Wednesday, August 24, 2016

கீழே கிடப்பது குழந்தை அல்ல; என் இதயம்!

vikatan.com

பணிக்குச் செல்லும் பெண்களின் இரட்டைச் சுமை பற்றி எவ்வளவு பேசினாலும், தீர்வுகள் தென்படுவதில்லை.அவர்கள் சந்திக்கும் பல அசௌகரியங்களில் ஒன்று, குழந்தை சம்பந்தப்பட்ட பொறுப்பும் முக்கிய அலுவலும் ஒரே நாள் நேர்கோட்டில் வந்து நிற்பது. அப்படித்தான் அன்று ஸ்வாதி சிதால்கரும் ஸ்தம்பித்தார்.

புனேயில் வங்கி ஒன்றில் பணிபுரியும் ஸ்வாதியின் மகனுக்கு அன்று கடுமையான காய்ச்சல். யாருடனும் இருக்காமல் தாயைத் தேடிய தன் மகனுக்காக அன்று விடுப்பு எடுக்க முடியாத அளவுக்கு, ஸ்வாதிக்கு அன்று வங்கியில் முடிக்கப்பட வேண்டிய முக்கிய வேலை ஒன்று இருந்தது. காய்ச்சலில் கொதித்த மேனியுடன் இருந்த தன் மகனை அலுவலகம் வரச்செய்து, தன் இருக்கைக்கு அருகே கீழே படுக்கவைத்து, மூளை வேலையிலும்,இதயம் மகனிடமுமாக இருந்து தன் பணியைச் செய்தார். தன்னுடைய அந்தத் தவிப்பை புகைப்படத்துடன்,

‘‘தரையில் படுத்திருப்பது குழந்தை அல்ல; என் இதயம் தரையில் கிடக்கிறது. அவனுக்குக் கடுமையான காய்ச்சல். யாருடனும் இருக்க மறுத்த அவனுக்கு அம்மாவாக இன்றைய தேவையாக இருக்கிறேன். பாதி நாள் முடிந்துவிட்ட நிலையில், ஒரு லோன் சம்பந்தப்பட்ட அலுவலால் என்னால் விடுப்பு எடுக்க முடியாத சூழலில்,கண் முன்னே இருக்கும் என் இரு பொறுப்புகளிலும் கவனத்தை செலுத்தி சூழலை கையாண்டுவிட்டேன். இந்தத் தகவலை, அசெம்பிளியில் தூங்கும் அமைச்சர்களுக்குத் தெரியப்படுத்த விரும்புகிறேன்’’

என தன் ஃபேஸ்புக் பக்கத்தில் ஸ்வாதி பதிய, பணிக்குச் செல்லும் பெண்களின் பொறுப்பையும் தவிப்பையும் சொல்லுவிதமாக அமைந்த அந்த போஸ்ட் வைரலானது. தொடர்ந்து கவனம் பெற்றுவருகிறது.

ஸ்வாதியைத் தொடர்புகொண்டோம்.

‘‘அந்தப் பதிவு பற்றி..?’’

“அன்று என் மகனுக்கு அதிக காய்ச்சல். அம்மாவிடம் செல்ல வேண்டும் என்று அழுதுகொண்டே இருப்பதாக,என் கணவர் போனில் சொன்னார். என்னால் வீட்டுக்குச் செல்ல முடியாத நிலையில், அவனை அலுவலகத்தில் கொண்டுவந்து விடுமாறு கூறினேன். மகன் என்னைப் பார்த்ததும் சாமாதானமானான். அவனுக்குப் புட்டியில் பால்கொடுத்து, என் இருக்கைக்குப் பின்னால் இருந்த இடத்தில், தரையில் படுக்க வைத்தேன். என் பணியையும் முடித்தேன். அந்தச் சூழலை ஃபேஸ்புக்கில் பதிவிட்டேன். சொல்லப்போனால், அலுவலக இருக்கைக்கு அருகில் குழந்தையைப் படுக்கவைக்கும் இந்தச் சூழல்கூட கிடைக்காத பெண்கள் பலர்.





என் பதிவைப் பார்த்துவிட்டுதான், ‘பெண்களுக்கு இப்படியெல்லாம் பிரச்னை இருக்கிறதா?’ என்று பலரும் அறிந்துகொள்கிறார்கள் என்பது கிடையாது. மனைவி, தங்கை, அக்கா, தோழி, சக ஊழியர்கள் என நம்மைச் சூழ்ந்திருக்கும் தாய்மார்கள் சந்திக்கும் இந்தச் சிக்கலை, கவனித்தும் கவனிக்காமல் கடக்கிறோம். என் பதிவு,ஒரு நொடி நிறுத்தி அவர்களை அதுபற்றிச் சிந்திக்கவைத்திருக்கலாம்.’’

‘‘இந்தப் பதிவுக்கு உங்கள் அலுவலகத்தின் வினை என்ன?’’

‘‘எந்த எதிர்மறை விளைவும் இல்லை. என் பணியில் நான் நேர்மையாக இருக்கிறேன். வேலையை சரியான நேரத்தில் முடிகிறேன். இது அலுவலகத்தில் அனைவருக்கும் தெரியும். மேலும், இதில் நான் யாரையும் குற்றம் சொல்லவில்லை. என் நிலையைத்தான் பதிவு செய்தேன்.’’

‘‘அரசாங்கம் என்ன செய்யவேண்டும்?’’

‘‘இந்த விசயத்தில் நான் அரசாங்கத்தை குறை சொல்ல மாட்டேன். 6 மாதங்களாக இருந்த பேறுகால விடுப்பை 9மாதங்களாக மாற்றிய அரசுக்கு நாம் நன்றிதான் சொல்ல வேண்டும். இன்னும் பல சலுகைகளையும் கொடுத்திருக்கிறது. பெண் ஊழியர்களின் சிக்கலைப் புரிந்துகொண்டு உதவ சக ஊழியர்கள், மேல் அதிகாரிகள்தான் முன்வர வேண்டும்.’’

‘‘அசெம்பிளியில் தூங்கும் அமைச்சர்களைக் குறிப்பிட்டது ஏன்?’’

‘‘ஒரு வங்கி ஊழியரான நான், தவிக்கும் தாய்மைக்கும் இடையிலும் என் பொறுப்பை குறித்த நேரத்தில் முடிக்கவேண்டும் என்ற அக்கறையுடன் இயங்குகிறேன். ஆனால், பெரிய பெரிய பொறுப்புகளும் பதவிகளும் அமைச்சர்களின் வசமிருக்க, அவர்கள் அசெம்பிளியில் தூங்குவது என்பது எவ்வளவு கொடுமையானது?நம்மைப்போல, மக்கள் பணிகளுக்கான உயர் பொறுப்புகளிலும் அரசியல் அவைகளிலும் உள்ளவர்களும் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து முடித்தால், நம் நாடு எவ்வளவு பயனடையும்? காரில் நான் என் குழந்தையுடன் செல்லும்போது, காரின் வெளியே சாலை ஓரத்தில் வசிக்கும் குழந்தைகளை கடந்தபடி போகும்போதெல்லாம் என் இதயம் நொறுங்கும். அவர்களுக்கான நல்லதை ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள்தானே செய்ய முடியும்? டிஜிட்டல் இந்தியா, கிளீன் இந்தியா போன்ற திட்டங்களை நானும் வரவேற்கிறேன். ஆனால், குழந்தை பிச்சைக்காரர்கள் இல்லாத இந்தியாவை... “பெக்கர்ஸ் ஃபீரி இந்தியாவை (Beggars free india)” மோடியால் கொடுக்க முடியுமா? இதுப்போன்ற திட்டங்கள் தான் நாட்டின் பிரதான தேவையாக இருக்கிறது.இதுப் போன்ற திட்டத்துக்கு ஏன் முன்னுரிமை கொடுக்க கூடாது?! அதுவே, அவர்களை நான் குறிப்பிடக் காரணம். ’’

‘‘இந்தப் பதிவுக்குக் கிடைந்த வரவேற்பு பற்றி?’’

‘‘பின்னூட்டங்களிலே ஒருவர், ‘என் மனைவியும் இதுபோல்தான் கஷ்டப்படுக்கிறாள்’ என்று சொல்லி வேதனைப்பட்டிருந்தார். அவர் மனதில் ஏதோ ஒரு மாற்றம் வந்திருந்தது புரிந்தது. அது எனக்கு நிறைவாக இருந்தது. இது ஓர் ஆரம்பம்தான். இதனால் மாற்றம் வந்துவிடுமா என்றால், நிச்சயம் இல்லை. இதுபோல மற்ற பெண் ஊழியர்களும் பணியிடத்தில் அவர்கள் சந்திக்கும் சிக்கல்களை பொதுவெளியில் தொடர்ந்து பதிவு செய்துகொண்டே வரும்போது, நிச்சயம் ஒருநாள் ஆண்கள் மனதிலும், அரசியல் அமைப்பிலும் மாற்றம் வரும் என்பது என் நம்பிக்கை.’’

சபாஷ்!

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...