பிரபல பின்னணிப் பாடகி
தேசிய விருதை 4 முறை பெற்ற பிரபல பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி (S.Janaki) பிறந்தநாள் இன்று (ஏப்ரல் 23). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
l ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள பள்ளபட்லா என்ற ஊரில் (1938) பிறந்தவர். மூன்று வயதில் தொடங்கி 10 வயது வரை இசை கற்றார். முதல் மேடை நிகழ்ச்சியில் பாடியபோது இவருக்கு 9 வயது.
l வி.சந்திரசேகர் என்ற கலைஞரின் நாடக இடைவேளைகளில்தான் முதலில் பாடத் தொடங்கினார். 1956-ல் அகில இந்திய வானொலி நடத்திய பாட்டுப் போட்டியில் 2-ம் பரிசு பெற்றார். இதைத் தொடர்ந்து சென்னை வந்தவர், ஏவி.எம். ஸ்டுடியோவில் ஒப்பந்த அடிப்படையில் பாடகியாக நியமனம் பெற்றார்.
l ‘விதியின் விளையாட்டு’ (1957) என்ற படத்தில் ‘பெண் என் ஆசை பாழானது’ என்பதுதான் இவர் பாடிய முதல் பாட்டு. அடுத்த நாளே ஒரு தெலுங்குப் படத்தில் பாடும் வாய்ப்பு கிடைத்து. கண்டசாலாவுடன் இணைந்து பாடினார்.
l முதல் ஆண்டிலேயே 6 மொழிகளில் 100 பாடல்களைப் பாடினார். கொங்கணி, துளு, சவுராஷ்டிரம், இந்தி, வங்காளம், சமஸ்கிருதம், சிங்களம், ஆங்கிலம், ஜப்பான், ஜெர்மனி ஆகிய மொழிகளிலும் பாடியுள்ளார். 17 மொழிகளில் பாடிய ஒரே பாடகி என்ற பெருமை பெற்றவர்.
l ‘கொஞ்சும் சலங்கை’ திரைப்படத்துக்காக பாடிய ‘சிங்கார வேலனே’ பாடல் இவரது வாழ்க்கையில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. இசைத்தட்டு விற்பனையிலும் இது சாதனை படைத்தது.
l ஏறக்குறைய அனைத்து இசையமைப்பாளர்களின் இசையிலும், அனைத்து பின்னணிப் பாடகர்களுடனும் இணைந்தும் பாடியுள்ளார். ‘இளையராஜா - எஸ்.பி.பாலசுப்ரமணியம் - எஸ்.ஜானகி’ கூட்டணி தென்னிந்திய இசைத் துறையில் தனி முத்திரை பதித்தது.
l பாடலில் பொதிந்துள்ள உணர்ச்சி மற்றும் நடிகைகளுக்கு ஏற்ற வகையில் குரலை மாற்றிப் பாடக்கூடியவர். குழந்தைக் குரலில் பாடுவதிலும் வல்லவர். இவர் பாடிய ‘தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே’, ‘செந்தூரப் பூவே’, ‘காற்றில் எந்தன் கீதம்’, ‘நெஞ்சினிலே நெஞ்சினிலே’, ‘ராதைக்கேற்ற கண்ணனோ’ போன்றவை காலத்தால் அழியாதவை.
l திரைப்படப் பின்னணிப் பாடல்கள், தனிப் பாடல்கள் என பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். தமிழ், தெலுங்கு மொழிகளில் பல பக்திப் பாடல்களை தானே எழுதி, இசையமைத்துப் பாடியுள்ளார். ஒரு தெலுங்குப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
l கலைமாமணி, கேரள மாநில சிறப்பு விருது பெற்றவர். சிறந்த பாடகிக்கான தேசிய விருது 4 முறை, கேரள அரசு விருது 14 முறை, ஆந்திர அரசு விருது 10 முறை, தமிழக அரசு விருது 7 முறை பெற்றவர். இலங்கையில் 1992-ல் இவருக்கு ‘ஞான கான சரஸ்வதி’ என்ற பட்டம் வழங்கப்பட்டது. 2013-ல் மத்திய அரசு பத்மபூஷண் விருது அறிவித்தது. மிகவும் தாமதமாக கிடைக்கும் கவுரவம் என்று கூறி அதை ஏற்க மறுத்து விட்டார்.
l அரை நூற்றாண்டுக்கு மேல் பாடிவரும் ஜானகி இன்று 78-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். தற்போது சென்னையில் மகனுடன் வசிக்கிறார்.
- ராஜலட்சுமி சிவலிங்கம்
No comments:
Post a Comment