Wednesday, August 24, 2016

பெண் பொறியாளர் கொலை வழக்கு: 3 வட மாநில இளைஞர்களின் ஆயுள் தண்டனை உறுதி - மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

பெண் பொறியாளர் கொலை வழக்கு: 3 வட மாநில இளைஞர்களின் ஆயுள் தண்டனை உறுதி - மேல்முறையீட்டு மனு தள்ளுபடி


ஐடி பொறியாளர் உமாமகேஸ்வரி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் வட மாநில இளைஞர்கள் 3 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்துள்ள உயர் நீதிமன்றம், இறந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஐடி பொறியாளர் உமா மகேஸ்வரி (23). இவர் சென்னை சிறுசேரி சிப்காட் வளாகத்தில் உள்ள டிசிஎஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். 2014-ம் ஆண்டு பிப்ரவரி 13-ம் தேதி வேலைக்குச் சென்ற உமா மகேஸ்வரி வீடு திரும்பவில்லை. பிப்ரவரி 22-ம் தேதி சிப்காட் வளாகத்தில் உள்ள முட்புதரில் பலாத்காரம் செய்யப்பட்ட நிலை யில் சடலமாக மீட்கப்பட்டார்.

சிபிசிஐடி போலீஸார் விசா ரணை நடத்தி மேற்கு வங்கத்தைச் சேர்ந்த உத்தம் மண்டல்(23), ராம் மண்டல்(22), உஜ்ஜல் மண்டல்(23) ஆகிய 3 இளை ஞர்களை கைது செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த செங்கல்பட்டு அமர்வு நீதிமன்றம் 3 இளைஞர்களுக்கும் கடந்த 2014 நவம்பரில் ஆயுள் தண்டனை விதித்தது. இந்த உத்தரவை எதிர்த்து 3 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

இந்த மனு மீதான விசாரணை ஏற்கெனவே நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, வி.பாரதிதாசன் ஆகி யோர் முன்பு நடந்தது. நீதிபதிகள், இந்த வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை தள்ளி வைத்தனர்.இந்நிலையில் நேற்று இந்த வழக்கில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘‘குற்றவாளிகள் மீது வலுவான ஆதாரங்கள் உள்ளன. எனவே அவர்களுக்கு கீழ்நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை ரத்து செய்ய முடியாது. இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றத்துக்காக ஆயுள் தண்டனையை உறுதி செய்கிறோம். ஆகவே மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. அதேநேரம், உமாமகேஸ்வரியை இழந்து வாடும் அவரது குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் இழப்பீட்டை 4 மாதங்களுக்குள் காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி வழங்க வேண்டும்’’ என உத்தரவிட்டனர்.
Keywords: ஐடி பொறியாளர் உமாமகேஸ்வரி, பலாத்காரம் செய்துகொலை, 3 வட மாநில இளைஞர்கள், ஆயுள் தண்டனை உறுதி, மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024