Saturday, August 27, 2016

'சைக்கிள்' வாத்தியார் முதல் சேட்டிலைட் சேனல் வரை..! பச்சமுத்து பாரிவேந்தர் ஆனது இப்படித்தான்

vikatan.com

சைக்கிளில் சென்று ஆசிரியர் பணியைத் தொடங்கிய டி.ஆர்.பச்சமுத்து இவ்வளவு பெரிய கல்வி சாம்ராஜ்யத்தை உருவாக்கிய பின்னணி இது!

சென்னை மேற்கு மாம்பலத்தில் மெட்ரிகுலேஷன் பள்ளியில் இருந்து பச்சமுத்து வளர்ச்சி அத்தியாயம் தொடங்கியது. கடன் வாங்கித்தான் அந்த பள்ளியை தொடங்கியதாக அவருடன் நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள். கல்வி சாம்ராஜ்ஜியம் மட்டுமல்லாமல் அரசியலிலும் பச்சமுத்து கால் பதித்தார். காட்டாங்கொளத்தூரில் பல ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாய் காட்சி அளிக்கிறது எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம். இந்த அளவுக்கு அவரது வளர்ச்சி ஏற்பட்டது மற்றவர்களை வியப்புக்குள் ஆழ்த்துகிறது. ஆனால், அவர் கடந்து வந்த பாதைகளை விவரிக்கிறார் பச்சமுத்துவின் நெருங்கியவர்கள்...

மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் தொடங்கி தொழில் நுட்ப கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள் எஸ்.ஆர்.எம். நிர்வாகத்தால் ஆரம்பிக்கப்பட்டது. இதற்கான இடங்களை தேர்வு செய்வதிலும் எஸ்.ஆர்.எம். கடைபிடிக்கும் பாலிசியே வித்தியாசமானது. நீர்நிலைகளை ஆக்கிரமித்து பல கட்டடங்களும் கட்டப்பட்டு இருக்கின்றன என்ற குற்றச்சாட்டும் உள்ளது. மேலும், நைட்டிங்கேல் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, வள்ளியம்மை பாலிடெக்னிக் கல்லூரி, எஸ்.ஆர்.எம். பொறியியல் கல்லூரி, எஸ்.ஆர்.எம்.நர்சிங் கல்லூரி, எஸ்.ஆர்.எம். பிசியோதெரபி, எஸ்.ஆர்.எம். ஆர்ட்ஸ் அன்ட் சயின்ஸ் காலேஜ், எஸ்.ஆர்.எம். பாலிடெக்னிக் கல்லூரி, ஈஸ்வரி பொறியியல் கல்லூரி, எஸ்.ஆர்.எம். பல்மருத்துவ கல்லூரி, எஸ்ஆர்எம் மருத்துவக்கல்லூரி ஆராய்ச்சி மையம், வள்ளியம்மை பொறியியல் கல்லூரி என 20க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார் பச்சமுத்து. இவை போக சில வட இந்திய மாநிலங்களில் எஸ்.ஆர்.எம். கல்லூரிகளின் கட்டுமான வேலைகள் நடந்து வருகின்றன. கல்வி நிறுவனங்களை தாண்டி, எஸ்.ஆர்.எம். மருத்துவமனைகள், எஸ்.ஆர்.எம். நட்சத்திர விடுதிகள் , எஸ்.ஆர்.எம். பார்சல் சர்வீஸ், எஸ்.ஆர்.எம். டிராவல்ஸ், எஸ்.ஆர்.எம். எலக்ட்ரிக்கல்ஸ், என வேறு பல தொழில்களிலும் கோலோச்சுகிறார் பச்சைமுத்து. ஊடகத்துறையிலும் கால் பதித்துள்ளார்.

2005ல் நாகர்கோவிலை சேர்ந்த மதன், மருத்துவ மற்றும் இன்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை மூலம் பச்சமுத்துவிடம் அறிமுகம் ஆகிறார். 2007ல் எஸ்.ஆர்.எம். நிர்வாகத்தின் பெரும்பாலான மாணவர் சேர்க்கை மதன் மூலமாகவே நடக்கிறது. ஒரு கட்டத்தில் எஸ்.ஆர்.எம். நிர்வாகத்தின் துணை பொதுமேலாளர் என்ற பதவியும் மதனுக்கு வழங்கப்படுகிறது. நகமும், சதையும் போலவே பச்சமுத்து, மதனின் நட்பு இருந்தது. 2011ல் அரசியல் ஆசை துளிர்விட பச்சமுத்து இந்திய ஜனநாயக கட்சியை தொடங்குகிறார். அதிலும் மதனுக்கு மாநில இளைஞரணி பொறுப்பு அளிக்கப்படுகிறது. பச்சமுத்துக்கு சினிமா பிசினஸ் ஆசை வர, ஒரு தயாரிப்பாளரால் அவமானப்படுத்தப்படுகிறார். அதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் வேந்தர் மூவிஸ் உதயமாகிறது. மொட்ட சிவா, கெட்ட சிவா வரை வேந்தர் மூவிஸ் நிகழ்ச்சிகளில் பச்சமுத்து தவறாமல் ஆஜராகினார். இவர்களின் நட்பு பச்சமுத்துவின் குடும்பத்தின் சிலருக்கு பிடிக்கவில்லை.

இதன் பிறகுதான் இருவரையும் பிரிக்க சதுரங்கவேட்டை ஆரம்பமானது. பூஜை அறையில் பச்சமுத்துவின் படத்தை வைத்து பூஜித்தார். அந்த அளவுக்கு பச்சமுத்து மீது அளவு கடந்த பாசத்தையும், மரியாதையும் வைத்திருந்தார் மதன். பச்சமுத்து குடும்பத்தினர் மதன் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்த போதும் அதையெல்லாம் ஏற்றுக்கொள்ளாமல் முழு நம்பிக்கை வைத்திருந்தார் பச்சமுத்து. இந்த சமயத்தில் பச்சமுத்துவின் உறவினர் ஒருவர் விருகம்பாக்கத்தில் தாக்கப்பட்ட சம்பவத்தில் மதன் மீது பரபரப்பான குற்றச்சாட்டை வைத்தனர் பச்சமுத்துவின் குடும்பத்தினர். இந்த சம்பவத்துக்கு பிறகு இருவரின் நட்பில் விரிசல் ஏற்பட்டது. திருச்சி மருத்துவக் கல்லூரி அனுமதிக்காக டெல்லிவரை சென்று காயை நகர்த்திய மதன் மீது பச்சமுத்து முதன்முறையாக கோபப்பட்டார். திருச்சி மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு பெறப்பட்ட பணத்தில் சில கோடிகள் ஆந்திராவில் புதிய மருத்துவக் கல்லூரி தொடங்க ஒரு பெண்ணிடம் கொடுக்கப்பட்டது. அந்த அசைன்மெண்டிலும் மதன் சொதப்ப, கோபத்தின் உச்சக்கே சென்றார் பச்சமுத்து.
 
2016 ஜனவரியில் தொடங்கி இவர்களது முட்டல், மோதல் மே மாதத்தில் பூதாகரமாக வெடித்தது. அதற்கு மருத்துவக்கல்வி நுழைவுத்தேர்வான நீட்டும் ஒரு காரணமாக அமைந்தது.மே 28ஆம் தேதி வாட்ஸ்அப்பில் வேந்தர் மூவிஸ் லெட்டர்பேடில் மதன் எழுதிய தற்கொலை கடிதம் எஸ்.ஆர்.எம். நிர்வாகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியது. அந்த கடிதத்தில் காசிக்கு சென்று சமாதி அடைவதாகவும், மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக பெறப்பட்ட பணத்தை எஸ்.ஆர்.எம். நிர்வாகத்திடம் கொடுத்துவிட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். முதலில் எஸ்.ஆர்.எம். நிர்வாகம், மதனுக்கும், தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மறுத்தது.

உரிய ஆதாரங்கள் வெளிவரத்தொடங்கியதும், மதன் மீது பச்சமுத்து சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து, மதன் மீதும், பச்சமுத்து மீதும் மாணவர் சேர்க்கை மோசடி தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் புகார்களை குவித்தனர். மத்திய குற்றப்பிரிவு போலீசார் திண்டுக்கல் மாவட்ட ஐ.ஜே.கே மாவட்ட செயலாளர் பாபு, மதனின் கூட்டாளி சுதீர், வேந்தர் மூவிஸ் மதன், எஸ்.ஆர்.எம் நிர்வாகம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தது. ஆனால், விசாரணை என்ற பெயரில் வழக்கை இழுத்தடித்துக் கொண்டிருந்தனர். சென்னை உயர்நீதிமன்றம், காவல்துறைக்கு விடுத்த எச்சரிக்கை காரணமாக இன்று பச்சமுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...