Saturday, April 30, 2016

எம்ஜிஆர் 100 | 55 - இசைபட வாழ்ந்தவர்!

1985-ம் ஆண்டு நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் இருந்து நடராஜர் சிலையை பரிசாக பெறுகிறார் மாண்டலின் னிவாஸ்.

எம்ஜிஆர் 100 | 55 - இசைபட வாழ்ந்தவர்!


M.G.R. ரசிகர்கள் பலதரப்பட்ட வகையினர். அவர்களில் ஒருவர் கர்னாடக இசைத்துறையைச் சேர்ந்த, மறைந்த மாண்டலின் இசைமேதை யூ. ஸ்ரீனிவாஸ். தனது தீவிர ரசிகராக இருந்தவரின் இசைக்கு, பின்னர் எம்.ஜி.ஆரே ரசிகராக மாறினார். அத்தகைய பெருமையை பெற்றவர் மாண்டலின் ஸ்ரீனிவாஸ்.

தூர்தர்ஷனில் 1983-ம் ஆண்டு இசை அரங்கம் நிகழ்ச்சியில் ஸ்ரீனிவாஸின் மாண்டலின் இசை நிகழ்ச்சி ஒளிபரப்பானது. நிகழ்ச்சி முடிந்தவுடன் தூர்தர்ஷன் இயக்குநருக்கு தொலைபேசி அழைப்பு. மறுமுனையில் பேசியவர் முதல்வர் எம்.ஜி.ஆர்.! எதற்காக அழைக்கிறார் என்று அவர் யோசித்துக் கொண்டிருந்தபோதே, ‘‘இப்போது தூர்தர்ஷனில் மாண்டலின் வாசித்த சிறுவனின் வாசிப்பு அபாரம். அந்தப் பையனின் தொலைபேசி எண் வேண்டும்’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டார்.

அப்போது, வடபழனியில் தனது குருவின் வீட்டிலேயே தங்கி மாண்டலின் கற்றுக் கொண்டிருந்தார் ஸ்ரீனிவாஸ். அந்த வீட்டில் தொலைபேசி கிடையாது. எனவே, வீட்டு முகவரியை எம்.ஜி.ஆருக்கு தூர்தர்ஷன் இயக்குநர் அளித்தார். மறுநாள், எம்.ஜி.ஆர். அனுப்பி வைத்தவர் வந்து ஸ்ரீனிவாஸை சந்தித்து, முதல்வர் சார்பில் பாராட்டுக்களை தெரிவித்தார். மேலும், ‘‘எம்.ஜி.ஆர். தலைமையில் விரைவில் நடக்க உள்ள விழாவில் மாண்டலின் கச்சேரி செய்ய வேண்டும்’’ என்றும் கூறினார். அந்த விழா, நடிகர் கமல்ஹாசனுக்கு எம்.ஜி.ஆர். தலைமையில் நடந்த பாராட்டு விழா!

கலைவாணர் அரங்கில் நடந்த விழாவில் கலந்துகொள்ள வந்த எம்.ஜி.ஆரை வெகு அருகில் பார்த்து மகிழ்ச்சியில் மனம் நிறைந்தார் ஸ்ரீனிவாஸ். அந்த விழாவில் மாண்டலின் கச்சேரியை ரசித்துக் கேட்ட எம்.ஜி.ஆர், தமிழக அரசின் ஆஸ்தான கலைஞராக ஸ்ரீனிவாஸை நியமிக்கப் போவதாக மேடையிலேயே அறிவித்தார். அந்த வருடம் வெளியான ஆஸ்தான கலைஞர்கள் பட்டியலில் வாய்ப்பாட்டு கலைஞர் மகாராஜபுரம் சந்தானம், பரதநாட்டியக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம், வயலின் இசைக் கலைஞர் குன்னக்குடி வைத்தியநாதன் உள்ளிட்டவர்களுடன் மாண்டலின் ஸ்ரீனிவாஸ் பெயரும் இடம் பெற்றது.

ஆஸ்தான கலைஞராக நியமிக்கப் பட்டபோது மாண்டலின் ஸ்ரீனிவாஸுக்கு வயது பன்னிரண்டுதான்! ஒருவரிடம் இருக்கும் திறமையை மட்டுமே எம்.ஜி.ஆர். பார்ப்பாரே தவிர, வயதை அல்ல என்பதற்கு இது ஓர் உதாரணம். பின்னர், தஞ்சையில் ஆஸ்தான கலைஞர்களை நியமிக்கும் விழா நடந்தபோதும் ஸ்ரீனிவாஸின் மாண்டலின் கச்சேரியை எம்.ஜி.ஆர். ரசித்துக் கேட்டார்.

அதன் பின்னர், கச்சேரிகள் செய்வதற் காக விமானப் பயணம் மேற்கொள் ளும்போது, சென்னை விமான நிலையத்தில் சில சமயங்களில் அங்கு வந்த முதல்வர் எம்.ஜி.ஆரை மாண்டலின் ஸ்ரீனிவாஸ் பார்த்திருக்கிறார். எம்.ஜி.ஆரிடம் பேச வேண்டும் என்று அவருக்கு ஆசை. என்னதான் இசைமேதையாக இருந்தாலும் சிறுவனான அவருக்கு எம்.ஜி.ஆரிடம் போய் பேசத் தயக்கம். அதுபோன்ற நேரங்களில், எம்.ஜி.ஆரே ஸ்ரீனிவாஸை அழைத்து, அன்புடன் விசாரிப்பார். ‘‘அது நான் செய்த பாக்கியம்’’ என்று பெருமை பொங்கக் குறிப்பிட்டிருக்கிறார் மாண்டலின் ஸ்ரீனிவாஸ்.

எம்.ஜி.ஆரின் வசீகரமான முகமும் பார்ப்பவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் துடிப்பான நடிப்பும் சிறுவயதிலேயே மாண்டலின் ஸ்ரீனிவாஸை ஈர்த்தது. அவரது படங்களில் இடம் பெற்ற அற்புதமான பாடல்கள், அதற்கான அபாரமான இசை ஆகியவற்றால் சொக்கிப்போனார். எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகராக மாறிய ஸ்ரீனிவாஸ், மீண்டும் மீண்டும் எம்.ஜி.ஆர். படங்களை பார்த்து ரசிப்பார். அவர் மட்டுமின்றி, டி.வி.யில் எம்.ஜி.ஆர். படங்கள் ஒளிபரப்பானால் அவரது ஒட்டுமொத்த குடும்பமுமே பார்த்து ரசிக்கும்.

1984-ம் ஆண்டு கச்சேரிக்காக ஆஸ்திரேலியாவுக்கு ஸ்ரீனிவாஸ் சென்றிருந்தார். அப்போது ஓய்வு நேரங்களில் எம்.ஜி.ஆர். படங்களை பார்த்து தீர்த்தார். எம்.ஜி.ஆரின் ரசிகர் என்பதால், காரில் வெளியூர்களுக்கு ஸ்ரீனிவாஸ் செல்லும்போது எம்.ஜி.ஆர். படப் பாடல்களைத்தான் விரும்பிக் கேட்பார். ‘‘தன் படத்தில் இடம் பெறும் பாடல்களை எம்.ஜி.ஆரே கேட்டு டியூன்களை ஓ.கே. செய்வார் என்று கேள்விப்பட்டது உண்டு. அந்தப் பாடல்களை கேட்கும்போது, அவரது அபாரமான இசை ரசனையை புரிந்துகொள்ள முடிகிறது’’ என்று சிறுவயதிலேயே இசைப் புலமை மிக்கவராகத் திகழ்ந்த மாண்டலின் ஸ்ரீனிவாஸ், எம்.ஜி.ஆரின் இசை ரசனையை வியந்து போற்றியுள்ளார்.

இசையை ரசித்தவர் மட்டுமல்ல; இசைபட வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்.!

- தொடரும்...

படங்கள் உதவி: ஞானம், செல்வகுமார்




இந்தத் தலைமுறையினர் பலர் அறிந் திராத செய்தி இது. எம்.ஜி.ஆர். நடித்த ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தின் இசையமைப்பாளர் வயலின் இசைக் கலைஞர் குன்னக்குடி வைத்திய நாதன் என்றுதான் முதலில் விளம்பரம் வெளியானது. ஆனால், பின்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்தார். 1977-ம் ஆண்டு மார்ச் 5-ல் வெளியான எம்.ஜி.ஆர். நடித்த ‘நவரத்தினம்’ படத்துக்கு குன்னக்குடி வைத்தியநாதன் இசையமைத்தார். அவர் இசையமைத்த ஒரே எம்.ஜி.ஆர். படம் ‘நவரத்தினம்’.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024