மதிப்பெண்ணை பெரிதாக நினைக்கும் பெரும்பாலான பெற்றோர்கள் குடும்ப அமைதியை இழக்கும் நிலை ஏற்படுகிறது என்றார் புதுகை மனநல மைய ஒருங்கிணைப்பாளர் கே. மோகன்ராஜ்.
புதுக்கோட்டை அருகே வல்லத்திராக்கோட்டை ராமசாமி தெய்வானையம்மாள் நினைவு அரசு மேல்நிலைப் பள்ளியில், பள்ளியும், புதுக்கோட்டை மனநல மையம் இணைந்து அண்மையில் நடத்திய விழிப்புணர்வு முகாமில், சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று அவர் மேலும் பேசியது:
இன்றைய சூழலில் தங்கள் குழந்தைகள் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றால் மட்டும் போதுமானது என பெரும்பாலான பெற்றோர்கள் நினைக்கின்றனர்.
இதனால், அன்பு, அறம், அமைதி என்றால் என்ன என்பதை புரிந்துகொள்ளாமல், பிடிவாதமும், தன்னலமுமே வாழ்வின் முக்கிய இலக்குகளாகக் கொள்ளும் நிலைக்கு மாணவர்கள் தள்ளப்படுகின்றனர்.
அவ்வாறு வளரும் குழந்தைகள், அன்றாட வாழ்வில் ஏற்படும் சிறுசிறு ஏமாற்றங்களைக்கூட தாங்கிக்கொள்ள முடியாத மனநிலை கொண்டவர்களாக உள்ளனர். சிந்தனை மழுங்கி 12 வயதிலேயே போதைப் பொருட்களைப் பயன்படுத்தத் தொடங்கி, நாளடைவில் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்குச் சென்று விடுகின்றனர்.
சில நேரங்களில் பாலியல் வன்முறையாளராகவும், சிலர் மனநோயாளிகளாகவும் மாறுகின்றனர். பலர் கல்வியில் பின்தங்கி படிப்பைப் பாதியிலேயே நிறுத்தி விடுகின்றனர்.
இவர்களால் குடும்பம் அமைதியை இழந்து, சமூகப் பொருளாதாரச் சிக்கல்களை சந்திக்க நேரிடுகிறது. பல பெற்றோர் மனமுடைந்து விடுகின்றனர். சிலர் மனநோயாளிகளாக மாறி, விபத்துக்களில் சிக்குகின்றனர்.
இந்த நிலை மாறவேண்டுமெனில், நல்லவர்களிடம் நட்பை உருவாக்கிக் கொள்ள வேண்டும். நல்ல நூல்களைப் படிக்க வேண்டும். சினம் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். அன்பாகப் பேச வேண்டும்.
எதிலும் வெளிப்படையாகவும், எளிமையாகவும் இருக்க வேண்டும். ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். வாழ்க்கையை ஆக்கப்பூர்வமானதாக மாற்றிக் கொள்ளும் மனப்பக்குவத்தை பெற வேண்டும். தனியாக இருப்பதை விட்டு, நல்ல நண்பர்களின் துணையுடன் நல்ல விஷயங்களைக் கலந்து பேச வேண்டும். நம்முடைய எதிர்காலம் நம் கைகளில்தான் உள்ளது என்றார்.
முன்னதாக மாணவ, மாணவிகளுக்கு மனநலம் குறித்த விழிப்புணர்வு கையேடுகளை மோகன்ராஜ் வழங்கினார். தலைமையாசிரியர் வி.சேகர் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். ஆசிரியர் பி. ஜெயமதி வரவேற்றார். ஆசிரியர் பி. ரகு நன்றி கூறினார்.
No comments:
Post a Comment