Monday, August 29, 2016

“ரேஷன் கார்டு அச்சடிக்க பணம் வேண்டும்...” லஞ்சம் கேட்ட அரசு ஊழியர்! (வீடியோ ஆதாரம்)

vikatan news

லஞ்சம் வாங்குவதும் குற்றம்.. கொடுப்பதும் குற்றம்...' இந்த வாசகம் எல்லா அலுவலகங்களில் நீக்கமற நிறைந்திருப்பதுபோல, லஞ்சமும் ஊழலும் குடி கொண்டிருக்கிறது. அரசு அலுவலகங்களில் மக்கள் லஞ்சம் கொடுத்து காரியங்களை விரைவாக முடித்துக்கொண்ட காலம் மலையேறிவிட்டது. மக்கள் தற்போது லஞ்சம் கொடுப்பதை அசிங்கமாகப் பார்ப்பதுடன், லஞ்சம் கேட்கும் ஊழியர்களைப் பொது மக்கள் தைரியமாக அம்பலப்படுத்தவும் தொடங்கிவிட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பேச்சம்பள்ளியைச் சேர்ந்தவர் ராமன். உள்ளூரில் வேலைவாய்ப்பு இல்லாததால் திருப்பூரில் டைலராக வேலை பார்க்கும் இவருக்கு ஐந்து வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த கையோடு தனியாக ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்துள்ளார். ஐந்து வருடங்களில் பலமுறை அரசு அலுவலகங்களுக்கு நடந்ததில் ராமனின் செருப்பு தேய்ந்ததுதான் மிச்சம். ஐந்துமுறை அவரிடன் விண்ணப்பத்தை அதிகாரிகள் நிராகரித்து உள்ளனர். ஏன் என்று கேட்டால் சம்பந்தமே இல்லாமல் ஏதேதோ காரணம் சொல்லி உள்ளனர். அதிகாரிகளைப் பொறுத்தவரை ராமன் செய்த தவறு, அவர்கள் கேட்ட லஞ்ச பணத்தைத் தர மறுத்தது. லஞ்சம் தராமல் ரேஷன் கார்டைப் பெற்றுவிடவேண்டும் என ராமன் வைராக்கியத்துடன் இருக்க... ஒவ்வொரு முறையும் அவரது விண்ணப்பம் தட்டிக்கழிக்கப்பட்டதால் வெறுத்துப்போன ராமன் ஒரு முடிவுக்கு வந்தார்.

அந்த முடிவை ராமனே விவரிக்கிறார், ''லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கு ஏதாவது பாடம் கற்பிக்க வேண்டும் என்று நினைத்தேன். அதனால் போன் கேமராவை ஆன் செய்துவிட்டு, சட்டைப் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு பேச்சம்பள்ளி தாலுக்கா ஆபீஸில் உள்ள உணவுப்பொருள் வழங்கல் அதிகாரி சிவச்சந்திரன் அதிகாரியைப் பார்க்கச் சென்றேன். என்னுடைய விண்ணப்பத்தைப் பார்த்த அவர், 'புது ரேஷன் கார்டுக்கு பிரின்டிங் செலவு இருக்கு, பல கட்டத்தைத் தாண்டி உங்க விண்ணப்பம் போகணும். அதனால செலவு ஆகும்' என்றார். 'ரேஷன் கார்டு வந்த உடன் பணம் தருகிறேன்' என நான் கூறியவுடன், கையெழுத்துப் போட்டு விண்ணப்பத்தை எறிந்தார். இதை அப்படியே பதிவுசெய்து வந்துவிட்டேன். நான் லஞ்சம் தராததால், ஏதாவது காரணத்தைச் சொல்லி விண்ணப்பத்தை ரிஜக்ட் செய்துவிடுவார்கள். 5000 ரூபாய் தந்திருந்தால் ஒரே மாதத்தில் எண்ணால் புது ரேஷன் கார்டைப் பெற்றிருக்க முடியும். ஆனால், நான் அதை விரும்பவில்லை. எங்கள் ஊரில் பலர், பிறந்த குழந்தைக்கு, பிறந்த சான்றிதழைப் பெற முடியாமல் தவிக்கிறார்கள். இதற்கு எல்லாம் ஒரு தீர்வு வேண்டும்'' என்றார் ஆதங்கத்துடன்.

இதுபற்றி கிருஷ்ணகிரி மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் அதிகாரி ராஜேந்திரனிடம் பேசினோம். அவர், ''நீங்கள் சொல்லிய பிறகுதான் இந்த விஷயம் என் கவனத்துக்கு வருகிறது. புது ரேஷன் கார்டுக்காக மக்கள் ஒரு பைசாகூடக் கொடுக்க வேண்டியதில்லை. இதனை விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்கிறேன்'' என்றார்.

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...