Saturday, August 27, 2016

கற்பை நிர்ணயிக்க நாம் யார்?

கற்பை நிர்ணயிக்க நாம் யார்?

Return to frontpage


Inline image 1

கன்னித்தன்மைப் பரிசோதனை என்பது பெண்களுக்கு எதிரான மனம் மற்றும் உடல்ரீதியான கொடுமை

ஆணாதிக்கம் மிக்க சமூகத்தில் பெண்களின் ஒழுக்கத்தைச் சந்தேகப்படுவது, எந்தக் குற்றவுணர்ச்சியும் இல்லாமல் அரங்கேற்றப்படும் கொடூரம். பெண்களின் ‘கற்பை’ச் சோதனையிடுவதும் நிர்ணயிப்பதும், அதைக் காரணமாகச் சொல்லி அவர்களின் வாழ்க்கையையே சிதைப்பதும் இன்னமும் பல இடங்களில் நடப்பதுதான் இன்னும் வேதனை!

சமீபத்தில் மகாராஷ்டிர மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தின் நாசிக்கில், போலீஸ் வேலையில் சேரப் பயிற்சி எடுத்துக்கொண்டிருந்த 25 வயதுப் பெண் ஒருவருக்குத் திருமணம் நடந்தது. மாப்பிள்ளைக்கு இது இரண்டாவது திருமணம். இருவரும் ‘கஞ்சர்பாத்’ என்ற சமூகத்தைச் சேர்ந்தவர்கள். கடுமையான விதிமுறைகளைப் பின்பற்றும் சமூகம் அது. கண்காணிக்கவும், தண்டனை வழங்கவும் ‘சாதிப் பஞ்சாயத்து’ உள்ளது. அதை மீறி யாரும் காவல்துறைக்கோ நீதிமன்றத்துக்கோ செல்ல முடியாது. திருமணமான அன்றே தனது மனைவியை விவாகரத்து செய்தார் அந்த மனிதர், மனைவி கன்னித்தன்மை இழந்தவர் என்ற புகாருடன். அவருக்குத் துணை நின்றது, அச்சமூகத்தின் விநோதமான ‘விதிமுறை’.

அந்தச் சமூகத்தில் பெண்களின் கன்னித்தன்மைக்கு ‘சாதிப் பஞ்சாயத்து’அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. முதலிரவின்போது, தம்பதிகள் இருக்கும் அறைக்கு வெளியில் பஞ்சாயத்தார் காத்திருப்பார்கள். வெண்மையான துணி விரிப்பின் மீதுதான் முதலிரவு நடக்கும். அவர்களைப் பொறுத்தவரை, துணிவிரிப்பில் படும் ரத்தக் கறைதான் மணப்பெண்ணின் கன்னித்தன்மையை நிரூபிக்கும் சோதனை. உறவின்போது மனைவிக்கு ரத்தம் வரவில்லை. எனவே, அவள் ‘கன்னித்தன்மை அற்றவள்’ என்றார் அந்த நபர். அவருக்கு இது இரண்டாவது திருமணம். இரண்டாவது மனைவியும் கன்னியாகத்தான் வேண்டும். என்ன புனிதம் பாருங்கள்!

கண்டுகொள்ளப்படாத கண்ணீர்

தான் கன்னிதான் என்றும், கடுமையான உடற்பயிற்சி காரணமாக உடலில் மாற்றம் ஏற்பட்டு ரத்தம் வராமல் இருந்திருக்கலாம் என்றும் கதறினார் அந்தப் பெண். அதைக் கேட்பதற்கு யாரும் தயாராக இல்லை. தாலி கட்டிய ஒரே நாளில் திருமணத்தை ரத்து செய்துவிட்டது பஞ்சாயத்து. அடுத்த நாள், போலீஸில் புகார் செய்ய மணப் பெண்ணும் அவர் தாயாரும் தயாரானபோது, சாதிக் கட்டுப்பாட்டுக்குப் பயந்த அப்பெண்ணின் தந்தை, அவர்களிடமிருந்த செல்பேசியைப் பிடுங்கிக்கொண்டு இருவரையும் அறையில் பூட்டிவைத்தார். சம்பவத்தைக் கேள்வியுற்ற பெண்கள் அமைப்பு மூலம்தான், விஷயம் வெளியில் வந்தது.

கற்பு என்பது மனம் தொடர்பானது. கன்னித்தன்மை என்பது உடல் சம்பந்தப்பட்டது. தன் விருப்பம் இல்லாமல், சூழ்நிலை காரணமாகப் பலாத்காரம் செய்யப்பட்டவரைக் கற்பிழந்தவராகக் கருத முடியாது. கற்பும் கன்னித்தன்மையும் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானது. அதனால்தான் ‘கற்பு நிலை என்று சொல்லவந்தார் / இரு கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்’ என்றார் பாரதி. ஆனால், கற்பும் கன்னித்தன்மையும் பெண்ணுக்கு மட்டுமே உரியது என்று பொதுப் புத்தியில் உறைந்துபோயிருக்கிறது.

‘கஞ்சர்பாத்’ சமூகத்தில் மட்டுமல்ல, பல சமூகங்களில் இந்தக் கொடூரமான முட்டாள்தனம் பின்பற்றப்படுகிறது. சோதனையில் தோல்வியுறும் பெண்ணின் திருமணம் உடனடியாக ரத்து செய்யப்படும். அவர் யாருடன் முதல் உறவு கொண்டார் என்று கேட்டு, அவரைச் சித்ரவதையும் செய்வார்கள். அவர்களைப் பொறுத்தவரை கன்னிப் பெண் என்றால், முதல் உறவின்போது ரத்தம் வர வேண்டும். சைக்கிள் ஓட்டுவதன் மூலமோ அல்லது உடற்பயிற்சியின்போதோ கன்னித்திரை கிழியும் என்பதை ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள். ஏற்கெனவே, உறவுகொண்டதாக ஒப்புக்கொண்டால், அந்தப் பெண்ணின் தந்தைக்குப் பஞ்சாயத்து அபராதம் விதிக்கும்.

இதுதொடர்பாக வந்த புகார்களைத் தொடர்ந்து, விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க மாநில போலீஸாருக்கு மகாராஷ்டிர பெண்கள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நகைமுரண் என்னவென்றால், இந்தியாவிலேயே முதன்முதலாக, சமூகப் புறக்கணிப்புக்கு எதிராகவும், சாதிப் பஞ்சாயத்துகளுக்கு எதிராகவும் 2016-ல் சட்டம் நிறைவேற்றியது மகாராஷ்டிர மாநிலம்தான். இந்தச் சட்டம் அமலுக்கு வந்த பிறகு, சட்டத்துக்குப் புறம்பான இது போன்ற அமைப்புகளுக்கும், மனிதத்தன்மையே இல்லாத விதிகளுக்கும் முடிவு கட்டப்படலாம்.

அநாகரிகம்

2013-ல் மத்தியப் பிரதேச முதல்வர் ஷிவராஜ் சிங் சவுஹான் தலைமையில், ‘கன்யா தான் யோஜனா’ என்ற திட்டத்தின்படி 100-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு இலவசமாகத் திருமணம் செய்துவைக்கப்பட்டது. அப்போது, அப்பெண்களில் பலர், மாவட்ட அதிகாரிகளால் கன்னித்தன்மை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்கள். 2009-லும் இதே போன்ற சம்பவம் நடந்திருக்கிறது.

இந்தியாவில், சமீபகாலம் வரை பாலியல் வல்லுறவு வழக்குகளில், பாதிக்கப்பட்ட பெண்களுக்குக் கன்னித்தன்மை பரிசோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில், ‘கன்னித்தன்மை அற்றவர்கள் உறவுக்குச் சம்மதித்திருக்கலாம் என்ற அனுமானம் தவறானது. எனவே, கன்னித்தன்மை பரிசோதனையை ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று 2013-ல் பி.எஸ்.சவுஹான் மற்றும் எம்.எம்.கலிபுல்லா ஆகியோரைக் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு சொல்லிவிட்டது. ஆனாலும், சில நீதிமன்றங்கள் கன்னித்தன்மை பரிசோதனையைப் பின்பற்றுகின்றன.

பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளானவர்களிடம் அவர்களது கன்னித்தன்மையை உறுதிசெய்ய பெண்களின் பிறப்பு உறுப்பில் நடத்தப்படும் இரு விரல் சோதனை அறிவியல் பூர்வமற்றது என்று கூறி அதைத் தடைசெய்தது மத்திய சுகாதார அமைச்சகம்.

பல நாடுகளில் கன்னித்தன்மை பரிசோதனை உள்ளது. பெரும்பாலும் பெண்களின் கன்னித்தன்மை குறித்துச் சந்தேகம் எழுப்புவது கணவர்கள்தான். சில நாடுகளில் அரசுத் துறைகளே அந்தக் கேள்வியைக் கேட்கின்றன. தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில், ஒவ்வொரு வருடமும் ‘ரீட் டான்ஸ்’ என்ற அரை நிர்வாணக் கலை நிகழ்ச்சி நடக்கும். அதில் கலந்துகொள்ளப் பெண்கள் கன்னித்தன்மை சான்றிதழ் கொடுக்க வேண்டும். 2016-ம் ஆண்டு புதிய விதியின்படி, இந்தோனேசிய ராணுவத்தில் சேர, ஒரு பெண் கன்னித்தன்மையுடன் இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டுவரை அந்நாட்டு போலீஸில் பெண்கள் சேர கன்னித்தன்மை சான்றிதழ் கட்டாயமாக இருந்தது. சர்வதேச மனித உரிமை இயக்கம் ஆட்சேபணை செய்ததால் இந்த நிபந்தனை நீக்கப்பட்டது.

பட்டியல் இன்னும் முடியவில்லை. ஈரானில், ஏடெனா ஃபர்கடானி என்ற கார்ட்டூனிஸ்ட், தன் ஆண் வழக்கறிஞருடன் கைகுலுக்கினார் என்ற குற்றச்சாட்டின்பேரில், கன்னித்தன்மை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். 1970-களில் திருமண விசாவில் பிரிட்டனுக்கு வந்த வெளிநாட்டுப் பெண்களுக்கு அந்த நாட்டு அரசு கன்னித்தன்மை பரிசோதனை நடத்திய வரலாறு உண்டு.

பெண்கள் உலகமெங்கும், எல்லாத் துறைகளிலும் பல தடைகளை உடைத்து முன்னேறி நாட்டை ஆள்கிறார்கள். இயக்கங்களை வழிநடத்துகிறார்கள். எத்தனையோ சாதனைகளைச் செய்துவருகிறார்கள். ஆனால், திருமணம் என்று வரும்போது, தங்கள் ஒழுக்கத்தை நிரூபிக்க இப்படியெல்லாம் நிர்ப்பந்திக்கப் படுகிறார்கள். கன்னித்தன்மை பரிசோதனை என்பது பெண்களுக்கு எதிரான மனம் மற்றும் உடல்ரீதியான கொடுமை என்பதைச் சமூகம் உணர வேண்டும். இது அவர்களது தனி உரிமையில் தலையிடும் விஷயம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். உண்மையில், இதற்கெனத் தனியான சட்டமோ அல்லது சிறப்புச் சட்டமோ தேவையில்லை. இருக்கும் சட்டங்களின் அடிப்படையில் கடுமையான நடவடிக்கை எடுக்க முடியும். அதைச் செய்ய வேண்டியது அரசின் பொறுப்பு மட்டுமல்ல, மக்களின், சமுதாயத்தின் பொறுப்பும்கூட!

- என்.ரமேஷ், வழக்கறிஞர்.

தொடர்புக்கு: nrameshadvocate@gmail.com

Wednesday, August 24, 2016

சிந்து பெயரை மறந்த ஹரியானா முதல்வர்!

கர்நாடகாவை சேர்ந்த வெள்ளி வாங்கிய பெண்ணாம்... சிந்து பெயரை மறந்த ஹரியானா முதல்வர்!


சண்டீகர்: சாக்ஷி மாலிக்கிற்கு நடந்த பாராட்டு விழாவின்போது, பி.வி.சிந்து பெயரை மறந்ததோடு, அவரை கர்நாடகாவை சேர்ந்த வீராங்கனை என கூறியுள்ளார் ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார்.

ஹரியானாவை சேர்ந்த சாக்ஷி மாலிக், சமீபத்தில் நிறைவடைந்த ரியோ ஒலிம்பிக், மல்யுத்தத்தில் வெண்கல பதக்கம் வென்றார். சொந்த ஊர் திரும்பிய சாக்ஷிக்கு இன்று பாராட்டு விழா நடந்தது. அதில் பங்கேற்ற முதல்வர் மனோகர் லால் கட்டார், சாக்ஷிக்கு ரூ.2.5 கோடி பரிசு வழங்கினார்.

விழாவில் மனோகர் கட்டார் பேசுகையில், பேட்மின்டனில் வெள்ளி வென்ற சிந்து பெயரை குறிப்பிட நினைத்தார். ஆனால் பெயர் மறந்துவிட்டது. எனவே, கர்நாடகாவை சேர்ந்த வெள்ளி வென்ற வீராங்கனைக்கும் வாழ்த்து என எதையோ கூறி சமாளித்தார்.

உண்மையில், சிந்து, ஹைதராபாத்தை சேர்ந்தவர். எனவே அவர் தெலுங்கானாவுக்கு சொந்தமா, ஆந்திராவுக்கு சொந்தமா என இரு மாநிலத்தவர்களும் அடித்துக்கொள்கிறார்கள். இதில் ஹரியானா முதல்வர் புது பஞ்சாயத்தாக கர்நாடகாவையும் இழுத்துவிட்டுள்ளார்.

மத்திய விளையாட்டு துறை அமைச்சர் விஜய் கோயல், ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர் பெயரை தவறாக உச்சரித்து சர்ச்சையில் சிக்கியது நினைவிருக்கலாம்.


மூலக்கதை

நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் போக்குவரத்து ஊழியர்களின் வழக்குகள்:

நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் போக்குவரத்து ஊழியர்களின் வழக்குகள்: நிரந்தர உத்தரவு இருந்தும் பலனில்லை

கி.மகாராஜன்

அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு தவணை முறையில் பணப்பலன்கள் வழங்கலாம் என உயர் நீதிமன்ற அமர்வின் உத்தரவு இருந்தபோதிலும், தனித் தனியாக உத்தரவு பெற வேண்டும் என ஊழியர்கள் கட்டாயப் படுத்தப்படுகின்றனர். இதன் காரணமாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தேவையில்லாமல் வழக்குகள் குவிந்து வருகின்றன.

அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு ஓய்வுபெறும் நாளில் பணிக் கொடை, விடுமுறை நாள் ஊதியம் உள்ளிட்ட பணப்பலன்கள் வழங்கப்படுவதில்லை. இதனால் ஓய்வு பெற்ற பிறகும் போக்குவரத்துக் கழக அலுவலகங்களுக்கு அலைந்து வருகின்றனர். நஷ்டத்தை காரணம் காட்டி பணப்பலன்களை வழங்காமல் போக்குவரத்துக் கழ கங்கள் இழுத்தடித்து வருகின்றன.

இவ்வாறு பாதிக்கப்பட்ட நூற் றுக்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் பணப்பலன்களை கேட்டு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை மொத்தமாக விசாரித்த உயர் நீதி மன்ற அமர்வு, ஓய்வூதியர்களுக்கு 12 தவணைகளில் 6 சதவீத வட்டியுடன் பணப்பலன்களை வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

ஊழியர்களுக்கு பணப்பலன்கள் வழங்கும் விவகாரத்தில் உயர் நீதிமன்ற அமர்வின் இந்த உத்தரவே இறுதியானது. ஆனால், அதன்படி ஓய்வூதிய பணப்பலன்களை போக்குவரத்துக் கழக நிர்வாகம் வழங்கவில்லை. அதற்கு பதிலாக ஓய்வுபெறும் ஒவ்வொருவரும் பணப்பலன்களுக்காக நீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்து தனித் தனியாக உத்தரவு பெற்று வருமாறு கட்டாயப்படுத்தப்படுவதாகக் கூறப் படுகிறது.

வழக்குகள் குவிகின்றன

ஓய்வுபெற்ற ஊழியர்கள் அனை வரும் நீதிமன்றத்துக்கு செல்வ தால் அவர்களுக்கு வீண் சிரமம் ஏற்படுகிறது. உயர் நீதிமன்றத்தில் தேவையில்லாமல் வழக்குகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. உயர் நீதிமன்ற மதுரை கிளை யில் மட்டும் கடந்த 6 மாதங்களில் போக்குவரத்துக் கழக ஊழியர் களின் பணப்பலன்கள் தொடர்பாக 5,000-க்கும் அதிகமான வழக்குகள் விசாரிக்கப்பட்டு தவணை முறை யில் பணப்பலன்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளன. தினமும் 50 வழக்குகள் விசாரணைக்கு பட்டியலிடப்படுகின்றன.

போக்குவரத்துக் கழக ஊழியர் களின் பணப்பலன் உட்பட ஏற் கெனவே முடிவான விவகாரம் தொடர்புடைய வழக்குகள் உயர் நீதிமன்றத்தின் வேலைப்பளுவை வும், நிலுவை வழக்குகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்க செய்கிறது. இந்த வழக்குகளால் உயர் நீதிமன்றத்தின் நேரம் வீணடிக்கப்படுகிறது. ஏற்கெனவே நீதிபதிகளின் எண்ணிக்கை குறை வாக உள்ள நிலையில், மற்ற வழக்குகளை விசாரிக்க நேரமில் லாத நிலை ஏற்படுகிறது.

இதுகுறித்து போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்ற பணியாளர்கள் சம்மேளன பொதுச் செயலாளர் இளங்கோவன் கூறியதாவது:

மதுரை கோட்டத்தில் 2012-ல் ஓய்வுபெற்ற 3,000 பேருக்கு இன்னும் பணப்பலன்கள் வழங்கப் படவில்லை. இவர்களில் 1,500 பேர் வழக்கு தொடர்ந்துள்ளனர். மீதமுள்ளவர்களையும் நீதிமன்றத் தில் வழக்கு தொடர வைப்பதற்காக திடீர் புரோக்கர்கள் உருவாகி உள்ளனர். உயர் நீதிமன்ற அமர்வின் இறுதி உத்தரவு அடிப்படையில் போக்குவரத்துக் கழக ஊழியர் களுக்கு தவணை முறையில் பணப்பலன்களை வழங்க வேண் டும். இது தொடர்பாக உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தமிழக அரசு, அரசாணை வெளியிட வேண்டும் என்றார்.

தடை செய்யப்பட்ட இணையதளங்களை பார்த்தால் 3 ஆண்டு சிறை தண்டனை

டொரண்ட் போன்ற தடை செய்யப் பட்ட இணையதளங்களைப் பார்த் தால் 3 ஆண்டு சிறை, ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

நாடு முழுவதும் ஆபாச இணையதளங்களைத் தடை செய்வது குறித்து ஆலோசித்து வந்த மத்திய அரசு தற்போது டொரண்ட் போன்ற இணையதளங் களையும் முடக்க பரிசீலித்து வரு கிறது. இந்நிலையில் படைப்பாளி களைப் பாதிக்கும் டொரண்ட் போன்ற தடை செய்யப்பட்ட இணையதளங்களைப் பார்ப்ப வருக்கு 1957-ம் ஆண்டில் இயற்றப் பட்ட இந்திய காப்புரிமை சட்டத் தின் கீழ் 3 ஆண்டுகள் சிறை தண் டனையும், ரூ.3 லட்சம் வரை அபராதமும் விதிக்கலாம் என தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் தடை செய்யப்பட்ட இணையதளங்களுக்குள் செல் வதற்கு முன்னர் அது குறித்து எச்சரிக்கையும் வழங்கப்படும். அதை மீறி உள்ளே சென்று தகவல் களைப் பகிர்ந்து கொள்வது, தர விறக்கம் செய்வது, பார்ப்பது, இணையத்தில் பதிவிடுவது இந்திய காப்புரிமை சட்டத்தின் கீழ் குற்றமாக கருதப்படும் என்றும் தொலைதொடர்பு துறை தெரிவித்துள்ளது

பெண் பொறியாளர் கொலை வழக்கு: 3 வட மாநில இளைஞர்களின் ஆயுள் தண்டனை உறுதி - மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

பெண் பொறியாளர் கொலை வழக்கு: 3 வட மாநில இளைஞர்களின் ஆயுள் தண்டனை உறுதி - மேல்முறையீட்டு மனு தள்ளுபடி


ஐடி பொறியாளர் உமாமகேஸ்வரி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் வட மாநில இளைஞர்கள் 3 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்துள்ள உயர் நீதிமன்றம், இறந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஐடி பொறியாளர் உமா மகேஸ்வரி (23). இவர் சென்னை சிறுசேரி சிப்காட் வளாகத்தில் உள்ள டிசிஎஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். 2014-ம் ஆண்டு பிப்ரவரி 13-ம் தேதி வேலைக்குச் சென்ற உமா மகேஸ்வரி வீடு திரும்பவில்லை. பிப்ரவரி 22-ம் தேதி சிப்காட் வளாகத்தில் உள்ள முட்புதரில் பலாத்காரம் செய்யப்பட்ட நிலை யில் சடலமாக மீட்கப்பட்டார்.

சிபிசிஐடி போலீஸார் விசா ரணை நடத்தி மேற்கு வங்கத்தைச் சேர்ந்த உத்தம் மண்டல்(23), ராம் மண்டல்(22), உஜ்ஜல் மண்டல்(23) ஆகிய 3 இளை ஞர்களை கைது செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த செங்கல்பட்டு அமர்வு நீதிமன்றம் 3 இளைஞர்களுக்கும் கடந்த 2014 நவம்பரில் ஆயுள் தண்டனை விதித்தது. இந்த உத்தரவை எதிர்த்து 3 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

இந்த மனு மீதான விசாரணை ஏற்கெனவே நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, வி.பாரதிதாசன் ஆகி யோர் முன்பு நடந்தது. நீதிபதிகள், இந்த வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை தள்ளி வைத்தனர்.இந்நிலையில் நேற்று இந்த வழக்கில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘‘குற்றவாளிகள் மீது வலுவான ஆதாரங்கள் உள்ளன. எனவே அவர்களுக்கு கீழ்நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை ரத்து செய்ய முடியாது. இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றத்துக்காக ஆயுள் தண்டனையை உறுதி செய்கிறோம். ஆகவே மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. அதேநேரம், உமாமகேஸ்வரியை இழந்து வாடும் அவரது குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் இழப்பீட்டை 4 மாதங்களுக்குள் காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி வழங்க வேண்டும்’’ என உத்தரவிட்டனர்.
Keywords: ஐடி பொறியாளர் உமாமகேஸ்வரி, பலாத்காரம் செய்துகொலை, 3 வட மாநில இளைஞர்கள், ஆயுள் தண்டனை உறுதி, மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

வண்டலூர் ராஜநாகம் உயிரிழந்தது ஏன்?



வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இரண்டு இராஜநாகங்கள் பாதுகாக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் கடந்த 19-ம் தேதி, அதில் ஒரு ஆண் ராஜநாகம் உயிரிழந்தது. மிகவும் அருகிவரும் உயிரினங்களுள் ஒன்றான இராஜநாகம் உயிரிழந்தது, விலங்குகள் ஆர்வலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. என்ன நடந்தது என வண்டலூர் பூங்கா நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டோம்.


"இறந்த ஆண் இராஜநாகம், 2015 அக்டோபர் மாதம், கர்நாடகாவின் பிலிக்குலா பூங்காவில் இருந்து இங்கு கொண்டுவரப்பட்டது. இரண்டு இராஜநாகங்கள் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்தன. அதில் ஒன்றுதான் தற்போது இறந்துள்ளது. பாம்புகள் வளரும் போது, தோலுரிப்பது இயல்பு. பாம்புகள் வளர, வளர தோல் உரிப்பதும் கூடும். இது இயற்கையாக நடக்கும் நிகழ்வு. ஆனால் இந்த இராஜநாகம் இப்படி தோல் உரிக்கவில்லை. இதனால் தலையின், கண் பகுதியையும் சேர்த்து தோல் மூடியது. எனவே பாம்பினால், இரையை எடுத்துக் கொள்ள முடியவில்லை. இதுதான் பாம்பின் இறப்பிற்கு காரணம். தோலுரிப்பது என்பது இயற்கையாக நிகழ வேண்டும். ஆனால், இந்த இராஜநாகத்திற்கு தோல் உரியவில்லை. எனவே அதற்கு உதவுவதற்காக அதன் மீது வெந்நீர் தெளிப்பது போன்ற விஷயங்களை செய்து வந்தோம். ஆனாலும் அவை பலனளிக்கவில்லை. தோல் உரியவில்லை என்பதற்காக நாம் செயற்கையாக அதைச் செய்யவும் முடியாது. மற்ற பாம்புகளைப் போல, ராஜநாகங்களை கையில் எடுத்தெல்லாம் கையாளவும் முடியாது. மிகவும் விஷம் அதிகமான பாம்பு இராஜநாகம். அதற்கு விஷமுறிவு மருந்தே கிடையாது.



ஒருவேளை தலைப் பகுதியில், தோல் உரிந்து, உடல்முழுக்க நிகழாமல் இருந்தால் கூட , மீதித் தோலை உரிப்பதற்காக நாம் உதவ முடியும். ஆனால் இந்த இராஜநாகத்திற்கு தலையிலும் அது நிகழவில்லை. எனவே நாம் செயற்கையாக அதைச் செய்யும் போது, அதன் கண்களும் சேர்ந்து உரிந்திட வாய்ப்புண்டு. அது மேலும் பாம்பிற்கு சிக்கலை ஏற்படுத்தும். எனவே இந்த மரணம் இயற்கையாக நடந்த ஒரு விஷயம்தான். தகுந்த காலநிலை, உணவு, பராமரிப்பு இல்லாமல் எந்த விலங்காவது இணை சேருமா? ஆனால் இங்கே எத்தனையோ மான்கள், உயிரினங்கள் புதிதாகப் பிறக்கின்றன. பூங்காவைப் பொறுத்தவரை இதுதான் பெரிய விஷயம். ஆனால் இராஜநாகம் என்பது அரிதான விலங்குகளில் ஒன்று என்பதால் இது மட்டும் அதிக கவனம் பெறுகிறது" எனக் கூறினர்.

இராஜநாகங்கள் மிகவும், குளிர்ந்த இடங்களில் மட்டுமே இருக்கும். பசுமை மாறாக் காடுகள்தான் இவற்றின் முக்கியமான வாழ்விடம். ஒரு காலத்தில், அதிகம் வேட்டையாடப்பட்ட இனம் என்பதால், தற்போது வன உயிரினங்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வைத்து பாதுகாக்கப்படுகிறது. இந்த இராஜநாகங்களின் சிறப்பு குறித்து, கோவை 'ஓசை' அமைப்பைச் சேர்ந்த திரு.காளிதாஸ் அவர்களிடம் பேசினோம்.

"நச்சுபாம்புகளிலேயே மிகவும் பெரிய பாம்பு, இந்த இராஜநாகம். இந்தியாவில் பல விஷப்பாம்புகள் இருந்தாலும் கூட, கட்டுவிரியன், கண்ணாடி விரியன், சுருட்டை விரியன் மற்றும் நாகப்பாம்பு ஆகிய நான்கு வகைப் பாம்புகளால்தான் 95% உயிரிழப்புகள் நிகழ்கின்றன. இந்த நான்கு வகைப் பாம்புகளுக்கும் விஷமுறிவு மருந்து உண்டு. ஆனால் அதைவிடப் பல மடங்கு விஷமுள்ள, இராஜநாகத்திற்கு விஷமுறிவு மருந்தே கிடையாது. அதற்குக் காரணம் கண்டுபிடிக்க முடியாதது அல்ல. கடந்த 50 ஆண்டுகளில் ஒருவர் கூட, ராஜநாகம் கடித்து இறந்ததாக வரலாறு இல்லை. இதனை 'Gentle Man Snake' என்பார்கள். இதுதான் நிஜமான நல்லபாம்பு! அதுமட்டுமில்லாமல் பாம்புகளை மட்டுமே, உணவாகக் கொள்ளக் கூடிய ஒரு பாம்பு இது. அதே போல கூடுகட்டி, முட்டையிட்டு, அடைகாக்கும் ஒரே பாம்பு இந்த இராஜநாகம்தான்.

பெண் இராஜநாகம், முட்டையிட்டு 100 நாட்கள் வரை அடைகாக்கும். அதுவும் உணவு எதுவும் உட்கொள்ளாமல் அடைகாக்கும். பெண் ராஜநாகம், முட்டையில் இருந்து நாளை குட்டிகள் வெளிவரும் என்ற நிலையில், இன்று கூட்டை விட்டு வெளியேறிவிடும். அதன்பிறகு அது கூட்டிற்கு திரும்பாது. காரணம் என்ன தெரியுமா? ஒருவேளை பசியில், தனக்கே தெரியாமல் தனது குட்டிகளையே உண்டுவிடக் கூடாதே என்பதற்காகத்தான். அந்த அளவிற்கு தாய்மை உணர்வு நிறைந்த உயிரினமும் கூட! இவை மழைக் காடுகளில் அதிக அளவில் காணப்படும். கர்நாடாகாவில் ஆகும்பே என்ற இடத்தில் இவை அதிகளவில் காணப்படுகின்றன" எனக் கூறினார்.

சென்னையை எப்படி கொண்டாட வேண்டும் தெரியுமா?



ஃப்ரான்சிஸ் டே என்ற ஆங்கிலேயே கிழக்கிந்திய கம்பெனியின் ஏஜென்ட் சென்னையில் கோட்டை கட்டுவதற்கு ஒப்பந்தம் போட்ட நாள், 1639, ஆகஸ்ட், 22. அந்த நாளைத்தான் சென்னை தினம் எனக் கொண்டாடுகிறோம். ஆனால், அந்த வெள்ளைக்காரன் ஒப்பந்தம் போடுவதற்கு முன்பே சென்னை இருக்கத்தானே செய்தது என ஆங்காங்கே பொருமுகிறவர்கள் இருக்கிறார்கள்.

அதுவும் இல்லை என்றால் சென்னையைக் கொண்டாட வாய்ப்பே ஏற்பட்டு இருக்காதே... இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை கதையாக அதைக் காரணமாக வைத்தாவது சென்னையைக் கொண்டாடலாமே என்கிற ஏக்கப் பெருமூச்சும் கேட்கிறது.

இருக்கட்டும். சென்னையை எப்படிக் கொண்டாடுவது எனப் பார்ப்போம்.

உண்மையில் சென்னையைக் கொண்டாடுவது கட்டடங்களைக் கொண்டாடுவது மட்டுமல்ல; முக்கியமாக அதன் மக்களைக் கொண்டாடுவது. சென்னையின் மக்கள் என்பவர் யார் என்பதுதான் அடுத்து எழும் கேள்வி.
இதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்
தலைமைச் செயலக வளாகத்தில் மினி எமர்ஜென்சி? 1000 போலீசார் குவிப்பு!

தமிழ்நாடு சட்டமன்றம் அமைந்துள்ள தலைமைச் செயலகத்தில் நான்கு நுழைவாயில்களிலும் 1000 போலீசார் குவிக்கப்பட்டு,பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் செய்தி சேகரிக்க செல்லும் பத்திரிகையாளர்களுக்குக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது விவாதப் பொருளாக மாறியுள்ளது. Police in secretariatMore than 1000 police deployed at TN Secretariat | தலைமைச் செயலக வளாகத்தில் மினி எமர்ஜென்சி? 1000 போலீசார் குவிப்பு! - VIKATAN


சென்னை என்கிற இந்த பரந்த நிலப்பரப்பு, பல நூறு கிராமங்களை உள்ளடக்கியது. ஏரிக் கரைத் தெரு, லேக் ஏரியா, வில்லேஜ் ரோடு, குளக்கரைத் தெரு, வேளச்சேரி, முடிச்சூர், புலியூர், வேப்பேரி, சூளை, சூளை மேடு, பட்டினப் பாக்கம், மயிலாப்பூர்.... என ஊர், குளம், ஏரி என்ற பல்வேறு விகுதிகளோடு உள்ள பல பகுதிகளிலும் இன்று பெரிய பெரிய மால்களும் ஐ.டி. பார்க்குகளும், ரிஸார்ட்டுகளும் கேளிக்கைக் கூடங்களும் நிரப்பப்பட்டுள்ளன.

கோயம்பேடு மார்க்கெட்டும் பேருந்து நிலையமும் உள்ள இடம் மிகப் பெரிய வயல் பரப்பாகவும் ஏரி குளங்களாகவும் இருந்தது. சொல்லப்போனால் என் கண் முன்னாலேயே மாறியது என்பதையும் பதிவுசெய்கிறேன்.

வடபழனியில் இருந்து அண்ணா நகர் திருமங்கலத்தை இணைக்கிற 100 அடி சாலை, சைக்கிள்களும் செல்ல முடியாத சிறிய கிராமச் சாலைகளாக இருந்ததையும் நான் பார்த்திருக்கிறேன். சென்னை வளர்கிறது என்றால் ஆறுகள், குளங்கள், ஏரிகள், வயல்கள் அகற்றப்பட்டன என்பதுதான் அர்த்தம்.

மத்திய சென்னை என்பது கூவம் ஆற்றங்கரை நாகரிகத்தின் அடையாளம். திருவேற்காடு தொடங்கி, அரும்பாக்கம், அமைந்தகரை, சூளைமேடு, சேத்துப்பட்டு, எழும்பூர், பெரிய மேடு என்ற கிராமங்கள் கூவம் ஆற்றங்கரையில் இருந்த கிராமங்கள். கூவம் ஆற்றில் திவ்யமாகக் குளித்த கதைகளை பச்சையப்பன் கல்லூரி நிறுவனர் பச்சையப்ப முதலியார் நினைவுக் குறிப்புகளிலும் திரு.வி.கல்யாண சுந்தரனார் நினைவுக் குறிப்புகளிலும் பார்க்க முடிகிறது. அரும்பாக்கம் பகுதிகளில் மக்கள் அந்த ஆற்றில் குடிநீர் எடுப்பதையும் குளிப்பதையும் நானே பார்த்திருக்கிறேன். நகர் முழுதும் ஓடி உலாவந்த ஆற்றை நாற்றம் அடிக்கும் சாக்கடையாக மாற்றிவிட்டு, ‘கூவம்போல நாறுது’ என கூவத்தை 'ப்ராண்ட்' செய்வது எப்படி கொண்டாட்டமாக இருக்க முடியும்?

சென்னையின் மொழியைக் கிண்டல் செய்வதும் தொடர்கிறது. தமிழகத்தில் கிட்டத்தட்ட 100 கிலோ மீட்டருக்கு ஒரு மொழி வழக்கு (ஸ்லாங்) இருக்கிறது. விழுப்புரத்தில் பேசுகிற மொழி வழக்கு, திருச்சியில் மாறுகிறது. திருச்சி மொழி வழக்கு மதுரையில் மாறுகிறது. மதுரை வழக்கு நெல்லையில் மாறுகிறது. நாகர்கோவிலில் வேறு வழக்கு மொழி, கொங்கு மண்டலத்தில் வேறு வழக்குமொழி. பல ஆயிரம் ஆண்டு பழமைகொண்ட ஒரு மொழியில்தான் இத்தனை வழக்குமொழிகள் இருக்க முடியும்.

அமெரிக்கன் இங்கிலீஷ், பிரிட்டிஷ் இங்கிலீஷ் என இரண்டு பிரிவைக்கூட எட்டாத மொழிகள்தான் உலகில் அதிகம். எப்படி பேசினாலும் தமிழுக்கு என ஒரு உரைநடை உண்டு. தமிழகம் முழுவதும் உள்ளவர் எழுதும்போது அப்படித்தான் எழுதுவர். பேசும்போது வழக்கு மொழியைப் பயன்படுத்துவர். இதுதான் மொழியின் பழமையை உணர்த்தும் பெருமை.

சென்னை வழக்கு மொழியும் அதில் ஒன்றுதான் என்பதை உணர வேண்டும். பல்வேறு மொழிக்கலப்பும் மதக்கலப்பும் அவசரமும் நிறைந்த ஒரு பெரு நகரத்தின் மொழியாக சென்னை நகரத்தின் மொழி தன்னைத்தானே வகுத்துக்கொண்டது. ‘நாஷ்டா துன்ட்யா?’, ‘நம்ம தோஸ்த்து நம்மளையே குஸ்டு அஸ்ட்டாம்பா’ என்பதும் இந்த மண்ணின் மைந்தர்கள் பேசும் வட்டார வழக்கு. அதை ஆய்வு செய்வதும் பெருமைப்படுத்துவதும்தான் சென்னையைக் கொண்டாடுவதின் ஒரு அங்கமாக இருக்க முடியும். ‘வாராய்ங்க, போராய்ங்க, அங்கிட்டு இங்கிட்டு’ என்பது போலத்தான் இதுவும் என்பதை மனம் ஏற்க வேண்டும்.

சென்னையின் பூர்வகுடிகளில் ஏழை மக்கள் பெரும்பாலும் தாங்கள் வாழ்ந்த கூவம் நதிக்கரை ஓரத்திலேயே பெரும்பாலும் ஒடுங்கிவிட்டனர். அவர்கள் மீன்பாடி வண்டிகள் வைத்து லோடு அடிக்கிறார்கள், ரிக்‌ஷா ஓட்டுகிறார்கள், வாழைப் பழம் கூவி விற்கிறார்கள். அவர்களைத்தான் பொது புத்தியில் 'டேன்ஞரான ஆட்கள்' எனச் சித்தரிக்கிறோம். அல்லது சிங்காரச் சென்னையில் அவர்கள் இருப்பது அசிங்கம் எனக் கருதி, செம்மஞ்சேரிக்கும் கண்ணகி நகருக்கும் துரத்துகிறோம்.

சென்னையின் பிரபலமான மக்கள் என ஒரு ஆயிரம் பேரைக் கணக்கெடுங்கள். சினிமா இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள், இசையமைப்பாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஓவியர்கள், அரசியல்வாதிகள், திரைப்படக் கவிஞர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், தொலைக்காட்சி அதிபர்கள், தொலைக்காட்சி செய்தியாளர்கள், பிசினஸ் மேன்கள் எல்லாரையுமே கணக்கெடுப்போம். 1000-ம் பேரில் 950 பேர் சென்னையைத் தவிர்த்த மற்ற மாவட்டங்களை, மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பதைக் கவனிக்கலாம்.

சென்னை போன்ற பெரு நகரத்தில் வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் வந்து உயர்ந்த மனிதர்களாக, செல்வந்தர்களாக மாறுவதை யாரும் குறை சொல்ல முடியாது. அதே போல், இப்படியான வேறு மாவட்ட வி.ஐ.பி-க்களால் செதுக்கப்பட்ட சென்னையை, குறை சொல்லும்போது மட்டும் 'மெட்ராஸ்காரன்' சிக்கிக்கொள்கிறான்.

‘இது ஊராய்யா? சே என்னால ஒரு நாள்கூட இங்க இருக்க முடியலை. எங்க ஊர் டீ போல வருமா?, எங்க ஊர் பரோட்டா போல வருமா?’ எனச் சொல்லிக்கொண்டே வாழ்நாளெல்லாம் இங்கேயே இருக்கிறார்கள். இதையும் இந்தச் சென்னை நாளை ஒட்டிச் சிந்தித்துப் பார்க்கலாம்.

சென்னையைப் பாதுகாப்பதும் சென்னை மொழியையும் மக்களையும் நேசிப்பதும்தான் சென்னைக் கொண்டாட்டத்தின் அம்சமாக இருக்க வேண்டும்!

- தமிழ்மகன்

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...