Monday, May 23, 2016

முன்வரிசையில் சரத்... பின்வரிசையில் ஸ்டாலின்: ஜெ. பதவியேற்பு விழாவில் அவமதித்தாக கருணாநிதி குற்றச்சாட்டு

Return to frontpage

முதல்வர் பதவியேற்பு விழாவில் ஸ்டாலினுக்கு கூட்டத்தோடு கூட்டமாக இடம் போடப்பட்டு அமரவைத்தது ஜெயலலிதா திருந்தவில்லை என்பதையே காட்டுவதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''இன்று சென்னைப் பல்கலைக் கழக நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெற்ற முதல்வர், மற்றும் அமைச்சர்கள் பதவியேற்ற அரசு விழா நடந்தது.

அண்மையில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில், 89 இடங்களைப் பெற்று பிரதான எதிர்க் கட்சி வரிசையிலே அமரும் தகுதியைப் பெற்ற ஸ்டாலினுக்கு கூட்டத்தோடு கூட்டமாக இடம் போடப்பட்டது.

அதே தேர்தலில் தோற்றுப் போன சரத்குமாருக்கு முதல் வரிசையில் இடம் போட்டு - அமர வைத்து வேண்டுமென்றே திமுகவை திட்டமிட்டு அவமானப்படுத்திய ஜெயலலிதாவைப் பார்க்கும்போது இன்னும் அவர் திருந்தவில்லை, திருந்தப் போவதுமில்லை என்று தான் தெளிவாகப் புரிகிறது! தமிழ் மக்கள் அல்லவா திருந்த வேண்டும்'' என்று கருணாநிதி கூறியுள்ளார்.

தமிழகத்தில் முதல்வராக மீண்டும் ஜெ., பதவிப்பிரமாணம் செய்தார் கவர்னர்

சென்னை: தமிழகத்தில் மீண்டும் தொடர்ந்து ஜெ., முதல்வராக பதவியேற்றார். அவருக்கு கவர்னர் ரோசய்யா பதவிபிரமாணம் செய்து வைத்தார்.

தி.மு.க.,பொருளாளர் ஸ்டாலின், திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி, சென்னை முன்னாள் மேயரும்,எம்எல்.ஏ.,வுமான மா.சுப்பிரமணியம் , சேகர்பாபு, ஏ.வ வேலு, வாகை சந்திரசேகர், இந்திய கம்யூ., சார்பில் தா.பாண்டியன், பா.ஜ.,தரப்பில் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

பகல் 12 மணியளவில் சென்னை பல்கலை., நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடந்த விழா சென்னையில் எல்ஈடி மூலம் லைவ் வீடியோ காண்பிக்கப்பட்டது. பதவியேற்பு முன்னிட்டு 3 ஆயிரத்திற்கும் அதிமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். சென்னையில் கடற்கரை சாலை உள்ளிட்ட பல இடங்களில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டது.

குஜராத்தில் தகிக்கும் வெயில்: உருகும் தார்ச்சாலைகளில் சிக்கி மக்கள் அவதி

குஜராத் மாநிலத்தில் கொளுத்தும் வெயில் காரணமாக தார்ச் சாலைகள் உருகுகின்றன. உருகிய தார்களில் மக்களின் காலனிகள் சிக்கி அவர்கள் கீழே விழுகின்றனர். மேலும் வாகனங்களும் பிடிமானமின்றி வழுக்கிச் செல்கின்றன.

வல்சாத் பகுதியில் தார்ச்சாலைகள் உருகி, தார் குழம்பாக மாறி நிற்கிறது. சிலர் சாலையைக் கடக்காமல் வேறு பகுதிகளுக்குச் செல்கின்றனர். சிலர் துணிச்சலாகக் கடக்கின்றனர். அவ்வாறு சாலைகளைக் கடப்பவர்களின் செருப்பு, ஷூ போன்றவை தாரில் சிக்கிக் கொள்கின்றன. இதனால் மக்கள் அவதிப்படுகின்றனர். சிலர் காலணி மாட்டிக் கொள்வதால் தடுமாறி விழுகின்றனர்.

ஒரு பெண் கீழே விழுந்து விட்டார். அவரைக் காப்பாற்ற யாரும் முன்வரவில்லை. அவர் விபத்துக்கு உள்ளாவதற்கு சில நொடிகளுக்கு முன்புதான் அதே இடத்தில் ஒரு லாரி, சாலையில் டயர்கள் பிடிமானமின்றி வழுக்கிச் சென்றது.

வல்சாத் பகுதியில் நேற்று முன்தினம் 36 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. ஆமதாபாத்தில் 45 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. வெயில் கொடுமைக்கு நாடு முழுவதும் ஏராளமானவர்கள் உயிரிழந்துள்ளனர். நேற்று முன்தினம் உத்தரப்பிரதேச மாநிலம் பல்லியா பகுதியில் 2 பேர் உயிரிழந்தனர்.

ராஜஸ்தானின் சுரு, ஸ்ரீகங்கா நகர் பகுதியில் 49.2 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. அதேசமயம் வங்காள விரிகுடா பகுதியில் புயல் காரணமாக கடலோர பகுதிகளில் குறிப்பிடத்தக்க மழைப்பொழிவு இருந்தது.

தலைமை தேர்தல் அதிகாரி மீது வழக்கு:விஜயகாந்த், வைகோ ஆலோசனைதமிழக தலைமை தேர்தல் அதிகாரி லக்கானி மீது வழக்கு தொடர, விஜயகாந்தும், வைகோவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அ.தி.மு.க., - தி.மு.க.,வுக்கு போட்டியாக, ம.ந.கூ., - தே.மு.தி.க., - த.மா.கா., இணைந்து உருவாக்கிய கூட்டணி படுதோல்வியை சந்தித்துள்ளது. குறிப்பாக, கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான விஜயகாந்த், உளுந்துார்பேட்டை தொகுதியில், 'டிபாசிட்' இழந்து படுதோல்வி அடைந்துள்ளார்.மேலும் தே.மு.தி.க., போட்டியிட்ட, 104 தொகுதிகளிலும் டிபாசிட் இழந்துள்ளது. தேர்தல் தோல்வியால் விஜயகாந்த், வைகோ, வாசன், திருமாவளவன், முத்தரசன் மற்றும் ராமகிருஷ்ணனும் சோகமடைந்தனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, சென்னை கோயம்பேடு தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தில், ஆறு பேரும் ஆலோசனை நடத்தினர். இரண்டு மணிநேரஆலோசனையில், தலைமை தேர்தல் அதிகாரி மீது வழக்கு தொடர திட்டமிட்டுள்ளனர்.இதுகுறித்து, தே.மு.தி.க., வட்டாரத்தில் கூறப்படுவதாவது:பணப்பட்டுவாடா காரணமாகவே, கூட்டணிக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை என, விஜயகாந்த் உட்பட, கூட்டணி கட்சி தலைவர்கள் கருதுகின்றனர். தேர்தல் நிறுத்தப்பட்டுள்ள தஞ்சாவூர், அரவக்குறிச்சி போன்ற தொகுதிகளிலும் பணப்பட்டுவாடா நடந்துள்ளது.இதை காரணமாக்கி, அனைத்து தொகுதிகளிலும் நடந்து முடிந்த தேர்தலை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடர உள்ளனர். பணப்பட்டு வாடாவை தடுக்க தவறியதாக, தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி மீதும் வழக்கு தொடர முடிவெடுத்து உள்ளனர். இவ்வாறு அக்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.- நமது சிறப்பு நிருபர் -


நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகள், சட்டக் கல்லூரிகள் ஆகியவற்றை அடுத்த ஆண்டு முதல் தரவரிசைப்படுத்த மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சக அதிகாரி ஒருவர், தில்லியில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: நாடு முழுவதும் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்கள் தேசிய அளவில் தரவரிசைப் படுத்தப்பட்டன. அந்தப் பட்டியல் கடந்த மாதம் 4ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதுதொடர்பாக பல்வேறு கருத்துகள் பெறப்பட்டன. அதுதொடர்பாக, இம்மாத தொடக்கத்தில் அமைச்சக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அந்தக் கூட்டத்தில், மத்திய அரசின் உயர் கல்விக்கான செயலர் வி.எஸ்.ஓபராயும் பங்கேற்றார். இக்கூட்டத்தில், தரவரிசைப் பட்டியலில் மருத்துவக் கல்லூரிகள், சட்டக் கல்லூரிகள் ஆகியவற்றையும் சேர்ப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

புதுடெல்லி மருத்துவ படிப்புக்கான பொது நுழைவுத்தேர்வு விவகாரத்தில், அவசர சட்டத்துக்கு ஒப்புதல் பெறுவதற்காக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை மத்திய மந்திரி ஜே.பி. நட்டா இன்று சந்திக்கிறார். பொது நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கு ‘நீட்’ என்னும் தேசிய தகுதி நுழைவுத்தேர்வு நடத்தித்தான் மாணவர்களை சேர்க்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது. அதன்படி கடந்த 1–ந் தேதி நடந்த நுழைவுத்தேர்வை சுமார் 6½ லட்சம் மாணவர்கள் எழுதி உள்ளனர். ஜூன் 24–ந் தேதி இரண்டாவது கட்ட நுழைவுத்தேர்வு நடக்க உள்ளது. ஆனால் இப்படி நுழைவுத்தேர்வு நடத்தினால், அது கிராமப்புற மாணவர்களை பெரிதும் பாதிக்கும் என்று கருத்து எழுந்துள்ளது. நகர்ப்புற மாணவர்களுடன், சி.பி.எஸ்.இ., என்னும் மத்திய செகண்டரி கல்வி வாரிய பாடத்திட்ட மாணவர்களுடன் அவர்கள் போட்டி போட முடியாது என்பதால் இந்த நுழைவுத்தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு உள்பட 15 மாநிலங்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளன. அவசர சட்டம் இந்த ஆண்டு மட்டுமாவது பொது நுழைவுத்தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு பல தரப்பிலும் கோரிக்கைகள் வலுத்துள்ளன. இதையடுத்து மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பித்து, இந்த ஆண்டு மட்டும் மாநில கல்வி வாரியத்தின் கீழ் பிளஸ்–2 முடித்த மாணவர்களுக்கு, மாநில அரசு நடத்தி வரும் மருத்துவக் கல்லூரிகளில், பல் மருத்துவக்கல்லூரிகளில் பொது நுழைவுத்தேர்வு இன்றி மாணவர் சேர்க்கையை நடத்த முடிவு செய்தது. இந்த அவசர சட்டத்துக்கு மத்திய மந்திரிசபை கடந்த வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது. ஜனாதிபதி விளக்கம் கேட்கிறார் அந்த அவசர சட்டம் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் உடனே ஒப்புதல் அளித்து விடாமல் இது தொடர்பாக சட்ட நிபுணர்களிடம் கருத்து கேட்டுள்ளார். அதுமட்டுமின்றி, இந்த அவசர சட்டத்துக்கு என்ன அவசியம் வந்தது என்று விளக்கம் அளிக்குமாறு அவர் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திடமும் கேட்டுள்ளார். மந்திரி நேரில் விளக்கம் இதையடுத்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி. நட்டா இன்று (திங்கட்கிழமை) நேரில் சந்தித்து விளக்கம் அளிக்கிறார். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நாளை (செவ்வாய்க்கிழமை) சீனா செல்கிறார் என்பது நினைவு கூரத்தக்கது. எனவே, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று ஒப்புதல் அளித்து விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி அவர் ஒப்புதல் வழங்கி விட்டால் மருத்துவம், பல் மருத்துவ படிப்புக்கு பொது நுழைவுத்தேர்வு உண்டா, இல்லையா என்ற மாணவர்களின் குழப்பம் முடிவுக்கு வந்து விடும். மாநில கல்வி வாரியத்தின்கீழ் பிளஸ்–2 முடித்த மாணவர்கள் இந்த ஆண்டு பொது நுழைவுத்தேர்வு எழுத தேவை இருக்காது. மாநில அரசு மருத்துவக்கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் அரசுகளுக்குரிய ஒதுக்கீட்டு இடங்கள் ஆகியவற்றில் பொது நுழைவுத்தேர்வின்றி மாணவர் சேர்க்கை நடைபெற வழிபிறக்கும்.

தமிழக சட்டசபைக்கு நடந்த தேர்தலில், அ.தி.மு.க. 227 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சிகள் 7 தொகுதிகளிலும் போட்டியிட்டன. பணப்பட்டுவாடா புகாரால், அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய 2 தொகுதிகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் (ஜூன்) 13-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள 232 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில், அ.தி.மு.க. 134 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. இதைத்தொடர்ந்து, 6-வது முறையாக தமிழகத்தின் முதல்-அமைச்சராக ஜெயலலிதா இன்று (திங்கட்கிழமை) பதவி ஏற்கிறார். முன்னதாக, சென்னையில் கடந்த 20-ந் தேதி நடந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், சட்டசபை அ.தி.மு.க. தலைவராக (முதல்- அமைச்சர்) ஜெயலலிதா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் அவர் கவர்னர் கே.ரோசய்யாவை சந்தித்து புதிய அரசு அமைக்க தன்னை அழைக்குமாறு உரிமை கோரினார். கவர்னரும் புதிய அரசு அமைக்க ஜெயலலிதாவுக்கு அழைப்பு விடுத்தார். இதைத்தொடர்ந்து, மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சராக ஜெயலலிதா இன்று (திங்கட்கிழமை) பதவி ஏற்கிறார். சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் இன்று பகல் 12 மணிக்கு கோலாகலமாக நடைபெறும் பதவி ஏற்பு விழாவில், ஜெயலலிதாவுக்கு கவர்னர் கே.ரோசய்யா பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைக்கிறார். ஜெயலலிதா தனது அமைச்சரவையில், 28 அமைச்சர்களை நியமித்து உள்ளார். அவர்களும் இன்று பதவி ஏற்கிறார்கள். புதிய அமைச்சர்களுக்கும் கவர்னர் ரோசய்யா பதவிப்பிரமாணம் செய்துவைக்கிறார். ஜெயலலிதா, தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக பதவி ஏற்பது இது 6-வது தடவை ஆகும். ஏற்கனவே, 1991 முதல் 1996-ம் ஆண்டு வரையும், 2001 முதல் 2006-ம் ஆண்டு வரையும், 2011 முதல் 2016 வரையும் ஜெயலலிதா முதல்- அமைச்சராக இருந்துள்ளார். இடையில் 2 முறை அவர் பதவி விலக நேரிட்டு, மீண்டும் முதல்-அமைச்சராக பொறுப்பு ஏற்றுக்கொண்டார். ஜெயலலிதா 1991-ம் ஆண்டு முதல் முறையாக முதல்- அமைச்சர் ஆனபோதும் இதே பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில்தான் அவர் பதவி ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். பதவி ஏற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. விழா நடைபெறும் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபம் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. பதவி ஏற்பு விழாவில் அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொள்கின்றனர். இதற்காக, 3,150 பேருக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டு உள்ளது. புதிய எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்களும் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்கின்றனர். தமிழக அரசியல் தலைவர்களுக்கு அதிகாரிகள் மூலம் நேரில் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு உள்ளது. இதுதவிர, பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய மந்திரிகள் அருண் ஜெட்லி, ரவிசங்கர் பிரசாத், ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக், ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, மேற்கு வங்காள முதல்- மந்திரி மம்தா பானர்ஜி, உத்தரப்பிரதேச முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ், பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் உள்பட பல்வேறு மாநில முதல்-மந்திரிகள், அரசியல் தலைவர்களுக்கும் அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டு உள்ளன. பிரதமர் நரேந்திர மோடி ஈரான் நாட்டில் சுற்றுப்பயணம் செய்து வருவதால், அவருக்கு பதிலாக மத்திய மந்திரிகள் அருண் ஜெட்லி, வெங்கையா நாயுடு, ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள். தமிழகத்தை சேர்ந்த மத்திய மந்திரிகள் பொன்.ராதாகிருஷ்ணன், நிர்மலா சீதாராமன் ஆகியோரும் கலந்துகொள்கிறார்கள். முதலமைச்சர் ஜெயலலிதாவின் பதவி ஏற்பு விழா நிகழ்ச்சிகள் 32 மாவட்டங்களிலும் எல்.இ.டி. அகன்ற திரையில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. பதவி ஏற்பு விழா நிறைவடைந்ததும், மதியம் 12.45 மணிக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா சென்னை புனித ஜார்ஜ் கோட்டைக்கு செல்கிறார். அங்கு, அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட இருக்கிறது. முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை புதிதாக பதவி ஏற்ற அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் வரவேற்கின்றனர். தனது அறைக்கு சென்று பணியை தொடங்கும் முதல்- அமைச்சர் ஜெயலலிதா, 2 முக்கிய கோப்புகளில் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்திற்கும், படிப்படியாக மதுவிலக்கு என்ற அறிவிப்பிலும் அவர் கையெழுத்திடுவார் என தெரிகிறது. பின்னர், போயஸ் கார்டன் இல்லத்திற்கு திரும்பும் முதல்- அமைச்சர் ஜெயலலிதா, மதியம் 1.30 மணிக்கு கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு செல்கிறார். அங்கு தற்காலிக சபாநாயகராக செம்மலை பதவி ஏற்கும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார். இன்னும் ஒரு வாரத்தில் கூடும் சட்டசபை கூட்டத்தில், தற்காலிக சபாநாயகர் செம்மலை புதிய எம்.எல்.ஏ.க்களுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைக்க இருக்கிறார். அதற்கான தேதியும் இன்று முடிவு செய்யப்பட இருக்கிறது.

NEWS TODAY 2.5.2024