கண்ணைக் கட்டி காட்டில் விட்டதுபோல இருக்கிறது தொலைத்தொடர்பு நிறுவனங்களின் 4ஜி சேவைக்கான மார்க்கெட்டிங் உத்திகள். எந்த நிறுவனம், எந்தத் திட்டத்தை தேர்ந்தெடுப்பது என்கிற குழப்பங்கள் எல்லாம் இல்லை.
அவை எல்லாமே குழப்பமாகத்தான் இருக்கிறது. கடந்த வாரம் இருந்த கட்டணம் இந்த வாரம் இல்லை. இந்த வாரத்தில் இருக்கும் சேவை அடுத்த வாரம் இருக்குமா தெரியவில்லை.
2ஜி சேவையே பலருக்கும் கிடைக் காத இந்தியாவில் 4ஜி-க்கான போட்டி யில் இறங்கிவிட்டன நிறுவனங்கள். இந்த 4 ஜி மாய வலையில் வாடிக்கையாளர்கள் சிக்க வைக்கப்படுகின்றனர். ‘மொபைல் டேட்டா’ மோகத்தால் நுகர்வோரின் கையிலிருக்கும் சொற்ப சில்லரைகளையும் நிறுவனங்கள் சுரண்டி வருகின்றன. நாம் பேச்சு வழக்கிற்காகத்தான் சில்லரைகளைச் சுரண்டுகின்றன என குறிப்பிடுகிறோம். ஆனால் உண்மையிலேயே 4ஜி என்கிற தொழில்நுட்பத்தை வைத்து இந்த நிறுவனங்கள் ஆடுவதோ மிக பெரிய சதுரங்க ஆட்டம்.
சந்தையில் முன்னணி நிறுவனமாக யார் இருப்பது என்பதில் தொடங்கும் ஆட்டத்தில் ஒவ்வொரு நிறுவனங்களும் ஒவ்வொரு விதமாக தங்களைத் தாங்களே மீறிக் கொள்கின்றன. ஆனால் எல்லா சுமைகளும் விழுவது என்னவோ வாடிக்கையாளர் தலையில்தான்.
பேஸ்புக்கின் இலவச இணையம், ஏர்டெல்லின் முன்னுரிமை இணைய தொடர்பு என இணைய வாய்ப்புக்கு எதிரான போக்குகள் குறித்த விவகாரங்கள் சற்றே ஓய்ந்த நிலையில், தற்போது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தை சுற்றி புதிய சர்ச்சை உருவாகியுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் நிறுவனம் வர்த்தக ரீதியான தொலைத் தொடர்பு சேவையின் தொடக்க நிலை யிலேயே தனது 15 லட்சம் வாடிக்கை யாளர்களுக்கு 3 மாதங்களுக்கான இலவச ‘டேட்டா’, குரல் வழி சேவைகளை அளிக்க உள்ளது. இதற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளன இதர தொலைத் தொடர்பு நிறுவனங்கள். சோதனை அடிப்படையிலான சேவை யில் அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களுக்கு இலவச ‘டேட்டா', குரல்வழி சேவைகளை வழங்கக் கூடாது என்கிற தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிமுறையை ஆர் ஜியோ மீறுவதாக செயலகத்துக்கு தொலைத் தொடர்பு நிறுவனங்களின் கூட்டமைப்பு (சிஓஏஐ) புகார் அளித்துள்ளது.
ஆர் ஜியோ நிறுவனம் வர்த்தக ரீதி யான சேவையில் விதிமுறை மீறுகிறது என கவலைப்படும் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கூட்டமைப்பு, தங்களது உறுப்பு நிறுவனங்களின் சேவை தரம் குறித்து கவலைப்பட்டிருக்கிறதா என்றால் கிடையாது. இத்தனைக்கும் ஆர் ஜியோ-வும் இதில் உறுப்பினராகத்தான் உள்ளது.
இந்த சேவையை இலவசமாக வழங்குவதில் ஆர் ஜியோ-வுக்கு ஒரு நோக்கம் இருக்கிறது. எதிர்ப்பதற்கு இதர நிறுவனங்களுக்கும் ஒரு நோக்கம் இருக்கிறது. ஆனால் தொழில்நுட்பத்தை மேம்படுத்துகிறோம் என்கிற பெயரில் 3ஜி,4ஜி வாடிக்கையாளர்களிடம் கட்டணக் கொள்ளை அடிப்பதில் மட்டும் எல்லா நிறுவனங்களுமே கைகோர்த்துவிடுகின்றன.
சமீபத்தில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் (R COM) நிறுவனத் தில் வைஃபை பேட் வாங்கிய நண்பரொருவரின் புலம்பல் இது: ``ரூ.1,500 விலையிலான அந்த கருவியை வாங்கும்போதே 4ஜி சேவை வந்தால், அதை மேம்படுத்திக் கொள்ளலாம் என உறுதி கொடுத்தார்கள்.
இரண்டு மாதங்களாக பயன்படுத்தி வந்த நிலையில் திடுதிப்பென கடந்த வாரத்தில் 3ஜி சேவையை நிறுத்திவிட்டனர். வாடிக்கையாளர் சேவை மையம் சென்று விசாரித்தால் 3ஜி சேவையை நிறுத்திவிட்டோம் 4ஜி சேவைக்கு மாற்றிக் கொள்ளுங்கள் என்கின்றனராம்.
தற்போது 3ஜி சேவையே போதும், 4ஜி-க்கு தேவைக்கேற்ப மாறிக்கொள்கிறேன் என்ற போதிலும் முன்பு வழங்கிய வைஃபை இணைப்புக் கருவியில் இனிமேல் சேவை கிடைக்காது என்றும், 4ஜி-க்கு என்று தனியாக வைஃபை பேட் வாங்க வேண்டும் அல்லது 4ஜி சிம்கார்டு, 4ஜி போன் வாங்கிக் கொள்ளுங்கள் அப்போதுதான் எங்களது சேவையை தொடர முடியும் என்றனராம். ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தால் வழக்கு தொடருங்கள், இல்லையெனில் புதிய கருவியை 10 சத விலைக்குறைப்பு செய்து தருகிறோம் அதை வாங்கிச் செல்லுங்கள் என்று கூறினார்களாம்.
ஒரு தொழில்நுட்பத்தை மேம்படுத்து வது நிறுவனத்தின் தேவையாக இருக்கலாம். ஆனால் அதை ஏன் வாடிக்கையாளர்களின் தலையில் வம்படியாக திணிக்க வேண்டும். பழைய தொழில்நுட்ப சேவைகளையே படிப்படியாக குறைத்து பயன்பாடு இல்லாத போது குறைப்பதுதான் சரியான நடவடிக்கையாக இருக்கும். அல்லது ஏற்கெனவே வழங்கப்பட்ட கருவியை திரும்பப் பெற்று புதிதாக மாற்றித் தருவதுதானே சரியானதாக இருக்கும் என எந்த கேள்விக்கும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் பதில் சொல்லவில்லை.
புதிதாக 4ஜி சேவையை அளிக்கும் கருவியின் விலையோ ரூ.3,200 என நிர்ணயித்துள்ளனர். புது 4ஜி சிம் கார்டு வாங்கி அதை 4ஜி அலைவரிசையை ஏற்கும் ஸ்மார்ட்போனில் பயன்படுத்த வேண்டும். அதாவது ஏற்கெனவே இருக்கும் ஸ்மார்ட்போன் 4ஜி அலைவரிசையை ஏற்காது என்றால் நீங்கள் புது ஸ்மார்ட்போன்தான் வாங்க வேண்டும். அதாவது 4 ஜி சேவையை பயன்படுத்த கிட்டத்தட்ட புதிதாக சில ஆயிரங்களை செலவு செய்ய வேண்டும்.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் மட்டும் இப்படி வாடிக் கையாளர்களை ஏமாற்றும் வேலையை செய்யவில்லை கிட்டத்தட்ட எல்லா நிறுவனங்களுமே இப்படியான நெருக்கடிகளை வாடிக்கையாளர்களுக்கு கொடுத்து வருகின்றன. ஆறு மாதங்களுக்கு முன்பு சில ஆயிரங்கள் செலவழித்து வாங்கிய ஒரு ஸ்மார்ட்போன் இப்போது பழைய தொழில்நுட்பமாக மாறி விடுகிறது.
பொதுவாக 4ஜி சேவையை வழங்கும் ஏர்டெல், ஐடியா அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களுமே குறிப்பிட்ட ஸ்மார்ட்போன் மாடல்களில் மட்டுமே தங்களது 4ஜி சேவை கிடைக்கும் என அறிவிக்கின்றன. சந்தையில் ஒரு உத்தியாக ஒவ்வொரு காலகட்டங்களிலும் இது மாதிரியான கூட்டுகளை வைத்துக் கொண்டாலும் 4ஜி சேவையை அளிப்பதில் முன்பை விட அதிகமாக வாடிக்கையாளர்களை சுரண்டி வருகின்றன என்பதுதான் உண்மை.
உதாரணமாக ஐடியா நெட்வொர்க் கில் 4ஜி வேண்டுமென்றால் 6,000 ரூபாய் விலையுள்ள ஸ்மார்ட்போனை வாங்க வேண்டும். ஆறு மாதத்துக்கு முன்பு இதே விலையில் 3ஜி போன் வாங்கியவர் மீண்டும் இதே அளவு தொகையை செலவு செய்வது சாத்தியமற்றது. இதனால் கடும் நெருக்கடிகளுக்கு இடையில் புது போன் வாங்க தள்ளப்படும் சூழலை நிறுவனங்கள் உருவாக்குகின்றன.
4ஜி தொழில்நுட்பம் சர்வதேச அளவில் ஏற்கெனவே பல நாடு களில் நடைமுறைக்கு வந்துவிட்டது. இந்தியாவிலும் அந்த தொழில்நுட்பத்துக் கான சந்தை இருக்கிறது என்பது நிறுவனங்களுக்கும் தெரிந்ததுதான். தவிர இந்தியா போன்ற நாடுகளில் ஒவ்வொரு தொழில்நுட்பமும் கடைக்கோடி குடிமகனுக்கும் சென்று சேர சில ஆண்டுகளாவது ஆகிறது. ஏனென்றால் நமது கட்டமைப்பு இன்னும் மேம்படவில்லை என்பதுதான் உண்மை. ஆனால் சந்தைப் போட்டியில் இதுவெல்லாம் நிறுவனங்களுக்கு தேவையில்லாத சமாச்சாரங்களாகிவிடுகிறது. முதன்மை யான நோக்கம் பயன்படுத்தும் குறிப்பிட்ட சதவீதத்தினரிடமிருந்து அதிக பட்சமாக கறந்துவிட வேண்டும் என்கிற முனைப்புதான் உள்ளது.
தொழில்நுட்ப வளர்ச்சி தவிர்க்க முடியாததுதான் என்றாலும் நிறுவனங் களின் லாப உத்திரவாதத்துக்கு பயனாளிகள் ஒவ்வொரு முறையும் இப்படி சில ஆயிரங்களை கொட்டிக் கொடுத்துக் கொண்டிருக்க முடியுமா? அரசும், தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமும் இந்த வேட்டையை வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருக்குமா?
No comments:
Post a Comment