Sunday, August 28, 2016

சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குப் பெண்கள் செல்ல உள்ள தடை நீங்குமா?



இந்தியாவில் பெரும்பாலான கோவில்களில்,பெண்கள் மாதவிலக்குக் காலங்களில் கோயிலுக்குள் நுழையக் கூடாது என்பது ஆகம விதி என்பார்கள்.இதனால் ஆண்டாண்டு காலமாகப் பெண்கள் மாத விலக்குக் காலங்களில் கோயிலுக்குள் செல்வதே இல்லை.

சபரிமலை ஐய்யப்பன் கோவிலுக்குள் மட்டும் மாதவிலக்கு காலங்களில் மட்டுமல்ல, குழந்தை பெற்றுகொள்ள தகுதியுடைய எந்தப் பெண்ணும் கோயிலுக்குள் போகக் கூடாது என்று அதன் இணையதளத்திலேயே குறிப்பிடப்பட்டிருக்கும். அதாவது,' கடவுள் ஐய்யப்பன் ஒரு நித்திய பிரம்மாச்சரி' அதனால் 10 வயதில் இருந்து 50 வயதுடைய மற்றும் மாதவிலக்கு நிற்காத பெண்கள் சபரிமலை கோவிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கூறப்பட்டிருக்கும்.

அதையும் மீறி பெண்கள் நுழைந்தால், அவர்கள் கோயில் நிர்வாகத்தால், வெளியேற்றப்படுவார்கள் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த 2010ஆம் ஆண்டு பிரபல கன்னட நடிகை ஜெயமாலா சபரிமலைக்குள் சென்று ஐய்யப்பன் சிலையைத் தொட்டு வழிபட்டதாகக் கூறி சர்ச்சையில் சிக்கினார். இதனைத் தொடர்ந்து கேரள தேவசம் போர்டு அவர் மீது வழக்கும் தொடர்ந்தது. திருவாங்கூர் தேவசம் போர்டு தலைவர் கோபால கிருஷ்ணன் பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவரை எதிர்த்து #HappyToBleed அமைப்பு சமூக வலைதளங்களில் ஒரு பக்கத்தை உருவாக்கியது .

இதனைத் தொடர்ந்து அனைத்து பெண்களையும் கோயிலுக்குள் அனுமதிக்க உத்தரவிடக்கோரியும் இந்திய இளம் வக்கீல்கள் சங்கம் என்ற அமைப்பு, உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவை, நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, சி.நாகப்பன், ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

"கோயில் என்பது பொதுவான ஆன்மிக தலம். அங்கு வரும் பெண்களுக்கு அனுமதி மறுக்க முடியாது. அரசியல் சட்டத்தில் பெண்களுக்கு உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே, அவர்களுக்கு அனுமதி மறுப்பது, அடிப்படை உரிமைகளை மீறும் செயல். இந்த பிரச்னையின் தீவிரத்தன்மையை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம். இந்த வழக்கு அரசியல் சட்ட பெஞ்சுக்கு அனுப்புவதற்கு உகந்தது என்று நாங்கள் நினைக்கக்கூடும். அப்படி மாற்றுவதாக இருந்தால், விரிவான உத்தரவைப் பிறப்பிப்போம் என்று கூறியதோடு, நவம்பர் 7ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

தர்ஹாவுக்கு, பெண்கள் செல்ல உரிமை உள்ளது

மும்பையில் உள்ள ஹாஜி அலி தர்ஹாவுக்கு, பெண்கள் செல்ல உரிமை உள்ளது’ என்று மும்பை உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்பை வழங்கியுள்ளது.

பாரதி முஸ்லிம் மகிலா அன்டோலன் அமைப்பைச் சேர்ந்த ஜாகியா சோமான் மற்றும் நூர்ஜகான் சபியா ஆகியோர் 2014-ம் ஆண்டு பொது நல மனு ஒன்றை மும்பை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவின் மீதான விசாரணையில், மும்பை உயர் நீதிமன்ற நீதிபதிகள் வி.எம்.கனடே மற்றும் ரேவதி மொஹிட்டி ஆகியோர் அதிரடித் தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

‘‘பாலினப் பாகுபாட்டைக் காரணம் காட்டக் கூடாது!’’

‘தர்ஹாவுக்குப் பெண்கள் செல்வதற்கு உரிமை உள்ளது’ என்று இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 14, 15, 19 மற்றும் 25 ஆகியவற்றில் சொல்லப்பட்டு இருப்பதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், ‘‘சட்டத்தின் முன் அனைவரும் சமம். சட்டம், அனைவருக்கும் பொதுவானது. எனவே, தர்ஹாவின் மையப் பகுதிக்குப் பெண்கள் செல்வதற்கு உரிமை உள்ளது. மதத்தை வழிநடத்தவும், அதன் கொள்கைகளைப் பின்பற்றவும் அவர்களுக்கு உரிமை உள்ளது. எனவே, பாலினப் பாகுபாட்டைக் காரணம் காட்டி நாம் தடைபோடக் கூடாது." என்று தீர்ப்பில் கூறியுள்ளோம் ..

ஏன் இந்த தீர்ப்பை முன் உதாரணமாக எடுத்துக் கொள்ள கூடாது ?

இந்தத் தீர்ப்பை நாடு முழுவதும் உள்ள பெண்கள் கொண்டாடி வரும் நிலையில், சபரிமலை கோயில் விவகாரத்திற்கும் முன்னுதாரணமாக வைத்து, ஏன் பார்க்க கூடாது என பெண்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

இது குறித்து உழைக்கும் பெண்கள் உரிமை அமைப்பு குழுவின் இணை அமைப்பாளர் லதாவிடம் பேசினோம்... "இந்த தீர்ப்பு வரலாற்று சிறப்பு வாய்ந்தது. இந்த தீர்ப்பு, சபரிமலை வழக்கிற்கு முன்னுதாரணமாக அமையும் என்று நம்பிக்கை உள்ளது. கேரளாவில் ஆட்சி பொறுப்பேற்றுள்ள இடது சாரிகள் தலைமையிலான அரசு உடல் ரீதியான விஷயங்களை வைத்து பெண்களை தடுப்பது அவர்களின் உரிமையை பறிக்கும் செயல் என்று கூறியுள்ளது. எனவே இதை எடுத்துக்கட்டாக எடுத்துக்கொண்டு இதற்காகப் போராடி வரும் அமைப்புகள் விரைந்து செயல்பட வேண்டிய நேரம் இது. கேரள அரசின் மீது நம்பிக்கை உள்ளது. சபரிமலை கோயிலிலும் விரைவில் பெண்கள் செல்லுவதற்கு சட்டரீதியாக வழிபிறக்கும் என்றார். அதே நேரத்தில் தேவஸ்தான அமைப்பு இந்தத் தீர்ப்பைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்றார் .

மனிதர்கள் வகுத்த சட்டங்களை மனிதர்கள் மாற்ற முடியும்

இது தொடர்பாக வழக்கறிஞர் அருள் மொழியிடம் பேசினோம். "மதம் ,ஆட்சி அரசியல், குடும்பம் இவை மூன்றும் ஆண்களின் கையில்தான் உள்ளன. இவை மூன்று இடங்களிலும் பெண்கள் சம உரிமைக்காக போராடி வருகிறார்கள். வழிபாட்டுத் தலம் மற்றும் நினைவுசின்னம் எதுவாக இருந்தாலும் அந்தப் பெண்களின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு தீர்ப்பு வழங்கி உள்ளது. அந்தத் தீர்ப்பு எதிர்காலத்தில், இதுபோன்று உரிமைக்காக போராடும் பெண்களுக்கு உதாரணமாக இருக்கும். இதைப் போன்றது தான் கோயிலில் பெண்கள் நுழையக்கூடாது என்ற விதி முறைகளும். அதனை எதிர்த்து போராட்டத்தை துவங்கி உள்ள பெண்களுக்கு உரிமை கிடைக்க வழிவகை உள்ளது. கோயிலின் சான்றுகளிலோ அல்லது புராணங்களிலோ பெண்கள் நுழையக்கூடாது என்று சொல்லவில்லை. எனவே நல்ல முடிவு வரும். இது மனிதர்கள் வகுத்தது. இதனை மனிதர்களால் நீக்க முடியும்." என்றார்.


கே. புவனேஸ்வரி

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024