அடுத்த அரசாங்கத்தின் முதல் வேலை
DAILY THANTHI...THALAYANGAM
தமிழக சட்டசபைக்கான தேர்தல் அடுத்த மாதம் 16–ந் தேதி நடக்கவிருக்கிறது. இந்த தேர்தல் கடுமையான கோடைகாலத்தில் நடக்க இருப்பதால் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்ததோடு மட்டுமல்ல, பிரசாரத்தில் ஈடுபடும் கட்சியினரும் கொதிக்கும் வெயிலில் வீதி, வீதியாக சென்று ஓட்டு கேட்கவேண்டிய நிர்ப்பந்தம் வந்துவிட்டது. ‘நாங்கள் ஆட்சிக்குவந்தால், இதைச்செய்வோம், அதைச்செய்வோம்’ என்று எல்லாகட்சிகளும் தேர்தல் அறிக்கையில் பல வாக்குறுதிகளை கொடுத்து வருகின்றன. ஆனால், தேர்தல் அறிக்கையில் சொன்னதையெல்லாம் நிறைவேற்றுவது ஒரு பக்கம் இருந்தாலும், ஆட்சி அமைத்தவுடன் அவர்கள் செய்வதற்காக காத்து கொண்டிருக்கும் முதல் வேலை, வரலாறு காணாத கோடையை சமாளிப்பதும், குடிநீர்பற்றாக்குறையை போக்குவதும் ஆகும்.
1991–ம் ஆண்டு முதல் இன்று வரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, இந்த ஆண்டுதான் கடும் வெப்பத்தை எதிர்நோக்கும் 3–வது ஆண்டாகும். கடந்த 2 ஆண்டுகளாகவே கோடையின் வெப்பம் தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு இருந்தாலும், இந்த ஆண்டு வெப்பம் அதையெல்லாம் தாண்டிவிடும் என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 2014–ம் ஆண்டு இருந்த வெப்பத்தைவிட, 2015–ம் ஆண்டு இருந்த வெப்பம் அதிகமாகும். இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே 8 ஆண்டுகள் கடுமையான வெப்பத்தை தந்திருக்கின்றன. சென்னை மாநகரை பொருத்தமட்டில், 1908–ம் ஆண்டு ஏப்ரல் 27–ந் தேதியில்தான் 109.04 டிகிரி வெயிலை சந்தித்திருக்கிறது. இப்போது சென்னையில் 107 டிகிரியையும், வேலூரில் 109 டிகிரியையும், தமிழ்நாடு முழுவதும் இதேபோல் அதிக வெயிலையும் பார்த்தபிறகு, வரப்போகும் நாட்களில் இன்னும் அதிகமான கோரவெயிலை அனுபவிக்கவேண்டிய நிலை ஏற்படும். வேகாத இந்தவெயிலில் மக்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள் என்றாலும், கால்நடைகள், பறவைகள், ஏன் மீன்பண்ணைகளிலுள்ள மீன்களும் வெப்பத்தை தாங்கமுடியாமல் துடிதுடித்துப்போகின்றன. நீர்த்தேக்கங்களில் எல்லாம் தண்ணீரின் மட்டம் மிகவேகமாக குறைந்து வருகிறது. வருகிற ஆண்டு தென்மேற்கு பருவமழை சராசரியைவிட அதிகமாக, அதாவது 106 சதவீத மழை இருக்கும் என்பது ஆறுதலாக இருந்தாலும், அந்த மழை வருவதற்கும் சில நாட்கள் தாமதமாகும் என்று வரும் தகவல்கள் வயிற்றில் புளியை கரைக்கிறது.
தென்மேற்கு பருவமழை வழக்கமான காலங்களில் பெய்யும் என்றால் முதலில் ஜூன் 1–ந் தேதி கேரளாவில் பெய்யத்தொடங்கும். அங்கிருந்து படிப்படியாக நகர்ந்து தமிழ்நாட்டில் ஆகஸ்டு மாதத்திற்கு மேல்தான் தீவிரமழை பெய்யத்தொடங்கும். ஐப்பசி மாதத்தில்தான் அடைமழை என்பார்கள். ஆனால், பருவகாலத்திற்கு முந்தைய மழையாக ஏப்ரல் 21–ந் தேதி மழைபெய்தால்தான் ஜூன் 1–ந் தேதி பருவமழை பெய்யத்தொடங்கும். இல்லையென்றால், சிலநாட்கள் தாமதமாகும் என்பது காலம் காலமாக நடைமுறையில் இருக்கும் மரபாகும். ஆனால், கடந்த 21–ந் தேதி மழை பெய்யவில்லை. பொதுவாக எல்–நினோ தாக்குதல் இருந்த ஆண்டுகளுக்கு அடுத்த ஆண்டு தாமதமாகவே தென்மேற்கு பருவமழை பெய்வது வழக்கம். 2002–ம் ஆண்டு எல்–நினோ தாக்கம் இருந்தது. அந்த ஆண்டு ஜூன் 9–ந் தேதியும், அதற்கடுத்த ஆண்டு ஜூன் 13–ந் தேதியும்தான் பருவமழை தொடங்கியது. இதேபோல, பல ஆண்டுகளில் தாமதமாக மழைபெய்திருக்கிறது. 2015–ம் எல்–நினோ ஆண்டாகும். கடந்த ஆண்டு ஜூன் 5–ந் தேதிதான் தென்மேற்கு பருவமழை தொடங்கியிருக்கிறது. எனவே, இந்த ஆண்டும் பருவமழை ஜூன் 1–ந் தேதிக்கு பதிலாக, 10 நாட்களுக்கு மேல் தாமதமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படியானால், இன்னும் சில மாதங்கள் கோடையை தாங்கித்தான் ஆகவேண்டும். வழக்கமாக கோடைகாலங்களில் அரசியல் கட்சிகள் மக்களுக்கு பயனளிக்கும் தண்ணீர் பந்தல்களை அமைப்பது வழக்கம். இப்போது தேர்தல் நேரம் என்பதால், அரசியல்கட்சிகள் தண்ணீர்பந்தல் அமைக்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்தப்பணியை தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் மற்றும் பல்வேறு சமூகநல அமைப்புகளும், ஏன் பொதுமக்களுமே செய்யலாம். நீர்நிலைகளையெல்லாம் ஆழப்படுத்தும் பணிகளையும், மழைபெய்யும் காலங்களில் தண்ணீர் வீணாகாமல் சேமித்து வைக்கும் பணிகளையும் முதல் வேலையாக புதிய அரசாங்கம் செய்யவேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.
No comments:
Post a Comment