குவான்; வாயிருந்தால் வங்காளம் போகலாம்!
சொல்வன்மை எனும் திறம் சான்றோர்களால் போற்றப்படும்;அது தனிச்சிறப்புடையது என்கிறது குறள்.
நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்
யாநலத்து உள்ளதூஉம் அன்று (குறள் 641)
சோம.வீரப்பன் somaiah.veerappan@gmail.com

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024