Saturday, August 13, 2016

தங்க நகைக் கடன்... சுலபமாக அடைக்கும் மூன்று வழிகள்!

ஆத்திர அவசரத்துக்கு இன்றைக்கு ஆபத்பாந்தவனாக இருப்பது நகைக் கடன் தான். திடீரென்று அப்பாவுக்கு சுகமில்லை, பையன் காலேஜ் பீஸ் இந்த மாசமே கட்டணுமாம்; பஸ்ல போய் மாளலை; உடனே ஒரு டுவீலர் வாங்கணும்... இப்படி வரும் செலவுகளுக்கு யாரிடமும் கை ஏந்தாமல், நமக்கே நமக்கென இருக்கும் தங்க நகைகளை அடமானமாக வைத்து கடன் பெற்று, பயன் அடைவதுதான் தங்க நகைக் கடன். நகர்ப்புறத்து மத்திய தர வர்க்க மனிதர்களுக்கு மட்டுமல்ல, கிராமப்புறங்களில் வாழும் பலருக்கும் நகைக் கடன் ஒன்றுதான் உடனடி பணத் தேவையை பூர்த்தி செய்வதாக இருக்கிறது. நம்மவர்கள் அதிக அளவில் தங்கம் மீது மோகம் கொள்வதற்கும் இது ஒரு முக்கியமான காரணம்.

மற்ற கடன்களுக்கும் இந்த தங்க நகைக் கடனுக்கும் ஒரு முக்கிய வித்தியாசம், மற்ற கடன்களை இ.எம்.ஐ. மூலம் ஒவ்வொரு மாதமும் கட்டலாம். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கும்போது, இரு சக்கர வாகனங்கள் வாங்கும்போது, கடன் மூலம் வீடு வாங்கும்போது இ.எம்.ஐ. என்று சொல்லப்படுகிற மாதத் தவணை மூலம் கட்டி, நாம் வாங்கிய பொருளை நமக்கானதாக ஆக்கிக் கொள்ளலாம்.

ஆனால், தங்கக் கடன் இதிலிருந்து மாறுபட்டது. அதாவது, தங்கக் கடன் தொகையும் அந்த காலத்துக்கு கொடுக்கும் வட்டியையும் (அசலுக்கும் வட்டிக்கும் சேர்த்து முழு தொகையினை செலுத்திய பின்னரே) சேர்த்து கட்டியபின்னர்தான் தங்கக் கடனிலிருந்து மீள முடியும் அல்லது வருடத்துக்கோ அல்லது ஆறு மாதத்துக்கோ ஒருமுறையோ கடனுக்கு செலுத்தும் வட்டியை மட்டும் செலுத்தி தங்கக் கடனை புதுப்பிக்க முடியும். சில வங்கிகள், கடனையும் வட்டியையும் முழுமையாக கட்டிய பிறகு மறு அடகு வைக்க அனுமதிக்கிறது.

இல்லையெனில் தங்கக் கடன் காலம் முடிந்து மூன்று அல்லது ஆறு மாதம் கழித்து தங்கம் ஏலத்துக்கு சென்றுவிடும். பிறகு ஏலத்துக்கு சென்ற தங்க நகையை ஏல செலவுகளையும் மற்ற இதர செலவுகளையும் சேர்த்து அதற்குண்டான வட்டியையும் செலுத்தித்தான் தங்கக் கடனிலிருந்து மீள முடியும்.

இதனை ஒரு உதாரணம் மூலம் பார்ப்போம். நம்மிடம் உள்ள ஆபரண தங்க நகையின் மதிப்பு - ரூ. 1,25,000 என்று வைத்துக் கொள்வோம். தங்கத்தின் மதிப்பிற்கேற்ப 80% கடன் கிடைத்தால் ரூ.1,00,000. கடனுக்கான வட்டி விகிதம் - 10% எனில், ஓராண்டில் தங்க நகைக் கடனுக்கு செலுத்தும் வட்டி மட்டும் ரூ.10,000. ஆக மொத்தம் அசலும் வட்டியும் சேர்த்து வருட முடிவில் செலுத்தும் மொத்த தொகை ரூ.1,10,000.

இந்தப் பெரும் தொகையை ஒருவர் மொத்தமாக செலுத்தி அடைப்பது கடினம்தான். இதையே கடன் தரும் வங்கிகள் மாதத் தவணையாக செலுத்த சொல்லும்பட்சத்தில், அவரால் எளிதாக கடனைத் திரும்பக் கட்டக்கூடிய சூழ்நிலை உருவாகும். ஆனால், இப்போது அந்த நிலைமை இல்லை. எனவே, தங்க நகைக் கடனை எளிதாக திரும்ப செலுத்துவதற்கு என்ன வழி?

மூன்று வழிகள் உள்ளன. முதலாம் வழி, உங்களால் 1,10,000 தங்க நகைக் கடனை 12 மாதத்தில் திரும்ப செலுத்த வேண்டும் எனில், மாதம் 1,10,000/12= ரூ.9,167 சேமிக்க வேண்டும். இதுவே வங்கி சேமிப்புக் கணக்கில், 4% வட்டி விகிதத்தில் வளரும் திட்டத்தில் மாதம் ரூ.8,999 வீதம் 12 மாதங்களுக்கு சேமிக்கலாம். ஒருவருட கால வங்கி சேமிப்பில் 6.5% என்ற வட்டி விகிதத்தில் ரூ.8896 சேமிக்க வேண்டும். ஆர்டி அல்லது லிக்விட் மியூச்சுவல் ஃபண்டில் 8% வருமானத்தில் ரூ.8.835 முதலீடு செய்து வரலாம். இந்த முதிர்வு தொகையை தங்க நகைக் கடனை அடைப்பதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். தொடர்ந்து சேமித்து வந்தால், தங்க நகைக் கடனை சிரமம் இல்லாமல் சுலபமாக அடைக்கலாம்.

மாதம் சுமார் ரூபாய் 9,000 சேமிப்பது எங்களால் முடியாது என்று நினைப்பவர்கள் இரண்டாவதுவழியைப் பின்பற்றலாம். அதாவது, நகைக் கடனுக்கான வருட வட்டியை மாத வட்டியாக பிரித்து, அதற்கு மேல் எவ்வளவு கூடுதலாக சேமிக்க முடியுமோ சேமித்து, வருட முடிவில், தாங்கள் சேமித்த தொகையை எடுத்து நகைக் கடனுக்கான வட்டியை செலுத்தி கடன் சுமையை குறைக்கலாம். இதனை ஓர் உதாரணம் மூலம் பார்ப்போம்.

தங்க நகைக் கடனாக வாங்கியது ரூ.1,10,000. ஒருவரால் மாதமொன்றுக்கு கட்ட நினைக்கும் தொகை - ரூ.5,000 என்று வைத்துக் கொள்வோம். ஒரு வருடத்துக்கு வட்டி ரூ.10,000 எனில், மாதமொன்றுக்கு வட்டியாக சேமிக்க வேண்டிய தொகை ரூ.833. இந்த வட்டித் தொகையுடன் ஒவ்வொரு மாதமும் கூடுதலாக சேமிக்கும் தொகை ரூ.4,167-ஐ ஒரு வருட வங்கி சேமிப்பு திட்டத்திலோ, அஞ்சலகத்திலோ அல்லது மியூச்சுவல் ஃபண்டிலோ சேமிக்கலாம்.

இந்த வகையிலும் சேமிக்க முடியாது என்பவர் களுக்கு மூன்றாவது வழி உள்ளது. அதாவது, உங்களால் எவ்வளவு முடியுமோ, அவ்வளவு பணத்தை சேமித்து இடையிடையே அசலையும் வட்டியையும் கட்டலாம். இப்படி செய்வதினால் வட்டி சுமை குறையும். காரணம், தங்க கடனுக்கான வட்டி அதிகம். அசல் குறைந்தால்தான் வட்டியும் குறையும்.

இன்று தங்க நகைக் கடைக்காரர்கள் சுலப மாதத் தவணை திட்டத்தை வழங்கி வருவதால்தான், குறைந்த வருமானம் உள்ளவர்களும் இந்தத் திட்டத்தில் சேர்ந்து தங்க நகைகளை சேமிக்கிறார்கள். இது மாதிரி தங்க நகைக் கடனுக்கும் மாதத் தவணை பணம் செலுத்தும் முறையைக் கொண்டுவந்தால், வங்கிகளுக்கு திரும்ப வரவேண்டிய பணமும் சரியாக வரும். கடன் வாங்கியவர்களும் பணத்தை திரும்பத் தந்து, நகையை எடுத்துச் செல்வார்கள்.

எந்த ஒரு கடனையும் முழுமையாக ஒரே தவணையில் அடைப்பது கடினமான ஒன்றே. சுலப தவணைத் திட்டத்தின் மூலம் சிறுக சிறுக கடன் தொகையை திரும்ப செலுத்தி அதிலிருந்து மீண்டு வருவதுதான் புத்திசாலித்தனம்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024