Friday, August 5, 2016

DailyMotivation

சம்பளத்தைத் தாண்டி, இந்த 3 காரணங்களுக்காகவும் வேலை செய்யுங்கள்! #DailyMotivation


vikatan.com

ஓவ்வொரு நாளும் நாம் 8 மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை நாம் விருப்பத்துக்கும், இலக்குகளுக்கும் ஏற்றவாறு வேலை செய்கிறோம். என்னதான் மாதச் சம்பளம் என்ற ஒரு விஷயம் இருந்தாலும் சில விஷயங்கள் நம்மை சிறப்பாக வேலை செய்ய தூண்டும். அது நம் அலுவலக சூழல் என்பது துவங்கி ஆர்வம், தேவை என பல விஷயங்களை பொருத்து அமைகிறது. ஆனால் இந்த மூன்று காரணங்களுக்காக நீங்கள் வேலை செய்வது சம்பளம், பதவி என்பதைத் தாண்டி உங்களுக்கு மகிழ்ச்சியையும், மனநிறைவையும் தரும்.

1. நீங்கள் கற்றுக் கொள்வது உங்களுக்காக!

அலுவலகத்தில் நீங்கள் கற்றுக் கொள்ளும் ஒவ்வொரு மணி நேரமும் உங்களுக்கு நல்ல அனுபவத்தையும், இங்கு கற்கும் விஷயங்கள் அலுவலக இலக்குகளுக்காக மட்டுமல்ல, நீங்கள் கற்றது கண்டிப்பாக உங்கள் வளர்ச்சிக்கும் உதவும் என்ற திறந்த மனதோடு கற்றுக் கொள்ளுங்கள். வயது குறைந்த நபர் எனக்கு பாடம் எடுக்கிறார், இவருக்கு வயதாகிவிட்டது நான் சொல்வது புரியவில்லை என்று நினைக்காமல் எல்லாரிடம் இருந்தும் கற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் கற்றுக் கொள்வது உங்களுக்காகத் தான். இது உங்களை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும். அதிகம் கற்றுக்கொள்ளுங்கள்.

2. நம்பிக்கையை அதிகப்படுத்துங்கள்!

நீங்கள் ஒரே வேலையைச் செய்கிறீர்கள், சம்பளம் மட்டும் மாறுகிறது வேலை அதே வேலை தான் என நினைக்காமல், நீங்கள் செய்யும் வேலைகளை முன்பை விட புதிய உத்திகள், வேகத்தோடு அணுகுங்கள். அந்த வேலையில் நிபுணத்துவம் பெறுங்கள். உங்களுக்கு அது நற்பெயரைக் கொடுக்கும். அந்த நற்பெயர் உங்களது பதவி உயர்வு, சம்பளம் ஆகியவற்றில் தானாகவே தாக்கத்தை ஏற்படுத்தும். இதற்கெல்லாம் உங்களால் அந்த வேலையை கூடுதல் நிபுணத்துவத்துடன் செய்ய முடியும் என்ற நம்பிக்கையை அதிகரியுங்கள்.

3. இன்ஃப்ளுயன்ஸ் செய்யுங்கள்!

உங்களது வேலையைத் தாண்டி உங்களது குணத்தைச் சிறப்பாக வெளிப்படுத்துங்கள். அருகில் இருப்பவர்களை இன்ஃப்ளுயன்ஸ் செய்யுங்கள். இது வேலையும் செயல்திறனையும், தனிப்பட்ட முறையில் தலைமைப் பண்பையும் வளர்க்கும். அணியில் சில தவறான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டால் நீங்கள் சொல்லும் போது அதனை ஏற்றுக் கொள்ளும் சூழலும், நீங்கள் தவறு செய்யும் போது உங்களிடம் தயக்கமின்றி கூறி அதனை திருத்தவும் அணியினருக்கு இந்த செயல்கள்  உத்வேகத்தை தரும். எப்போதும் அதிகம் இன்ஃப்ளூயன்ஸ் செய்யும் நபராக இருக்க பழகிக் கொள்ளுங்கள். சரியான கொள்கைகளில் நிலையாக இருங்கள்.

இந்த மூன்று காரணங்களை நீங்கள் அலுவலக சூழலில் எளிதில் கற்க முடியும். பணம், இலக்கு, பதவி உயர்வு என்பதைத் தாண்டி இந்த மூன்று காரணங்களுக்காக வேலை செய்யுங்கள். இந்த மூன்றால் மகிழ்ச்சி, உங்களைத் தானாகத் தேடி வரும்.

ச.ஸ்ரீராம்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024