Saturday, April 30, 2016

பதின் பருவம் புதிர் பருவமா? 29 - பயன்தரும் ஆரம்பம்

டாக்டர் ஆ. காட்சன்

இணைய அடிமைத்தன பிரச்சினையில் ஒருவேளை ஒரு குறிப்பிட்ட அப்ளிகேஷன் அல்லது செயலியில் அதிக நேரத்தை விரயம் செய்தால், அதை ஸ்மார்ட்ஃபோனிலிருந்து நீக்கிவிடுவது நல்லது. மொபைல் ஃபோனில் அலர்ட் அல்லது செய்திகள் வந்துள்ளதை உணர்த்தும் சத்தத்தை நிறுத்தலாம். தேவையற்ற புக் மார்க் மற்றும் தேடுதல் வரலாற்றை (bookmarks and history) நீக்கிவிடலாம். மொத்தத்தில் கணினியை ரீஸ்டார்ட் செய்வதுபோலச் சமூக வலைதளங்களை பார்க்கும் நேரத்தைத் தலைகீழாக மாற்றுவது, பழக்கத் தோஷத்தில் நேரம் விரயமாவதைத் தடுக்க உதவும். உதாரணமாக, இரவில் நேரம்போவது தெரியாமல் பயன்படுத்துபவர்கள் பகலில் அவசியத் தேவைகளுக்குச் சிறிது நேரத்தைத் திருப்பலாம்.

மருந்து தேவைப்படலாம்

தற்போது மனநோய் வெளிப்பாடுகளும்கூட இணையத்தை அதிகமாகப் பயன்படுத்தும் முறையில் தெரிய ஆரம்பித்திருக்கின்றன. பெரும்பாலான மாணவர்கள் மன அழுத்த நோயால் பாதிக்கப்படும்போது, இணைய அடிமைத்தனத்துக்கும் உட்படுவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் மன எழுச்சி நோயால் (Mania) பாதிக்கப்படும் இளைஞர்கள் இணையத்தை அதிகம் பயன்படுத்துவது, ஆபாச வலைதளங்களை அதிகம் பார்ப்பது, செல்ஃபோன் கொடுக்காவிட்டால் ஆக்ரோஷமாக நடந்துகொள்வது போன்ற அறிகுறிகளுடன் காணப்பட்டுள்ளனர்.

அதேபோல போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்கள், இணையதளத்துக்கும் அடிமையாகவும் வாய்ப்புண்டு. இப்படி மன நோயின் பாதிப்புகளோடு இருக்கும் வளர்இளம் பருவத்தினர் மனநல மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும்போது இணைய அடிமைத்தனத்திலிருந்து விடுபடுவதிலும் நல்ல முன்னேற்றம் காணப்படும்.

ஐந்தில் வளையாதது

l சிறு குழந்தைகளை அமைதிப்படுத்தவும் தொந்தரவு இல்லாமல் இருக்கச் செய்யவும் மொபைல் ஃபோன்களை கொடுத்துப் பழக்குவதுதான் இணைய அடிமைத்தனப் பிரச்சினையின் ஆரம்பம். தொட்டில் பழக்கம் கடைசிவரை மாறாமல் போக வாய்ப்பு அதிகம்.

l இணைய விளையாட்டுகளுக்குக் குழந்தைகள் எளிதில் அடிமையாக வாய்ப்புள்ளதால், அவற்றை மொபைல் ஃபோன்களில் பதிவிறக்கம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

l இணையம், ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்த அனுமதிக்கும் வயதை முடிந்தவரை காலம் தாழ்த்துவது நல்லது. கட்டாயம் தேவைப்படும் நேரத்தில் பெற்றோரின் கண்காணிப்பில் குறைந்த நேரம் பயன்படுத்த அனுமதிக்கலாம்.

l பள்ளி, கல்லூரிகளில் கணினி குறித்த பாடங்களோடு அவற்றைக் கவனமாகக் கையாள வேண்டியதன் அவசியத்தையும் இணைய அடிமைத்தனத்தின் பின்விளைவுகளையும் குறித்த விழிப்புணர்வை ஆசிரியர்கள் ஏற்படுத்த வேண்டும்.

l வீட்டில் இருக்கும்போது சமூக வலைதளத்தைப் பயன்படுத்தும் நேரத்தை வரையறை செய்யவேண்டும். குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களுடனும், கல்லூரிகளில் இருக்கும்போதும் சமூக வலைதளப் பயன்பாடுகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

l தேவைப்படும் நேரத்தைத் தவிர மற்ற நேரத்தில் இணையத் தொடர்பை அணைத்து வைப்பது நல்லது. இதனால் அடிக்கடி சோதித்துப் பார்க்கும் எண்ணச் சுழற்சி குறையும்.

(அடுத்த வாரம்: இருதுருவ மனநிலை)

கட்டுரையாளர், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் மற்றும் மனநல மருத்துவர்

தொடர்புக்கு: godson psychiatrist@gmail.com

No comments:

Post a Comment

NEET PG 2024 Exam Pattern REVISED, NMC Issues Official Notice; Here’s All You Need To Know

NEET PG 2024 Exam Pattern REVISED, NMC Issues Official Notice; Here’s All You Need To Know The NEET PG 2024 is scheduled to take place on Ju...