சுமார் அறுபதாண்டுகளாகத் தமிழ்த் திரையுலகுக்காக உழைத்த பஞ்சுஅருணாசலம், தன் சிந்தனையை நிறுத்திக்கொண்டார். தம் கடைசி மூச்சுவரை அவர் திரைப்படங்களைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தார் என்பது வியப்புக்குரிய செய்தி.
அவர் இதுவரை 99 படங்களுக்குக் கதை வசனகர்த்தாகப் பணியாற்றியிருக்கிறார். அவருடைய நூறாவது படத்துக்கான திரைக்கதை எழுதப்பட்டுத் தயாராக இருப்பதாகவும் அவருக்கு நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள்.
கண்ணதாசனுக்கு உதவியாளராகத் தொடங்கிய அவருடைய உழைப்பு, கவுதம் கார்த்திக் வரை தொடர்ந்திருக்கிறது. கவுதம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் ‘முத்துராமலிங்கம்’ படத்துக்காக 21 ஆண்டுகளுக்குப் பின்னால் இளையராஜா இசையில் பாடல்கள் எழுதிவிட்டுத்தான் மூச்சை நிறுத்தியிருக்கிறார்.
அவர் திரைத் துறைக்குள் வந்ததும் ஏற்கெனவே யாரோ போட்டு வைத்த பாதையில் பாதுகாப்பாகப் பயணித்துவிடவில்லை. எல்லோரும் நினைக்கக்கூடப் பயந்து ஒதுங்குகிற செயல்களைத் துணிச்சலுடன் செய்து வெற்றி பெற்றுக் காட்டியிருக்கிறார்.
இளையராஜாவை அறிமுகம் செய்தார். அது சாதாரணமாக நடந்துவிடவில்லை. அப்போது உச்சத்தில் இருக்கும் எம்எஸ்.விஸ்வநாதனையே இசையமைப்பாளராகப் போடலாம் என்று அவருடைய குடும்ப உறுப்பினர்களே வற்புறுத்தியபோதும், இளையராஜா முதன்முதலில் பாடல் பதிவு தொடங்குகிற நேரத்தில் மின்சாரம் தடைபட்டதை எல்லோரும் அபசகுனமாகக் கருதியபோதும் இளையராஜாதான் இசையமைக்க வேண்டும் என்று உறுதியாக நின்றிருக்கிறார் பஞ்சுஅருணாசலம்.
பரிசோதனை முயற்சிகள்
அவர் கதை வசனம் எழுதிய படங்களில் அதுவரை யாரும் செய்யாத பரிசோதனை முயற்சிகள் கண்டிப்பாக இடம்பெற்றிருக்கும். ரஜினிக்குத் திருப்புமுனையாக அமைந்த படம் ‘புவனா ஒரு கேள்விக்குறி’. அந்தப் படத்துக்குத் திரைக்கதை வனம் எழுதிய பஞ்சு அருணாசலம், அதுவரை நல்லவராகவே நடித்துவந்த சிவகுமாரைக் கெட்டவராகவும் அதுவரை கெட்டவராக நடித்துவந்த ரஜினியை நல்லவராகவும் எழுதியிருக்கிறார். படக் குழுவினர் எல்லோரும் பயந்தபோதும் அவர்களுக்குத் தைரியம் சொல்லி வேடங்களை மாற்றாமல் அப்படியே வைத்ததாகச் சொல்லப்படுகிறது.
ஒரே நேரத்தில் கமலை வைத்து ஒரு படம், ரஜினியை வைத்து ஒரு படம் எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதை அவர் எதிர்கொண்ட விதம் மிகவும் சுவையான நிகழ்வாகத் திரையுலகில் பேசப்படுகிறது. அவர்கள் இருவரும் சேர்ந்து நடிப்பதில்லை என்று முடிவெடுத்த நேரத்தில் இருவரையும் தனித்தனியாக நடிக்கவைத்துப் படமெடுக்க அவர் தயாரானார்.
அப்போதும், அதுவரை வில்லனாகவும் ஸ்டைல் மன்னனாகவும் நடித்து வந்த ரஜினியை குடும்பத்துக்காகத் தன்னை அர்ப்பணிக்கும் நல்லவனாக நடிக்க வைத்திருக்கிறார். 25 வயது முதல் 60 வயது வரையிலான பலவிதத் தோற்றங்களில் ரஜினி நடித்தார். இம்மாதிரியான புதுவிதத் தோற்றத்தில் ரஜினியை ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்கிற சந்தேகம் படம் வெளியாகும்வரை எல்லோருக்குமே இருந்ததாம். ரஜினிக்கும் அந்தச் சந்தேகம் இருந்திருக்கிறது. அவர் திருப்தியில்லாமல் இருந்திருக்கிறார். அப்போது பஞ்சு அருணாசலம், ஐந்தாயிரம் அடிவரை படத்தை எடுத்து அவருக்குப் போட்டுக் காட்டுவோம், அப்போதும் அவருக்குத் திருப்தியில்லை யென்றால் படத்தை நிறுத்திவிடலாம் என்று சொல்லி எடுத்தாராம்.
எடுத்தவரை போட்டுப் பார்த்து ரஜினி திருப்தியடைந்தாராம். அந்தப் படம் ‘ஆறிலிருந்து அறுபதுவரை’. அப்படம் பெரிய வெற்றி பெற்றதுடன், அந்த ஆண்டின் சிறந்த படமாக சினிமா ரசிகர் சங்கத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டது. தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதை ரஜினிக்கும் சிறந்த இயக்குநருக்கான விருதை இயக்குநர் எஸ்.பி.முத்துராமனுக்கும் அந்தப் படம் பெற்றுக் கொடுத்திருக்கிறது.
மாறுபட்ட திரைக்கதைகள்
1982-ம் ஆண்டு ஆகஸ்ட் 14 அன்று வெளியான இரண்டு படங்களுக்கும் பஞ்சுதான் கதை வசனகர்த்தா. ஒன்று ‘எங்கேயோ கேட்ட குரல்’, இன்னொன்று ‘சகலகலா வல்லவன்’. கொஞ்சம் யோசித்தாலே ரஜினி நடிக்க வேண்டிய கதையில் கமல் நடித்திருக்கிறார் என்பதும் கமல் நடிக்க வேண்டிய கதையில் ரஜினி நடித்திருக்கிறர் என்பதும் புரிந்துவிடும்.
‘சகலகலா வல்லவன்’ படமாகும் நேரத்தில் இந்தக் கதை எனக்கு செட்டாகுமா என்று கமல் மிகவும் பயந்துகொண்டேயிருந்தார் என்று சொல்லப்படுகிறது. ‘வாழ்வே மாயம்’, ‘மூன்றாம் பிறை’, ‘சிம்லா ஸ்பெஷல்’ மாதிரியான படங்களிலேயே தொடர்ந்து நடித்துக்கொண்டிருந்தால் கமர்ஷியலாக உங்களுக்குப் பின்னடைவு ஏற்படும்; அவ்வப்போது இப்படிப்பட்ட படங்களிலும் நடிப்பதுதான் உங்களுக்கு நல்லது என்று சொல்லி நடிக்கவைத்திருக்கிறார். அதே நேரம் கமலுக்குத் திருப்தி ஏற்பட வேண்டும் என்பதோடு அவருடைய நடனத் திறமைகளையும் வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காகவே கிராமத்திலிருந்து நகரத்துக்கு வந்ததும் அவர் நடனக்காரராகிவிடுகிறார் என்று மையக்கதைக்குப் பாதிப்பில்லாமல் திரைக்கதையை மாற்றினாராம் பஞ்சு. அந்தப் படத்தில் இடம்பெற்ற ‘விஷ் யூ ஹேப்பி நியூஇயர்’ பாடல் இன்றுவரை பிரபலமாகவே இருக்கிறது. சில்க் ஸ்மிதாவுடனான ‘நேத்து ராத்திரி யம்ம்மா’ பாடலும் கமல் பாணி என்பதற்காகவே வைக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள்.
இன்னொரு பக்கம் ‘போக்கிரி ராஜா’, ‘தனிக்காட்டு ராஜா’, ‘ரங்கா’ போன்ற படங்களில் நடித்துக்கொண்டிருந்த ரஜினியை முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடிக்கவைத்திருந்தார். இப்படி யாரும் எதிர்பாராத விஷயங்களைப் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் செய்து சாதனைகளாக்கியிருக்கிறார்.
‘பாபா’ படத்துக்கு முன்புவரை கிட்டத்தட்ட ரஜினியின் எல்லாப் படங்களிலும் பஞ்சு அருணாசலத்தின் பங்களிப்பு ஏதோ ஒரு வகையில் இருந்திருக்கிறது. இயக்குநர் யாராக இருந்தாலும் திரைக்கதை எப்படியிருந்தாலும் அதற்கு எவ்விதப் பாதிப்பும் இல்லாமல் குறைந்தது நான்கைந்து இடங்களில் ரஜினி கைதட்டல் வாங்குகிற மாதிரி செய்துவிடுவாராம் பஞ்சு.
ஓய்வற்ற பயணம்
குள்ள மனிதராகக் கமல் நடித்த ‘அபூர்வ சகோதரர்கள்’ படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. சுமார் நான்காயிரம் அடிவரை படமும் எடுக்கப்பட்டுவிட்டதாம். ஆனாலும் கமலுக்குத் திருப்தியில்லையாம். அதன் பின் பஞ்சு அருணாசலத்தை அணுகியிருக்கிறார். அவர் படத்துக்குள் வந்ததும் அதுவரை எடுத்ததை அப்படியே தூக்கி வைத்துவிட்டு, மறுபடியும் முதலிலிருந்து தொடங்கச் சொல்லியிருக்கிறார். அவருடைய திரைக்கதை கமலுக்கு மிகவும் பிடித்துப்போனதால் அவரும் எடுத்ததை அப்படியே விட்டுவிட்டு முதலிலிலிருந்து எடுத்தாராம்.
கையெழுத்து குண்டு குண்டாக அழகாக இருந்த காரணத்தாலேயே கண்ணதாசன் அவரைச் சேர்த்துக்கொண்டார் என்று சொல்லப்படுகிறது. அதோடு மடைதிறந்த வெள்ளம்போல கண்ணதாசனின் உதடுகளிலிருந்து ஒருமுறை மட்டுமே உதிரும் சொற்களை அட்சரம் பிசகாமல் பிடித்துக்கொள்ளும் வேகமும் பஞ்சு அருணாசலத்துக்கு இருந்த காரணத்தால் அவரோடு பல ஆண்டுகள் பயணிக்க முடிந்திருக்கிறது. கையெழுத்து மட்டுமின்றி அவர் எழுதிய எழுத்துகளும் நன்றாக இருந்ததால்தான் கிட்டத்தட்ட அறுபதாண்டுகள் அவருடைய பேனா ஓய்வின்றிப் பணியாற்றியிருக்கிறது.
சிறந்த கலைஞர்களிடம் உங்களுடைய ஆசை என்னவென்று கேட்டால், நான் என்னுடைய கலைப் பணியில் இருக்கும்போதே மரணிக்க வேண்டும் என்பதாகத்தான் இருக்கும்.
இவருக்கு அப்படியே நடந்திருக்கிறது. ஒரு பக்கம் இப்போது தயாராகிக்கொண்டிருக்கும் ‘முத்துராமலிங்கம்’ படத்தின் எல்லாப் பாடல்களையும் எழுதிக்கொடுத்துவிட்டு, இன்னொரு பக்கம் வார இதழ் ஒன்றுக்குத் தன்னுடைய திரைப்பயணத்தைத் தொடராக எழுதிக்கொடுத்துக்கொண்டு, மற்றுமொரு பக்கம் புதிய திரைக்கதையை எழுதிவிட்டு மரித்திருக்கிறார்.
கதை எழுதியவரின் மனமும் புண்படாமல் இயக்குநரின் தன்முனைப்பையும் சீண்டிவிடாமல் கதாநாயகர்களுக்குக் கைதட்டல் பெற்றுத் தந்துகொண்டிருந்த அந்தக் கலைஞனின் கைகள் இப்போது ஓய்வெடுக்கின்றன. தமிழ்கூறு நல்லுலகெங்கும் அவருடைய சிறப்புகளை நூற்றுக்கணக்கான கைகள் எழுதிக்கொண்டிருக்கின்றன.
குடும்ப உறுப்பினர்களே அவரை வற்புறுத்திய போதும், இளையராஜா முதன்முதலில் பாடல் பதிவு தொடங்குகிற நேரத்தில் மின்சாரம் தடைபட்டதை எல்லோரும் அபசகுனமாகக் கருதியபோதும் இளையராஜாதான் இசையமைக்க வேண்டும் என்று உறுதியாக நின்றிருக்கிறார்.
No comments:
Post a Comment