Wednesday, August 10, 2016

இறந்து போன பெண்ணின் கல்விச்சான்றிதழ்களை கொண்டு எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்றவருக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் உத்தரவு

இறந்துபோன பெண்ணின் கல்விச்சான்றிதழைக் கொண்டு எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்ற பெண்ணுக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இந்த மோசடி வழக்கை போர்க்கால அடிப்படையில் விரைவாக விசாரிக்கவேண்டும் என்றும் குரோம்பேட்டை போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

மாமனார் புகார்

சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்தவர் அர்ச்சனா என்ற தமிழரசி. இவர் கணவரை பிரிந்து வாழ்கிறார். விவாகரத்து தொடர்பான வழக்கும் தாம்பரம் கோர்ட்டில் நிலுவையில் இருந்து வருகிறது.

இந்த நிலையில், அர்ச்சனாவின் மாமனார் குரோம்பேட்டை போலீசில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், ‘தன் மருமகள், தமிழரசி என்ற எஸ்.சி. சமுதாயத்தை சேர்ந்த பெண்ணின் கல்விச்சான்றிதழ்களை கொடுத்து எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்றுள்ளதாக‘ கூறியிருந்தார்.

இதையடுத்து அர்ச்சனா மீது குரோம்பேட்டை போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் அர்ச்சனா மனு தாக்கல் செய்தார்.

கிராம நிர்வாக அதிகாரி

இந்த மனுவை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரித்து பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

இந்த முன்ஜாமீன் மனு மீதான விசாரணையின்போது, தன் மருமகளுக்கு முன்ஜாமீன் கொடுக்கக்கூடாது என்று மனுதாரரின் மாமனார் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை பார்க்கும்போது, அர்ச்சனாவின் தந்தை ராமசந்திரன் கிராம நிர்வாக அதிகாரியாக பணி செய்கிறார். இவரிடம் துலுக்கானம் என்பவர் இறந்துபோன தன் மகள் தமிழரசியின் பெயரில் இறப்பு சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார். இறப்பு சான்றிதழ் கொடுக்க மறுத்த ராமசந்திரன், இறந்துபோன தமிழரசியின் உண்மை கல்விச்சான்றிதழ் கேட்டுள்ளார். அந்த சான்றிதழை துலுக்கானம் கொடுத்ததும், அந்த உண்மை சான்றிதழ்களை கொண்டு, ஆள்மாறாட்டம் செய்து, தன் மகளை மருத்துவ படிப்பில் சேர்த்துள்ளார். அதனால், இந்த வழக்கில் அர்ச்சனாவின் தந்தையை போலீசார் முதல் குற்றவாளியாக சேர்த்துள்ளனர் என்ற விவரம் தெரிய வருகின்றன.

இடைநீக்கம்

ஆனால், மனுதாரர் தரப்பு வக்கீல், ‘மருத்துவ படிப்பில் சேரும்போது மனுதாரர் மைனர் பெண். அவர் தந்தைதான் தவறு செய்துள்ளார். அதற்கு மனுதாரர் பொறுப்பாக மாட்டார். வேண்டுமானால் மனுதாரரின் தந்தையை இந்த வழக்கில் போலீசார் கைது செய்வதில் எந்த ஆட்சேபனையும் இல்லை’ என்று வாதிட்டார்.

ஆனால், அர்ச்சனா என்ற பெயரிலும், தமிழரசி என்ற பெயரிலும் இரண்டு மோட்டார் வாகன ஓட்டுனர் உரிமங்களை மனுதாரர் பெற்றுள்ளார். தற்போது ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ பட்டப்படிப்பை முடித்துள்ளார். இதுசம்பந்தமாக வந்த புகாரின் அடிப்படையில், மனுதாரரை டாக்டர் தொழிலில் இருந்து இடைநீக்கம் செய்து மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

விரைவான விசாரணை

தற்போது, மனுதாரர் அர்ச்சனா, தமிழரசி என்ற பெயரில் போட்ட முகத்திரை துண்டு துண்டாக கிழிந்துவிட்டது. இந்த மோசடி வழக்கில், மனுதாரரை காவலில் வைத்து போலீசார் விசாரித்தால்தான் உண்மை நிலவரம் தெரியவரும். எனவே, மனுதாரருக்கு முன்ஜாமீன் கொடுக்க முடியாது. மனுதாரர் மீதான குற்றச்சாட்டு சமூகத்தில் மிகப்பெரிய அபாயத்தை ஏற்படுத்தக் கூடியது என்பதால், இந்த வழக்கை போர்க்கால அடிப்படையில் குரோம்பேட்டை இன்ஸ்பெக்டர் விரைவாக விசாரிக்கவேண்டும். இவ்வாறு நீதிபதி வைத்தியநாதன் உத்தரவில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...