ஓர் அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர் எப்படிச் செயல்பட வேண்டும்' என்பதை விளக்குகிறது பள்ளிக் கல்வித்துறையின் யூ டியூப் வீடியோ காட்சி ஒன்று. ' கள ஆய்வுகள், வாரத் திருவிழா, அதிகாரிகளுடன் கலந்துரையாடல்' என மாதிரிப் பள்ளியை அடையாளம் காட்டுகிறார்கள் அதிகாரிகள்.
தமிழ்நாடு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில், புதுமையான கற்றல் வீடியோக்களை யூ ட்யூப்பில் பதிவேற்றியுள்ளனர். இதில் ஆங்கிலம், கணிதம், அறிவியல் ஆசிரியர்களின் கற்பித்தல் திறனில், வித்தியாசமான முறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது ஒருபுறம் என்றால், பள்ளியின் தலைமை ஆசிரியர் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதையும் விளக்குகிறார்கள். குறிப்பாக, சிவங்கை மாவட்டம், தேவகோட்டையில் உள்ள சேர்மன் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியின் செயல்பாடுகள் வியக்க வைக்கின்றன. இம்மாவட்டத்தில் மொத்தம் உள்ள 1,320 பள்ளிகளில் இந்தப் பள்ளி மட்டுமே, கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் யூ டியூப் வீடியோ பதிவுக்காக தேர்வாகியுள்ளது. ' மாணவர்களின் பங்களிப்புடன் வகுப்பறையை சிறப்பானதாக மாற்றும் முயற்சிகள் வெற்றி பெற்றதையும்' முன்வைக்கிறார் இப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம். கூடவே, தாங்கள் கற்றுத் தேர்ந்த விஷயங்களைப் பற்றியும் யூ டியூப்பில் பேசுகின்றனர் மாணவர்கள்.
தலைமை ஆசிரியர் சொக்கலிங்கத்திடம் பேசினோம்.
" மாணவர்களை நான்கு சுவர்களுக்குள் பூட்டி வைத்துவிடக் கூடாது என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறேன். இங்கு படிக்கும் மாணவர்கள் அனைவரும் கிராமப்புறப் பின்னணியில் இருந்து படிக்க வருபவர்கள். வகுப்பறை நேரம் போக, மற்ற நேரங்களில் மாணவர்களின் எதிர்காலத்திற்கும் எது தேவையோ, அதைக் கற்றுக் கொடுப்பதில் நேரத்தைச் செலவிடுகிறோம். ஒவ்வொரு வாரமும் பேச்சுப் போட்டி, கட்டுரைப்போட்டி, கவிதைப் போட்டி என மாணவர்களை உற்சாகப்படுத்துகிறோம். ஒரு வாரம் வெற்றி பெற்ற மாணவர், அடுத்த வாரம் பார்வையாளனாகத்தான் அமர்ந்திருக்க வேண்டும்.
அனைத்து மாணவர்களும் போட்டியில் பங்கெடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். வகுப்பறைகளில் பேச்சுப் போட்டி நடந்து முடிந்ததும், தேர்வான மாணவர்கள் அனைத்து மாணவர்கள் முன்னிலையிலும் பேச வேண்டும். இதன்பின்னர் நடக்கும் மாதத் திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்குகிறோம். இது ஒருபுறம் தொடர்ந்து நடந்து வருகிறது. மற்ற நேரங்களில் வங்கிகளுக்கு அழைத்துச் செல்கிறோம். கிரீன் கார்டு என்றால் என்ன? ஏ.டி.எம் இயந்திரங்கள் எப்படி இயங்குகின்றன? ஏ.டி.எம் அட்டைகளைப் பயன்படுத்துவது எப்படி? வங்கி செலான்களை எப்படிப் பூர்த்தி செய்வது என வங்கி அதிகாரிகளின் துணையோடு செயல் விளக்கம் அளிக்கிறோம்.
கடந்த வாரம் தேவகோட்டை தாலுகா காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றோம். காவல்துறை மீதான பயத்தைப் போக்குவது மட்டுமல்லாமல், ஒரு காவல்நிலையம் எவ்வாறு இயங்குகிறது எனவும் உயர் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். மாணவர்களும் அவர்களிடம், ' படத்தில் காட்டுவது போல ஒரு பிஸ்டலை அழுத்தினால் ஐம்பது தடவை சுட முடியுமா' என்றெல்லாம் கேள்வி கேட்டார்கள். தொடக்கக் கல்வியிலேயே மாணவர்கள் எதையெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதைப் பட்டியலிட்டு, கள ஆய்வுகளுக்கு அழைத்துச் செல்கிறோம்.
தவிர, அரசின் உயர் அதிகாரிகளை அழைத்து வந்து மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்தி வருகிறோம். அனைத்து மாணவர்களும் கேள்வி கேட்கும் வகையில் தயார்படுத்தியுள்ளோம். இதுவரை எங்கள் பள்ளிக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளான இறையன்பு, ராஜேந்திரன், ஆல்பி ஜான், நந்தகுமார் ஐ.ஆர்.எஸ் உள்ளிட்ட அதிகாரிகள் வந்துள்ளனர். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, களஆய்வு, மாணவர் பங்களிப்பு என அனைத்து நிலைகளிலும் மனதளவில் சிறப்பாகப் பணியாற்றி வருகிறோம். எங்களின் முயற்சிக்கு கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் அதிகாரிகள் மிகுந்த உறுதுணையாக இருக்கின்றனர்" என்றார் உற்சாகமாக.
-ஆ.விஜயானந்த்
No comments:
Post a Comment