Monday, August 29, 2016

Posted Date : 11:30 (29/08/2016) 30 ஆண்டுகள் சேதி சொல்லும்,'தகவல் மனிதர்' பழனிச்சாமி!

VIKATAN NEWS

திருச்செங்கோட்டில் இருந்து, ஈரோடு செல்லும் வழியில் இருக்கிறது ஐந்து பனை பேருந்து நிறுத்தம். இங்கு வைக்கப்பட்டிருக்கும் தகவல் பலகைகள் இந்த ஊர் மக்களுக்கு மட்டும், ரொம்ப ஸ்பெஷல். காரணம், இந்த தகவல் பலகையில் தினமும் அன்றைய செய்திகள், பொது அறிவுத் துணுக்குகள், அரசின் அறிவிப்புகள் என முக்கிய விஷயங்கள் தினமும் இடம் பெறும். இந்த தகவல் பலகையில், கடந்த 30 வருடங்களாக இந்த தகவல்களை எழுதி சேவை செய்து வருகிறார் அந்த ஊரின் தகவல் மனிதர் பழனிச்சாமி.
யார் அந்த பழனிச்சாமி என விசாரித்து, அவரைக் காண சென்றோம். எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கிறார் பழனிச்சாமி. ஆனால் 30 ஆண்டுகளாக ஊர் மக்களுக்காக தகவல் பலகையில் எழுதி வருகிறார். இதனால் ஊர்மக்கள் இவருக்கு வைத்திருக்கும் பெயர் 'தகவல் மனிதர்'. இது குறித்து சில கேள்விகளை அவரிடம் முன்வைத்தோம்.

எத்தனை வருடமாக, நீங்கள் தகவல் பலகை எழுதுகிறீர்கள்?

"நான் சிறுவனாக இருந்தபோது, என் வீட்டில் வறுமை. அதனால் எட்டாம் வகுப்பைக் கூட, முழுமையாக முடிக்காம நின்று விட்டேன். ஆனால் அதற்குப் பிறகும், நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆர்வம் இருந்ததால் தினசரி நாளிதழ்கள் எல்லாம் படிக்க ஆரம்பித்தேன். சமூக ஆர்வமும் எனக்கு அதிகம். அதனால், ஏதாவது செய்ய வேண்டுமென்று சிந்தித்துக் கொண்டிருந்த போதுதான் இந்த யோசனை வந்தது. சரியாக 1985-ல் இருந்து தகவல் பலகையில் எழுதி வருகிறேன். இன்னும் எழுதுவேன்".

ஏன் பஸ் ஸ்டாண்ட் பக்கத்தில் எழுத நினைத்தீர்கள்?

"பேருந்துக்காக இங்கே நிற்கும் போது, அவர்களுக்கு நிறைய நேரம் இருக்கும். அப்போது அவர்கள் படிக்க வசதியாக இருக்கும் என்றுதான் இங்கே எழுத ஆரம்பித்தேன். பேருந்தில் வருபவர்களும் இதைப் படிக்க முடியும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் என பலருக்கும் உபயோகமாக இருக்கும். அவர்களும் இதனைப் பாராட்டுகிறார்கள். அனைவருக்கும் பயன்படும் விதமாக அரசு வேலைவாய்ப்பு, அரசு அறிவிப்புகள், பொது அறிவு விஷயங்கள் போன்றவற்றை எழுதுகிறேன்".




இதற்காக மாதம் எவ்வளவு செலவு செய்வீர்கள்?

"தினமும் இரண்டு அல்லது மூன்று தினசரிகள் வரை வாங்குவேன். எழுதுவதற்குத் தேவையான மாவும், சாயமும் வாங்கிவந்து நானே எழுதுவேன். பிறகு பள்ளிக்கூட விசேஷம், கண்தான முகாம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு இலவசமாக எழுதிக் கொடுப்பேன். ஒரு தட்டி வைக்க சுமார் 50 ரூபாய் செலவாகும். வாரம் 6 தட்டி வைப்பேன். அத்துடன் மாவு, சாயம் என 1,500 ரூபாய் வரை செலவாகும். இதை ஒரு சேவையாக நினைத்து செய்வதால், இந்த செலவும், கஷ்டங்களும் தெரிவதில்லை".

இதைப் பற்றி மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்?

நிறையப் பேர் பாராட்டுவார்கள். ஒரு சிலர் கேலியும் செய்வர். என் பையன் மட்டும் அப்பப்போ என்னை திட்டுவான். அவன் திட்டுவதற்குக் காரணம், எனக்கு சுகர் இருப்பதால் அவ்வப்போது மயக்கம் வரும். அப்போதும் நான் எங்கேயாவது எழுதிக் கொண்டே இருப்பேன். யார் என்ன சொன்னால் என்னங்க? நாம் செய்வதால் மற்றவர்கள் பயனடைகிறார்கள். அது போதுங்க" என்றார் பழனிச்சாமி.

- ச.செந்தமிழ்செல்வன், லோ.பிரபுகுமார்
(மாணவப்பத்திரிகையாளர்கள்)

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...