தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்
ஆரம்ப காலங்களில் நாடகங்களில் நடித்து, பின்னர் திரைப்படங்களில் சிறிய வேடங்களில் தலைகாட்டி வாய்ப்புகளுக்காக காத்திருந்தபோது எம்.ஜி.ஆர். துவண்டதுமில்லை. பின்னர், தமிழ் திரையுலகின் சக்கரவர்த்தியாக இருந்தபோது துள்ளியதும் இல்லை.
1968-ம் ஆண்டு ‘பொம்மை' இதழின் ஆண்டு மலருக்காக எம்.ஜி.ஆரை ஜெய லலிதா பேட்டி கண்டார். அப்போது, எம்.ஜி.ஆரிடம் ஜெயலலிதா கேட்ட கேள்வி இது: ‘‘சினிமா உலகில் நீங்கள் யாருமே அடையமுடியாத உச்ச நிலைக்குப் போய்விட்டீர்கள். விரும்பிய லட்சியத்தை அடைந்துவிட்டோம் என்ற பூரிப்பு உங்களுக்கு ஏற்பட்டிருக்கிறதா? ’’
இந்தக் கேள்விக்கு எம்.ஜி.ஆர். அளித்த பதில், அவர் எந்த அளவுக்கு வாழ்க்கையை தெளிவாக புரிந்து கொண்டிருக்கிறார் என்பதை உணர்த்தும். எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மை யார் கதாநாயகியாக நடித்த ‘ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி ’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தவர் புலிக்குட்டி பி.எஸ்.கோவிந்தன். அதே போல, நாடக மேடைகளிலும் திரைப் படங்களிலும் நடித்து ‘இந்திய மேடைப் புலி’ என்று பட்டம் பெற்றவர் கே.பி.கேசவன். இவர்களைப் போன்று பல நடிகர்கள் ஒருகாலத்தில் மிகுந்த புகழோடு இருந்தனர்.
‘இரு சகோதரர்கள்’ என்ற படத்தில் எம்.ஜி.ஆருக்கு சிறிய வேடம். அந்தப் படத்தின் கதாநாயகன் கே.பி.கேசவன். எம்.ஜி.ஆர். மீது மிகுந்த அன்பு கொண் டவர். ‘இரு சகோதரர்கள்’ திரைப்படம் சென்னையில் ‘நியூ எல்பின்ஸ்டன்’ திரை யரங்கில் வெளியானது. அந்த தியேட்ட ரெல்லாம் இப்போது இல்லை. படத்தைப் பார்க்க கே.பி.கேச வனும் எம்.ஜி.ஆரும் சென்றனர். இடைவேளையின்போது கே.பி.கேச வனைக் கண்டுகொண்ட ரசிகர்கள் எழுந்து நின்று அவரைப் பார்த்து உற்சாகமாகக் கூச்சலிட்டனர். இதைக் கண்டு திகைத்துப் போன எம்.ஜி.ஆர்., இவ்வளவு ஆதரவும் செல்வாக்கும் உள்ளவரின் பக்கத்தில் அமர்ந்திருக்கிறோமே என்று மனதுக்குள் பெருமைப்பட்டார்.
ரசிகர்களின் அன்புத் தொல்லையைத் தவிர்க்க, எம்.ஜி.ஆரும் கே.பி.கேச வனும் படம் முடிவதற்குள் எழுந்து வெளியே வந்தனர். அவர்கள் புறப் படுவதை அறிந்து மக்களும் வந்துவிட்டனர். அவர்களிடம் இருந்து கே.பி.கேசவனை எம்.ஜி.ஆர். பாதுகாப்பாக அழைத்துச் சென்று காரில் ஏற்றி அனுப்பி வைத்தார். அப்போது, அந்தப் படத்தில் சிறிய வேடத் தில் நடித்திருந்த தன்னை மக் களுக்கு அடையாளம் தெரிய வில்லை என்று எம்.ஜி.ஆர். குறிப்பிட்டுள்ளார்.
சில ஆண்டுகள் கழிந்தன. எம்.ஜி.ஆர். கதாநாயக னாகி புகழ் பெற்றிருந்தார். அவர் நடித்த ‘மர்மயோகி’ படம் சென்னையில் ‘நியூ குளோப்’ திரையரங்கில் திரை யிடப்பட்டது. படத்தைப் பார்க்க எம்.ஜி.ஆரும் கே.பி.கேசவனும் சென்றனர். எம்.ஜி.ஆர். வந்திருப்பதை அறிந்த ரசிகர்கள் அவரை வாழ்த்தி கோஷமிட்டனர். எம்.ஜி.ஆருக்கு பக்கத்திலேயே கே.பி.கேசவன் அமர்ந் திருந்தார். அவரை யார் என்று கூட மக்கள் அறிந்துகொள்ளவில்லை.
படம் முடிந்து வெளியே வந்தபோது, மக்கள் கூட்டம் எம்.ஜி.ஆரை சூழ்ந்து கொண்டது. கூட்டத்தை விலக்கி எம்.ஜி.ஆருக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்து காரில் அனுப்பி வைத்தார் கேசவன். காரில் எம்.ஜி.ஆர். புறப்பட்டுச் செல்லும்போது மக்களோடு ஒருவராக கேசவனும் நின்று கொண்டிருந்தார்.
இந்த சம்பவத்தை குறிப்பிட்டுவிட்டு எம்.ஜி.ஆர். தொடர்ந்து, ‘‘கே.பி.கேசவ னின் நடிப்பாற்றல் ‘மர்மயோகி’ படம் வெளியானபோதும் எந்த வகையிலும் குறைந்துவிடவில்லை. கலைஞர் களுக்கு உச்ச நிலை, தாழ்ந்த நிலை என்பதெல்லாம் மக்களால் தரப்படும் ஒரு மயக்க நிலை. கலைஞனைப் பொறுத்த வரை அவனுக்கு வீழ்ச்சி கிடையாது. சூழ்நிலை அவனை உயர்த்தும், தாழ்த் தும்’’ என்று கூறியுள்ளார். இப்படி புகழைப் பற்றி தெளிவான மன நிலையில் எம்.ஜி.ஆர். இருந்தார்.
பேரறிஞர் அண்ணாவின் அமெரிக்க பயணத்தின்போது, திமுகவின் முக்கிய பிரமுகர்களில் ஒருவராக விளங்கியவரும் பல படங்களைத் தயாரித்தவருமான இராம. அரங்கண்ணலும் உடன் சென்றிருந்தார். பல அடுக்கு மாடிகளைக் கொண்ட உயரமான ஒரு கட்டிடத்தின் உச்சிக்கு இருவரும் சென்றனர். அங்கிருந்து காட்சிகளின் அழகை ரசித்துக் கொண்டே அண்ணாவிடம், ‘‘அடேயப்பா, எவ் வளவு உயரத்தில் இருக்கிறோம் அண்ணா? ’’ என்று அரங்கண்ணல் வியப்புடன் கூறினார்.
அதற்கு அண்ணா கூறிய பதிலை எல்லோரும், குறிப்பாக இன்றைய அரசியல் வாதிகள் மனதில் கொள்ள வேண்டும். சிரித்துக் கொண்டே அண்ணா சொன் னார்: ‘‘இன்னும் சிறிது நேரத்தில் கீழே இறங்கி தரையில் நடக்கப் போகிறோம் அரங்கண்ணல்.’’
அண்ணாவுக்கு இருந்த அதே மன நிலையோடு, உயர்வு வந்தாலும் தாழ்வு வந்தாலும் சமமாக பாவிக்கிற எண்ண ஓட்டத்தோடு எம்.ஜி.ஆர். இருந்தார். ‘உச்ச நிலை, தாழ்ந்த நிலை என்பதெல் லாம் ஒரு மயக்க நிலை’ என்று கருதி, அவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் மக்கள் மீது அன்பு செலுத்தி அவர்களின் நலனில் அக்கறை காட்டியதால்தான், மக்களின் மனங்களில் எம்.ஜி.ஆர். உச்ச நிலையிலேயே இருந்தார், இருக்கிறார், இருப்பார்!
- தொடரும்...
‘நாடோடி மன்னன்’ படத்துக்குப் பிறகு நாடகத்தில் நடித்தபோது எம்.ஜி.ஆருக்கு கால்முறிவு ஏற்பட்டு பல மாதங்கள் சிகிச்சையில் இருந்ததால் படங்களில் நடிக்க முடியவில்லை. இதனால் 1959-ம் ஆண்டு அவர் நடித்த ‘தாய் மகளுக்குக் கட்டிய தாலி’ படம் மட்டுமே டிசம்பர் 31-ம் தேதி வெளியானது. இந்தப் படத்தின் கதையை எழுதி யவர் அண்ணா. வசனம் இராம.அரங்கண்ணல். எம்.ஜி.ஆருடன் நடிகை ஜமுனா இந்த ஒரு படத்தில் தான் நடித்து உள்ளார்.
No comments:
Post a Comment